Published:Updated:

இடைவெளி..! - லாக் டெளன் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( AP Photo/Channi Anand )

நடுவில் எழுந்து போனால் தங்களைப் பற்றி பேசி விடுவார்களோ எனப் பயந்து யாரும் நடுவில் கலைந்து போக மாட்டார்கள். இப்படியாக, அந்தத் தெருவில் தடுப்பூசி போடுவது கூட கௌரவ பிரச்சனையாக மாறிப்போயிருந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இரவு பத்து மணி! புவனா தனக்கு தானே பேசிக்கொண்டே ஜன்னல் ஓரமாக வந்தாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி? இருமல் வந்துகொண்டே இருந்தது. அதை வாய் பொத்தி அடக்க முயன்றாள். இருமல் சத்தத்தில் கணவனும், மகளும் எழாமல் இருக்க வேண்டும். அடித்துப்போட்ட சோர்வு, நல்ல வேளையாக மூச்சுத் திணறல் இல்லை. இன்று குடியேறிய புதிய வீட்டில் சுண்ணாம்பு சுறுசுறுவென நெடி வேறு, இன்னும் மின் விசிறிகள் மாட்டப்படவில்லை, சுத்தமான காற்று வரட்டும் என ஜன்னலைத் திறந்தாள்!

மாஸ்க்கை சற்றே மூக்குக் கீழே இழுத்து விட்டாள். பெரு மூச்சு ஒன்று தப்பித்து ஜன்னல் வழியாக உற்றுப்பார்த்தாள். எதையோ எதிர்பார்க்கிறாள். தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிவது தான் நேற்றுவரை குடியிருந்த வீடு. முன் வாசலில் இவள் நட்டு வைத்த ரோஜா செடி ஆடிக்கொண்டு இருந்தது. வேறு எந்த சலனமும் இல்லை. அந்த வாசலில் ஜிம்மியும், ரோஸியும் ஓடிப்பிடித்து விளையாடுவது பார்க்க அழகாக இருக்கும். ஜிம்மி வீட்டிற்குச் சொந்தக்காரி தனமுடைய நாய். ரோஸி புவனாவின் வளர்ப்பு பூனை.

அந்த மஞ்சள் ஓளியிலும் வீட்டைச் சுற்றி வீசியெறிந்த வெண்மையாக பிளிச்சிங் பவுடர் வடுக்கள் திட்டுதிட்டாகத் தெரிந்தன. அதை வெறித்துப்பார்த்தாள். இந்த பிளிச்சிங் பவுடர் தான் புவனாவிற்கு கொரோனா என தெருவிற்கே காட்டிக்கொடுத்தது.

Representational Image
Representational Image

புதிய வீட்டில் திண்ணை இல்லை என்பது வருத்தம். இக்கட்டான சூழ்நிலையில் இந்த வீடு கிடைத்ததே அதிர்ஷ்டம் தான்.

பழைய வீட்டுத் திண்ணையில் நடக்கும். அரட்டையில் கிசுகிசுகளுக்கு பஞ்சமிருக்காது. இரவு நேர திண்ணைப் பேச்சில் கேட்பவர்கள் உணர்வுகள் கிளுகிளுக்கும். அடுத்த தெருவில் மாமியாருக்கு கொரோனா வந்து அவள் மருமகளைக் கட்டிப்பிடித்து கொரோனா பரப்பிய விஷயம். இப்படியான சிரிப்பொலியில் ரோஸி மீசைத்துடிக்க முறைத்துக்கொண்டு படுத்திருக்கும். அது கூட பரவாயில்லை, கவுன்சிலர் பையனுக்கு கொரோனா வந்து ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருப்பதாக ப்ளாஷ் நியூஸை வாசித்தாள் அடுத்த வீட்டு ராதிகா. அந்த தெரு,.அடுத்த தெரு, பக்கத்துத் தெரு என யார் யாருக்கு கொரோனா வந்திருக்கு? என்ற புள்ளி விபரங்களை மேற்கு வீட்டு கவிதா கொண்டு வந்து திண்ணையில் கொட்டுவாள்.

நடுவில் எழுந்து போனால் தங்களைப் பற்றி பேசி விடுவார்களோ எனப் பயந்து யாரும் நடுவில் கலைந்து போக மாட்டார்கள். இப்படியாக, அந்தத் தெருவில் தடுப்பூசி போடுவது கூட கௌரவ பிரச்சனையாக மாறிப்போயிருந்தது.

திண்ணை நினைவுகளோடு ஜன்னலுக்கு கீழே உட்கார்ந்தாள். மீண்டும் இருமல் வந்தது. சொம்பிலிருந்த தண்ணீர் சில்லென இருந்தது. டாக்டர் வெந்நீர் தான் குடிக்கச் சொல்லியிருந்தார். இப்போதைக்கு வேறு வழியில்லை. தொண்டை நமநமத்தது. லேசாகக் கனைத்து சரி செய்தாள். புது இடமாக இருப்பதாலும் அம்மாவின் இருமலும், அப்பாவின் குறட்டையும் பூமிகாவை தூக்கம் வராமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தன. அம்மாவின் கனைப்பு மகளின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

அம்மா, ரோஸியை கையோட இழுத்துட்டு வந்திருக்கலாம்.

அதுக்கென்ன இப்ப, அங்க வாங்கி தின்னுட்டு கெடக்கும்.

இருவரின் பேச்சுக்கிடையே கார் கடந்து போய் நிற்கும் சத்தம். என்னவாக இருக்கும? என அவசரமாக எழுந்தாள். திறந்திருந்த ஜன்னல் கதவொன்று நெற்றியைப் பதம் பார்த்தது.

கடவுளே…

சட்டென கழுத்தைப் பின்னோக்கி இழுத்து நெற்றியைத் தேய்த்துக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தாள்.

பார்த்தம்மா…

புவனா நெற்றி தேய்க்க தேய்க்க சூடானது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Channi Anand

இப்படி தான் பத்து நாட்களுக்கு முன் மழையில் நனைந்த அன்று காய்ச்சல் வந்து நெற்றி சூடாகி தகதகவென கொதித்தது. ஒரு மாத்திரை போட்டதும்; காணாமல் போனது. அடுத்த நாள் லேசான இருமல், ஆனால், விடியவிடிய தொல்லைக்கொடுத்தது.

‘புவனா, ரொம்ப இருமலா இருந்தா டாக்டர்க்கிட்ட போக வேண்டியது தானே?’ என தனம் கேட்டாள்

இல்லக்கா, சும்மா வறட்டு இருமல் தான், சரியாகி விடும்.

வீட்டில டானிக் இருக்கு, தரட்டா…புவனா

வேணா அக்கா, இப்ப தான் குடுச்சேன், எங்கேயோ கிளம்பிட்டிங்க போல…

அதுவா… நாளையிலிருந்து லாக்டவுனாம்… இன்னிக்கு மட்டும் தான் கடைகள் திறந்திருக்குமாம்..

ஆமா,அக்கா…

இரண்டு கொலுசு, ஒரு தோடு கொடுத்துட்டு செயின் வாங்கிட்டு வரலாமுன்னு போறோம். இன்னிக்கு விட்டா என்னைக்கு கடை திறப்பாங்களோ?

“நாங்களும் தான் துணிக்கடைக்கு வரணும்… எதாவது செஞ்சு வைச்சுட்டு தான் வரணும,” என இருக்கட்டும் எனச்சொல்லி வைத்தாள்.

உள்ளே வந்தவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

புவனா சேரில் மூச்சுத் திணறலோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அப்பாவும், மகளும் படபடத்தனர். ஆட்டோ பிடித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப்போனார்கள். கொரோனா டெஸ்ட் எடுத்து, இரண்டு நாளில் தகவல் வரும் என்றார்கள்.

நல்லவேளையாக இவர்கள் வீட்டிற்குத் திரும்பிய பிறகே தனம் வீட்டுக்கு வந்தாள். இதுவே புவனாவிற்கு பாசிட்டிவாக இருந்தது.

கொரோனா பாசிட்டிவ்வாக இருந்தால் என்ன செய்வது? பூமிகாவுக்கு வரன் தேடும் சமயத்தில், ஆகக்கூடாதது எதாவது ஆகிவிட்டால், நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. தனத்திற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார்கள்.

அன்றிரவு திண்ணையில் அமர்ந்த தனம் கூட கேட்டுப் பார்த்தாள்.

ஏன் புவனா ஒரு மாதிரி இருக்கே?

இல்லக்கா, லேசா சளி.

அந்த நிமிடத்திலிருந்து புவனா வெளியே வருவதைத் தவிர்த்தாள். பூமிகா மட்டும் இயல்பாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாள். அடுத்த நாள் இரவு வேண்டா வெறுப்பாக அரட்டையடிக்க பூமிகா மட்டும் திண்ணைக்கு வந்தாள்.

தனம்,”அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் பார்க்கலாமே, அந்த கொரோனா கருமமா இருந்துட போகுது,” எனச் சொல்லி முடிக்கும் முன் பூமிகா முந்திக் கொண்டாள்.

‘அத்தை, அப்படியெல்லாம் இருக்காது, அப்படியிருந்தா எத்தனை லட்சமானாலும் செலவு செய்வோம்” என வாயை அடைத்தாள்.

தனத்திற்கு கருக்கென்றது.

அன்றிரவே, புவனாவிற்கு கொரோனா பாஸிடிவ் என்ற தகவல் வந்து சேர்ந்ததும், குடும்பமே சோர்ந்தது.

Representational Image
Representational Image

அடுத்த நாள், முழு ஊரடங்கு என்பதால் தெரு வெறிச்சோடி கிடந்தது. காலை எட்டுமணிக்கு ஒரு தூய்மைப்பணியாளர் தெருவில் மருந்து அடிக்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் வீட்டைச்சுற்றி பிளிச்சிங் பவுடர் தூவி விட்டனர். பிளிச்சிங் பவுடர் வெண்மையில் விஷயம் வெளுத்துப்போனது.

சற்றுநேரத்திற்கெல்லாம், ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதில் கடைசியாக ஏறிய புவனா சுற்றும் முற்றும் பார்த்து முணுங்கிக்கொண்டே கதவை இழுத்துச் சாத்தினாள். அதை விட வேகமாக இழுத்து சாத்தி விட்டு வீட்டிற்குள் சென்றாள் தனம். அதற்குப்பின் தனம் வீட்டிலும், புவனா வீட்டிலும் என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியவில்லை. எல்லோருக்கும் பயம், உதவிக்கேட்டு விட்டால் என்ன செய்வது? என போன் கூட யாரும் செய்யவில்லை.

வெள்ளை கோட்டைத்தாண்டி திண்ணைக்கு வர யாரும் ; தயாராக இல்லை. ஒரு வாரம் திண்ணையில் ரோஸி மட்டும் ஜாலியாக பால் குடித்து விட்டு பாத்திரத்தை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.

ஒரு வாரம் அட்மிட் ஆகி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் புவனா. இரண்டு வீட்டுக் கதவுகளும் திறக்கப்படாமலேயே பேசிக்கொண்டன.

காலையில் புவனா வெந்நீரில் உப்புப் போட்டு வாய் கொப்பளித்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.

வெளியே வந்த தனம்,”புவனா, பத்து நாள் வெளியே வராமல் இருக்கலாமே, மத்தவங்களுக்கு பரவாம இருக்குமே,” எனச் சொன்னாள்.

புவனா எழுந்து உள்ளே போகவும், தனத்தின் வீட்டிற்குள் இருந்து ரோஸி வெளியே ஓடிவருவதற்கும் சரியாக இருந்தது. புவனா தான் பூனையின் குறுக்கே போனாள். ஆனால், புவனா “சனியனே,” என ஆத்திரத்தில் எட்டி உதைத்தாள். அது விழுந்து எழுந்து வளைந்து வெளியே ஓடிப்போனது. ரோஸிக்கு அது கெட்ட நேரம்,

தனம் சொன்னது அறிவுரையா? எச்சரிக்கையா? என்ற குழப்பம் யானையின் காதில் புகுந்த எறும்பு போல ஓயாமல் புவனாவை குடைந்துகொண்டே இருந்தது.

புவனாவிற்கு கொரோனா எனத் தெரிந்தவுடன்; தனத்தின் முகபாவனைகள் முற்றிலும் மாறியிருந்தன. எப்போதும் கதவைச் சாத்தியே வைத்துக்கொண்டாள். அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாளேயோழிய நேரிடையாக எதுவும் சொல்லவில்லை.

தனம் ஜிம்மி மீதும் ரோஸி மீதும் காட்டும் அதிகப்படியான அக்கறை சில சமயம் புவனாவிற்குப் பொறாமையாகக் கூட இருக்கும். நாய், பூனை மீது காட்டும் இளகிய மனசு கூட தன்னிடம் காட்டவில்லை என்ற கோபம் புவனாவிற்கு உறுத்திக்கொண்டே இருந்தது.

புவனா மதியம் சாப்பிட்டபின் அப்பா, மகள் இருவரிடமும், ” இருங்க, வந்துடறேன்” எனப்போனவள் ஒரு சாவிக்கொத்தோடு வந்து நின்றாள்.

இன்னிக்கே வீடு மாறிடலாம், குரலில் தீர்க்கம் இருந்ததே தவிர கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டாமா புவனா?

என்னத்துக்குங்க நல்ல நேரம் பார்க்கணும்? இன்னிக்கு வியாழக்கிழமை மூணு மணி வரை ராகுகாலம்.

Representational Image
Representational Image

எந்த காலண்டரையும் பார்க்காமல் ராகுகாலத்தை அம்மா சொன்னது பூமிகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமால்(திங்கள்) சந்தில் (சனி) வெய்யிலில்(வெள்ளி) புகுந்து(புதன்) விளையாட(வியாழன்) செல்வது (செவ்வாய்) ஞாயமா(ஞாயிறு) என்ற பாடலை நினைவில் வைத்துக்கொண்டு திங்களுக்கு காலை 7.30-9.00 என கணக்கிட்டு மற்ற நாட்களுக்கு ஒன்றரை மணி நேரத்தைக் கூட்டிக்கொண்டே வருவாள். இது புவனாவின் பாட்டி சொல்லிக்கொடுத்தது. பூமிகாவுக்கு இதெல்லாம் நம்பிக்கை கிடையாது.

புது வீடு அருகில் என்பதால் மாலை ஐந்து மணிக்கு மேல் பொருட்கள் நடக்க ஆரம்பித்தன. தட்டுமுட்டு சாமான்களின் உருட்டல் சத்தம் தனத்தை எந்த விதத்திலும் உருட்டவில்லை. தன்னை வீட்டிற்குள்ளையே நிலைநிறுத்திக் கொண்டாள்.

வீடு காலி செய்வதாக முன்னறிவிப்பும், ஏன் செல்கிறார்கள் என்ற பின்னறிவிப்பும் இல்லாதது தெருவிற்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

என்ன இருந்தாலும் கொரோனாவுக்காக வீட்டைக் காலி செய்யச் சொல்லலாமா?

க்கூம்… கொரோனா வந்துடுச்சுன்னு தெரிஞ்சும் ஹாஸ்பிடல் போகாம, வீட்டுக்குள்ளையே கெடந்தா யார் ஒத்துக்குவா? காலி செய்ய சொல்லாம கொஞ்சுவாங்களா? இத்தனைக்கும் வயசு புள்ள படிச்சுருக்கு, வெவரம் வேண்டாமா?

இப்படியாக கேள்வி பதில்கள்; பிறந்து தானாகவே ஓய்ந்தன.

மூட்டைமுடிச்சுகளை கொண்டு வந்து சேர்த்து, ஒய்ந்து போய் படுக்கலாம் என நினைக்கும் போது தான் இருமல் வந்து தொலைந்தும், நெற்றியில் இடி வாங்கி தொலைந்ததும்,

கார் ஞாபகம் வந்ததும் மீண்டும் ஜன்னல் கம்பி மீது தலையை வைத்து உற்றுப்பார்த்தாள். தெருவில் எந்த அசைவும் இல்லை. ஜிம்மி குரைப்பது கேட்டது. பழைய வீட்டு வாசலில் எந்த நடமாட்டமும் தெரிய வில்லை. திண்ணையில் வீடு காலி செய்யும் போது வீசப்பட்ட காலி டப்பாக்களும், சில காகிதங்களும் சிதறி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ரோஸிக்கு பால் வைக்கும் சின்ன குண்டா கவிழ்ந்து உருண்டு கிடந்தது.

யார் வீட்டுக்கு கார் வந்திருக்கும்? இரவு நேரத்தில் வர என்ன அவசியம்? யாரிடம் கேட்பது? என்னவாக இருக்கும்? வெளியே போய் பார்க்கலாம் என்றாலும் பயம். குழப்பம் நீடித்தது. குழப்பத்தோடு உறங்கிப்போனாள்.

மறுநாள் வீட்டுப் பொருட்களை அடுக்கி வைக்கும் போது அடிக்கடி இரவு வந்து போன அந்த கார் ஞாபகம் வந்து போனது. பழைய வீடாக இருந்திருந்தால், இந்நேரம் அது பற்றிய முழு விபரம் கிடைத்திருக்கும்.

புவனா மாலையில் பழைய வீட்டைச் சுத்தம் செய்ய கிளம்பினாள். கூடவே ரோஸிக்கு டம்ளரில் பால்.

மூன்று வீடுகள் தள்ளித் தான் பழைய வீடு, ஆனாலும் பல மைல் தூரம் நடக்கும் உணர்வு. வீடு காலி செய்வது என்பது வெறும் நிகழ்வு அல்ல, அது நினைவு பெட்டகம்.

இரண்டு வீட்டிற்கும் பொதுவான வாசல், வாசல் தெளித்து, புவனா தான் விதவிதமாக கோலம் போடுவாள். இன்று கோலத்திற்குப் பதிலாக புதிய பிளிச்சிங் பவுடர் திட்டுக்கள், கார் திரும்பிப் போன அடையாளமாகக் கொஞ்ச தூரம் பிளிச்சிங் பவுடர் அச்சு பின்னாலேயே ஓடிக் கலைந்து போயிருந்தது. ஆனால், புவினாவின் நினைவில் இப்போதும் கார் ஓடிக்கொண்டு தான் இருந்தது.

வீட்டிற்குள் டிவி ஓடிக்கொண்டிருந்தது. கூடவே இருமல் சத்தமும்,

எப்போதும் வேணாலும் “அக்கா,” என்ற ஒற்றை குரலோடு வீட்டிற்குள் உள்ளே போய் வந்தவள் அசல் ஊருக்காரி போல ஒடுங்கிய குரலோடு வெளியே தயங்கி நின்றாள்.

திண்ணையின் மீது கிடந்த பால் பாத்திரத்தை எடுத்துத் துடைத்துப் பாலை அதில் ஊற்றினாள். ஆடை டம்ளரில் நின்றுகொண்டது. அதை விரலில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். வாய்க்கு இன்னும் ருசி வந்தபாடில்லை. எதைப்போட்டாலும் மண்ணு போலத் தெரிகிறது.

அனிச்சையாக ஒரு ரோஜாவை பறிக்க ஆசைப்பட்டு, பின் கையைத் திரும்ப இழுத்துக்கொண்டாள். இப்போது இது அயல் வீட்டு ரோஜா,

தனம் நாயை வெளியே கூட்டிக்கொண்டு போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள். இவளைப் பார்த்தது நடையில் வேகம் கூடியது.

அவள் அருகில் வரவர புவனாவின் உடலில் லேசான படபடப்பு. பாத்திரத்தில் பால் ஆடியது, அதை மோப்பம் பிடித்த நாயின் வால் ஆடியது. பிடிக்காதவர்கள் சந்திக்கும் போது இருவருக்கும் எந்த பிடிமானமும் இருக்காது.

Representational Image
Representational Image

“சாவிக்கொடுத்துட்டு போலாமுன்னு வந்தேன்”

அக்கா என்ற அடைமொழி அடிபட்டுப் போயிருந்தது.

சாவியை ஜன்னல் மேல வைச்சுடு,

இங்கேயும் புவனா என்ற பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. நாயையும் வாயையும் கட்டி வைப்பதில் கவனமாக இருந்தாள். தனம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாஸ்க் போட்டிருந்தாள்.

இதை சமூக இடைவெளி என்றும் சொல்ல முடியாது, சமூகமான இடைவெளி என்றும் சொல்ல முடியாது. பிடிக்காதவர்கள் சந்திக்கும் போது இருவருக்கும் எந்த பிடிமானமும் இருக்காத இடைப்பட்ட இடைவெளி.

ரோஸி…ரோஸி…ரோஸி…

ஜிம்மியின் காதுகள் அகலமாகி உயர்ந்தன, உற்ற நண்பனாயிற்றே,

இங்கே இல்ல…அங்கேயும் வரலையா?

தனத்தின் அதே அக்கறை,

எதைக்கேட்டாலும் பாசிட்டிவ் ஆன பதில் வராது என புவனாவும், பேசினால் கணவனுக்கு பாசிடிவ் என்பதை உளறிவிடுவோம் என தனாவும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நகைக்கடைக்குப் போவதாகக்கூறி டெஸ்ட்டுக்கு போனதில் தனம் கணவனுக்கு பாசிடிவ் என வந்திருந்தது.

உயிருள்ள எந்த ஜீவராசியாலும் கெளரவக் குறைச்சலை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

புவனாவின் பார்வை கூண்டின் மீது பூனைபோல தாவியது. கூண்டின் மீது சில பூனை ரோமங்களும், சில சிறகுகளும் காற்றில் மெதுவாக பறந்து கொண்டு இருந்தன.

அது ரோஸி இருப்பதான அடையாளமா? இல்லை, குருவிகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதற்கான அடையாளமா? எனத் தெரியவில்லை.


-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு