Published:Updated:

சைபர் மேல் சைபர்! -`Feel Good' சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Kelly Sikkema on Unsplash )

இருவரும் ஓடவும் முடியாமல் அடங்கி இருக்கவும் முடியாமல் அம்மாவின் கட்டளைக்கு பயந்து ஒடுங்கி அவஸ்தையில் புழுக்கள் போல நெளிந்துகொண்டு நின்றிருந்தார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

”பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே!”

ஞாயிறு வழிபாட்டுக்கூட்டம் நிறைவடையும் தருவாயில் நடக்கும் ஜெபம். ஒரு வாரமாகவே தூக்கம் பிடிபடவில்லை. அதனால் இன்று தேவாலயத்தின் ஆண்டவரின் முன் என் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தேன். இன்று மனது பிரார்த்தனையில் ஒட்டவே இல்லை. கண்களில் பூச்சிகள் பறந்தன. கண்களைத் திறந்து பார்த்தேன். எனக்கு நேரெதிரே மேரி சிலை.

மேரி தான், தாயாக இருந்து என் பிரச்னையையும் தீர்க்க வேண்டும். மீண்டும் ஜெபத்திற்குள் மூழ்கினேன்.

Representational Image
Representational Image
Ben White on Unsplash

ஜெபம் முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்தது. கலைதலில் ஒரு கலையும் நேர்த்தியும் இருந்தது. நான் நின்றிருந்த புள்ளியிலிருந்து பார்க்கும்போது ஒரு நெடுஞ்சாலை கிடந்து இரு பிரிவாகப் பிரிவது போல வெளியே பிரிந்து போனார்கள். சிலர் இன்னும் காத்திருந்து பாதிரியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிப் போய்க்கொண்டிருந்தனர். நாங்களும் குழந்தைகளோடு காத்து நின்றோம்.

ஒவ்வொருவரும் தங்களது சுகதுக்கங்களை ஆறுதலின் பொருட்டு சொல்லி நகர ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.

பாதிரியாரை சந்தித்து இன்று இரவு வீட்டில் பிரேயர் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்குக் கண்டிப்பாகத் தங்கை குடும்பத்தை வரவழைக்க வேண்டும். பாதிரியார் முன்னிலையில் எப்படியாவது குடும்ப பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த பிரார்த்தனை 9 மணிக்கு முடிவடைந்தும் இன்னும் கூட்டம் கரைந்துகொண்டிருந்தது. எங்களுக்கு பின்னாலும் ஐந்து குடும்பங்கள் நின்றிருந்தன. குழந்தைகள் ஜான்சனும் ஜான்சியும் வீட்டுக்குப் போகலாம் என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பசிக்க ஆரம்பித்து இருக்கலாம். அவர்களை மிரட்டி அடக்கி வைத்திருந்தாள் கிரேசி.

இருவரும் ஓடவும் முடியாமல் அடங்கி இருக்கவும் முடியாமல் அம்மாவின் கட்டளைக்கு பயந்து ஒடுங்கி அவஸ்தையில் புழுக்கள் போல நெளிந்துகொண்டு நின்றிருந்தார்கள். அவர்களின் சேஷ்டை அதிகமாகவே, ``சரி கிரேசி, வெளியே கூட்டிட்டு போ” என நான் சொல்லவே என்னை முறைத்தவாறே கிரேசி நகர்ந்தாள்.

எனது முறை வருவதற்காகக் காத்திருந்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

அடுத்ததொரு பத்தாவது நிமிடத்தில் நான் முழங்காலிட்டு நின்றேன்.

”நீ போய் உன் ஆகாரத்தைச் சந்தோசத்துடன் புசித்து உன் திராட்சை ரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி. உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த ஜீவ வாழ்க்கையை அனுபவி.”

(பிரசங்கி 9:7-9)

ஆமென்!

ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்!

வீட்டுப்பிரச்னையை ஏற்கனவே காதில் போட்டு வைத்திருந்தேன். மேலும், ஆத்மாக்கள் அதிகமாகச் சூழ்ந்து இருந்தபடியால் மேற்கொண்டும் எதுவும் அவர் பேசவில்லை!

ஐயா… கிளம்பறேன்!

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! ஜோசப்… இன்னிக்கு 5 மணிக்கு பிரேயர் மீட்டிங் வைச்சுக்கலாம். ரோசலினையும் வர வையுங்க.

தேவாலாயத்தின் நடுவில் விரிவிக்கப்பட்ட சிவப்பு நடைபாதை விரிப்பு நீண்டு போவது போன்ற உணர்வு. நடக்க ஆரம்பிக்கும்போது இரு புறமும் சாய்வு மர பெஞ்சுகள். அனைத்து பெஞ்சுகளிலும் ஆத்மாக்கள் விட்டுச் சென்ற கவலைகளும் பிரச்னைகளும் நிரம்பி வழிந்ததான உணர்வு. வாரமொருமுறை அதற்காகத்தானே தவறாமல் வர வேண்டியிருக்கிறது.

Representational Image
Representational Image
Ben White on Unsplash

எனது காலணிகளை விட்ட இடத்தைத் தேடினேன்! சிதறிக்கிடந்தன. இந்தக் காலணி சிதறுதல் மட்டும் எல்லா இடத்திலும் பொதுபுத்தியாக இருக்கிறது. பிரச்னையைத் தூக்கி வரும்போது இருக்கும் நிதானம், போகும்போது இருப்பதில்லை.

குறுவட்டமாக அமைக்கப்பட்ட சிறிய புல்வெளியில் அண்ணனும் தங்கையும் விளையாடிக்கொண்டிருக்க, கிரேசி ஒரு ஓரமாக பைபிளை சுமந்தபடி என்னை எதிர்நோக்கி நின்றிருந்தாள். அந்த பைபிளில் இருக்கும் ஒரு சில வசனங்களை அவள் வாசித்திருந்தாலே போதுமானது. பிரச்னை தீர்ந்து போயிருக்கும்.

மனைவிக்கும் என் தங்கைக்கும் உள்ள பிணக்கு, விரிசல் அடைந்து ஒரு முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக உணரத்தொடங்கினேன்.

பைக்கின் முன்னால் இடம் பிடிக்க ஜான்சனுக்கும் ஜான்சிக்கும் போட்டா போட்டி. தேவாலயம் வரும்போது ஜான்சி உட்கார்ந்து வந்தாள். திரும்பி போகும்போது ஜான்சன் உட்கார வேண்டும். ஆனால், ஜான்சிக்கு மீண்டும் உட்கார ஆசை. காரணம், இப்போது அவள் கையில் பப்பிள்ஸ் பாட்டில். அவள் சிறு குழலை வாயில் வைத்து காற்றுக் குமிழ்களை பெருக்கிக்கொண்டிருந்தாள். இப்போதைய என் கவலைகளைப்போல!

பெருந்தன்மையாகத் தங்கைக்கு விட்டுக்கொடுத்தான்.

ஆனால், நான் என் தங்கை ரோசலினுக்கு?

Representational Image
Representational Image
Leo Rivas on Unsplash

பைக் ஸ்டார்ட் ஆனவுடன். ஜான்சி விடும் காற்றுக்குமிழ்கள் வரிசையாக மேல் நோக்கிப் பறக்கத்துவங்கின. ஜான்சன் தான் வாங்கிய புல்லாங்குழலில் இசை எழுப்ப முயல்வதை ”உஷ் உஷ்” என்ற காற்று வெளியேறும் சத்தம் உணர்த்தியது.

``தம்பி, வாயில காத்தை சரியா அடைச்சு, வெளியே தள்ளி விரல்களில் துளைகளை சரியா மூடி பழகணும்! அப்பதான் பாட்டு வரும்!’’

``அவன் பாட்டுக்கு ஊதட்டும், உங்களுக்கு மட்டும் சரியா வாயைத் திறந்து பேசத்தெரியுதா? நீங்க பாட்டுக்கு ஓட்டுங்க…’’

``புல்லாங்குழல் ஊதுற மாதிரிதான் சமையலும், இருக்கிற பொருட்களை வைச்சு தேவையான அளவு போட்டா, சுவையா இருக்கும்!’’

``உங்க வார்த்தை ஜாலத்தையெல்லாம் உங்க தங்கச்சிக்கிட்ட காமிங்க, ரோசலின் வீட்டுக்கு போய் சும்மா தலையாட்டிட்டு வந்துடாதீங்க!’

இப்போது ஜான்சி விட்ட பெரிய காற்றுக்குமிழ் முகத்தில் பட்டு உடைந்தது.

``சரி!’’

``பேசத்தெரியாட்டி… நானும் வரேன்.’’

``இல்லை… நானே பேசிட்டு வரேன்’’.

*

Representational Image
Representational Image
Clay Banks on Unsplash

அடுத்த தெருவில் உள்ள தங்கை ரோசலின் வீட்டிற்குக் செல்லும்போது, பகல் 12 மணியாகியிருந்தது. அவர்களும் இப்போதுதான் தேவாலயத்திலிருந்து வந்திருக்க வேண்டும். வாசலில் மிளகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள். மாப்பிள்ளை முண்டாசு பனியனோடு ஈஸி சேரில் அமர்ந்திருக்கிறார். என்னுடைய தலைத் தட்டுப்பட ஆரம்பித்ததும் தங்கை மகிழ்ச்சியானாள். குடிக்கத் தண்ணீரும் அதற்கு அடுத்து காபியும் வந்தது.

``பாப்பா, காபியில் சுகர் அதிகமாயிருக்கு!’’

``தா… அண்ணா! அதில கொஞ்சம் பால் கலந்து தரேன்!’’

``ரோசலின், சுகர் கம்மியா இருந்தா சேர்க்கலாம்! அதிகமாயிருந்தா ஒண்ணும் சுத்தப்படாது.’’

``ஆமா… மாப்பிள்ளை, பேச்சும் அப்படித்தான்!’’ நேரடியாக விஷயத்திற்குள் நுழைந்தேன்.

இருக்கிற வீட்டை வித்திட்டா, அப்பா அம்மா எங்கே போவாங்க?

``எனக்கு வர வேண்டியதைக் கொடுங்கன்னுதான் கேட்கிறேன். எல்லோரும் வெறும் காகிதத்தில் “சைபர் மேல் சைபர்” போட்டு கொடுத்து என் வாழ்க்கையையே சைபர் ஆக்கப் பார்க்கிறீங்க!’’

``என்ன அப்படி சொல்ற?’’

``நான் வெறும் சைபர் தானே? அதனாலதானே மதிக்க மாட்டேங்கிறீங்க?’’

``நீ சைபருக்கு முன்னாடி ஒண்ணு போட்டுக்க வேண்டியது தானே?’’

Representational Image
Representational Image
Etienne Boulanger on Unsplash

``என் முன்னாடி நீங்க பேசறது எல்லாமே சைபர்தான். பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட காசுக்கேட்டேன். அப்பா 20,000 கொடுத்ததுக்கு அண்ணி ஜாடை பேசறாங்க…’’

``அண்ணி அப்படிதான் விடு!’’

``அதெப்படி, பத்து வருஷமா அப்பா பென்சன் வாங்கி எனக்கா கொடுத்தாரு? நான் முடியாதப்ப… கேட்டா, அண்ணி கணக்கு பேசுது. மாச மாசம் எனக்கும் அப்பா பென்சனில் பங்கு கொடுங்க…’’

``காற்றில் மிதந்து வந்த மிளகாய் துகள்கள் பட்டு கண்கள் எரிந்தன.’’

``உங்க கிட்ட இருக்கிறது எல்லாம் சைபர்ன்னு நீயே சொல்லிட்டே, அதுக்கு முன்னாடி பாசத்தை சேர்த்துக்கோ, அப்ப தான் மதிப்பு. மாப்பிள்ள நீங்க என்ன சொல்றீங்க?’’

``நான் சொன்னா உங்க தங்கச்சி கேட்க மாட்டேன்றா!’’

``சரி! கிளம்பறேன். இன்னிக்கு 5 மணிக்கு வீட்டில பிரேயர் மீட்டிங், வாங்க பேசிக்கலாம்!’’

*

மாலை 5 மணிக்கு பிரேயர் மீட்டிங் நடந்து முடிந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் கிளம்பும் வரை காத்திருந்தோம். இதெல்லாம் பற்றி கவலையில்லாமல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஜான்சி இப்போதுதான் ஒன்றாம் வகுப்பு. ஜான்சன் ஆறாவது.

ஜான்சி அவ்வப்போது வந்து அத்தை மீது தாவினாள். அதை யாருக்கும் தெரியாதவாறு கிரேசி கண்களால் கண்டித்தாள். நடுவில் நான் புகுந்து. ”பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது இடையில வரக்கூடாது” எனச் சொன்னேன். அதனால், ஜான்சன் ஜான்சி மீது கிரேசியிடம் புகார் சொன்னான்.

கிரேசி கேரம் எடுத்துக் கொடுத்து இருவரையும் விளையாடச் சொல்லி விட்டு மீண்டும் சண்டைக்குள் வந்தாள்.

Representational Image
Representational Image
Pixabay

ஹாலின் அருகே வாஷின்மெஷின் ஓடும் வேகம் அதிகரித்தது. அதன் சத்தம் கேட்காத அளவுக்கு காரசாரமான வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இடையிடையே பாதிரியார் இடுப்புக் கச்சையை அவிழ்த்துக் கட்டிக்கொண்டும் பைபிள் வசனங்களைச் சொல்லியும் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தார்.

கிரேசி காபி கலந்துகொடுத்தாள். அதை ரோசலின் தொடாமல் இருந்தாள். காபி மற்றும் ரோசலின் ஆவி வீணாகிக்கொண்டிருந்தன. மாப்பிள்ளையும் நானும் காபியைக் குடித்தோம். ஆனால், ருசிக்கவில்லை!

ஓரமாக ஜான்சனும் ஜான்சியும் கேரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையேயும் சண்டை மூண்டது.

``அண்ணன் எனக்குத் தெரியாம அவனோட காய்ன்ஸை கையில் எடுக்கிறான்.’’

``இல்லைப்பா… நான் போட்ட காய்ன்ஸ்தான்!’’

கிரேசி மற்றவர்கள் முன் குழந்தைகள் சண்டைப்போடுவது கண்டு ஆத்திரமடைந்தாள்.

பாதிரியார் சிரித்துக்கொண்டே, ”குழந்தைகள் குணம் அப்படிதான் விடுங்க” என்றார்.

”ஒற்றுமையா விளையாடுங்க! என் மானத்தை வாங்காதீங்க” எனக் கத்தினாள்.

Representational Image
Representational Image
Pixabay

பாதிரியாரும் மாப்பிள்ளையும் சிரித்தார்கள். நான் சிரித்தால் மேலும் நிலைமை சிக்கலாகும் என்பதால் அமைதிக்காத்தேன். மகளோ, அண்ணன் மீது பிராது சொல்ல தயாராக நின்றாள். விளையாடும்போதே அண்ணனின் மீதான புகார்களின் மீது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். ஜான்சி அழ ஆரம்பித்தாள்!

ஒரு பக்கம் ஜான்சன் ஜான்சி சண்டை!

இன்னொரு பக்கம் கிரேசி,ரோசலின் சண்டை!

இரு தரப்பு வாதங்கள் ஆரம்பித்து காரசாரமாகப் போய்க்கொண்டிருந்தன.

ஜான்சன்... ஜான்சன்…

சட்டென மகனின் நண்பர்கள் வந்து அழைத்தவுடன் கேரம் போர்டை அப்படியே விட்டு அவள் தங்கை ரோட்டுக்கு வந்துவிடக் கூடாது எனக் கவனமாக கேட்டை தாழிட்டு ஓடுகிறான்.

மகள் ஓடிப்போய் கேட் அருகே கீழே படுத்துக்கொண்டு சந்து வழியே, "டேய், யாராச்சும் அன்னிக்கு மாதிரி என் அண்ணனை அடிச்சாத் தொலைச்சுடுவேன்"ன்னு சொல்லிக்கொண்டே உருளுகிறாள்.

அனைவரும் ஸ்தம்பித்து நின்றுவிட்டோம்!

நான் கையில் வைத்திருந்த ஸ்டாம்ப் பேப்பர்களைக் கிழித்து வீசினேன்.

தங்கை ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு