Published:Updated:

மூக்குத்தி! - ரொமான்டிக் சிறுகதை #MyVikatan

`வழக்கமாக அழைக்கும் கான்ட்ராக்டர்கள்கூட தேவைக்கு அதிகமான ஆட்கள் இருப்பதாகச் சொல்லி இப்போதைக்கு வர வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்..

இருட்டுக்கும் சாலைக்கும் எந்த எல்லையும் நிர்ணயிக்காமல் கருமை படிந்திருந்திருந்த அமாவாசை இரவு. அதில் கோடாய் நகர்ந்து நகர்ந்து போகும் சின்ன வெளிச்சத்தை மிதித்துக்கொண்டே அதன் வழியில் நடந்து போய்க்கொண்டிருந்தான் சுந்தரம்.

அது அவனின் மொபைல் வெளிச்சம். இருட்டில் பதுங்கியிருந்த அவனை அடையாளம் காண வசதியில்லாமல் குரைத்து மோப்பம் பிடித்து அடங்கியது ஒரு தெரு நாய். தனது இன்னொரு கையிலிருந்த ரொட்டியை இறுகப்பற்றிக்கொண்டான்.

ஒரு டூவீலர் வந்தது, கைகாட்டினான். இவனை நம்பாமல் கடந்து போனது! அடுத்ததாக டூவீலர் வந்தது. அதை நம்பாமல் நடந்து போனான்.

சிவந்த கண்கள் கொஞ்ச கொஞ்சமாக சாதாரண நிலைக்கு வந்தன. கண்களை சோதிக்க இருட்டின் மீது பார்வையை அவ்வப்போது செலுத்தி கண்களை மூடித்திறந்தான். அப்போது வானத்தில் பளிச் என்ற மின்மினி பூச்சிகள் பறப்பது தெரிந்தன. சில வண்டுகளின் கண்கள் கூட்டுவிழிகளாக இருப்பதும்கூட இவ்வாறு மின்னுவதற்கு காரணமாக இருக்கலாம்.

Representational Image
Representational Image
Rajendran.L

ஒரு மணி நேரத்துக்கு முன் மனைவியிடம் நடந்த சண்டைக்குப் பின் வெளியேறியவன், கொஞ்சம் கோபம் தணிந்தபின் வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறான். இன்று எந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்தக் கொரனாவில் யாரும் பெயின்ட் அடிக்கக் கூப்பிடுவதில்லை. வழக்கமாக அழைக்கும் கான்ட்ராக்டர்கள் கூட தேவைக்கு அதிகமான ஆட்கள் இருப்பதாகச் சொல்லி இப்போதைக்கு வர வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள்.

என்ன செய்வது? கையில் காசு இல்லை. அடகு வைக்க மனைவி சாந்தியிடம் கம்மலைக் கேட்டான். அதில் ஆரம்பித்ததுதான் சண்டை!

``பையனுக்கு பீஸ் கட்ட பணம் வேணுமே சாந்தி...''

``என்ன செய்றது?''

``கம்மலை அடகு வைக்கலாமே...''

``ஏன் உங்க அண்ணன் தம்பிகிட்ட கேட்கலாமே...''

``வேற ஐடியா சொல்லு...''

``நாம என்ன கடனா கேட்கப்போறோம்? அவங்க திருப்பூரில நம்ம இடத்தில சாயப்பட்டறை வைச்சு இருக்காங்களே? வெளியே இடம் பிடிச்சிருந்தா, அவங்க சொளையா மாசம் 10,000 வாடகை கொடுக்கணுமே!''

``அது சரி! இப்ப போய்… எப்படிப் பேச? சாயப்பட்டறை ஓடலையே.''

``அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்? மாசம் பல லட்சம் சம்பாரிச்சு வைச்சுருப்பாங்களே!''

``இப்ப அந்த பேச்சு எதுக்கு?''

``அப்ப நானும் கழற்றித் தர மாட்டேன்!''

இரவு 7 மணிக்கு நடந்த சண்டைக்குப் பின் சட்டையைபோட்டு வெளியே வந்தவன், கோபம் தீரும்வரை பழக்கமான டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிக்கொண்டு மணி எட்டானதும் மனைவிக்குப் பிடித்த ரொட்டியும் கேக்கும் வாங்கிக்கொண்டு மீண்டும் குடியிருக்கும் தெருவுக்குள் பிரவேசிக்க ஆரம்பித்தான்.

இருள் மறைந்து அந்த முதல் தெருவிளக்கைத் தாண்டியிருந்தான்.

Representational Image
Representational Image
Sakthi_Arunagiri.V

முதல் தெருவில் மூன்றாம் வீட்டில் அந்த மூதாட்டி, வெளியே பாய் போட்டு அமர்ந்திருந்தாள், அதே பாயில் முதியவர் படுத்திருந்தார். இருவரும் இன்னும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

``சாமி, டவுன் போயிட்டு வாராயா?''

``ஆமாங்க ஆத்தா…''

``நாளைக்கு ரேஷன் கடை திறக்குமா?''

``இருக்கும்! ஏனுங்க ஆத்தா?''

``ஐய்யனுக்கு ஏதாவது செஞ்சு போடணுமே?''

அவள் போட்டிருந்த மூக்குத்தி, தெருவிளக்கு வெளிச்சத்தில் பளிச் என மின்னியது.

``இந்த மாசம் 10-ம் தேதிக்கு மேலதானே போடுவாங்க ஆத்தா... இன்னும் அஞ்சு நாள் இருக்கே!'' என வெளிச்சத்தைப் பார்த்தான்.

``என்ன சாமி பண்ண? போன மாசம் போட்ட 5 கிலோ அரிசி பத்துமா? இன்னிக்கே ஐய்யனுக்கு ரெண்டு வேளதான் கஞ்சி'' என இருட்டைப் பார்த்தாள்.

இவர்களின் வீட்டு ஜன்னல் கதவுக்கு ஒரேயொரு நாள் பெயின்டிங் செய்திருந்தான். காலை, மாலை தவறாமல் போண்டா தந்தாள். டீ அவளே பிடிவாதமாகப் போட்டுக்கொடுத்தாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆத்தா கையில ஆத்தாம டீ குடிச்சா செம!” என நாக்கை சுழற்றுவான்.

பரம்பரை பணக்காரர்கள் என்றோ, பரம ஏழை என்றோ வகைப்படுத்தப்படாத இரண்டும் கெட்டான் நிலை. கொரோனா முடக்கிப்போட்டு இருக்கிறது,

இருவருக்கும் மூப்பு தட்டிவிட்டதால் எளிதில் இந்தக் காலத்தைத் தட்டிவிட முடியவில்லை.

``சாமி… ஐயன்கிட்ட இந்த மூக்குத்திய வைச்சு கடையில அரிசி வாங்கலாமுன்னு சொன்னேன்... கேட்கமாட்டேன்றாரு... நீயே சொல்லு சாமி...'' எனச் சொன்னாலும் தனது பேச்சில் அழுகை வந்துவிடக் கூடாது என கவனமாக இருந்தாள். அது கணவனைக் கவலைப்பட வைக்கும் என்ற ஆதங்கமே!

``ஏங்கய்யா, ஆத்தா சொல்றது நிஜமா?''

கைகளில் ஊன்றி மெதுவாக உட்கார்ந்தார். அவர் முகத்தில் லேசான பொய்கோபம் இருந்தது. அவர் மனைவியின் முகத்தையும் முக்கியமாக மூக்குத்தியை ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

Representational Image
Representational Image
Balasubramanian.C

``ராசா… அதுல மூணு கல் இருக்கு பாத்தியா? அதில்தான் நான் உட்கார்ந்து இருக்கேன். அது மொதமொதல்லா நான் வாங்கி போட்ட மூக்குத்தி…''

அவர்களின் அன்பில் நெகிழ்ந்தவன்...

``ஆத்தா… இந்தாங்க ரொட்டி சாப்பிடுங்க…”

``வேண்டாம் சாமி! வீட்டுக்குக் கொண்டு போ… நாங்க பார்க்காத பசி பட்டினியா?'' வற்புறுத்திக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினான்.

அதே தெருவில், வேறொரு நாய் கடிக்க ஓடி வந்தது. கைலியை இறக்கிவிட்டான். ஒருவேளை எல்லா முன்னெச்சரிக்கைகளையும் தாண்டி வந்தால், அது கையிலியோடு போகட்டும் என்று. அதுவரை அவன் கைலியை மானம் காப்பது என நினைத்திருந்தான். இப்போது கைலி இரண்டாம்பட்சம் ஆனது. மனித மனம் குரங்கு என்பது இதுதானோ?

துரத்தி வந்த நாய் கடித்து விடுமோ என்ற பயங்கர பயம் சுந்தரனுக்கு!

``ஒண்ணும் பண்ணாது!” எனத் துரத்தும் நாயின் மீது பயங்கர நம்பிக்கை சொந்தக்காரனுக்கு... பயத்தில் சந்தரம் கைகளை இறுக்கினான். ரொட்டி இல்லாத கைகளில்… வெறும் முஷ்டி இறுகியது.

பிறகு, முதியவர்களை அன்பை அசைபோட்டுக்கொண்டே போனான்.

தலையே போனாலும் கம்மலை இனி அடகு வைக்கக் கேட்கக்கூடாது எனத் தீர்மானித்தான்.

Representational Image
Representational Image
Robert_Selvaraj

வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும்போது சாந்தி, ஒயர் கூடை பின்னிக்கொண்டிருந்தாள்.

அந்த ஒயர் கூடையை எடுத்துதான் அவள் மீது வீசியெறிந்து விட்டுப் போயிருந்தான்.

ஒயர்கள் தொங்கி கொரோனா வைரஸ் போல கண்ணுக்குத் தெரிந்த அது இப்போது அழகான கூடையாகத்தெரிந்தது.

``சாந்தி!’’

``ம்…’’

``இந்தா கேக்!’’

``ம்…’’

``கேக் வேண்டாமா?’’

``ம்…’’

``இனி கேட்க மாட்டேன்!’’

``ம்…’’

``கேக்குதா…’’

அவனுக்கும் அவளுக்கும் இடையில் கேக் படாதபாடுபட்டது!

``நான் சொல்றதை காதில் வாங்கிக்கோ…’’ எனச் சொல்லிக்கொண்டே காதுகளைப் பார்த்தான்!

அங்கே கறிவேப்பிலைக் குச்சிகள் சொருகப்பட்டிருந்தன.

- பாங்கி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு