Published:Updated:

பெருமாள் தாத்தாவின் சுதந்திர தினம்..! - லாக் டெளன் குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இதே பள்ளிக்கூடம் உள்ள நாட்களாக இருந்தால் இன்னேரம் இந்த இடம் மாணவ, மாணவியர் சத்தத்தில் அழகாய் மிளிர்ந்து கொண்டிருக்கும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்தப் பள்ளிக்கூடம் முன்பு வந்து நின்றார் பெருமாள்.

பள்ளிக்கூடம் பூட்டியிருந்தது.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலை பள்ளிக்கூடம்.

உள்ளே ஒரு ஈ,காக்கா,குருவி இல்லை. வெறிச்சோடி கிடந்தது. உள்ளே உள்ள மரத்தில் உள்ள இலைகள் எல்லாம் கீழே விழுந்து உதிர்ந்துக் கிடந்தது.

இதை பார்த்த பெருமாளுக்கு ஏக்கம் மனம் முழுமையும் ஆக்கிரமித்தது.

இன்னும் 3 நாளில் ஆகஸ்ட் 15. 74-வது சுதந்திர தினம் வரப் போகிறது. என்ன செய்வதென்று புரியாமல் பள்ளிக்கூடத்தையே வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

School Children
School Children
Pandi.U

இதே பள்ளிக்கூடம் உள்ள நாட்களாக இருந்தால் இன்னேரம் இந்த இடம் மாணவ, மாணவியர் சத்தத்தில் அழகாய் மிளிர்ந்து கொண்டிருக்கும்.

65 வயது ஆகும் பெருமாளுக்கு இந்தப் பள்ளிக்கூடம் தான் வாழ்க்கை. காந்தி மீது தீவிர பற்றுடையவர். ஒரு விபத்தில் குடும்பத்தை இழந்தவர். 35 வருடமாக இந்த பள்ளிக்கூடம் தான் அவருக்கு குடும்பம் சந்தோஷம் எல்லாமே. பள்ளி முன்பு கீழே சாக்கு போட்டு, ஒரு பழையக் குடை பிடித்தபடி உட்கார்ந்து மாணவ, மாணவியருக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான திண்பண்டங்களை விற்று வருபவர்.

ஆளும் சுறுசுறுப்பாக இருப்பார். வெள்ளை கதர் சட்டை, வேட்டி அணிந்து அழகாய் காட்சியளிப்பார்.

ஆசிரியப் பெருமக்கள் முதல் தலைமை ஆசிரியர் வரை எல்லோரும் இவரின் கடை வாடிக்கையாளர்கள். அதற்காகவே சுத்து வட்டத்தில் உள்ள நல்ல குடிசை தொழிலுக்கு சென்று ஆரோக்கியமான, சுத்தமான, சுகாதாரமான திண்பண்டங்களை வாங்கி வருவார். குடிசை தொழில் உரிமையாளர்களும் இவரின் அக்கறையை, பற்றை பார்த்து அடக்கமான விலைக்கே கொடுப்பர்.

பள்ளிக்கூடத்தில் வந்து பெருமாள் சொற்ப விலை வைத்தே விற்பார். இவரின் அலைச்சலுக்கு உண்மையில் என்ன விலை கொடுத்தாலும் தகும்.

Snacks
Snacks
Ramesh.K

இவரிடம் ஒரு முறை, இருமுறை இல்லை. பலமுறை ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் உங்க உழைப்புக்கு இந்த விலை கட்டுப்படி ஆகாது என்று சொல்லி கையில் கூடுதல் காசை கொடுத்தாலும் அன்போடு மறுத்து விடுவார். அப்படி எனக்கு கொடுக்க நினைக்குற காசை முடியாதவங்க யாருக்காவது உதவி பண்ணுங்க என்று சொல்வார். அப்படி ஒரு மனுஷன் தான் இந்த பெருமாள்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பைசா வாங்காமல் தன் சொந்த காசிலேயே ஆசிரியப் பெருமக்கள் மாணவ, மாணவியருக்கு நமது இந்திய தேசியக் கொடியை வழங்குவார்.

எல்லோரும் அன்போடு வாங்கி குத்தி செல்வர்.

இப்படி கடந்த 35 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடம் முன்பு கடை போட்டு நடத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உண்மையான, அப்பழுக்கற்ற மனிதரை கண்ணு, மண்ணு தெரியாமல் எல்லாம் அடித்துள்ளனர் அருகில் கடை நடத்துபவர்கள். ஒரு வாரத்துக்கும் மேல் எழ முடியாமல் எல்லாம் இருந்துள்ளார். பலமுறை பெருமாளுக்கு அவர்கள் ’’கொன்னுடுவோம், கடையை காலி பண்ணு’’ என்று எச்சரிக்கை எல்லாம் விடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த மிரட்டல் விஷயம் ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்ட, அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சொல்ல, தலைமை ஆசிரியர் காவல் துறையிடம் சொல்லி அந்த கடைக்காரர்களை எச்சரித்தார். பின் அந்த கடைகளை எல்லாம் அப்புறப்படுத்தினர்.

Representational Image
Representational Image
Muthuraj.R.M

இப்படிப்பட்ட பெருமாளிடம் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் முதல், 8 ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவ, மாணவியர் வரை பிரியா விடை பெற்று செல்வார்கள்.

பள்ளிக்கூடமே கதியென கிடந்த பெருமாள், லாக் டெளனால் இந்த சுதந்திர தினத்துக்கு யாரையும் பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டதே என்று கவலையுற்றார்.

6 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெருமாளுக்கும் வியாபாரம் இல்லை. வாழ்வாதாரத்துக்கு என்ன பண்ணுவார் என்று ஒரு சில ஆசிரியப் பெருமக்கள், ஒரு சில பெற்றோர்கள் பெருமாள் வீடு தேடி வந்து பண உதவி புரிந்தனர். பெருமாள் வேண்டாம் என்று மறுத்தும், அன்பாய் திணித்து விட்டு சென்றனர்.

சுதந்திர தினம் நெருங்குவதால், பெருமாள் ஏக்கத்தோடு பூட்டியிருக்கும் பள்ளிக்கூடத்தை பார்த்து விட்டு கனத்த மனதோடு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

Representational Image
Representational Image

சைக்கிளை ஓட்டியபடியே வீடு வந்து சேர்ந்தார்.

அன்று இரவு முழுக்க பெருமாளுக்கு தூக்கமே இல்லை.

என்ன பண்ணலாம்...என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது சுதந்திர தினத்துக்கு. என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

அதிகாலை 3 மணிக்கு மழை ஆரம்பித்தது.

பெருமாளின் கூரை வீட்டில் மழையின் சத்தம் சோவென்று விழுந்து கொண்டிருந்தது.

காலைப் பொழுது அழகாய் விடிந்தது.

கூரைகளில் இருந்து மழை நீர் சொட்டு, சொட்டாய் கீழே விழுந்து கொண்டிருந்தது.

மழை நீர் விழும் அந்த இடம் பல்லாங்குழி விளையாட்டில் உள்ளது போன்று வட்ட, வட்டமாய் காட்சியளித்தது.

அதிலிருந்து நீர்த்துளிகள் டொக், டொக்கென்று சத்தம் போட்டபடி அழகாய் தெறித்துக் கொண்டிருந்தது.

பெருமாளுக்கு யோசனை பிறந்தது.

குளித்து முடித்து வெள்ளை கதர் சட்டை வேட்டியை அணிந்து கொண்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தார். 5,6 கட்டைப்பைகளை எடுத்துக்கொண்டு, ஒரு சோல்னா பையை மாட்டிக் கொண்டார். மனமகிழ்ச்சியோடு புறப்பட்டார்.

அதிகாலை பெய்த மழையில் பூமி நன்றாக நனைந்திருந்தது.

இப்பொழுது சாரலாய் தூறிக் கொண்டிருந்தது. அந்த குளிர் சாரலில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலானார் பெருமாள்.

பெருமாளின் வெள்ளை கதர் சட்டையின் மீது அந்த சாரல் துளிகள் விழுந்து, சின்னச்,சின்ன வட்டமாய் விரிவு பெற்று மறைந்து கொண்டிருந்தது.

பெருமாள் தாத்தாவின் சுதந்திர தினம்..! - லாக் டெளன் குறுங்கதை  #MyVikatan

இப்படி சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த பெருமாள் முதலில் ஒவ்வொரு ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளிக்கூடத்தில் சமைத்து போடும் சத்துணவு ஊழியர்கள் வரை அவரவர் வீட்டிற்கு சென்று அவர்கள் மற்றும் குடும்பத்தாருக்கும் சோல்னா பையிலிருந்து எடுத்து தேசியக் கொடியை கொடுத்தார். பின் கட்டைப்பையில் இருந்து திண்பண்டங்களை எடுத்துக் கொடுத்தார் எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.

அடுத்ததாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியர் வீட்டிற்கும் சென்று தேசியக் கொடியை கொடுத்தார். மாணவ,மாணவியர் உட்பட அவர்கள் வீட்டிலும் எல்லோரும் மகிழ்ந்து போனார்கள்.

இப்படி இரண்டு நாட்களாக ஓய்வில்லாமல் கொடுத்து முடித்தார் மனமகிழ்வோடு.

இந்த இரண்டு நாட்களில் பெருமாள் சைக்கிளில் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கொடுத்து முடித்த மொத்த தூரம் 120 கிலோ மீட்டர் இருக்கும்.

Indian Flag
Indian Flag

தனக்கு வந்த உதவி பணம் முழுவதும் செலவாகிவிட்டது என்ற கவலை சிறிதுமின்றி, அன்று இரவு மனநிம்மதியோடு தூங்கினார்.

காலை விடிந்தது.

சுதந்திர தினம் பிறந்தது.

பெருமாளின் இந்த சமூக அக்கறை குறித்து அந்த ஊரில் இருக்கும் இளைஞர் சமூக ஊடகத்தில் பகிர, ஒரே இரவில் வைரலானார்.

வீட்டில் பெருமாள் தன் வெள்ளை கதர் சட்டையில் தேசியக் கொடி குத்தியபடி அமர்ந்திருந்தார்.

இன்னேரம் பள்ளிக்கூடம் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என்று நினைத்து கொண்டிருக்க,

வீட்டு முன்பு ஒரு கார் வந்து நின்றது.

காரில் இருந்து மாவட்ட ஆட்சியர் முத்து லட்சுமி இறங்கினார்.

வீட்டில் இருந்து வெளியில் வந்த பெருமாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

பத்திரிக்கைகளில் வந்த செய்தியை பார்த்து மகிழ்ந்ததாக கூறி, பெருமாளின் உன்னத பற்றை பறைசாற்றும் விதமாக, பரிசு வழங்கி கெளரவித்தார்.

மாவட்ட ஆட்சியர் முத்து லட்சுமி, பெருமாளை தன் காரில் வருமாறு மரியாதை நிமித்தமாக அழைக்க,

பெருமாள் அவரின் அழைப்பை ஏற்று காரில் ஏறினார்.

கார் அங்கிருந்து கிளம்பியது.

வந்தே மாதரம்...

ஜெய்ஹிந்த்...!

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு