Published:Updated:

தெருவிளக்கு! - நெகிழ்ச்சி சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

“இந்தத் தெருவிளக்கை சரிசெய்யக்கூடாதுன்னு நீங்க மனு குடுத்திருக்கீங்களாம்ல. என்ன குரு, உண்மையாவா?” சற்றே நம்பமுடியாத தொனியில் கேட்டார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காம்பௌண்ட் கேட் திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். வாசலில் சுந்தரலிங்கத்தைப் பார்த்தவுடன் திக்கென்றது. இத்தனை நாள் இவர் பார்வையில்படாமல் தப்பிவிட்டேன். இன்று தப்பமுடியாது. நான் வீட்டிலிருப்பது தெரிந்துதான் வருகிறார். அவசரமாய் மனைவியைப் பார்த்தேன் ‘ஏதாவது வழி சொல்லேன்’ என்பது போல். அவளும் உதட்டைப் பிதுக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ள அறைக்குள் சென்றேன். அந்த அவகாசத்திலாவது ஏதாவது யோசனை தோன்றாதா என்று. எதுவும் தோன்றவில்லை.

அழைப்பு மணி அழைத்தது. முகத்தை வலிய தளரவிட்டுக்கொண்டு கதவைத் திறந்தேன்.

Representational Image
Representational Image

“வாங்க சார், வாங்க. ஒரு போன் பண்ணியிருந்தால் நானே வந்திருப்பேனே, சார். நீங்க எதுக்கு இவ்வளவு தூரம்?”

“பரவாயில்லை, குரு. ஒரு காரியம் ஆகணும்னா ஒரு எட்டு நடந்தா தப்பில்லை. இன்னிக்கு எப்பிடியும் உங்களைப் பார்த்திடறதுன்னுதான் நானே வந்தேன்” என்றார் இருக்கையில் அமர்ந்தபடி.

முகத்திலோ வார்த்தையிலோ கோபச்சாயல் தெரியவில்லை. ஒருவேளை வேறு ஏதாவது விஷயமாய் வந்திருப்பாரோ?

“வாங்க, சார்” என்றபடியே காபி கோப்பையை நீட்டினாள் என் மனைவி.

“தாங்க்ஸ்மா” என்றபடி வாங்கிக்கொண்டார்.

அவர் காபி குடித்து முடிக்கும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. நீட்டிய காலிக் கோப்பையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் என் மனைவி.

கோப்பையை வைத்துவிட்டு வெளியே வந்து எங்களுடன் கலந்துகொள்வாள் என்று பார்த்தேன். உள்ளே போனவள் வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இதை நானேதான் எதிர்கொள்ளவேண்டும்.

ஆழமாக ஒரு மூச்சை இழுத்துக்கொண்டு, “ சொல்லுங்க, சார்” என்றேன்.

“ஒரு காலனி ப்ரெசிடெண்ட்டா இருக்கறது எவ்வளவு பிரச்னை தெரியுமா, குரு? ஒரு வீடா, ரெண்டு வீடா? நூத்தி இருபத்தி நாலு வீடுங்க. இதுல வாடகைக்கு இருக்கற முப்பத்தியெட்டு வீட்டைத்தவிர மத்தது எல்லாம் வீட்டுச் சொந்தக்காரங்க. இதுல புதுசா வேற மூணு ஃபிளாட்ஸ் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதுவும் முடிஞ்சிட்டா இந்தக் காலனில நூத்தியம்பது வீட்டுக்கு மேல ஆகிடும். இதுல யார் மனசும் நோகாம எல்லார் ப்ராப்ளமும் சால்வ் பண்றதுங்கறது…”

அவர் வாக்கியத்தை முடிக்கவில்லை.

நான் எதுவும் பேசவில்லை. அவரும் விடுவதாக இல்லை.

“ஒரு உதாரணத்துக்குப் பாருங்க, குரு. இந்தக் காலனில மொத்தம் பதினெட்டுத் தெரு இருக்கு. இந்தப் பதினெட்டுத் தெருவிலயும் மொத்தம் எழுபத்திரெண்டு தெருவிளக்கு இருக்கு. இந்த எழுபத்திரெண்டு தெருவிளக்கும் தினமும் தவறாம எரிஞ்சாதான் ஜனங்க நிம்மதியா தெருவில நடக்க முடியும். இல்லைனா நம்ம ரோடுங்க இருக்கற அழகுக்கு தினமும் யாராவது டாக்டர்ட்ட போகவேண்டியிருக்கும்”.

Representational Image
Representational Image
Tessa Wilson / Unsplash

விஷயத்தைத் தொட்டுவிட்டார். இனி எப்படியும் கேட்டுவிடுவார். இன்னமும் நான் எதையும் பேசவில்லை.

“அதுல பாருங்க, உங்க தெருவுல உங்க வீட்டு முன்னாடி இருக்கற தெருவிளக்கு எரியாம போயி இதோட கிட்டத்தட்ட நாப்பது நாளாகப் போகுது. நானும் அதை சரிபண்ணிடணும்னு நடையா நடக்கறேன். முந்தாநேத்து வெள்ளிக்கிழமை கூட கார்ப்பரேஷன் ஆபீஸுக்குப் போயிட்டு வந்தேன். அப்போதான் ஒரு விஷயம் தெரிஞ்சது”.

சுந்தரலிங்கம் பேசுவதை நிறுத்தினார். இப்போதாவது நான் ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்தார் போலும். ஆனால் நான் வாயைத் திறக்கவில்லை.

“இந்தத் தெருவிளக்கை சரிசெய்யக்கூடாதுன்னு நீங்க மனு குடுத்திருக்கீங்களாம்ல. என்ன குரு, உண்மையாவா?” சற்றே நம்பமுடியாத தொனியில் கேட்டார்.

தலையை மட்டும் ‘ஆமாம்’ என்று ஆட்டினேன். இன்னமும் எனக்கு வாயைத்திறந்து பேச உத்தேசமில்லை.

“என்ன குரு இது? நான் கூட யாரோ வேண்டாதவங்க உங்க பெயரைக் கெடுக்கறதுக்கு இப்படி செஞ்சாங்கன்னு நினைச்சேன். ஆனால் உண்மையிலேயே நீங்கதான் மனு குடுத்தீங்களா?”

மறுபடியும் தலையாட்டினேன்.

“என்னால் இன்னும் நம்பமுடியலை, குரு. இந்தக் காலனில எனக்குப் பிரச்னையே தராத ரொம்ப சில பேர்ல நீங்களும் ஒருத்தர். இதுவரைக்கும் உங்களாலேயோ அல்லது உங்க மூலமாவோ எனக்கு எந்தத் தொந்தரவும் வந்ததில்லை. இப்ப ஏன் இது?” அவர் புரியாதவராய்க் கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“சொல்லுங்க, குரு. என்ன பிரச்னை? ஏதாவது சீரியஸான விஷயமா? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க. என்கிட்டகூட வராம நேரே கார்ப்பரேஷனுக்கே போயிருக்கீங்களே. காலனில யாராவது ப்ராபளம் குடுக்கறாங்களா?” கரிசனமாய்க் கேட்டார்.

Representational Image
Representational Image

“சே, சே. அதெல்லாம் எதுவும் இல்லை, சார்” என்றேன் அவசரமாய்.

“பின்னே...இப்படி ஸ்டெப் எடுக்க என்ன காரணம்? எல்லாரும் எரியாததை சரி பண்ணிக் குடுங்கன்னுதான் மனு குடுப்பாங்க. நீங்க சரி பண்ண வேண்டாம்னுல்ல குடுத்திருக்கீங்க. கார்ப்பரேஷன்ல உங்க மனுவை என்கிட்ட காட்டி, ‘என்ன சார், இது? உங்க காலனில இருந்தே இப்பிடி ஒரு மனு? முதல்ல இதை க்ளியர் பண்ணுங்க. அப்புறம் வரோம் தெருவிளக்கைப் பார்க்க’ன்னு சொல்றாங்க. அதான் நானே நேர்ல வந்தேன் உங்களைப் பார்த்துக் கேட்கலாம்ன்னு”.

அவர் பேசி முடித்துவிட்டார். இனி அவர் பேச எதுவும் கிடையாது. இனி பேசவேண்டியதெல்லாம் நான்தான். அது தெரிந்தது. ஆனால் என்ன பேச என்றுதான் தெரியவில்லை. என் காரணங்களை இவர் புரிந்து கொள்ளப்போவதில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும் அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கப்போவதில்லை. அவர் வந்தது என்னை மனுவை வாபஸ் வாங்கச் சொல்வதற்கு. பேசாமல் அதைச் செய்துவிட்டால் என்ன?

“நாளைக்கு நான் மனுவை வாபஸ் வாங்கிடறேன், சார்” என்றேன் தளர்ந்த குரலில்.

“குரு, நீங்க மனுவை வாபஸ் வாங்கித்தான் ஆகணும். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. ஒட்டு மொத்தக் காலனியையும் பகைச்சிகிட்டு நீங்க இங்கே இருக்க முடியாது. நீங்க டெனன்ட் இல்ல, ப்ராப்ளம் வந்ததும் வேற வீடு மாத்திப் போறதுக்கு. நீங்க ஹவுஸ் ஓனர். அதனால இப்போ பிரச்னை நீங்க மனுவை வாபஸ் வாங்கறதைப்பத்தி இல்ல. பிரச்னை.. நீங்க ஏன் அதை முதலில் எழுதுனீங்கன்னுதான்” என்றார் விடாப்பிடியாக.

“அது எதுக்கு, சார்? நான் தான் வாபஸ் வாங்கறேன்னு சொல்லிட்டேனே” என்றேன். அவர் இந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று தெரிந்தது.

Representational Image
Representational Image
Pixabay

“குரு, மறுபடியும் சொல்றேன், பிரச்னை இப்போ அது இல்ல. தெருவிளக்கை சரி பண்ணுங்கன்னு குடுத்திருந்தீங்கன்னா காலனில இருக்கற அக்கறைல செஞ்சிருக்கீங்கன்னு சந்தோஷப்படலாம். சரி பண்ண வேண்டாம்ன்னு குடுத்திருக்கீங்க. இந்தக் காலனில இருந்துட்டே இதுக்கு எதிரா வேலை செய்றீங்கன்னு இந்த விஷயத்தைப் பத்தித் தெரிஞ்சவங்க சங்கடப்படறாங்க. நான் குருகிட்ட பேசறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அவங்களுக்கெல்லாம் நான் திரும்பிப் போய் பதில் சொல்லணும்” என்றார்.

எனக்காக வாதாடியிருப்பார் போலும். அந்த ஆதங்கம் அவர் தொனியில் தெரிந்தது.

“ஏதோ தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லுங்க, சார். உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யாரையும் பகைச்சது இல்லை. யாரையும் நோகடிக்கணும்னு எண்ணம் எனக்கில்லை. என் செயலுக்கு வேற காரணம் இருக்கு. அதை வெளியே சொல்ல விரும்பலை, சார். இந்தக் காலனி என்னைக்கும் நல்லா இருக்கணும், சார். அதுக்கு என்னோட மனு தடையா இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன். அதை வாபஸ் வாங்கிடறேன். அதோட இதை விட்டுடுங்க, சார், ப்ளீஸ்”.

சுந்தரலிங்கம் பதில் எதுவும் பேசவில்லை. என் முகத்தையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

“குரு, நீங்க சில விஷயங்கள புரிஞ்சுக்கணும். நீங்க செஞ்சிருக்கற செயல் உங்களை மட்டுமோ, உங்க குடும்பத்தை மட்டுமோ பாதிக்கற செயல் இல்லை. நாளைக்கு வேற யாராவது ஒருத்தர் இது மாதிரி வேற ஏதாவது ஒரு மனுவை யாருக்காவது அனுப்பிவிடலாம். யார் புண்ணியமோ, நீங்க மனு போட்டிருக்கறது எனக்குத் தெரியவந்தது. தெரியாமலே போயிருந்தால்...இதை விடுங்க. இது சாதாரண தெருவிளக்குப் பிரச்னை. நாளைக்கு யாராவது யார் வீட்டையாவது இடிக்கச் சொல்லி மனு போட்டு, அது எனக்குத் தெரியாமலே போய், கார்ப்பரேஷன் அந்த மனுவில நியாயம் இருக்குன்னு ஆக் ஷன் எடுக்க வந்தால் என்ன ஆகிறது? அப்புறம் ஒரு காலனி எதுக்கு? அதுக்கு ஒரு ப்ரெசிடென்ட் எதுக்கு? அதனாலதான் நீங்க உங்க செயலுக்கு விளக்கம் சொல்லணும்னு கேட்கறேன்”.

Representational Image
Representational Image
Pixabay

அவர் வார்த்தைகளின் ஆணித்தரமான நியாயத்தை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லும் சூழ்நிலை நடைமுறையில் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றபோதும் ‘ஹைப்பொத்தெட்டிக்கலி’ அது சாத்தியமே. என்னிடமிருந்து விளக்கம் வாங்காமல் அவர் போகப்போவதில்லை என்பது உறுதியாயிற்று. நியாய, அநியாயங்களை எடுத்துக்கூறி எனக்குப் புரியவைக்கப் பார்க்கிறார். அந்த நிலையின் எல்லைக்கோட்டில் அவர் நிற்பதாகப்பட்டது எனக்கு.

இதற்கு மேலும் நான் பேச மறுத்தால் அவர் வேறு நிலை எடுக்கக்கூடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் என் மேல் அவர் வைத்திருக்கும் நன்மதிப்பை இழக்க நான் விரும்பவில்லை. என் செயலுக்கான காரணம் தெரிந்தால் அந்த நன்மதிப்பு ஏளனமாகவோ, நையாண்டியாகவோ, பரிதாபமாகவோ மாறக்கூடும். அதை நான் எதிர்கொள்ள வேண்டியதுதான். இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்து தான் இருந்தது எனக்கு. இந்நிலையின் முடிவையும் ஒருவாறு யூகித்து வைத்திருந்தேன். முடிவை யூகித்திருந்ததனால் அதன் விளைவையும் யூகித்திருந்தேன். இரண்டு யூகங்களும் இருந்ததால் அவற்றை எதிர்கொள்ளவும் ஒருவாறு தயாராகியிருந்தேன்.

“அந்தத் தெருவிளக்குல ஒரு குருவிக்கூடு இருக்கு, சார்”, என்றேன்.

என் வார்த்தைகள் அவரைச் சென்றடைந்ததற்கான எந்தவொரு அடையாளமும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. என் விளக்கம் அவரை எட்டியதா என்ற சிறு சந்தேகம் ஒன்று என்னிடம் எழும்பியது.

சில விநாடிகள் மௌனத்திற்குப் பின், “குருவிக்கூடா? தெருவிளக்குல எப்பிடி குருவி கூடு கட்டும்?” என்றார்.

பரவாயில்லை. நான் நினைத்தது போல் மிகவும் எதிர்மறையான வார்த்தைகளோ பாவனையோ அவரிடமிருந்து வெளிப்படவில்லை. என் நியாயங்களைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு சற்றே மதிப்பளிப்பாரோ என்ற எண்ணம் லேசாகத் தலைதூக்கியது.

Representational Image
Representational Image

“கட்டியிருக்கு, சார். பாருங்க”, என்று அவரை அந்தத் தெருவிளக்கிற்கு அழைத்துச் சென்றேன். விளக்கு இருக்கும் கண்ணாடிக் கூடு பாதி உடைந்து போயிருந்தது. மீதி இருந்த கண்ணாடி எப்படியோ விளக்கோடு ஒட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு சில குச்சிகள் மட்டும் வெளியில் தென்பட்டன. வெயிலுக்கும் மழைக்கும் மிகவும் பாதுகாப்பானதொரு இடமாக இருந்தது அந்தத் தெருவிளக்கின் பாதி உடைந்த கண்ணாடிக் கூடு.

சுந்தரலிங்கம் இடது கையை நெற்றியில் வைத்து கண்களில் விழும் சூரிய வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு அந்தக் கூட்டைப் பார்த்தார். இப்படியும் அப்படியுமாக சுற்றிச் சுற்றி வந்து நின்று பார்த்தார்.

“அந்தக் கூட்டுல குருவி எதும் இருக்கற மாதிரி தெரியலையே, குரு”, என்றார்.

எனக்கு லேசாக ஒரு நம்பிக்கை எட்டிப் பார்த்தது. இவ்வளவு அக்கறையாக இந்த விஷயத்தைக் கொள்கிறாரே! ஒரு வேளை தெருவிளக்கு சரிசெய்யப்படாமலே போய்விடுமோ?

“குருவி இருக்கு, சார்”, என்றேன். என் குரல் எனக்கே சற்று ஓங்கி ஒலிப்பதாகப்பட்டது. என் வார்த்தையை நிரூபிக்கும் வகையில் சட்டென்று ஒரு குருவி கீச்மூச்சென்று சொல்லிவிட்டுக் கூட்டுக்குள் இருந்து பறந்து சென்றது.

“அடடே, இது சிட்டுக்குருவி இல்லையே. நல்லவேளை, நான் கூட இது சிட்டுக்குருவி கூடா இருக்குமோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்”, என்றார்.

என்ன சொல்கிறார் இவர்? சிட்டுக்குருவி கூடாய் இல்லாவிட்டால் என்ன?

“இது இந்தக் கருங்குருவி. இந்தக் கூட்டைக் கலைச்சால் ஒண்ணும் செய்யாது. சிட்டுக்குருவி கூடாய் இருந்தால்தான் கஷ்டம்” என்றார்.

ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன்.

“அடடா, இதுக்குப் போயா நீங்க மனு அது இதுன்னுப் போய்ட்டீங்க? நேரா என்கிட்டயே விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே, குரு.

Representational Image
Representational Image

நல்லவேளை, இப்பவாவது விஷயம் தெரிஞ்சது. நான் பார்த்து பக்குவமா டீல் பண்ணிடறேன். மனு குடுத்ததால மத்த மெம்பர்ஸ் உங்க மேல கொஞ்சம் வருத்தமா இருக்காங்க. நான் சொல்லற விதத்துல சொல்லி விஷயத்தை சரி பண்ணிடறேன். நீங்க இதைப் பத்தி நினைச்சுக் கவலைப்படவேண்டாம். நாளைக்கு நீங்க மனு வாபஸ் வாங்கறதா ஒரு லெட்டர் எழுதிக் குடுத்துவிடறேன். நீங்க அதுல கையெழுத்து போட்டு அனுப்பிடுங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றார்.

நான் மெளனமாக இருக்கவே என் மௌனத்தை சம்மதமாக மொழிபெயர்த்துக்கொண்டார்.

“வரேன், குரு. உங்க ஒய்ஃப் கிட்ட சொல்லிடுங்க. நாளைக்கே இதைச் சரி பண்ண ஏற்பாடு பண்ணிடணும். குழந்தைங்க விளையாடற இடம் பாருங்க. வெளிச்சம் இருக்கணும் ராத்திரி நேரத்துல”, என்றபடி சென்றுவிட்டார்.

இறுதியில் இதில்தான் வந்து நிற்கும் என்று நான் எதிர்பார்த்ததுதான். அந்த வார்த்தைகளை அவர் மேலோட்டமாக எறிந்து சென்றபோது அந்த எதிர்பார்ப்பு உறுதியாயிற்று.

எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்பது இந்தக் காலனி முழுதும் அறிந்த விஷயம். சமய சந்தர்ப்பங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில வார்த்தைகள் என் காதில் விழுவதுண்டு. அதேநிலை என் மனைவிக்கும் ஏற்பட்டிருக்கிறதென்று என்னிடம் கூறியிருக்கிறாள். இதோ இன்று மறுபடியும்.

Representational Image
Representational Image

இவ்வகை வார்த்தைகள் இப்போதெல்லாம் வலி ஏற்படுத்துவதில்லை. ஒரு சிறிய அழுத்தம் மட்டுமே இப்போது இவை தருவது. இன்று எனக்கு அந்த அழுத்தம்கூட வரவில்லை. மாறாக லேசான கோபம் வந்தது. குருவிக்கூட்டைப் பற்றிய என்னுடைய கவலைக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? குழந்தைகள் உண்டெனில் அவர்களுக்காகக் குருவிக்கூட்டைப் பிய்த்தெறியலாமோ?

லேசான நடுக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தேன். வாஸ்துவுக்காக நிலைக்கு மேல் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. இனி இந்தக் கண்ணாடியில் அந்தக் குருவிகள் இரண்டும் வந்து முகம் பார்க்காது. அப்படித்தானே அவை எனக்கு அறிமுகம் ஆயின. பெரியவர்களின் அமைதியான பேச்சு சத்தமும் அபூர்வமான சிரிப்புச் சத்தமும் தொலைக்காட்சியின் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த அந்த வீட்டில் திடீரென்று ஒரு காலைப்பொழுதில் இந்தக் குருவிகளின் சத்தம் கேட்கத்தொடங்கியது.

மனித நடமாட்டம் இல்லாதபோது இந்தக் குருவிகள் கண்ணாடி முன் வந்து விளையாடிவிட்டுப் போகும். சில நாள்களில் அவற்றுக்கு எங்களின் இருப்பும் பழகிவிட்டது. அப்புறம் நான் நாற்காலி போட்டு அமர்ந்து அவற்றின் விளையாட்டைப் பார்க்கக்கூட அவை அனுமதித்தன. இப்படிக் குருவிகளை இதன் முன் பார்த்ததில்லை நான். அழுத்தமான காபிகொட்டை நிற உடல். கூரிய நீண்ட அலகு. சிட்டுக்குருவியை விட சிறிய உடல். என் ஓர் கைக்குள் அவை இரண்டும் பத்திரமாய் அடங்கும். வீட்டின் முன் இருக்கும் செம்பருத்தித் தோட்டத்தில் அவை தேன் எடுப்பதைப் பார்த்தால் சட்டென்று ஹம்மிங் பறவை போன்றே இருக்கும். சுவாதீனமான வருகையாய் இருந்தது அந்தக் குருவிகளின் வருகை. என் வீட்டின் முன் இருந்த உடைந்த தெருவிளக்கில் அவை கூடு கட்டியதால் என் வீட்டினுள் அவற்றின் வருகை கொண்டாட்டத்துடன் கூடிய உரிமையோடிருந்தது. அவற்றின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டின் பேச்சொலி கூட சற்றே புன்னகை கலந்து ஒலித்தது. இனி மறுபடியும் மனித சப்தம் மட்டுமே இந்த வீட்டினுள் ஒலிக்கும். சட்டென்று அத்தனையும் சூன்யமாய்ப் போனது.

Representational Image
Representational Image

“ கொடைக்கானல் பார்க்கணும்ன்னு சொல்லிட்டே இருந்தியே, வாசுகி. இன்னைக்கு சாயந்திரம் கிளம்பலாம்” என்றேன் மனைவியிடம்.

அர்த்தமும் அனுசரணையும் வழிந்த ஒரு பார்வையுடன் என் மனைவி தலையாட்டினாள்.

நான்கு நாள்கள் கழித்து அதிகாலையில் வீடு திரும்பியபோது என் வீட்டின் முன் இருந்த தெருவிளக்கு நான் மனுவை வாபஸ் வாங்குவதாக எந்தக் கடிதமும் தராமலேயே பளீரென்று எரிந்துகொண்டிருந்தது.

சரியாக மூன்று நாள்கள் கழித்து என்ன காரணத்தாலோ மறுபடி அந்தத் தெருவிளக்கு அணைந்து போயிருந்ததது.

சுந்தரலிங்கமும் குருவிகளும் மறுபடி வரவில்லை.

-கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு