Published:Updated:

தேடி வந்த காதல்! - ஜில்லென்று ஒரு லாக் டெளன் குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

தாரணிக்கு புத்தகம் படிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. அவன் அன்பாக கொடுத்ததற்காக வாங்கி வைத்தாள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா லாக்டெளனில் வீட்டுக்குள் அடைபட்டு தாரணிக்கு பொழுது போகவில்லை. அவளின் அன்பான கணவன் பிற நேரத்திலேயே தாரணிக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பான். இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவளை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. இன்று நேரத்தைப் போக்க பணியாரம் செய்து சாப்பிடலாம் என்று கணவனும் மனைவியும் முடிவு எடுத்து, ஏணி இல்லாததால் கணவன் அவளை தூக்கி பரணியில் ஏற்றி விட மேலே ஏறி பணியாரக்கல்லை தேடினாள் தாரணி. அப்போது அவளுடைய பழைய கல்லூரி நோட்டுப் புத்தகங்கள் அடங்கிய பை கண்ணில் பட்டது. Digital electronics, Operating systems, C++,JAVA புத்தங்கங்கள்..

Representational Image
Representational Image

ஆசிரியர் பாடம் சொல்லும்போது தோழியுடன் பேசிக்கொண்டு சரியாக கவனிக்காமல் அரைகுறையாய் எழுதப்பட்ட notes.. கடைசி பக்கத்தில் கிறுக்கப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை combo பாடல் வரிகள், சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினிக்கு FLAMES.., குறித்து வைக்கப்பட்ட தேதிகள், வரைந்து முடிக்கப்படாத மீசை வைத்த ஆணின் முகம் என எல்லாவற்றையும் மெய்ம்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்..

கீழிருந்து கணவனின் சத்தம்..

"தாரணி.. என்னமா கெடச்சுச்சா.. உங்க அம்மாச்சிக்கு சீதனமாக கொடுத்த பணியாராக்கல்லுலதான் சுடணுமா? போன மாசம் சூப்பர் மார்க்கெட்ல பணியாரக்கல்லு வாங்குவோம்னு சொன்னேன்ல. அப்போவே வாங்கிருக்கலாம். இப்போ பாரு இவ்ளோ நேரம் தேடவேண்டி இருக்கு. என்னடி பேச்சைக் காணோம்.. காதுல விழுகுதா இல்லையா? நீ தேடி பணியாரம் சுட்டு நான் சாப்பிடுறதுக்குள்ள லாக்டெளன் முடிஞ்சுரும் போல. சரி நான் போய் ஹால்ல உக்காருறேன். நீ மெல்ல தேடி எடுத்துட்டு கூப்பிடு."

என்றதும், ``சரிடா செல்வா" என்றாள்.

``அப்போ காதுல விழுந்துருக்கு" என்று சொல்லிவிட்டு ஹாலில் போய் உட்கார்ந்தான்.

தாரணிக்கு ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. `தேடி வந்த காதல்' என்ற காதல் நாவல். மித்ரன் அவள் பிறந்தநாளுக்கு பரிசாகக் கொடுத்தது. தாரணிக்குப் புத்தகம் படிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. அவன் அன்பாகக் கொடுத்ததற்காக வாங்கி வைத்தாள். அவன் பலமுறை அந்தப் புத்தகத்தை படிக்கச்சொல்லி காதலுடன் கேட்டபோதும் அவனிடம் ஒப்புக்குச் சரி என்று சொல்லிவிட்டு படித்ததே இல்லை. ``நீ இல்லாம ஒரு நொடி கூட இருக்க முடியாது டா.. உன்கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியாது டி.. " என்றெல்லாம் பேசிக்கொண்டு காதலித்த தாரணி - மித்ரனின் காதல் பிரிந்ததற்குக் காரணம் இருவருக்கும் அன்று இல்லாத முடிவெடுக்கும் திறனும், வயது முதிர்ச்சியும்தான். திடீரென்று இருவருக்கும் வந்த பெற்றோர் பாசம்.

Representational Image
Representational Image

முடிந்ததை நினைத்துக்கொண்டு புத்தகத்தைப் பார்த்த தாரணிக்கு சட்டென்று ஒரு ஞாபகம்... அவன் அடிக்கடி சொன்ன "65 ஆம் பக்கத்தை மட்டுமாவது படி தாரணி" என்பதுதான் அது.. பக்கங்களை எச்சில் தொட்டு வேகமாகப் புரட்டினாள். 65ஆம் பக்கத்தை அடைந்தாள்.. மேலே சில ஹார்டின்களுடன் மித்ரன் என்று பென்சிலால் எழுதப்பட்ட அந்தப் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தாள்..

``முதல் முத்தம் எல்லோருக்கும் வாழ்வில் மறக்கமுடியாத இன்பம்தான்... இன்று உமாவிடம் தைரியமாகக் கேட்டுவிடுவோம் என்று புறப்பட்டான் தீபன்...." என்ற வரியை படித்துக்கொண்டிருந்த போது,

``என்னதான் பண்ற தாரணி"

என்று கணவன் கீழே இருந்து கத்தியதும் கை உதறி புத்தகத்தை கீழே போட்டாள்.. புத்தகத்தோடு சேர்ந்து சில பழைய பாத்திரங்களும் கீழே விழுந்தன.

``ஹே பாத்து மா தங்கம்.. என்ன புக் இது..? சரி பணியாரக்கல்லு கெடைச்சதா.. ?" என்றான்.

பதற்றத்தில் பதில் வராமல் சுற்றிப் பார்த்தபோது கண்ணில் பட்டது பணியாரக்கல்.

``கிடைச்சுருச்சுடா செல்வா" என்று எடுத்துக்காட்டினாள்.

Representational Image
Representational Image

``சரி கீழ வா.."

என்று அவளை கையில் தாங்கி இறக்கிவிட்டு,

``பாரு தூசியா இருக்கு உன் முடியெல்லாம்"

என்று தட்டி விட்டவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் தாரணி. பிறகு பணியாரக்கல்லை அவளிடம் இருந்து வாங்கி வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தை எடுத்தான்.

முதல் பக்கத்தில் ``என் அன்பு தாரணிக்கு.." என்று எழுதி இருந்தது.

``என் பொண்டாட்டி மேல இவ்ளோ அன்பா இதை வாங்கிக் குடுத்தது யாரு? உன் பிரண்ட் விமலாவா?"

என்று கேட்டான்.. "

பதிலுடன் கேட்கப்படும் கேள்விகள் பெரிதாக பதில் எதிர்பார்க்கப்படாதவை என்று புரிந்துகொண்டு ஆம் என்றாள்.

``நாவல்லாம் படிப்பியா நீ..?"

என்று கேட்டான்..

``இல்ல இந்தப் புத்தகத்தை நான் படிக்கவே இல்ல" என்றாள்.

``அப்படியா ரொம்ப நல்லதா போச்சு. வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம். ஆமா இந்த நாவலோட பேரு என்ன?"

என்று கேட்டுக்கொண்டே அட்டையைப் பார்த்து படித்தான்.

`தேடி.. வந்த.. காதல்..'

தாரணி வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

-மாடசாமி மனோஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு