Published:Updated:

அன்கண்டிஷனல் லவ்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

பேருந்தில் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட வித்யாவுக்கு சிந்தியாவின் மேல் இரக்கம் ஏற்பட்டாலும், அதையும் தாண்டி சிறு பொறாமையும் ஏக்கமும் இருக்கத்தான் செய்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அம்பிகா குடியிருப்பில் கார் ஒன்று வந்து நின்றது. கார் கதவைத் திறந்து வெளியே வந்த பரத் பின் கதவைத் திறந்து, அதிலிருந்த வீல் சேரை இறக்கி மடிப்பை விரித்தான். முன்னால் அமர்ந்திருந்த சிந்தியாவை கைத்தாங்கலாய் காரில் இருந்து இறக்கி அதில் அமர்த்தினான். பின், மின்தூக்கியை நோக்கி வீல் சேரில் அமர்ந்திருந்த சிந்தியாவுடன் நடக்க, மின்தூக்கியிலிருந்து கதவைத்திறந்து வெளிப்பட்டாள் வித்யா.

Representational Image
Representational Image
ahmet arslan / Unsplash

``என்ன... கோயிலுக்குப் போய்ட்டு வந்தச்சா பரத்...’’

எனக் கேட்டுக்கொண்டே பதிலுக்குக் காத்திருக்காமல் சிட்டாய் வேலைக்குப் பறந்தாள்.

தினமும் கோயிலுக்குப் போய்விட்டு வீட்டை அடையும்போது வித்யா வாடிக்கையாய் கேட்டுக்கொண்டே வேலைக்குப் பறப்பதால் பரத்துக்கும் சிந்தியாவுக்கும் பெரியதாகத் தோன்றவில்லை.

அதற்குள் வீடு வரவே, பரத் கதவைத் திறந்து வீல் சேரை உள்ளே தள்ளிக்கொண்டு சென்றான்.

பேருந்தில் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட வித்யாவுக்கு, சிந்தியாவின் மேல் இரக்கம் ஏற்பட்டாலும், அதையும் தாண்டி சிறு பொறாமையும் ஏக்கமும் இருக்கத்தான் செய்தது. காரணம் பரத் சிந்தியாவின் மேல் காட்டும் அன்பும் அக்கறையும். ஆனால், வித்யாவின் கணவரான வினோத் காபி கோப்பையைக்கூட சாப்பிட்ட இடத்திலேயே வைத்துவிடும் பழக்கம் உள்ளவர். மேலும், அறுவை சிகிச்சை செய்து, குழந்தை இறந்த நிலையில் பிறந்த சோகம், ஒவ்வொரு மாதவிடாயின்போதும் வாட்டும் முதுகுத் தண்டின் வலி என அத்தனை வலிகளையும் அதை வாய் வழியாகச் சொல்ல வழியில்லாமல் மனதுக்குள் அழுதுகொண்டே வேலைக்குச் செல்வாள்.

Representational Image
Representational Image
Nayeli Dalton / Unsplash

தீடீர் என்று தலைவலிக்கிறதென்று வீட்டுக்கு அரை நாள் விடுப்பு எடுத்து சீக்கிரமாய் வந்தவள், அலுவலகத்திலேயே சாப்பிட்டுவிட்ட காரணத்தால் சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டாள். இரவு முழுக்க வாந்தியும் பேதியும் அவளைச் சுழன்று கழன்று எடுக்க மறுநாள் காலையில், கால்களைக்கூட ஊன்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

கணவரிடம் ஒரு கப் தேநீர் போட்டுத் தரச் சொல்லி கேட்க, அவரோ ஐந்து பெண் பிள்ளையுடன் பிறந்து வளர்ந்ததால் தேநீர் போடக்கூட தெரியாமல் இருந்தார். கடைக்குச் சென்று தேநீர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தன் கணவர் தேநீர் தனக்காக வாங்கி வந்திருக்கிறாரா எனக் கண்கள் தேடியது. ஏமாற்றமே... மிஞ்சியது.

அப்போது சரியான சந்தர்ப்பத்தில் பரத் சிந்தியாவுக்குப் பிறந்தநாள் என்பதற்காகச் சில பலகாரத் தட்டுடன் உள்ளே நுழைந்தான். முடியாமல் படுத்துக் கிடந்த வித்யாவிடம்,

`` என்ன ஆச்சு? ஏன் படுத்திருக்கீங்க’’ எனக் கேட்டான்.

``ஒண்ணுமில்ல தம்பி கொஞ்சம் முடியல’’ எனப் பதில் சொல்ல...

சட்டென்று வீட்டுக்குத் திருப்பியவன் கையில் அரிசி கஞ்சி கோப்பையும் கஷாயமும் இருந்தது. பருகியவளுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது.

``ரொம்ப நன்றி தம்பி. தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சொல்லுவாங்க.. அது என் விசயத்துல சரியா போச்சு’’ என வித்யா சொல்ல...

``இது எல்லாம் சின்ன விஷயம்’’ என பரத் பெருந்தன்மையுடன் சொல்ல,

``எது தம்பி சின்ன விஷயம்? தக்க சமயத்துல செய்ற உதவிக்கு ஈடா நான் என்ன செஞ்சாலும் போதாது தம்பி’’ எனக் கண்ணீர் மல்க கூறினாள் வித்யா.

``எதுனாலும் தயங்காம கேளுங்க’’ எனச் சிரித்துக்கொண்டே பரத் வெளியேறினான்.

இதையெல்லாம் கண்டும் காணாததுபோல இருந்தான் வினோத்.

``IT பார்க் வந்துருச்சு இறங்குறவுங்க இறங்குங்க’’ என நடத்துனர் குரல் கொடுக்க... சுயநினைவு திரும்பியவளாய் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

Representational Image
Representational Image
Anh Nguyen / Unsplash

இரண்டு வாரங்கள் கடந்தன. நல்லா இருந்த வித்யாவுக்கு மஞ்சள்காமாலை வியாதி வர, முக்கியமாக வெளிசாப்பாடு அறவே கூடாது என்று மருத்துவர்கள் உறுதியாய் கூறிவிட்டனர். இரண்டு வாரத்துக்கு முன் தனக்கு வாந்தி பேதி வந்து உடம்பு சரியில்லாமல் போனதில் இருந்து தன் கணவரிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் தனக்கு வீட்டு வேலையில் ஒத்தாசையாக இருப்பதையும் உணர்ந்தாள்.

மஞ்சள்காமாலை வியாதி தனக்கு ஏற்பட்ட தினத்திலிருந்து தன் கணவரே எல்லா வேலைகளையும் செய்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். திருமணம் ஆன 20 ஆண்டுகளில் தன் கணவரான வினோத் வேலை செய்ததுமில்லை முயற்சி செய்ததுமில்லை. இது அவளுக்கு அளவில்லா ஆச்சர்யத்தைத் தரவே தன் கணவரிடம் கேட்டேவிட்டாள்.

அதற்கு வினோத்... ``நான் எப்பவுமே அலுவலகத்த விட்டு சீக்கிரமா வந்துடுவேன் இல்லியா..?’’

``ஆமா...’ என வித்யா சொன்னாள்.

`` நீ அன்னைக்கு லேட்டா வந்த. நான் காத்து வரட்டும்னு கதவ திறந்து சோபால உட்கார்ந்து இருந்தேன். அப்பதான் தற்செயலா சிந்தியா வெளியே வந்தாங்க. வித்யாவுக்கு உடம்பு இப்ப எப்படி இருக்குனு என்னிடம் கேட்டாங்க... சரியாகியிருக்கும்னு சொன்னேன். நீ போன் பண்ணி கேக்கலையான்னு கேட்டாங்க... இல்லன்னு சொன்னேன்.

உங்கள நம்பி வந்தவுங்க ஒரு போன்கூட பண்ணிக் கேக்கலையா சார். அலட்சியமா இருக்கீங்களே... எனக் கேட்க கோவம் எனக்கு உச்சந்தலைக்கே ஏறிடுச்சு.

Representational Image
Representational Image

அதை வெளிகாட்டிக்காம, எல்லாரும் பரத் மாதிரி இருக்க முடியுமான்னு நக்கலா கேட்டேன்...

சிந்தியா மெல்லிய புன்னகையோடு, பரத் என் முன்னால் காதலன்னு சொல்ல அதிர்ச்சியாகிட்டேன்.’’

வினோத் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யாவும் அதிர்ச்சியாகிவிட்டாள்.

``என்ன சொல்றீங்க..?’’

என வித்யா கேட்க... ``ஆமா வித்யா... அவங்க கல்லூரிக் கால காதலர்கள்’’ என வினோத் தொடர்ந்தான்... சிந்தியா சொன்னதை அப்படியே சொன்னான்.

``கல்லூரியில் தான் முதன்முதலா நான் பரத்தைப் பார்த்தேன். பெண்கள் பள்ளியில் படிச்சதால, ஆண்களுடன் ஒட்டமாட்டேன். இந்நிலையில் பரத் சக பெண்களோடு நடத்துகொள்ளும் தன்மை என்னை ஈர்க்க, என்னை அறியாமலேயே பிடிச்சுப் போச்சு.

எனக்கு அம்மா இல்ல. அப்பா மட்டும்தான். தொழில் விஷயமா எப்பவும் என் அப்பா பிஸியா இருப்பார். நான் சாப்பிட்டேனா இல்லையான்னுகூட என் அப்பாவுக்குத் தெரியாது. பரத் தான் கூடுதலா ஒரு டிபன் கொண்டு வந்து கொடுப்பான். பரத், தன் அம்மாவும் தங்கையும் மருதாணி வைத்தது போக மிச்சத்தை எனக்கு கொண்டுவந்து கொடுப்பான். என் கல்லூரியில அன்னக்கி ஆண்டு விழா. அப்பா கூட கல்லூரிக்குள் நடந்து போய்கிட்டு இருந்தேன்.

Representational Image
Representational Image

புடவையில் என்னை முதன்முதலா பார்த்த பரத், மெய் மறந்து நின்னுட்டான். பரத் பின்னால ஓடி வந்த அவன் தங்கை என் அப்பா நின்னிருப்பதைக்கூட கவனிக்காம,

"அக்கா உங்கள பத்திதான் என் அண்ணன் பேசிக்கிட்டுருக்கும். வாயைத் தொறந்தாலே உங்க பேச்சுதான்" என வெளிப்படையாய் சொல்ல எல்லாத்தையும் அப்பா கவனிச்சுட்டார்.

அன்னைலிருந்து கல்லூரிக்குப் போக விடாம தடுத்ததோடு, காதும் காதும் வெச்ச மாதிரி என் திருமணத்தையும் முடிச்சுட்டார். திருமணத்திற்குப் பின் என் கணவர் சிவா என் மேல காட்டிய அன்பால பரத்தை மறந்தே போனேன். ஜாலியா போய்க்கிட்டிருந்த என் வாழ்க்கையை சோகமா மாத்தினது அந்த விபத்துதான்.

ஆமா... அப்பதான் பரத் எங்கள காப்பாத்தினான். அவசர ஊர்தியில என் கணவர் மருத்துவமனைக்கு போற வழியிலேயே இறந்துட்டாரு. நானும் படுத்த படுக்கையா ஆறு மாசம் இருந்தேன். என் அப்பாவும் இறந்துவிட்டதால எனக்கு யாரும் இல்ல. அவன் அம்மாவும் சமீபத்துலதான் இறந்தாங்க. அவன் தங்கை திருமணம் ஆகி வெளிநாட்டுல இருக்காங்க. அதான் பரத் கல்யாணமே பண்ணிக்காம என்னைய பாத்துக்கிறான்’’னு விந்தியா சொல்லிட்டு இருக்கும்போதே அழுதுட்டாங்க.

பரத் எங்க ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வந்து பக்கத்தில் நின்னார்.

’’நீ பெரிய மனுஷன் தம்பி’’ன்னு சொல்லிட்டு கிளம்பினேன். அதுக்கு பரத், ``காதல் காமத்தை மட்டும் அல்ல, காலத்தையும் தாண்டியது’’ன்னு வழக்கமான புன்சிரிப்போடு பதில் சொன்னான்.

பரத் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடிடுச்சு. பருவ காதலே பக்குவமா இருக்கும்போது, அன்பும் பாசமும் படுக்கையும் பகிர்ந்து என்னுள் பாதியாய் நுழைந்து எனக்காவே வாழ்ந்து சகலமுமாய் திகழும் உனக்கு ஒத்தாசையாய் இருந்து, உனக்காக எல்லா வேலையும் செய்து வாழக்கூடாதா என்னன்னு தோணுச்சு... என்று வினோத் புன்சிரிப்புடன் வீட்டு வேலையைப் பகிர்ந்தான்.

- மக உத்சவி ஹரிஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு