பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பல ஆண்டுகளாக அலமாரியின் இடுக்கில் மறைத்து வைத்திருந்த புடவை ஒன்றை எடுத்து என் மடியில் வைத்துப் பார்த்தேன். அரை நொடிப்பொழுதில் என் கல்லூரி நினைவுகளை அது மீட்டுத் தந்தது.
அவளுக்குப் பிடித்த ஊதா நிறம் அதில் முழுமையாக பரவியிருந்தாலும், அந்த முந்தானை முடிவில் வரும் பழுப்பு நிற பூக்களை ஏனோ உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மெல்ல அந்தப் பூக்களை தடவிப் பார்க்கும்போது அவளின் அழகிய முகம், என்முன் தோன்றி மறைந்தது.
கல்லூரியின் இறுதி நாள்...
`ஒருமுறை கூட உன்னை சேலையில் நான் பார்க்கவில்லையே?' என்று அவளிடம் சொன்னபோது,
`நீ வாங்கிக் கொடுப்பனு நெனைச்சேன்...'
சொல்லிவிட்டு உதட்டோரம் சிரிப்பையும், கண்களின் ஓரம் வெட்கத்தையும் காட்டியபோதுதான் தெரிந்தது அவளின் காதல்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேலை ஒன்றுக்கு விண்ணப்பிக்க வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அவளுக்காக ஒரு புடவையை வாங்க அன்று மாலை முழுவதும் அலைந்து திரிந்தேன்.
`யாருக்கு சார் புடவை?'
`நிறம் என்ன?'
`உயரம் எவ்வளவு?'
`என்ன கலர் புடவை வேணும்?'
`சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி எடுத்துக்காட்டுவேன் சார்...' வரிசையாக பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அந்தக் கடைக்காரன்.
அம்மாவின் புடவையைப் போர்த்திக்கொண்டு, இரவில் தூங்குவது மட்டுமே அதுவரை எனக்கும் புடவைகளுக்கும் இருந்த அதிகபட்ச உறவு. நடை பழகாத குழந்தையிடம் வந்து நடனம் பற்றி பேசுகிறானே, இவனை என்ன செய்வது? என யோசித்து கொண்டே...
`மாநிறம்,
என் தோள் உயரம்,
ஊதா கலர் புடவை'
என்றேன் நான்.

அவன் கேட்ட அந்த முதல் கேள்வியை வேண்டுமென்றே நான் தவிர்த்ததைக் கவனித்துவிட்டான்.
`இந்தப் புடவைய எடுத்துக் குடுங்க சார். அவங்களுக்கு பிடிக்கும்...' என்றான் புன்சிரிப்புடன்.
காதலிக்காக முதன் முதலாக புடவை வாங்கும் ஒவ்வோர் ஆணுக்கும் முளைக்கும் அதே வெட்கம் என் முகத்திலும் எட்டிப் பார்த்தது.
அன்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் அந்தப் புடவையை பத்திரப்படுத்த நான் மேற்கொண்ட முயற்சிகளை, ஒரு சிறிய புன்னகையுடன் நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கையில்...
`அப்பா.. உள்ள என்ன பண்றீங்க? காம்படிஷனுக்கு டைம் ஆகிடுச்சு. அம்மாவோட ஒரு புடவைய எனக்கு செலக்ட் பண்ண இவ்வளவு நேரமா?' - எனதருமை மகளின் குரல்.
`இதோ வரேன் மா...' என சொல்லிவிட்டு அந்த ஊதா நிற புடவையை அவளிடம் நீட்டினேன்.
`இது என்னோட புடவை இல்லையே. எங்க இருந்து எடுத்தீங்க?' சந்தேகப் பார்வையுடன் கன்னங்களை சுருக்கியபடி வந்தாள் என் மனைவி.
அவள் கேட்ட அந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கும்போதே, தொலைந்து போன எனது காதலையும் தேடிக்கொண்டிருந்தேன்.
-மருத்துவர். சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.