Published:Updated:

கொலைக் களம்! - கண்ணீர்ச் சிறுகதை #MyVikatan

நல்லா யோசிச்சுத்தான் நான் முடிவு பண்ணியிருக்கேன்... பன்னிரண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன்... அப்பாவும் அம்மாவும் இருந்தப்போ இந்தப் பேச்சையே எடுக்க விடல...

"டேய், டேய், டேய், வேணாம்டா....ப்ளீஸ் டா... சொன்னாக் கேளுடா..."

கெஞ்சலும், கோபமும், அழுகையும், கையாலாகாத்தனமும் கலந்து ஒலித்தது அமுதாவின் குரல்.

"போக்கா....உனக்கு வேற வேலை இல்ல...இதப் பத்திப் பேசாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்... முடிஞ்சு போன விஷயம்... இன்னும் அதையே பிடிச்சு தொங்கிகிட்டு இருக்க...."

எந்தக் கலவையும் இல்லாமல் எரிச்சல் மட்டுமே மொத்தம் சேர்ந்து பதிலாய்த் தெறித்தது அவள் தம்பி வாசுவின் வார்த்தைகளில்.

"இன்னும் ரெஜிஸ்டிரேஷன் ஆகலைலடா... இன்னும் டைம் இருக்குடா...ப்ளீஸ்டா...கொஞ்சம் யோசிடா..."

மீண்டும் அமுதாவின் கெஞ்சல்.

Representational Image
Representational Image

"நல்லா யோசிச்சுத்தான் நான் முடிவு பண்ணியிருக்கேன்... பன்னிரண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன்... அப்பாவும் அம்மாவும் இருந்தப்போ இந்தப் பேச்சையே எடுக்க விடல. அப்பா போனப்புறம் அம்மா அதுக்கு மேல... என்னவோ அவங்க உசுரே அதுலதான் இருந்த மாதிரி அதைப்பத்திப் பேசறதா இருந்தா வீட்டுக்கே வராதன்னு சொல்லிட்டாங்க... பெத்த மகன்னு கூடப் பாக்காம... நானும் பொறுத்துக்கிட்டேன் எப்பிடியும் என் கைக்கு ஒரு நாள் வரத்தான போகுதுன்னு... இத்தனை வருஷமா யோசிக்காதது இப்ப என்ன யோசிக்கச் சொல்லற? யோசிச்சு யோசிச்சு தான இப்ப அதைச் செயல்படுத்திட்டு இருக்கேன்..." என்றான் சள்ளையான தொனியில்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாய் இந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது இருவருக்கும் இடையில்.

இவர்களுடைய கொள்ளுத்தாத்தா அந்தக் காலத்தின் ஏதோ ஒரு சிற்றூரின் ஜமீன். அவர் சேர்த்து வைத்த ஏராளமான சொத்துகளில் ஒன்று அந்த மாந்தோப்பு. இவர்களின் (அமுதா, வாசு) தாத்தா மற்ற சொத்துகளில் உள்ள அவரின் பங்கினை அவரது மற்ற இரண்டு சகோதரர்களுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டு அந்த மாந்தோப்பை மட்டும் மொத்தமாக எடுத்துக்கொண்டார்.

அவரது இரண்டு மகன்களையும், படிக்க வைத்து அரசு வேலையில் அமர்த்தி, திருமணம் செய்து வைத்து... அனைத்தும் அந்த மாந்தோப்பின் வருமானத்தில்தான். வந்த வருவாயில் இரண்டு மகன்களுக்கும் இரண்டு வீடுகளையும் கட்டிக்கொடுத்து விட்டார். ஆனால் அவரும் பாட்டியும் வசித்தது மாந்தோப்பில் இருந்த ஒரு சிறிய ஓட்டு வீட்டில்தான். இறப்பதற்கு முன் இரண்டு மகன்களுக்கும் மாந்தோப்பை சரிசமமாகப் பிரித்து உயில் எழுதி வைத்துவிட்டார் - ஓட்டு வீடு இருக்கும் பகுதி பெரிய மகனுக்கும் மற்ற பகுதி சிறியவனுக்கும் என்று.

அமுதா, வாசுவின் அப்பாதான் சிறியவர். இவர்களின் பெரியப்பாவுக்குப் பிள்ளைகள் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயில்களின் நகல்கள் அமுதா, வாசுவின் அப்பா, பெரியப்பா இருவரிடமும் இருந்த போதும் மாந்தோப்பை சகோதரர்கள் இருவரும் பிரிக்கவில்லை. அது ஒரே தோப்பாகவே பராமரிக்கப்பட்டு ஒரே தோப்பாகவே குத்தகைக்கும் விடப்பட்டது. குத்தகைப் பணம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டு அண்ணன் தம்பிக்கு ஒவ்வொரு பங்கும் மூன்றாவது பங்கு தோப்பைப் பராமரிப்பதற்கென்றும் ஒதுக்கப்பட்டு வந்தது.

இவர்களின் பெரியப்பா அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் நேரே மாந்தோப்பின் ஓட்டு வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். அவருக்குப் பிள்ளைகள் இல்லாததால் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லத் தேவையின்றி, பெரியப்பாவும் பெரியம்மாவும் அந்த ஓட்டு வீட்டைச் சிறிது திருத்திக் கட்டி சத்தமில்லாமல் சந்தோஷமாய்க் குடியமர்ந்துவிட்டார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

குத்தகை ஏற்பாடு அப்படியே தொடர்ந்தது. நினைவு தெரிந்த நாள் முதல் அக்காவும் தம்பியும் ஓடி விளையாடிய தோப்பு அது. அமுதாவிற்குத் திருமணம் ஆனா போதும், வாசு வேலை நிமித்தம் அமெரிக்கா சென்ற போதும் தோப்பு தோப்பாகவே இருந்தது. அது சொத்தாக மாறியது வாசு திருமணம் முடித்து இருவருக்கும் கிரீன் கார்டு கிடைத்து அமெரிக்காவிலேயே நிரந்தரமாக இருந்துவிடவேண்டுமென்ற எண்ணத்தில் அங்கே வீடு வாங்கவேண்டுமென்ற முடிவு வாசுவாலும் அவன் மனைவி பானுமதியாலும் எடுக்கப்பட்டபோதுதான்.

அன்றிலிருந்து அந்தத் தோப்பை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். பெற்றவர்கள் இருந்தவரை அது முடியவில்லை. இதோ இப்போது அம்மாவின் காரியங்கள் முடிந்த கையோடு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட முடியும் தறுவாயிலும் அமுதா கெஞ்சிக்கொண்டிருக்கிறாள்.

பொங்கும் கண்ணீரை மறைப்பதற்கு எழுந்து சமையலறைக்குள் சென்றாள் அமுதா.

சற்று நேரத்தில் பின்னால் வாசு வந்து நிற்பது அவளுக்குத் தெரிந்தது.

"அக்கா...ப்ளீஸ்...புரிஞ்சுக்கோ...அங்க நான் டாலர்ல இ.எம்.ஐ கட்டிட்டு இருக்கேன் வாங்குன வீட்டுக்கு. அங்கேயும் எகனாமிக் சிச்சுவேஷன் முன்ன மாதிரி இல்ல. எந்நேரம் என்ன ஆகும்ன்னு தெரியல. இந்த அமௌன்ட் வந்தா நான் அங்க மொத்தமா வீட்டுக் கடன அடச்சுட்டு மிச்சத்தைப் பசங்க பேர்ல இன்வெஸ்ட் பண்ணி வச்சுரலாம். அவங்க எதிர்காலம் கொஞ்சமாவது சேஃபா இருக்கும். என் இடத்துல நீ இருந்தா நீயும் இததானக்கா செய்வ...?" என்றான் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியாக.

என்ன ஆனாலும் அவனின் ஒரே உடன்பிறப்பு. சிறு வயதிலிருந்து பாசத்துடன் வளர்ந்தவர்கள். எதிலும் அவர்களிடையே சண்டை என்று வந்ததில்லை - இதைத் தவிர.

Representational Image
Representational Image

அமுதா அமைதியாகவே இருந்தாள். வாசு சொன்ன ஒரு வார்த்தை அவளை யோசிக்க வைத்தது - அவன் இடத்தில் அவள் இருந்தால் அவளும் அதைத்தான் செய்திருப்பாளோ? அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமுதா வந்த வெளிநாட்டு வரன்கள் அனைத்தையும் நிராகரித்தாள். அவளும் எம்.டெக் பட்டதாரி என்ற போதும் கார்ப்பரேட் வேலைகள் எதையும் அணுகாமல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தாள். வந்த வரன்களில் 'வேலை - சுயதொழில்' என்று இருந்த பரசுராமைத் தேர்ந்தெடுத்தாள். இரண்டு மகள்களோடு இன்று வரை வாழ்க்கையில் எந்த முகச்சுளிப்பும் இன்றி அமைதியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

ஒரு வேளை அவளுக்கும் இப்படிப்பட்ட ஒரு தேவை என்று வந்தால் அவளும் இப்படிப்பட்ட ஒரு முடிவைத்தான் எடுக்க வேண்டியதாய் இருந்திருக்குமோ?

அமுதாவிற்கு வாசு தோப்பை விற்பது கூட அவ்வளவு வருத்தமில்லை - தோப்பை தோப்பாகவே அவன் விற்றிருந்தால். அவளே கூட அதை வாங்கியிருப்பாள் - வங்கிக்கடன் வாங்கியாவது. ஆனால் அவன் பங்கான பதினேழரை ஏக்கர் தோப்பு தோப்பாக விற்கப்பட்டால் வரும் தொகை அவனுடைய தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. ரூபாயிலிருந்து டாலருக்கு மாற்றினால் பற்றாக்குறை தானே. அதனால்தான் அவன் தோப்பை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் விற்கப் போகிறான். அவர்கள் கொடுக்கச் சம்மதித்திருக்கும் தொகை பல பத்துக் கோடிகள் - டாலரில் மாற்றினால் சில இலட்சங்களாவது தேறும். அவன் தேவை அதுதானே. அது போக அவர்கள் அங்கே கட்டும் குடியிருப்புகளில் நான்கு இவன் பெயரில் பதிவு செய்யப்படும். அவற்றை அவன் வாடகைக்கு விடவோ, பின்னாளில் விற்கவோ, எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

Representational Image
Representational Image
Pixabay

எப்படிப் பார்த்தாலும் யாரைக் கேட்டாலும் வாசுவின் முடிவில் நியாயமிருப்பதாகத்தான் சொல்வார்கள். ஆனால் அமுதாவால் கடைசிவரை அவன் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பின் அவளால் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவும் முடியவில்லை. பத்திரப் பதிவு முடிந்து கடைசித் தொகையும் கைக்கு வந்து எல்லா வேலைகளும் முடித்து, திரும்ப அமெரிக்கா கிளம்பும் முன் விடைபெற்றுப் போக வந்த வாசுவிடம், "நல்லா இரு", என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவளால் பேச முடியவில்லை.

மாதங்கள் சில கழித்து இவள் பங்கு தோப்பைக் குத்தகைக்கு எடுத்திருந்த பங்கஜத்தம்மாள் இவர்களுக்கு வழக்கமாய்க் கொடுக்கும் பழங்களைக் கொண்டுவந்தபோது,

"பாக்கச் சகிக்கலையே, தாயீ. தள தளன்னு பூவும் பிஞ்சும் காயுமா இந்நேரம் அத்தனையும் காச்சுத் தொங்குமே... வெட்டி சாய்ச்சு, பிள்ளைங்களா வளத்த மரமெல்லாம் இப்ப மூளியா கெடக்குதே...", என்று புலம்பியவரை அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் மௌனமாக்கியது.

இரண்டு நாள் கழித்து இரவு உணவு முடிக்கும் நேரத்தில் பரசுராமனுக்கு வாசுவிடமிருந்து போன் வந்தது.

"சொல்லு, வாசு. எல்லாரும் எப்பிடி இருக்கீங்க? பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?"

நீண்ட நேரம் மறு பக்கம் பேச்சைக் கேட்ட பின், "சரி, வாசு. பார்க்கறேன்", என்றபடி அலைபேசியை அணைத்தான் பரசுராமன்.

அமுதா எதுவும் கேட்கமாட்டாள் என்று புரிந்து, "பழம் வேணுமாம். அனுப்பிவைக்கச் சொல்லறான்", என்றான்.

அமுதாவிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், "அனுப்பவா?" என்று கேட்டான்.

Representational Image
Representational Image

"உங்க இஷ்டம்", என்றபடி போய்விட்டாள் அமுதா.

பழங்களை அனுப்ப பரசுராமனுக்கு இஷ்டமில்லையென்றாலும் வாசுவின் பிள்ளைகளுக்காக ஒரு பெட்டி பங்கனப்பள்ளியும் ஒரு பெட்டி இமாம் பசந்தும் அனுப்பிவைத்தான்.

ஒரு வாரம் கழித்து, "Fruits received. Thanks" என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது வாசுவிடமிருந்து.

பெட்டிகளை காரிலிருந்துத் தூக்கிச் செல்ல அமெரிக்காவில் வாசுவின் பிள்ளைகள் உதவினார்கள்.

"ஓ! வந்துருச்சா? அப்பிடியே கிச்சன்ல வச்சுருங்க. ஃபைவ் மினிட்ஸ்ல கட் பண்ணி எடுத்துட்டு வரேன். எனக்கே ஆசையா இருக்கு. எதுவும் இந்த டேஸ்ட் வரல", என்றபடி பானுமதி கிண்ணங்களை எடுத்தாள்.

"கம், லெட்ஸ் வெய்ட் பை தி பூல். எவ்வளவு டேஸ்ட் தெரியுமா இந்தப் பழம்? உங்க தாத்தாவோட தாத்தா தோப்பு. நாங்க சின்ன வயசில அங்கதான் விளையாடுவோம்", என்று வாசு சொல்ல -

"டாட், இனஃப் ஆஃப் யுவர் பாஸ்ட். போரிங். ஜஸ்ட் கெட் தி ஃப்ரூட்ஸ்", என்றபடி பிள்ளைகள் ஓடினர்.

நீச்சல் குளத்தை ஒட்டி நாற்காலிகள் போட்டு, ஒரு சிறிய மேசையையும் நடுவில் வைத்துத் தயாராய் ஆன பின்னும் பானுமதி பழங்களை எடுத்து வரவில்லை.

"டாட், ப்ளீஸ் கோ அண்ட் சீ வாட்ஸ் டேக்கிங் மாம் சோ லாங். அவங்களே எல்லாத்தையும் சாப்பிட்டிட போறாங்க..." என்ற பிள்ளைகளிடம், "செஞ்சாலும் செய்வா, தே ஆர் தட் டெலிஷஸ்", என்றபடி வாசு கிச்சனுக்குப் போனான்.

"பானு, என்ன ஆச்சு? இவ்வளவு நேரமா ரெண்டு பழம் வெட்ட?" என்று கேட்டுக்கொண்டே வந்த வாசு, பானுமதி பதில் பேசாமல் உறைந்து நிற்பதைப் பார்த்து அவள் கண்கள் வெறிக்கும் இடத்தைப் பார்த்தான்.

உணவு மேசையின் தட்டில் இருந்த வெட்டப்பட்ட மாம்பழத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

-கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு