
கிடாவெட்டு செய்வதற்காக ஓர் இளம் கிடா ஆட்டை வாங்கி வந்திருந்தார் தங்கமணி. சொந்தக்காரர்களுடன் போனில் பேசி தேதியையும் குறித்த பின்னரே சந்தையில் போய் ரூபாய் 2,000-க்கு வாங்கினார்...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
"பாட்டி... நான் பத்தாவது பாஸ் ஆனதுக்கும் சாமிக்குக் கிடாவெட்றதுக்கும் எதுனா சம்பந்தமிருக்கா? ஏன் பாட்டி இதெல்லாம்?" என அழுதபடியே கேட்டாள் மதுமிதா.
"உன் அப்பந்தான் நீ பாஸ் ஆனா கிடாவெட்றேனு வேண்டிக்கிட்டான்... அதான். இதுக்குலாமா அழுவுறது."
மதுமிதா பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்திருந்தாள். மகளை மருத்துவராக்க வேண்டுமென்பதே அவள் தந்தை தங்கமணியின் ஆசை. அவளும் படிப்பில் கெட்டிக்காரி.
"நான் பாஸ் ஆக மாட்டேனா, அப்புறம் எதுக்கு இந்த வேண்டுதல்லாம்?"

"நீ பள்ளிக்கூடத்திலேயே பர்ஸ்ட் மார்க் வாங்கியிருக்குற திறமைசாலிதான்டி. அது தெரியாமலா வேண்டியிருப்பான்? அவன் ஒருமுறை போட்டித் தேர்வு எழுதுற நாளன்னக்கிக் காய்ச்சல் வந்து எழுத முடியாம போய்ட்டு. அதுலருந்து நம்மை மீறிய விஷயம் இருக்குனு வேண்டிப்பான். அதான்"
கிடாவெட்டு செய்வதற்காக ஓர் இளம் கிடா ஆட்டை வாங்கி வந்திருந்தார் தங்கமணி. சொந்தக்காரர்களுடன் போனில் பேசி தேதியையும் குறித்த பின்னரே, சந்தையில் போய் ரூபாய் 2,000-க்கு வாங்கினார். முதலில் ஆட்டைப் பார்த்த மதுமிதா கூட "ஐ... ஆடு... இதை வளர்க்கப்போறோமாப்பா" என்றே கேட்டிருந்தாள். பிறகே, கிடாவெட்டுக்காக எனத் தெரிய வந்தது.
வெட்டுக்காக வந்திருக்கிறது எனத் தெரிந்தவுடன் அவளுக்கு வந்த அழுகை இருக்கிறதே... அழுது தீர்த்தாள். "வேண்டாம்ப்பா... ப்ளீஸ்ப்பா..." எனக் கெஞ்சினாள். தங்கமணி கண்டுகொள்ளவில்லை. பிறகே, பாட்டியிடம் கெஞ்சினாள்.
அவள் அம்மா பார்வதி, "அழுகுறியா... அழு. எதிர்த்துப் பேசுவல. நான் ஏன்னு கேட்க மாட்டேனே. எப்ப பாரு... அப்பா பொண்ணு அப்பா பொண்ணுனு சொல்வேல. இப்பதான் சந்தோஷமா இருக்கு."
"நீ ஒண்ணும் கேட்க வேணாம் போ... எனக்குத் தெரியும்."
அவள் எவ்வளவு முயன்றும் ஒன்றும் ஆகவில்லை. வாசலில் கட்டிப்போட்டிருந்த அந்தக் கிடா ஆடு புது இடமென்பதால் பயத்தில் புளுக்கைப்போட்டுக் கத்தியது.

அவள் ஆட்டைப் பார்த்துத் தடவிக்கொடுத்தாள். அது நகர்ந்து போகவே முயன்றது. மீண்டும் கழுத்தைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தாள். அவள் தலையிலிருந்த பூவை மென்றது. அவளுக்கு ஆட்டைப் பார்க்கும்போதெல்லாம் நம்மால் இதன் உயிரைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்வியே எழுந்தது.
கிடாவெட்டுக்கு 23 நாள்கள் இருந்தன. யாரும் பார்க்காதபோது கயிற்றை அவிழ்த்துவிடலாம் என்றே யோசித்தாள். இதுவரை தங்கமணி மகளைக் கை நீட்டி அடித்ததில்லை. முறைப்புக்கும் திட்டுக்குமே அழுதுவிடுபவள். ஆட்டை அவிழ்த்தால் சாமி விஷயம் என்பதால் அடித்துவிடுவார் என்ற பயமிருந்தது.
"என்னய உனக்கு ரொம்ப பிடிக்கும்லப்பா... எனக்காக அதை விட்டுடேன்" கிட்டத்தட்ட 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பாள்.
"இந்த விஷயத்துல அப்பா எடுத்ததுதான் முடிவு" என்ற ஒரே பதிலே திரும்ப திரும்ப கிடைத்தது.
அவளுக்கென்று தனியறை. அங்கே படுக்கச் சென்றவள் தூக்கம் வராமல் தவித்தாள். "ஆட்டை எப்படிக் காப்பாற்றுவது?" என்ற ஒரே சிந்தனை அவளைத் தூங்கவிடாமல் துரத்தியது. ஆடு கத்துவது தொடர்ந்து கேட்டது. அதற்கு புல், இலை தழையெல்லாம் தேவையான அளவு கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வந்ததிலிருந்து கத்திக்கொண்டே இருந்த அது இரவு நேரமென்பதாலோ என்னவோ சத்தமிடாமல் முதல்முறையாக அங்கேயே படுத்தது.

ஆட்டின் சத்தமில்லாததைக் கவனித்த அவள் லேசாக ஜன்னலைத் திறந்தாள். அந்த இளம் கிடா அவளைப் பார்த்தது. "உன்னை நிச்சயம் காப்பாற்றுவேன்" என மெதுவாகச் சொன்னாள்.
பிறகு, ஜன்னலைச் சாத்திவிட்டுக் கணினியில் கிடாவெட்டை யூடியூபில் பார்த்தாள். அதில் ஒரு பூசாரி ஓர் ஆட்டை வெட்டும்போது கண்ணை மூடி "கடவுளே... காப்பாத்திடேன்" என்றாள். அவள் பார்த்த வீடியோவில் வெட்டுவதற்கு முன்பு பூசாரி ஆட்டிடமே அனுமதி கேட்டிருந்தார். பிறகு, நிறைய வீடியோக்களைப் பார்க்க அதில் எல்லோருமே ஆட்டிடமே அனுமதி பெற்று வெட்டினர்.
"ஆடு ஏன் அனுமதி தருது?" என யோசித்தவாறே உறங்கிப்போனாள்.
காலையில் எழுந்தவள் பல் கூட விளக்காமல் ஆட்டுக்கருகே சென்றாள். ஒரு குவளை தண்ணீர் எடுத்து அதன் மீது ஊற்றினாள். அது உடலைச் சிலிர்த்தபடி கத்தியது.
"ஏன்டி அறிவில்ல... தண்ணீய அது மேல ஊத்துற" அவள் அம்மா திட்டினாள்.
"உன் வேலைய பாரு."
மறுபடியும் ஒரு குவளை தண்ணீர் ஊற்றினாள். மறுபடியும் அது கத்தியது. பிறகு, தன் உடலைச் சிலிர்த்தது. அவளுக்கு ஒன்று புரிந்துப்போயிற்று.
"இதான் சூட்சுமமா? உன்னைக் காப்பாத்த வழி கண்டு பிடிச்சிட்டேன்" என்றவள் அந்த நொடி முதல் ஒவ்வொரு குவளையாகத் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். அது உடலைச் சிலிர்த்தது. மறுபடியும் ஊற்றினாள். அந்த நாள் முழுவதும் அப்படியே போயிற்று.
தங்கமணியும் ஏன் இதெல்லாம் எனக் கேட்கவில்லை. கேட்டா "நீ என் பேச்சைக் கேட்கிறியா?" என்பாள். அவள் பாட்டியோ "கேட்டாக்காத் திட்டுவாள். தனக்கேன் தேவையில்லாம திட்டு" எனக் கேட்கவில்லை.

அடுத்தநாளும் அவள் அவ்வாறே செய்ய ஆரம்பித்தாள். தெருவைக் கடப்போர் எல்லாம் அவள் செய்கையைக் கண்டு சிரித்தனர். அவளோ "யார் என்ன நினைத்தாலும் நான் செய்வேன்" எனத் தண்ணீர் தெளிக்க ஆடு உடல் சிலிர்க்க அன்றைய நாளும் போனது. இப்படியாக 15 நாள்கள் நகர மதுமிதாவோ சற்றும் மனம் தளராமல் செய்ததையே செய்தாள். ஆட்டைக் காப்பாத்துவதுதான் ஒரே நோக்கம்.
16-ம் நாள் அவள் எதிர்ப்பார்த்தது நடந்தது. ஆட்டின் மேல் தண்ணீர் ஊற்ற அது சிலிர்த்தது. பிறகு ஊற்ற சிலிர்க்காமல் நின்றது. சிலிர்க்காமல் இருந்தால் தண்ணீர் ஊற்றுவதை விட்டாள். சிலிர்த்தால் ஊற்றிக்கொண்டே இருந்தாள். இரண்டு நாள்கள் இவ்வாறு நடக்க வீட்டிலுள்ள தங்கமணி அவ்வப்போது இவள் செய்யும் கோமாளித்தனங்களைப் பார்த்துவிட்டுத் தன் வேலைகளில் கவனம் செலுத்தினார்.
"நீ அது மேல தண்ணீ ஊத்தியே கொல்லப்போற" என்றாள் பாட்டி.
"யார் கொல்லப்போறானு பார்ப்போம்" என்றாள்.
"ஏண்டி... புத்திக்கெட்டுப் போய்டுச்சா..."
"இல்ல புத்தி வந்துடுச்சு" எனச் சொல்லிவிட்டு ஒரு குவளை தண்ணீரை ஆட்டின் மீது ஊற்றிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
இவள் தினமும் இவ்வாறு செய்ததில் கிடாவெட்டு நாளுக்கு முதல் நாள் அந்தக் கிடாவுக்கு ஒன்று பரிச்சமாய்ப் பழகியிருந்தது. தண்ணீர் தன் மீது ஊற்றப்பட்டால் சிலிர்க்கக் கூடாது. சிலிர்த்தால் மீண்டும் மீண்டும் ஊற்றப்படும்.

கிடாவெட்டு நாளன்று தங்கமணி குடும்பமும் சொந்தக்காரர்களுடன் வேனில் கிடாவுடன் கோயிலுக்குச் சென்றனர். வண்டியில் செல்லும்போது "எப்படியும் 12 கிலோ தேறும்" என மாமா மகிழன் சொல்ல "இல்ல இல்ல 15 கிலோ தேறும்" என சித்தப்பா செந்தில் சொன்னார். மதுமிதாவுக்கோ பயங்கர கோபம். வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஒருவழியாகக் கோயிலை வந்தடைந்தனர். கோயிலில் ஒருபக்கம் அலங்காரம், பூமாலை சாத்துதல் எல்லாம் முடிந்தது. மறுபக்கம் சமையலுக்காக முன் ஏற்பாடுகள் நடந்திருந்தது. சாதம் கூட வடித்தாகிவிட்டது.
சித்தப்பா செந்தில் கிடா ஆட்டைப் பூசாரியிடம் அழைத்து வர அது கத்தியது. கூடியிருந்த சிலர் "ஒரே வெட்டுல தலை விழுந்துடணும்" எனக் கருத்து சொல்லினர். பூசாரி ஆட்டின் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி "அருள் வாக்கு தா! தா!" எனக் கேட்டார். மதுமிதா மட்டும் "உடம்பைச் சிலிர்த்திடாத" என வேண்டிக்கொண்டாள். ஆடு கொஞ்சமும் சிலிர்க்காமல் நிற்க "உனக்கென்ன குறை வச்சோம்" எனக்கேட்டார் பூசாரி. திரும்பவும் கொஞ்சம் தண்ணீர் ஊற்ற ஆடு எந்தவித சைகையும் தராமல் நின்றது. "சாமிக்குக் கோபம் போல" என ஆளாளுக்குச் சொல்ல பூசாரி சத்தம்போட்டு "அருள் வாக்குத் தா... தா..." என இன்னொரு வாளி நீரை ஊற்ற ஆடோ சிலிர்த்தால் ஊத்திக்கொண்டேயிருப்பர் எனச் சிலிர்க்காமலே நிற்க தங்கமணிக்கு அப்போதுதான் ஒன்று புரிய ஆரம்பித்தது "ஏன் தினமும் மதுமிதா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்? ஓஹோ... ஆட்டைத் தலை ஆட்டாமல் இருக்க பழக்கியிருக்கிறாள்."

"உன் வேலைதானே இது" என்றார் மகளைப் பார்த்து.
எல்லோரும் "என்ன ஒன்றும் புரியலியே?" எனக் கேட்டனர்.
"இதெல்லாம் சாமி குத்தம் இல்ல. என் மகளோட வேலை" என அவள் ஆட்டைப் பழக்கிய விதத்தைச் சொன்னார்.
அவர் சொல்லி முடிக்க சித்தப்பா செந்தில் "சமத்துப் பொண்ணும்மா. நீ... பெரிய அறிவாளிதான். உன்னைப் பெத்ததுக்குத் தங்கமணி கொடுத்து வச்சுருக்கணும்" என்றார்.
ஆனா, கறி சோற்றைச் சாப்பிட ஆவலுடன் வந்த ஒரு சொந்தக்காரனால் இதெல்லாம் தாங்கிக்க முடியவில்லை. விபூதியை ஒரு கையால் அள்ளி ஆட்டின் மீது வீச விபூதி பட்டதும் அந்த ஆடு சிலிர்க்க "பூசாரி வெட்டுய்யா அந்த ஆட்டை" என்றான்.
தங்கமணியும் செந்திலும் தடுக்க பூசாரியும் வெட்டாமல் ஆட்டை விட்டார்.
"எல்லோருக்கும் ஹோட்டல்ல விருப்பப்படி வாங்கித்தந்துடுறேன். இந்த ஆட்டை விட்டுடுவோம்" எனத் தங்கமணி சொல்ல சொந்தக்காரர்கள் "ஓகே" என்றனர்.
சந்தோஷத்தில் "தேங்ஸ்ப்பா..." என்றபடி ஆட்டைத் தடவிக்கொடுத்தாள் மதுமிதா
- செ.ஆனந்த ராஜா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.