Published:Updated:

லட்சுமி அம்மாள்! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

40 ஆண்டுகளுக்கு முன் முத்தையாவையும் ,லட்சுமி அம்மாளையும் இந்தச் சமூகம் எப்படி பார்த்திருக்கும். ஏசியிருக்கும்....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முத்தையாவுக்கு மனைவி லட்சுமி அம்மாள் கைகளில் நகம் வெட்டிக்கொண்டிருந்தாள் .

"நான் வெட்டி விடலைன்னா நீங்க வெட்டிக்க மாட்டிங்களா ... எவ்ளோ நகம் வர, வர, சின்ன புள்ள மாதிரி அடம் பிடிக்குறிங்க!" என்றவாறு வெட்ட , நகத்தில் வெட்டுப்படுவது. " ஆ " என்றவாறு முத்தையா லட்சுமி அம்மாளின் நினைவில் தன் விரல் நுனியை வெட்டிக்கொண்டார் .

ஆம், லட்சுமி அம்மாள் இறந்து 60 நாள்கள் ஆகின்றன. இப்பொழுதுதான் வாழ்வில் முதல் முறையாக லட்சுமி அம்மாள் இல்லாமல் தன் நகத்தைத் தானே வெட்டிக் கொள்கிறார் முத்தையா.

Representational Image
Representational Image
Pixabay

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். இன்னும் 12 மாதங்களில் ஓய்வு பெறப் போகிறவர். ஓய்வுக்குப் பின்பு இத்தனை ஆண்டுக்காலம் தனக்காகவே உழைத்துக்கொண்டிருந்த லட்சுமி அம்மாளை ஓய்வெடுக்க விட்டு, தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டும், இன்னும் காதலோடு வாழும் நாள்களை கடத்த வேண்டும் என்று மனதில் காதல் கோட்டை கட்டி வைத்திருந்தார். அத்தனையும் இடிந்து தரைமட்டமானது. லட்சுமி அம்மாள் நிரந்தரமாக ஓய்வெடுப்பாள் என்று முத்தையா கனவிலும் நினைக்கவில்லை.

40 ஆண்டுக்கால வாழ்வில் வாரிசு இல்லை. இந்த நவீன காலத்தில் குழந்தை பேறு இல்லையென்றாலே இந்தச் சமூகம் எப்படி பார்க்கும்?

40 ஆண்டுகளுக்கு முன் முத்தையாவையும், லட்சுமி அம்மாளையும் இந்தச் சமூகம் எப்படி பார்த்திருக்கும். ஏசியிருக்கும்.. அதற்காக கவலைப்படவில்லை முத்தையாவும் லட்சுமி அம்மாளும். மாறாக கவலை என்ற நோயிலிருந்து இருவரும் மனம் என்னும் மருந்தின் மூலம் குணமடைந்தனர். அதிலிருந்து முற்றிலும் விடுபட்டனர் .

தங்களையே ஒருவருக்கொருவர் வாரிசாகப் பாவித்துக் கொண்டனர். முத்தையாவுக்கு வாரிசு பெண் பிள்ளை லட்சுமி அம்மாளாகவும் , லட்சுமி அம்மாளுக்கு வாரிசு ஆண் பிள்ளை முத்தையாவாகவும் வாழ்ந்து வந்தனர்.

லட்சுமி அம்மாளின் முழுப் பெயர் மகாலட்சுமி. வீட்டின் கடைக்குட்டி. 3 அண்ணன்கள் , 2 அக்காக்கள் . சிறு வயது முதலே வீட்டில் உள்ளவர்களால் செல்லமாக `லட்சுமி அம்மா’ என்று எல்லோராலும் கூப்பிடப்பட்டு , பின்னால் அதுவே மரியாதை கலந்த உணர்வோடு அவருக்கு நிலைத்துப்போனது .

Representational Image
Representational Image

முன்பெல்லாம் கோயில் கோயிலாய் குழந்தை பாக்கியம் வேண்டியவர்கள் இப்போது கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். எங்களையே ஒருவருக்கொருவரை குழந்தையாய் கொடுத்துவிட்டாய் என்று. கடவுளும் அவர்களுக்குக் கருணை காட்டினான் இந்த 40 ஆண்டுக்கால வாழ்வுக்கு.

கருணை காட்டியது போதும் என்று ஒருநாள் முடிவுக்கு வந்தான் போலும். லட்சுமி அம்மாளுக்குப் புற்றுநோய். முத்தையா ஆடிப்போய் விட்டார். இதயத்தை இரண்டாகக் கூறு போட்டது போல் இருந்தது. கடவுள் தனக்கு கொடுத்த ஒரு வாரிசையும் பறித்து கொண்டானே என்று குமுறி, குமுறி அழுதார். கண்களிலிருந்து நீர் நகத்தை நனைத்தது .

முகக் கண்ணாடியைப் பார்த்தார். மனைவி லட்சுமி அம்மாள். "நான் டை அடிச்சு விடலைன்னா நீங்க அடிச்சிக்க மாட்டிங்களா உங்கள..." என்று செல்லமாய்க் கடிந்துகொண்டு கறுப்பு நிற டையை எடுத்து வந்து தலைமுடிக்குத் தடவி விட்டாள்.

``இப்ப பாத்திங்கல்ல எப்படி ஜம்முன்னு மாப்ள மாதிரி இருக்கீங்கன்னு! உங்களுக்கு 60 வயசு ஆகப் போகுதுனு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. 40,45 தான் சொல்ல முடியும். உங்களுக்கு திஸ்டி சுத்தி போடணும்.." என்று சொல்லிக்கொண்டிருந்த நினைவு வந்து போக, கண்ணாடியைப் பார்த்து கலங்கியவாறு தன் நரை முடிகளைப் பார்த்தார்.

Representational Image
Representational Image

இப்படி லட்சுமி அம்மாள் இருந்த நாள் வரையிலும் முத்தையாவை, தனக்கு மகன் இருந்திருந்தால் எப்படி பார்த்துப் பார்த்துச் செய்வார்களோ அப்படிப் பார்த்துக் கொண்டாள். இல்லை மகன் கூட மனைவி என்ற உறவு வந்த உடன் வேறு திசையில் பயணிப்பார்... அதை விட தன் வாழ்நாள் முழுவதும் முத்தையாவுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவள்.

வீடு முழுவதும் வானில் எப்படி ஒரு முழு பௌர்ணமி நிலவு பிரகாசிக்குமோ ... இல்லை பௌர்ணமி கூட மாதத்தில் ஒரு முறைதான் பிரகாசிக்கும். ஆனால் லட்சுமி அம்மாவாள் அந்த வீடு தினமும் பௌர்ணமியாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். முத்தையா, லட்சுமி அம்மாள் என்ற இரு குழந்தைகளின் சந்தோஷம், சிரிப்பு கலகலவென்று அந்த வீட்டில் வெளிப்படும். வீடே நிறைந்திருக்கும்.

உயிரற்ற அந்த வீட்டுக்கு ... தவறு உயிருடன் இருந்த வீடு லட்சுமி அம்மாவின் கண்ணாமூச்சி விளையாட்டால் இன்று உயிரற்றுப்போய்க் கிடக்கிறது. இந்த வீட்டையும், முத்தையாவையும் அநாதையாக்கிவிட்டுப் போய் விட்டாள்.

லட்சுமி அம்மாள் பூப்படைந்த பொழுது பெண்கள் எல்லோரும் சேர்ந்து சல்லடையில் மஞ்சள் நீர் ஊற்றியது போன்று ,சடலத்தைத் தூக்கும் நாளன்று காலையில் அதே போன்று பெண்கள் எல்லோரும் சேர்ந்து சல்லடையில் மஞ்சள் நீர் ஊற்றி நீராட்டினார்கள். பின் முகம் முழுவதும் மஞ்சள் தடவிய முகத்தில் நெற்றியில் முழு பௌர்ணமி நிலவாய் வட்ட வடிவ சிவப்பு பொட்டும், மூக்கில் நட்சத்திர அளவு கொண்ட மூக்குத்தியும், தினமும் மாலையில் வைக்கும் மல்லிகைபூ... லட்சுமி அம்மாளின் 58 வயதாகியும், இளம் பெண்களுக்குச் சவால் விட்ட அந்த 5 நீளமுள்ள கூந்தலிலும் , கல்யாண வைபோகத்தில் கட்டப்பட்ட பட்டுப்புடவை எல்லாம் உடலில் சாத்தப்பட்டு கிடந்த சுமங்கலியான லட்சுமி அம்மாளின் முகம் குழந்தை மாறா வண்ணம் இருந்தது .

Representational Image
Representational Image

சடலத்தைத் தூக்கிய நாழியில் முத்தையாவின் கதறல் ,அங்கு குழுமியிருந்தோர் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்துவிட்டது. சடலத்தை மாரோடு கட்டிப்பிடித்துக் கொண்டு " என் தெய்வம் என்னை விட்டுப் போகுதே " என்று விசும்பி, விசும்பி ...தேம்பித் தேம்பி அழுதது அங்கு பலமாய் இருந்தவர்கள் கூட பலவீனப்பட்டுப் போயிருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே பிணைப்பு இல்லாதவர்களுக்குக் கூட நிச்சயம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும். இன்றைய இளைய தலை முறையினர் கோர்ட் படியேறுவதை நிறுத்தியிருப்பார்கள். முத்தையா,லட்சுமி அம்மாளின் வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்!

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி அம்மாள் சாமிக்கு சூடம் காட்டும் கரும் புகைகளெல்லாம் சேர்ந்து இன்று கருமேகமாய் உருவாகி கண்ணீரை வெளிப்படுத்தியது. தோட்டத்துச் செடிகளெல்லாம் அழுதுகொண்டிருந்தது. குருவிகள் எல்லாம் கத்தின.

ஆம் லட்சுமி அம்மாள் தினமும் அவற்றோடு பேசுவார். அதுகளும் பேசும் , உரையாடும் . லட்சுமி அம்மாள் வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியில் போய் வந்தால் எப்படி ஒரு அம்மா ,அப்பா குழந்தைகளை விட்டு விட்டு வெளியில் போய் மீண்டும் வீட்டுக்குள் வந்தால் அம்மா அப்பாவைக் கண்டதும் குழந்தைகள் மகிழுமோ ... அப்படி அந்த வீடும் , தோட்டத்துச் செடிகளும், குருவிகளும் மகிழும். லட்சுமி அம்மாள் வந்த உடன் !

Representational Image
Representational Image

இப்போது உருவமாய் இல்லையே தவிர, காற்றில் கலந்த லட்சுமி அம்மாள் தினமும் காற்றாக வந்து தோட்டத்துச் செடிகளிடமும், குருவிகளிடமும் தினம், தினம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். வீட்டினுள் வாசல் வழியாகவும், சன்னல் வழியாகவும் தென்றலாய்ப் புகுந்து கொண்டுதான் இருக்கிறார். முத்தையா உள்ளேயும் மூச்சுக் காற்றாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் லட்சுமி அம்மாள்!

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு