Published:Updated:

அன்புக்காரி! - குறுங்கதை #MyVikatan

நாகராஜ் ஸ்திரமான வேலையில் அமர்ந்தபின்னும் பாட்டிக்கு கொஞ்சமும் நிம்மதி கிடைக்க வழியில்லாமல் அவன் அம்மாவுக்கு உடம்பு பல்வேறு விதங்களில் படுத்தி எடுத்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கூடத்தில் அமர்ந்து லலிதாவின் வீட்டுப் பாடத்துக்கு உதவி செய்துகொண்டிருந்தபோது திடீரென எனக்கு ஞாபகம் வந்தது. நாகராஜ் பாட்டி எப்படி இருக்கிறாள் என்று ஒரு நடைபோய் பார்த்துவிட்டு வர வேண்டும். நாகராஜ் இரண்டு நாள்களாக ஊரில் இல்லை. கிளம்பும்போது சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். அவன் வீட்டு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோரும், அவன் உட்பட, அருகில் உள்ள ஊருக்கு ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்ள சென்றிருப்பதால் பாட்டி தனியாக இருப்பாள். ஒரு கண் வைத்துக்கொள் என்று சொல்லியிருந்தான்.

Representational Image
Representational Image
Vikatan Team

நான் பாட்டியைப் பார்த்து பல நாள்கள் ஆகியிருந்தன. உடம்பு முடியாமல் இருப்பதாகள் கேள்வி. தளர்ந்து போயிருக்கிறாள். நாகராஜ் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் பக்கபலமாக இருந்தவள் பாட்டிதான். நாகராஜ் உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் அவனுடைய அப்பா வகித்த அரசாங்கப் பதவி அவனுக்குக் கிடைக்க நாயாய் நடந்தாள். ஊழல் உலகம் அவளைச் சுழற்றி அடித்தது. அவள் அதற்க்கெல்லாம் சலித்துக் கொண்டதேயில்லை.

வெயில் உறைக்கும் நடுப்பகலில் கையில் குடையோடு ஊழல்வாதிகளுக்கு முன்னே சத்தியாகிரகம் செய்யக் கிளம்பி விடுவாள். குள்ளம் என்பதால் குடை அவள் தோள்வரை வரும். "இன்னைக்கும் என்னை அலைய வெச்சுட்டாங்க.." என்பாள்.

ஆனால் அலுக்காமல் மறுநாளும் படையெடுப்பாள். மனம் தளராத மங்கம்மாவின் மல்யுத்தம் தாங்காமல் அழுக்குப்பிடித்த அலுவலரும் ஆடிப் போய், கடைசியாக காகிதத்தை நகர்த்தினார்.

Representational Image
Representational Image
Vikatan Team

நாகராஜ் ஸ்திரமான வேலையில் அமர்ந்தபின்னும் பாட்டிக்கு கொஞ்சமும் நிம்மதி கிடைக்க வழியில்லாமல் அவன் அம்மாவுக்கு உடம்பு பல்வேறுவிதங்களில் படுத்தி எடுத்தது. பாட்டி மீண்டும் சத்தியாகிரகம், தியாகம், தவம் என முகம் கோணாமல் பெண்ணைக் கண் போல் பார்த்துக் கொண்டாள். இருந்தாலும் உபாதைகளின் மூர்க்கம் மிகவும் கடுமையாகத் தாக்க, இறக்கக்கூடாத இளம்வயதில் தன் பெண்ணை இழந்தாள்.

அதன்பின் நாகராஜ்தான் அவள் உலகம். நாகராஜுக்கு அவள்தான் உறவு. வீட்டுக் கதவை நான் தட்டியபோது அது தானாகத் திறந்தது. பூட்டாமல் வைத்திருக்கிறாளே என்றெண்ணி உள்ளே நுழைந்த எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

`எல்லோரையும் போல பயப்பட்டோம், ஆனால்?' - மதுரை கொரோனா வார்டை அசத்திய 3 சகோதரிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடுக்கூடத்தில் பாட்டி விழுந்து கிடந்தாள். புடவையை ஒரு முண்டுபோல் சுற்றிக் கொண்டிருந்தாள். குளித்துவிட்டு வெளியே வரும்போது விழுந்திருக்கக்கூடும். அவரசமாக அருகில் சென்று பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. நம்பமுடியாதபடி நலிந்த தேகம் சுருண்டுபோய் ஒரு சதையற்ற சிசுவாக, எலும்புப் பந்தாக கிடந்தாள். தலைமுடி காரே மூரே என்று வெட்டப்பட்டு இருந்தது.

Representational Image
Representational Image
Vikatan Team

புரையேறிய கண்கள் ஒளியிழந்து பஞ்சடைந்து போயிருந்தன. கண்களிருந்து ஏதோ கசிய அதை ஒரு கொத்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதை ஓட்டக்கூட தெம்பில்லாமல் தேமே என்றிருந்தாள் பாட்டி. கை வைத்து பார்த்ததில் மெல்லிசாக மூச்சு தென்பட்டது. ஆனால், பார்ப்பதற்கு நெஞ்சின் அசைவுகள் தென்படவே இல்லை. ஒரு எறும்பு வரிசை சாவகாசமாக அவள் கால்மேல் ஏறி உடல்மேல் ஊர்ந்து பின் கீழிறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதைப் பற்றி பிரக்ஞை சிறிதும் இல்லை. எத்தனை நேரமாகக் கிடக்கிறாளோ தெரியவில்லை. இதைவிட ஈனமான ஓர் உயிரை என்றும் பார்த்ததில்லை. ஒரு மிக மெல்லிய நூலிழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

நான் என்ன செய்வதென்று தெரியாமல் நடுங்க ஆரம்பித்தேன். இக்கணமே உடனடி அவசர மருத்துவக் கவனம் தேவை. தொலைபேசி தேடி ஓட வேண்டும். அதற்கு முன்னர் தண்ணீர் வேண்டுமானால் ஒரு துளி கொடுத்துவிட்டு பாட்டியிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.

அருகில் சென்று "பாட்டி, நான் சுந்தர் வந்திருக்கேன். தண்ணி ஏதாவது வேணுமா?" என்று கேட்டேன்.

அசையவில்லை. சரி, கிளம்பலாம் என்று ஒரு அடி எடுத்தவுடன் ஏதோ சொல்வது கேட்டது. திரும்பி அருகில் சென்று காதுகொடுத்து கேட்டேன். அனைத்து காதுக் கூர்மையையும் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டியிருந்தது.

பாட்டி "லலிதா எப்படி இருக்கா?" என்றாள்.

Representational Image
Representational Image
Pixabay

அந்த ஈன வார்த்தைகள் என் பிடரியில் பளாரென்று அறைந்தது போல் விழுந்தன. ஒரு இம்மிக்கும் குறைவான ஜீவன் உள்ள பாட்டியால் தன் உயிரைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் எப்படி இவ்வளவு அன்புடன் அடுத்தவரைப் பற்றி விசாரிக்க முடிகிறது?

"பாட்டி, உங்களை உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகணும். ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்று சொல்லி வெளியே வந்தவுடன் பீறிக்கொண்டு வந்த அழுகையில் உடைந்து போய் ஒரு நொடி உறைந்து நின்றேன்.

அதன்பின் நான் பரபரக்க பக்கத்து கடை சென்று தொலைபேசியில் மருத்துவமனையை அழைக்க ஆரம்பித்தேன். நான் ஏகப்பட்ட பதட்டத்தில் இருக்கும்போது பூரா உலகமும் கொஞ்சம்கூட அவசரம் இல்லாமல் அதிமந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகராஜுக்கு தூது அனுப்புவது, ஆம்புலன்ஸ் வருவது, ஆஸ்பத்திரி அடைவது என்று ஒவ்வொரு செயலும் செய்து முடிக்க ஒரு யுகம் கொண்டது.

Representational Image
Representational Image
Pixabay

நாகராஜ் மருத்துவமனைக்கு ஓடி வந்ததும், நாங்கள் இருவரும் குட்டி போட்ட பூனைகளாய் குறுக்கும் நெடுக்கும் நடக்க, மருத்துவமனையில் அனைவரும் நிமிடத்துக்கு நிமிடம் ஏதோ நகைச்சுவை தென்பட்டது போல் கூடிக் குலாவிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் அந்த மாலை முழுவதும் முள்மேல் அமர்ந்து மருத்துவர் மேற்செய்தி தர தவமிருந்தோம்.

அசாதாரணமான நிலையில் அளவற்ற அன்புடன் ஒரு சாதாரண கேள்வி கேட்டு என் நெஞ்சை நெகிழ்த்திய நாகராஜ் பாட்டி நள்ளிரவு காலமானாள். அவள் உடல் மேல் அவள் உள்ளம் கொண்ட அசாத்தியமான ஆளுமை என்னைத் தீராத அதிசயத்தில் ஆழ்த்தியிருந்ததால் எனக்கு அழுகை வரவில்லை.

- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி

சான் ஹோஸே, அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு