Published:Updated:

`காதலியை வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்லலாமா?!’ - அம்மாவின் அட்வைஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒன்றும் புரியாமல், மனதுக்குள் எதை அம்மா சொல்ல வருகிறாள் என்று குழம்பிப் போனான் விக்ரம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருமணத்திற்கு முதல் நாள் இரவு, வரவேற்பு முடிந்து மணமகன் அறைக்கு வந்து சேர்ந்தான் விக்ரம். அப்போது அவனின் தாய் சுகமதி உள்ளே வந்தாள்.

``விக்ரம், உன்ட்ட கொஞ்சம் பேசணும், வெளியே போவோம் வா''

என்று விக்ரமை அழைத்துக்கொண்டு மண்டபத்தின் முன் இருக்கும் கோயிலுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.

``சொல்லுமா ஏதும் முக்கியமான விஷயமா, இங்க தனியா கூப்ட்டு வந்துருக்க''

என்று விக்ரம் கேட்க, ``ஆம் கொஞ்சம் முக்கியம்தான், இன்னைக்கே பேசித் தெரிஞ்கிறது நல்லதுனு பட்டுச்சு அதான் ..'' என்று கூறி சுகமதி தொடர்ந்தாள்.

Representational Image
Representational Image

``நீ ஒரு விஷயம் பேசினதா கேள்விப்பட்டேன், நீ இப்படி பேசியிருப்பன்னு என்னால நம்ப முடியல அதுதான் உடனடியா பேசணும்னு கூப்டு வந்தேன்'' என்று சொன்னாள்.

ஒன்றும் புரியாமல், மனதுக்குள் எதை அம்மா சொல்ல வருகிறாள் என்று குழம்பிப் போனான் விக்ரம். விக்ரமும் அனுவும் பல வருடங்களாகக் காதலித்து, பெற்றோர் சம்மத்துடன் நாளை திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் அனுவிடம் தனது தாய் வேலைக்குச் சென்றதால் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு இன்றளவும் இருப்பதாகவும் அதனால் அனு திருமணத்திருக்குப் பின் வேலைக்குச் செல்லாமல் தன்னையும், பின் பிறக்கப் போகும் குழந்தைகளையும் வீட்டிலிருந்து நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

விக்ரம் மீதிருந்த‌ அதீதக் காதலால் இதை எந்த மறுப்புமின்றி அனுவும் ஏற்றுக்கொண்டாள். இந்த விஷயம் இன்று சுகமதிக்குத் தெரிய வந்த‌தால், விக்ரமை தனியே அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். இதனை அறிந்து கொண்ட பின், ஆம் என்று ஆமோதித்து, தனது சம்பளம் ஒன்றே குடும்பத் தேவைக்கு மேல் இருப்பதால் அனு வேலைக்குச் செல்வது தேவையற்றது என்று கூறிக் கொண்டிருந்த‌ விக்ரமை சுகமதி தடுத்து, நான் பேசிய‌ பிறகு நீ சொல்ல வருவதை தொடர்ந்து சொல் என்று சொன்னாள். சரி என்று கூறி தலையசைத்தான் விக்ரம்.

சுகமதி பேச ஆரம்பித்தாள், ``இன்றைய சூழல்லயும் நிறைய பெண்கள் ஆண்களைப் போல சுலபமா படிச்சு முன்னேறி வந்துட்றதில்ல. நிறைய தடைகளைத் தகர்த்து எரிந்துவிட்டுதான் முன்னேறி வர்றாங்க. அதுவும் அனு கிராமத்தில் பிறந்து வளர்ந்து மேற்படிப்பை முடிச்சு இன்று ஒரு மிகப் பெரிய நிறுவனத்துல நல்ல பொறுப்பில் இருக்கா. இந்த நிலைக்கு அவள் அவ்ளோ ஈசியா வந்திருக்கமாட்டா.

அனுவோட இந்தக்‌ கனவுக்காக‌ அவங்க பெற்றோர் பெரும்பாடு பட்டிருப்பாங்க. அவளுடைய கனவுக்காக உழைச்ச அவளோட பெற்றோரின் உழைப்பையும் அவளது கனவையும் சுலபமா நீ சிதைக்க நினைப்பது ரொம்ப பெரிய தவறு விக்ரம். அந்த உரிமை கிடையாது. வேலையும் குடும்பமும் பெண்களுக்கு இரு மாடுகள் பூட்டிய வண்டியைப் போன்றது. ஒன்று மாற்றி ஒன்று என இரண்டையும் சரி செஞ்சு பயணிச்சிட்டே இருக்கணும்.

Representational Image
Representational Image
Unsplash

நீ குழந்தையா இருந்தப்போ எதிலும் மனம் வருந்திடக் கூடாதுன்னு நான் நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டேன். ஆனாலும் நான் வேலைக்குப் போனதால சில மகிழ்ச்சிகளை இழந்தா நீ சொல்றதை ஒரு தாயா என்னால உணர முடியுது. அந்நாள்கள என்னால் கண்டிப்பாகத் திருப்பி தர முடியாதுதான். அதற்கு நான் வருந்தி உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.

வார்த்தைகளால் விக்ரமிடம் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தாலும், மனதில் விக்ரம் அனுவிடம் கூறிய வார்த்தைகள் அவளைச் சுட்டெரித்துக்கொண்டுதான் இருந்தன. பார்த்துப் பார்த்து வளர்த்த மகன் த‌மது அன்பிற்காக ஏங்கினான் என்பதை எந்தத் தாயும் கேட்கும்போது அதிர்ந்துதான் போவாள். அதுதான் சுகமதியும் துடிதுடித்துப் போனாள்.

விக்ரமுக்குப் பதில் பேச வாய்ப்பேதும் தராமல் தொடர்ந்து பேசினாள் சுகமதி.

``உன் அப்பாவோட சம்பளம் மட்டும் நம் குடும்பத் தேவைக்குப் போதுமானதா இருந்துச்சு. ஆனா அன்று உன்ன மாதிரி உன் அப்பா நினைக்கல. அவர் நான் செய்யுற பணியால் வரும் வருமானத்தப் பார்க்கல, அதிலிருக்கும் என் லட்சியத்தைதான் பார்த்தார்.

என் கனவுகள அவர் கனவாக்கி ஓடினார், ஆதரவா உடனிருந்து பல உதவிகளையும் செஞ்சார். பணம் என்பதையும் தாண்டி பெண்கள் பலர் அவர்களுடைய கனவுகளை மெய்யாக்க ஓடிட்டு இருக்காங்க. ஆண்கள் உதவி செய்யாவிட்டாலும் இடையூறு செய்யாம இருந்தா அதுவே பெண்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றிதான்.

Representational Image
Representational Image

பல இன்னல்களுக்கு மத்தியில்தான் பெண்கள் முன்னேறுறாங்க-ன்னு சொன்னேனே அந்த‌ இன்னல்கள்ல உன் போன்ற ஆண்கள் விதிக்கும் இது போன்ற நிபந்தனைகளும் அடங்கும்.’’

இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்தான் விக்ரம். ஆனாலும் மகன் என்றும் பாராமல் தொடர்ந்து படப் பட வெனப் பெண்களுக்காகப் பேசிப் பொறிந்து தள்ளினாள் சுகமதி.

``நான் கடைசியா சொல்ல விரும்புவது ஒண்ணுதான் விக்ரம், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மற்றவரின் கனவை அடைய துணையாய் நின்று முன்னகர்வதே ஒரு அழகிய குடும்ப வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கும். அனுவின் கனவுகளுக்காக உன்னால முடிஞ்ச உதவிகளைச் செய், இல்லைன்னா இது மாதிரி நிபந்தனைகளை விதிக்காம இரு, அதுவே அவளுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி.

புரிஞ்சிக்கிட்டேன்னு நம்புறேன் விக்ரம்’’ என்று சொல்லி முடித்தாள் சுகமதி.

``ஐ ம் வெரி சாரி அம்மா, மிகவும் சுயநலமா நடந்துகிட்டேன். உன்னையும் அப்பாவையும் இவ்வளவு வருடங்கள் பார்த்து வளர்ந்தும் கூட‌ எனக்கு இப்படியொரு கண்ணோட்டம் தோணவே இல்ல. அனுகிட்ட நான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டு அவளுடைய கனவுகளுக்கு என்னால ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன்’’ என்று உறுதியளித்தான்.

தனது மகனுக்குப் புரிதலை ஏற்படுத்திவிட்ட செருக்கோடு சுகமதியும், மன‌ நிறைவோடு விக்ரமும் மண்டபம் நோக்கி நடந்தனர்.

-தேவா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு