Published:Updated:

கிழவி வேடம்! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பளிச்சென மின்னிய `ஐ போனைக்’ கையில் ஏந்தியபடி, ஒவ்வொரு மேசையாக அலைந்தார் இராசப்பு....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே. ஐயர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்துகொண்டிருந்தது. வட்ட வடிவமான மேசைகளில் அமர்ந்திருந்து பல வகை உணவுகளைப் புசித்தும், பலவிதமான கதைகளப் பேசிக் கழித்தும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே திடீரெனப் பிரசன்னமானார் இராசப்பு.

Representational Image
Representational Image

பெயரில்தான் `அப்பு’ இருக்கின்றதேயொழிய அவருக்கு வயது ஐம்பதிற்குள்தான். மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும், சுவர் வழியே தொங்கிக் கொண்டிருக்கும் எல்.சி.டி ஊடாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள், சிவபூசையில் புகுந்த கரடி மீது குவிந்தன.

பளிச்சென மின்னிய `ஐ போனைக்’ கையில் ஏந்தியபடி, ஒவ்வொரு மேசையாக அலைந்தார் இராசப்பு. தன் சுட்டு விரலினால் ஐ போனைத் தட்டித் தட்டி, முதல் நாள் தான் நடித்திருந்த நாடகமொன்றின் காட்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தார். அப்பு முதல் நாள் ஆச்சி வேடமிட்டிருந்தார். அமைதியாக திருமணத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, திடீரென எழுந்து நின்று ஒவ்வொரு மேசையாக வட்டமடிக்கும் இராசப்புவின் தோற்றம் இடையூறாக இருந்தது. எரிச்சலைத் தந்தது. அவரது வாயின் இருபக்கத்து அந்தங்களும் காதுவரை நீண்டிருக்க, `இகும் இகும்’ என்று சிரித்தபடி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருந்தார்.

“எப்படி இருக்கு என்ரை கிழவி வேசம். கொஸ்ரியூமிற்கு மாத்திரம் இருநூறு டொலர்கள் செலவாச்சு…..”

மங்களகரமாக - தாலி சரசரக்க – ஜரிகைப்பட்டுச் சேலை மினுமினுக்க உட்கார்ந்திருந்த ஏழெட்டுப்பெண்களின் மத்தியில், ஒரு ஆசனம் வெறுமையாக இருக்கவே அதற்குள் புகுந்துகொண்டார் அவர். தனது `ஐ போனை’ நீட்டி, சுற்றிச் சுழலவிடச் சென்றபோது அங்கே சலசலப்பு ஏற்பட்டது. இதையெல்லாம் தூரத்தே இருந்து அவதானித்துக்கொண்டிருந்த ஒரு முதிய பெண்மணி கடுப்பானார். இராசப்பு திருமணத்தைக் குழப்பிவிடுவார் என்று எண்ணினார். அப்புவுக்கு ஆப்பு வைக்க திடீரென கூட்டத்துனுள்ளே புகுந்தார் அந்தப் பெண்மணி. இராசப்புவைக் குற இழுவையாக இழுத்துச் சென்று விசாரணை செய்தார். “எப்படி இருக்கு என்ரை கிழவி வேசம். கொஸ்ரியூமிற்கு மாத்திரம் இருநூறு டொலர்கள் செலவாச்சு…..” அந்த முதிய பெண்மணிக்கும் அதையே சொன்னார்.

Representational Image
Representational Image

“நீங்கள் மாப்பிள்ளையின் உறவினரா?“ அந்தப்பெண்மணி இராசப்புவிடம் கேட்டார்.

“ஆமாம். மாப்பிள்ளையின் அப்பாவின் நண்பர்.”

“நான் - மணப்பெண்ணின் அம்மாவின் அக்கா” சொல்லிக் கொண்டே அந்த முதிய பெண்மணி இராசப்புவின் ரெலிபோனை வாங்கிப் பார்த்தார்.

“சும்மா சொல்லப்படாது. அச்சாவா நடிச்சிருக்கிறியள். நானே கிழவி. என்னைவிட உங்கள் நடிப்புப் பிரம்மாதம்”

இராசப்புவின் காதிற்குள் ரகசியம் பேசினார். அவரது ரெலிபோனை வாங்கிக்கொண்டு விறுவிறெண்டு உள்ளே போனார். இராசப்பு ஒரு ஓரமாக நின்று எல்.சி.டி பனலைப் பார்த்த வண்ணம் நின்றார்.

“மணப்பெண் கூறை மாற்றப் போகின்றார். அந்த நேர இடைவெளியில் உங்களுக்கு ஒரு அதிசயம் காத்திருக்கின்றது. அமைதியாக இருந்து ரசித்துப் பாருங்கள்” ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்தது.

இராசப்புவின் கிழவி வேடம் எல்.சி.டி இல் தோன்றியது. திருமணத்தைப் பார்க்க வந்தவர்களுக்கு அந்தக் காட்சி உற்சாகத்தைக் கொடுத்தது. மணப்பெண் கூறை மாற்றி வரும் வரைக்கும் இராசப்புவின் இராச்சியம்தான். வந்த வேலை முடிந்தது என எண்ணிய இராசப்பு, தனது ஐ போனைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த முதிய பெண்மணியைத் தேடிப் போனார். அவரைக் காணவில்லை.

திருமணக் காட்சிகளை ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தவரிடம் அந்த முதிய பெண்மணியைப் பற்றி விசாரித்தார்.

Representational Image
Representational Image
Unsplash

“ஒரு பெண்மணி வந்தவர்தான். ரெலிபோனைத் தந்து நீங்கள் நடித்த அந்த நாடகத்தின் காட்சிகளைப் போடச் சொன்னார். பிறகு அந்த போனை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.” “பெண்மணி… பெண்மணி எண்டு சொல்லாதையுங்கோ…. அது மணப்பெண்ணின் அம்மாவின் அக்கா” பதற்றத்துடன் சொன்னார் இராசப்பு.

“எனக்கு மணப்பெண்ணின் குடும்பத்தினரை நன்றாகத் தெரியும். மணப்பெண்ணின் அம்மா, அவரது குடும்பத்தில் ஒரே ஒரு ஆள். அவவுக்கு அக்காவும் இல்லை. கொக்காவும் இல்லை” அவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்.

“அப்ப என்ரை போன்? வெயர் இஸ் மை போன்? where is my phone?”

“மை போனா…. ஐ போனா?” என்று அவர் எதிர்க் கேள்வி கேட்க, “இரண்டும் ஒன்றுதான்” என்றார் இராசப்பு.

இராசப்புவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையைப் போட்டு விறாண்டினார். அது புறாக்கூடு போல விரிந்தது. ”அப்ப கிழவி வேடம் போட்டது ஆர்?” கோபத்துடன் கத்தினார் இராசப்பு. “அது நீர் தான்” என்றார் அவர்.

-கே.எஸ்.சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு