Published:Updated:

காதல் நினைவுகளை மீட்டெடுத்த ஒற்றை ஃபேஸ்புக் மெசேஜ்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து விழும் சப்தம் கண்களை முழுமையாக மூட விடாமல் தடுத்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்த ஞாபகங்களை மட்டும் சுமக்க முடியாமல் போயிருந்தால் மனித வாழ்வு என்னவெல்லாம் ஆயிருக்கும்? திகைப்பாக இருந்தது. ஆனால், சில மிகை ஞாபகங்களின் எச்சம், பெரும் வெறுப்பாக மாறுவதும் உண்டு.

எனக்கு இப்போதைய ஞாபகம் எதைத் தரப்போகிறதோ தெரியாது. ஆனால், பெருவெளியில் என்னைக் கொஞ்சம் பின்னோக்கி இழுக்கும் என்பது நிதர்சனம்.

ஆம். முன்பனிக்காலம், அந்தி சாயும் நேரம் என்பதான ஞாபகம்!

என் அலைபேசியை அமைதி நிலையில் வைத்துவிட்டு என்னை அன்றைய தின களைப்பிலிருந்து விடுவிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். சற்றே கண்களை மூடி இளையராஜா இசையில் மூழ்க ஆரம்பித்தேன்.

இளைய நிலா பொழிகிறதே!

இதயம் வரை நனைகிறதே!

அப்படியே கண்களை மூடினேன்.

Representational Image
Representational Image

அலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்து விழும் சப்தம் கண்களை முழுமையாக மூட விடாமல் தடுத்தது. கண்களைத் திறக்காமல் விரல்களால் துழாவித்துழாவி அலைபேசியை எடுத்தேன். முகநூல் மெசேஞ்சரில் செய்தியொன்று சிவப்பு வண்ணத்தில் என்னைப்பார் எனக் குதித்துக்கொண்டிருந்தது.

பொதுவாகவே, முகநூலுக்கும் எனக்கும் அவ்வளவாகப் பரிச்சயம் இருப்பதில்லைதான். ஆனாலும், அது யாரிடமிருந்து வந்தது எனச் சற்றே ஓரக்கண்ணால் பார்த்தேன்.

சப்த நாடியும் அடங்கியது! உயிர் பிரியும் கடைசித்துள்ளல்போல ஆடி அசைந்தது சரீரம்! கண்கள் அகல விரிந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் எழுந்து உட்கார்ந்தேன். என்னையே நம்பாமல் மீண்டும் ஒருமுறை முகவரியை மீண்டும் படித்தேன்.

``டேய் ராஜ்!”

என ஆரம்பித்த முகநூல் செய்தி என்னுடன் பயணித்த என் சீனியர் தோழி அனுப்பியது. 20 வருடங்களுக்கு முன்பும் அப்படித்தான் அழைப்பாள். என்னைவிட வயதில் மூத்தவள். அவள் கண்கள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. கண்கள் பேசிய மொழி புரிந்திருந்தால் நானும் ஒரு வகையில் டெண்டுல்கர் ஆயிருக்கக்கூடும்.

வெவ்வேறு பாடத்துறைகள். ஆனால், நாங்கள் ஓட்டிய கற்பனை படகுத்துறைகள் இருவருக்கும் வெவ்வேறானவை அல்ல.

எங்கள் நேசம் ரயில் பயணத்தில் முட்டிமோதிப் பற்றிக்கொண்டது. நீண்டு பெருகி வளைந்தும் தெளிந்தும் இணை பிரியாமல் போகுமே தண்டவாளங்கள்! அப்படியொரு பிணைப்பு. எந்த விரசமும் இல்லாமல் பழகித்திளைத்த நாள்களை என்னவென்று சொல்ல? உலராத மெஹந்தி பட்டே இதுவரை என் கன்னங்கள் சிவந்துள்ளன! அந்த ஆத்மார்ந்த நட்பின் எல்லை வானம் என்றே சொல்வேன். பறந்துகொண்டிருந்தபோது எவற்றிற்கும், உயரம் ஆச்சர்யமாக இருப்பதில்லை. பட்டத்திற்கும் அப்படிதானே! உயரப் பறக்கும்போது வாலை ஆட்டிக்கொண்டிருக்கும். மாஞ்சாக்கயிறு அறுந்தால் மின் கம்பியில் சிக்கிச் சீரழியும். அப்படிதான் திடீரென்று எந்தத் தொடர்புமின்றி கலைந்துபோனது அந்த உறவு.

ஒரு மாதத்திற்குள்ளாக வீட்டு முகவரி மாறியிருந்தது. நண்பனோடு சைக்கிள் எடுத்துக்கொண்டு அலைமோதி என் நட்பு கரை ஒதுங்கிய அந்த இடத்தையும் கண்டறிந்தபோது மேகம் திரண்டு வேடிக்கை பார்த்தது. அன்றைய தினம் வெளி திண்ணையில் அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஒரு பரவசம்! ஒரு மெல்லிய புன்னகை.

Representational Image
Representational Image

(வான வீதியில் மேக ஊர்வலம்…

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவமகள் விழிகளிலே கனவு

வரும் – இளையநிலா)

வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை! அமைதியற்ற சூழ்நிலை போலும்! பந்தல் போட்டு அவிழ்க்கப்பட்ட அறிகுறிகள். உறவினர்கள் நடமாட்டம். திண்ணையில் அமர்ந்தோம். மெல்லிய குரலில் தன் அம்மாவின் மறைவைச் சொல்லி கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருந்தாள்.

பேச்சின் வேகமும் சுருதியும் குறைந்து இறுதியில் கொஞ்ச நேரத்தில் உறவினர்கள் வரப்போகிறார்கள் என்பதை அடிக்கடி தெருவை நோக்கிச் சொல்லாமல் சொல்லிக் கிளம்பச் செய்தாள்.

வெறுத்த பார்வை! அவளுக்கு விடுபடல் அல்ல... எனக்கு விடைபெறுதலும் அல்ல… நான் மறையும் வரை என்னை நோக்கியே படபடத்துக்கொண்டிருந்திருக்கும் தேவதையின் சிறகுகள்!

வெறுமனே கைவீசிக்கொண்டு திரும்ப மனமில்லாமல் பகல் இறக்கும் வரை சுற்றி அலைந்தேன். இருளில் மறைந்தேன்!

அதற்குப் பின், இன்று தான்... குறுஞ்செய்தியில் என்னை அலைமோத விட்டிருக்கிறாள். பிரிவின் வலி என்பது பிரசவ வலியைவிடக் கொடுமையானது என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே என் பதற்றத்திற்கான காரணம் புரியும்.

ஒரு காதலியாக லயித்து இருந்தால் தாடிவிட்டு மறந்து போயிருப்பேன். எங்கள் மனதுக்குள் தோன்றிய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? கசப்போ, புளிப்போ, இனிப்போ, இவற்றின் கலவையோ எதுவானாலும் காரமாக மட்டும் இருந்ததில்லை. அந்தக் கோபப்படாத சிராய்ப்புகளே இப்போது என்னைப் பதறச் செய்கிறது.

அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டச் செய்தியைக்கூட என் வீட்டிற்குள் திணிக்கப்பட்ட அழைப்பிதழ் மூலமாகத் தெரிந்துகொண்டேன். என்னிடம் எல்லாவற்றையும் அளாவித் திரிபவள், எதற்காக எல்லாவற்றையும் மறைத்தாள் என்ற வினவ முடியாத கேள்விக்குள் என்னை அடக்கிவிட்டாள். எல்லோருக்குள்ளும் கேட்க வேண்டிய இத்தகைய வினாக்கள் இருந்துதான் தொலையும். சரியான பதில்கள் நாமே அறிந்தாலும் அதைச் சம்பந்தப்பட்ட உறவுகளிடம் கேட்டு அவர்களின் நெஞ்சை துளைத்தெடுக்கும் கொடூர மனங்களோடே திரிவதுதானே மனித இயல்பு.

இன்னும் அந்தக் குறுஞ்செய்தி படித்து முடிக்கவில்லை. முதல் இரண்டு வார்த்தைகளில் இன்னும் மூழ்கிக் கிடக்கிறேன். மெல்ல என்னை நானே முடியைப் பிடித்து இழுத்து மூச்சை எளிதாக்கி அந்த நினைவு ஆற்றிலிருந்து மீள எத்தனிக்கிறேன்.

Representational Image
Representational Image

"டேய் ராஜ்! நல்லாயிருக்கியா?"

என நலம் விசாரித்த அந்த வாக்கியத்துக்குள் என் நரம்பு மண்டலமே அடங்கி ஆடியது. எத்தனை வருடங்கள், எப்படியெல்லாம் ஓடிப்போயிருக்கின்றன?

முன் போல் எனக்காக உருகுவாளா, உருமாறிப் போயிருப்பாளா? எனச் சந்தேகம் துளிர்க்கிறது. அந்தச் சந்தேகம் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை ருசிக்காது. சந்தேகம் இல்லாத வாழ்க்கையில் ஊடல் இருக்காது. ஊடல் இல்லையென்றால் எங்கிருந்து கூடலை இழுத்து வர முடியும்? ஆயிரம் சொல்லுங்கள் சண்டையில்லாத வாழ்க்கை சரிப்பட்டு வராது.

"டேய் ராஜ்! நல்லாயிருக்கியா? நீ கூப்பிடுடா!"

என்ற ஒற்றை வரியோடு ஒரு அலைபேசி எண் இணைப்பாக இருந்தது! அது இனிப்பாக இருந்தது. இப்பொழுதே அழைத்துவிட ஆசை!

(முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ…

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ...)

சுற்றிலும் உறவினர்கள். சுழலும் நினைவுகள். பேசினால் உற்றுக்கேட்பார்கள். எப்பேர்ப்பட்ட நாகரிக மனிதனையும் அனிச்சையாகத் திரும்ப வைப்பதும் அலைபேசி உரையாடல்கள்தான். கவனிக்காததுபோல இருந்தாலும் நாம் பேசுவதைக் கவனிப்பது காதுகளுக்கான அறிவிக்கப்படாத நெருக்கடி. நான் அவர்கள் கிளம்பட்டும் எனக் காத்திருந்தேன். ஒவ்வொரு நொடியும் யுகமாகக் கழிந்தது. ஒரு வழியாகக் கூடாரம் காலியானது. வெறிச்சோடி திண்ணையைத் தாண்டி மாடிக்குச் செல்ல முயன்ற சமயத்தில் நெருங்கிய நண்பனின் அழைப்பு.

தினமும் பேசுபவனின் அழைப்புதான். ஆனாலும், எரிச்சலூட்டியது. பதிலுரைக்காமல் தவிர்த்தால் மீண்டும் மீண்டும் அழைத்து தொந்தரவு செய்யும் ரகம். முக்கிய அழைப்பின்போதுதான் சில அழைப்புகள் முட்டிமோதிக்கொண்டிருக்கும். இப்போது அவளோடு பேசுவதுதானே சுகம்.

அன்றைய தினத்தில் இப்படியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்திருந்தால் இந்தக் காணாமல் போன உறவில் இப்படியொரு உச்சக்கட்ட பரவசம் இருந்திருக்குமா? பேசிப்பேசியே நேரத்தைப் பொசுக்கிப் போட்டிருப்போமே! ஆனாலும், கடிதங்கள் எழுதிக்கொண்ட அந்த அற்புத நினைவுகள் மாடியேறிப்போகும்போது ஓடிவந்து இறங்கின. அந்த 25 பைசா தபால்கார்டில் உயிரே அடங்கியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையின் நகர்விலும் மனது படபடப்பு கூடும்! அவள் பேசுவது போலவே உதடுகள் முணுமுணுக்கும். உள்ளங்கையில் வியர்வை வந்து மினுமினுக்கும். அவள் முகம் நினைவில் வந்து சிணுங்கிச் சிவக்கும். அவள் சில சமயங்களில் ஆங்கிலம் கலந்த எழுத்துகளாக உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக இன்லாண்ட் லெட்டருக்குள் அடைத்து ஒட்டி அனுப்புவாள். நான் விரல்கள் ஒட்டாமல் பிரிப்பேன்.

எண்ணங்களைச் சுமந்து வரும் அந்தக் கடிதங்களுக்காகக் காத்திருக்கும் நாள்களை என்னவென்று சொல்ல? நேரம் ஆக ஆகத் தவிக்கும் ஒரு காதலனின் தவிப்பாக இருக்கும். ஒரு குடிகாரன் போதைக்குத் தவிக்கும் அனிச்சைகள் நிறைந்ததாக இருக்கும். தபால்காரரின் வருகையின் திசைநோக்கி அடிக்கடி இடம்பெயரும் பூனையாக இருப்புக்கொள்ளாமல் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பேன்.

அந்த நேரத்தில் இந்த இளமையின் தவிப்புகள் பிறருக்கு எப்படியெல்லாம் என்னை அடையாளம் காட்டியிருக்குமோ தெரியவில்லை. எதுவானாலும் சம்பந்தமில்லாத கோபத்தால் அனைத்தையும் உருமாற்றி அடக்கி வைத்திருப்பேன். அப்படிப்பட்ட உணர்வைக் கொடுத்த உறவோடு அல்லவா இப்போது உரையாடப்போகிறேன். வானத்தைப்பார்த்தேன். ஏன் தயங்குகிறாய்? சீக்கிரம் அழைத்து பேசு என நட்சத்திரங்கள் கண்சிமிட்டின!

Representational Image
Representational Image

(நீலவானிலே வெள்ளி ஓடைகள்

போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார்

நவமணிகள்? - இளைய நிலா)

யாருடைய இடையூறும் இல்லையென்ற நூறு சதவிகித உறுதிக்குப் பின் நடுங்கிக்கொண்டே பொத்தான்களை அழுத்துகிறேன்.

என் அன்பை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட வேண்டும்.

அவள் எப்படியெல்லாம் இருக்கப்போகிறாளோ?

அவளை எப்படி அழைப்பது?

சீனியர் என்ற எண்ணம் அவளுள் இருக்குமா? தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது? இப்படியான அலைவரிசை ஒன்று அடிக்கடி தோன்றி மறைந்துகொண்டிருந்தது. ஆனாலும், 10 எண்களையும் பதிவு செய்த பின் அதை மீண்டும் மீண்டும் சரிபார்த்தேன்.

எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன்…

கடவுளே!

உம்ம்ம்ம்ம்ம்ம்…

வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன!

கண்ணை மூடிக்கொண்டு அழுத்தினேன்.

கண்களை திறக்காமலேயே காதருகே வைத்தேன்.

மெல்லியதான பெண் குரல்…. தேன் வந்து பாயப்போகிறது காதினிலே!

``தாங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது!"

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு