Published:Updated:

`கருத்து சொல்ல அடையாளம் தேவையா என்ன?' - ஒரு நெட்டிசனின் வீழ்ச்சியும் எழுச்சியும் #MyVikatan

Representational Image
Representational Image ( Product School / Unsplash )

அவனின் நண்பர்கள் அவனுக்குத் தெம்பூட்டினர். விழா நாளும் வந்தது. அவன் மேடையேறி நின்றான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அவன் டிஜிட்டல் உலகில் ஓரளவுக்குப் பிரபலமான சோஷியல் மீடியா செலிபிரிட்டி. அவனுடைய யூடியூப் வீடியோக்களைக் கணிசமான மக்கள் பார்க்கிறார்கள். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் அவனுடைய பதிவுகளுக்கு போதுமான லைக்குகளும் நேர்மறையான எதிர்வினைகளும் தொடர்ந்து கிடைக்கின்றன.

சமூகத்தின் அன்றைய டிரெண்டிங் பிரச்னைகள் குறித்து தெளிவான கருத்துகளைக் கூறுவதில் அவன் கைதேர்ந்தவனாக இருந்தான்.

அவனுடைய பதிவுகள் ஆயிரக்கணக்கில் ஃபார்வேர்டு, ஷேர் மற்றும் ரீட்வீட் செய்யப்படும். கணக்கின்றி காப்பி பேஸ்ட் செய்யப்படும்!

Representational Image
Representational Image
NeONBRAND / Unsplash

அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்துத் துறைகள் குறித்த ஒரு தெளிவான பார்வையும் புரிதலும் நடுநிலைப்பண்பும் அவனிடம் இருந்தன. அவன் ஒரு கருத்தைப் பதிவிட்டால் அது சரியானதாக இருக்கும் என டிஜிட்டல் உலகம் முழுமையாக நம்பியது.

ஆனால், அவனிடம் ஒரு பெரிய குறை இருந்தது. மிகப்பெரிய சமூக வலைதளப் போராளியாக இருந்தபோதும், அவனால் மேடையில் ஏறி ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. மைக் முன் நின்றாலே அவனுக்கு வாய் குழறும், கை கால்கள் உதறும். உடல் வேர்த்துவிடும். இதனால் அவன் டிஜிட்டல் உலக ஹீரோவாக இருந்தாலும், உண்மை உலகில் ஜீரோ எனப் பல கிண்டல் பேச்சுகள் அவனைக் குறித்து நிலவின. தான் மேடையில் ஏறி மைக்கில் பேசமுடியாதது அவனை எந்நேரமும் உறுத்திக்கொண்டே இருந்தது.

தன்னுடைய பேச்சுத்திறமையை எப்படியாவது வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவன் எண்ணினான். அதற்காக ஒருசில பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தான்.

அப்போது தற்செயலாக அருகில் உள்ள கல்லூரியிலிருந்து அவனுக்கு ஓர் அழைப்பு வந்தது.`சமூக வலைதளங்களை பாசிட்டிவாக பயன்படுத்துவது எப்படி?' என மாணவர்கள் மத்தியில் அவன் உரையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவன் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கல்லூரியில் உரையாற்ற ஒப்புக்கொண்டான்.

Representational Image
Representational Image
camilo jimenez / Unsplash

அவனது நண்பர்கள் அவனுக்குத் தெம்பூட்டினர். விழா நாளும் வந்தது. அவன் மேடையேறி நின்றான். மேடைப் பேச்சுக்காக பல பயிற்சிகள் செய்ததால் இப்போது அவனுக்குத் தயக்கம் ஏதுமில்லை. தனது யூடியூப் வீடியோவில் பேசுவது போன்று கற்பனை செய்துகொண்டு மிக வேகமாக தன்னுடைய கருத்துகளை சரளமாகப் பேச ஆரம்பித்தான். கைதேர்ந்த பேச்சாளன் போன்று அன்றைய அவனது பேச்சு அமைந்தது.

ஒரு பிரபலமான அரசியல் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அவனுடைய நேரடி விமர்சனங்கள் மாணவரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன. மேடையை விட்டு இறங்கியவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தன்னுடைய மிகப்பெரிய ஒரு குறை இன்று தீர்க்கப்பட்டுவிட்டது என்று மனதினுள் புன்னகைத்துக் கொண்டான்.

ஆனால், அடுத்த ஒரு மணிநேரத்தில் அவனைப் பற்றிய தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்தன. அவன் மோசடியான நபர் என்றும், பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவன் என்றும் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் பல பதிவுகள் பகிரப்பட்டு அவை உடனுக்குடன் டிரெண்டாகின.

அவற்றைப் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவன் விமர்சனம் செய்து பேசிய அரசியல் கட்சியின் ஐ.டி விங்தான் இந்த வேலையைச் செய்திருக்கிறது என்பது அவனுக்கு அப்பட்டமாகப் புரிந்தது. ஆனாலும் பதிவுகள் மலைபோலக் குவிந்ததால் அவனால் உடனடியாக எந்தவிதமான எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

சில மணிநேரத்தில் அவனுடைய சமூகவலைதள ஃபாலோயர்களும் நண்பர்களும் தொடர்ந்து குறைய ஆரம்பித்தனர். அவனைக் குறித்த ஆபாசப் பதிவுகளும் மீம்ஸ்களும் வந்து குவிந்தன. ஒரு பிரபலமான சோஷியல் மீடியா செலிபிரிட்டியாக இருந்தவன் சில மணிநேரங்களில் ஒரு கோமாளி போன்று பார்க்கப்பட்டான். ஒரே இரவில் அவனது நிலைமை தலைகீழாக மாறியது.

அவனது வீட்டுக்கு வந்த நண்பர்கள் அவனைச் சுற்றி அமர்ந்து ஆறுதல் கூற ஆரம்பித்தனர். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் பேசிய கருத்தில் பிழை இருந்தால் அதைக் கருத்துரீதியில் எதிர்கொள்ளாமல், தனிமனிதத் தாக்குதலாக மாற்றியதை அவனால் ஏற்க முடியவில்லை.

ஜனநாயகம் போலவே கருத்து சுதந்திரமும் இருக்கிறது என்று நம்பி அவன் ஏமாந்த மாயையாய் தோன்றியது.

நண்பர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு தன்னுடைய அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். இரவு முழுவதும் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தான்.

வலைதளங்களின் பக்கம் தற்போதைக்கு அவன் போகமாட்டான் என நினைத்தபடி மீண்டும் காலையில் அவனுக்கு ஆறுதல் கூற வந்தான் நண்பர்களில் ஒருவன்.

ஆனால் அவன் ஒரு கையில் மொபைல் போனும், மறுகையில் லேப்டாப்புமாய் வழக்கம்போல வலைதளங்களில் பிஸியாக இருந்தான். அதைப் பார்த்த நண்பன் வியப்படைந்தான்.

``நீ தொடர்ந்து பதிவுகள் போட்டா இன்னும் உன்னைத் திட்டுவாங்கடா" என்று ஆதங்கத்துடன் கூறினான் நண்பன்.

அதற்கு அவன், ``ஆமாடா, நீ சொல்றது கரெக்ட்தான். இப்ப நான் பதிவுகள் போட்டா என்னைக் கண்டபடி திட்டுவாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லவும், என்னை நியாயப்படுத்தவுமே தொடர்ந்து நிறைய நேரம் எனக்கு செலவாகும். அதனால என்னோட சோஷியல் மீடியா கணக்குகள் எல்லாத்தையும் மொத்தமா டெலிட் செஞ்சுட்டேன்" என்றான் புன்சிரிப்புடன்.

Representational Image
Representational Image
Nik Shuliahin / Unsplash

``இது நீ பயந்து போய் பின்வாங்கிய மாதிரிதானே! இத்தனை நாளா உன்னை ஃபாலோ பண்ணவங்களை இது ஏமாத்தற மாதிரி இல்லையா?" என்றான் நண்பன்.

அவன் புன்னகையுடன், ``நீ சொல்ற கோணம் சரியானதா இருக்கலாம். எத்தனையோ இணையப் போராளிகளைப் போல நானும் இங்க தாக்குப்பிடிக்க முடியாமல் கணக்குகளை அழிச்சதாவே இருக்கட்டும். ஆனா நான் வெற்றி அடையணும் என்று நினைப்பதைவிட எனது எண்ணங்கள் வெற்றியடைய வேண்டும், அவை மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றும் நினைக்கிறேன். அதனால!" என்று அவன் நிறுத்தினான்.

``அதனால இனி என்ன செய்யப்போற" என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் நண்பன்.

``எல்லா சமூக வலைதளங்களிலும் புதுசா, புதுப் பெயரில் கணக்கு ஆரம்பிச்சிருக்கேன். சோஷியல் மீடியாவில் என் பேரையும் பிம்பத்தையும் அவங்களால சிதைக்க முடிந்தது. ஆனால் என்னுடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் என்னைக்குமே சிதைக்க முடியாது. இனி நான் ஒரு முகமூடியைக் குறியீடா வெச்சுக்கிட்டு தொடர்ந்து முகம் இல்லாம இயங்கப் போறேன்."

``உருவம் இருந்தால் தானே சிதைக்க முடியும். இனி உருவம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து என்னோட கருத்துகள் சமூகத்துக்குப் போய்க்கிட்டேதான் இருக்கும். என்ன புதிய கணக்குகள் என்பதால் மக்களிடம் சீக்கிரமா போய் சேராது. ரீச் ஆக கொஞ்சநாள் ஆகும்.

அவ்வளவுதான்! ஆனா கூடிய சீக்கிரமே மக்களை என்னால் ஈர்த்துவிட முடியும்" என்று தன்னம்பிக்கையுடன் கூறிய பீனிக்ஸ் பறவை போன்ற அந்த நெட்டிசனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் நண்பன்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு