Published:Updated:

ஐயப்பன் சலூன் கடை…! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

மாலையில் இவன் வருகைக்காக அவனது வெள்ளாடுகள் காத்திருக்கும். நாள் முழுக்க ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து ஊர் அண்ணன் ஒருவர் அவரது மந்தையை கூட்டிக் கொண்டு ரயில் பாதையின் ஓரமாக நடந்து வந்துக் கொண்டிருந்தார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மாலை நேரத்து வெளிச்சம் மெல்ல மெல்ல மறைய தொடங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்தது. ரயில்வே ரோட்டின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளின் வயிறு நிரம்பி இருக்கிறதா என்று ஒருமுறை வைத்து அமுக்கிப் பார்த்தான் வின்சென்ட். "ம்ம...ம்மமமம…" என்று ஓடி விலகியது அவனது வெள்ளாடு.

இன்னும் கொஞ்சம் நேரம் நின்றிருந்தால் எல்லா புற்களையும் ஆடுகள் மேய்ந்துவிடும், பசியும் அடங்கி வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். ஆடுகள் புற்களைவிடாமல் மேய்ந்துக் கொண்டு தான் இருந்தன. வின்சென்ட் நாள் முழுக்க ஆடு மேய்கமாட்டான், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வான். காலையில் வேப்பிலை, பூவரசம் இலை, புளியம் இலை மற்றும் வயக்காட்டு வேலியில் படர்ந்து இருக்கும் இலை தழைகளை அறுத்து வந்து ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் தட்டியில் கட்டிவிட்டு சென்றுவிடுவான்.

Representational image
Representational image

மாலையில் இவன் வருகைக்காக அவனது வெள்ளாடுகள் காத்திருக்கும். நாள் முழுக்க ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து ஊர் அண்ணன் ஒருவர் அவரது மந்தையை கூட்டிக் கொண்டு ரயில் பாதையின் ஓரமாக நடந்து வந்துக் கொண்டிருந்தார். இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அவரது தோட்டத்தில் போய் ஆடுகளை அடைத்து விடுவார். இருள் சூழ ஆரம்பித்தது வேகமாக செல்ல வேண்டும் என்பது அவரது ஓட்டத்தில் தெரிந்தது. அவரது ஆட்டு மந்தையில் செம்மறியாடு, வெள்ளாடு, இரண்டும் கலவையாக சுமார் நூறு ஆடுகளுக்கு மேல் வைத்திருந்தார்.

அவற்றில் வெள்ளாடுகள் மட்டும் வின்சென்டின் ஆடுகளோடு சில சமயம் காதல் வசப்படுவதுண்டு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் சந்தையில் வாங்கிக்கொண்டு வந்த இரண்டு ஆடுகள் வளர்ந்து பலப்படும் பக்குவத்தில் இருந்தன. ஆட்டு மந்தையிலிருந்து வந்த பிற ஆடுகளோடு சேர்ந்து இவனது ஆடும் சென்று விடாமல் இருக்க அதன் பின்னாடியே ஓடிக் கொண்டிருந்தான் வின்சன்ட்.

ஆட்டு மந்தைகளை அழைத்து வரும் அண்ணனை பார்த்து, பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது இப்படி தான் ஆடுகளை மேய்த்து இருப்பாரோ என்று அவன் மனதுக்குள் ஓடியது. ஆடுகளின் மேய்ப்பர் அண்ணன் லுங்கியை தூக்கிக் கட்டி இருந்தார். மேல் சட்டையின் பாக்கெட்டில் இரண்டு பீடிகள் இருந்தன. தலையில் துண்டு ஒன்றை கிரீடம் போல் கட்டியிருந்தார்.

ஆடுகள் வின்சென்டை கடந்து செல்லும் போது அவற்றை கூட்டிக் கொண்டு வந்த அண்ணன் அவனிடம் பேச்சுக் கொடுப்பது வழக்கம். "என்ன தம்பி எப்படி இருக்கா? இன்னைக்கு நீ மட்டும் தான் இருக்க போல. உன் கூட வரும் பிள்ளைங்கள எங்க காணும்?" என்றார்.

"நல்ல இருக்கேன்ணே. நீங்க எப்படி இருக்கய? ஆமா ஒருவாரமா அவங்க யாரும் வரல. என்ன ஆச்சு -ன்னு தெரியல பாத்துக்காங்க," என்றான் வின்சென்ட்.

"சரி மக்கா நான் கிளம்புறேன், ஞ்ச ஞ்ச ஞ்ச….." என்று அவரது ஆடுகளை விரட்டி வேறு பாதையில் திருப்பினார். வின்சென்ட் வழக்கமாக மாலையில் ஆடுகளை மேய்க்க வரும் இடத்தின் அருகில் ரயில் பாதையின் மறுபுறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சில ஆட்கள் அவர்களது ஆடுகளை மேய்க்க இந்த புறமாக வருவதுண்டு. அன்றைய நாளில் பூங்கொடி ஏனோ ஆடுகளை மேய்க்க வரவில்லை. ஆடுகள் மேய்க்க வந்த இடத்தில்தான் பூங்கொடி வின்சென்ட்க்கு பழக்கம். இருவரும் ஒரே வயதுக்காரர்கள். என்ன? எப்படி இருக்கிற? படிப்பு எப்படி போகுது? இதைத் தவிர வேறு ஒன்றும் பேசிக்கொள்வதில்லை. இதையே பல நாள் உறவு அவர்களுக்குள் இருக்கிறது என்பது போல் நினைத்துக் கொள்வான் வின்சன்ட்.

Representational Image
Representational Image

அன்றைய தினம் பூங்கொடியும் இல்லை நலம் விசாரிப்புகளும் இல்லை என்ற வருத்தத்துடன் வீட்டுக்கு கிளம்புவதற்கு ஆயத்தமாகினான். ஆடுகளை அப்படியே மெல்ல மெல்ல வீட்டுக்கு போகும் வழியில் திரும்பிக்கொண்டிருந்தான். வீட்டுக்குள் வந்ததும் பின்புறத்தில் அதற்கான அமைக்கப்பட்டிருந்த பட்டியில் அடைத்துவிட்டு கை கால்களை மட்டும் கழுவிக்கொண்டு நேராக சலூன் கடைக்கு செல்ல வேண்டும் அதுதான் திட்டம். எல்லா நாட்களிலும் இரவு 9 மணிக்கு தான் கடையை அடைப்பார் சலூன் கடை அண்ணன் ஐயப்பன். அவன் கடைக்கு செல்லும் போது மணி 8 ஆகியிருந்தது. கடைக்குள் இரண்டு நடுத்தர வயது மதிக்கத்தக்க அண்ணன்கள் அன்றைய தினத்தந்தி பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் முடிதிருத்தும் இருக்கையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவர் முடி திருத்துவதற்காக தான் அமர்ந்து இருக்கிறார் என்று வின்சென்ட் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தான். ஐயப்பன் அண்ணன் இதற்கு முன்பாக முடி திருத்திய நபரின் முடிகளை வாரியலால் அதனை ஓரமாக பெருக்கிக் கொண்டிருந்தார்.

காதலர் தினம் படத்தில் வரும் குணால் போன்று முடியை‌ மாற்ற வேண்டும் என்பதில் வின்செண்ட் உறுதியாக இருந்தான். அதற்காக அவன் வளர்ந்திருந்த நீளமான முடியை வெட்டாமல் வைத்திருந்தான். கோவிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறானா என்றெல்லாம் பலர் அம்மாவிடம் கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் அவனை திட்டாத நாளில்லை. ஒருநாள் அம்மா அவன் தூங்கும் போது முடியை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை எடுத்து சிறிதளவு வெட்டி இருக்கிறாள். முழுவதும் வெட்டுவதற்கு முன்பே சுதாரித்து கொண்டான்.

"ஏலே முடிய நாளைக்கு வெட்டு ஊரெல்லாம் கேட்கவ எந்த கோயிலுக்கு நேந்து விட்டு இருக்கான்னு." எனறாள் அம்மா.

"அதுக்கு உங்களுக்கு என்ன" என்று அம்மாவை உதறிவிட்டு கையால் முடியின் அளவை சரிபாரத்தான் வின்சென்ட். எப்படியும் சீக்கிரம் முடியை குணால் போன்று வெட்டி விட வேண்டும்.


ஐயப்பன் அண்ணன் ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களை கவனித்து வந்து கொண்டிருந்தார். ஒன்று அவர் சுயமாக நடத்திவரும் சலூன் கடை.


மற்றொன்று காலம் காலமாக அவர் மீது திணிக்கப்பட்ட சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலை. இரண்டு தொழில்களிலும் போதுமான வருமானம் இல்லையென்றாலும் அதை சளைக்காமல் செய்து கொண்டிருந்தார். அவரது வீட்டில் எப்போதும் இரண்டு பிணங்களை எரிப்பதற்கு தேவையான விறகுகளை அடுக்கி வைத்திருப்பார். வழக்கமாக ஊரில் யாராவது இறந்து போய்விட்டால் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல் சலூன் கடையின் நேரத்தை மாற்றி அமைப்பதும் பிணத்தை எடுத்துச் செல்வதற்கான வேலைகளை செய்வதையும் திட்டமிட்டு கொள்வார். அவரது அப்பாவுக்கு வயதாகி விட்டதால் சலூன் கடை வேலைகளையும் பிணங்களை எடுத்துச் செல்லும் வேலைகளையும் ஒருசேர செய்வதில் சற்று வேலைப்பளு அதிகமாக தான் இருந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பிணங்கள் கூட வருவதுண்டு அப்போது உறவினரின் மகன் ஒருவரை தன்னோடு அழைத்துக் கொள்வார்.

Representational Image
Representational Image
Pixabay

சில நேரங்களில் தன்னுடன் இருக்கும் உறவினரின் மகனுக்கு முடி வெட்டும் முறைகளை கற்றுக் கொடுத்திருக்கிறார். இறந்து போன நபர் எவ்வாறு இறந்துவிட்டார் என்ற கேள்விகளெல்லாம் வருபவரிடம் கேட்கமாட்டார். இறந்தவர் வீட்டில் கூடியிருக்கும் கூட்டத்தில் பேசிக் கொள்பவர்களின் விதத்தை வைத்தே அவர் எவ்வாறு இறந்துபோனார் என்பதை கணித்து கொள்வார் ஐயப்பன் அண்ணன். தற்கொலை சம்பவங்கள் மட்டுமே இருந்தால்தான் போலீஸ் விசாரணை, போஸ்ட்மார்டம் எல்லாம் இருக்கும். இருந்தாலும் எல்லா தற்கொலை வழக்குகளுக்கும் இதுபோன்ற சம்பிரதாயங்கள் நடப்பது கிடையாது. இயற்கை மரணங்கள், உடல்நிலை சரியில்லாமல் போன மரணங்கள், விபத்து மரணங்கள், தற்கொலை மரணங்கள் இப்படிப் பல்வேறு தரப்பட்ட இடங்களில் இறந்துபோன நபர்களை எரியூட்டிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. வின்சென்ட் கடையில் இருக்கும்போது ஐயப்பன் அண்ணனை கூப்பிட வந்தவர்கள் கூறியது ஒரு மரணச் செய்தி. மாறாக அது எவ்வாறு என்று அவர்கள் கூறவில்லை. எப்படி இறந்தார் என்று கேட்டாலும் அவர்கள் அதற்கேற்ற மாதிரி பதில் கூற மாட்டார்கள்.

"ஐயப்பன் அண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று சாதாரணமாக கேட்டான் வின்சென்ட். "யாரும் இல்ல தம்பி அடுத்து உனக்கு தான் வெட்டணும் உட்காரு" என்று பணிவாக பதிலளித்தார் ஐயப்பன். கடையில் கடலோர கவிதைகள் படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. "அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குது சரிதானா" இளையராஜாவின் குரலில் ஆனந்தமாக ஒலித்தது.

கடையின் நான்குபுறமும் சுவற்றின் மேலே பானையில் ஸ்பீக்கர் இருக்கும்படி அமைத்திருந்தார் ஐயப்பன். சுவரின் இரண்டு புறமும் இருந்த பெரிய கண்ணாடிகளில் சிறிய அளவிலான ஜில் ஜில் என ஒலிக்கும் ஸ்பீக்கரை ஒட்டியிருந்தார். முடி திருத்துவோர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டிருந்த முடி வெட்டுவதற்கான கட்டணத்தை ஒரு தாளில் எழுதி வலதுபுறம் ஒட்டியிருந்தார். அதன் மேலே வரிசையாக திரைப்பட நடிகர்களின் படமும் ஓரத்தில் அரசியல் தலைவர்களின் படமும் போட்டிருந்தார். அதில் புதிதாக புன்னகையோடு காட்சியளித்தார் கலைஞர்.

Representational Image
Representational Image

"ஐயப்பா, எனக்கு அக்குள்ல கொஞ்சம் முடி இருக்கு அதை வெட்டி விடு. நாங்க கிளம்பணும்" என்றார் அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த அண்ணன் ஒருவர். "சரி வெட்டி எடுத்துருவோம்" என்று மேசையில் இருந்த கத்திரியை எடுத்தார் ஐயப்பன் அண்ணன். கடைக்கு மூடிய அறைக்குள் எல்லாம் கிடையாது கதவு எந்நேரமும் திறந்தே இருக்கும். சாலையில் செல்லும் வாகனங்களின் இறைச்சல் உள்ளே அமர்ந்திருப்பவரின் காது வரை எட்டிப் பார்க்கும். அதையும் மீறி பாடல் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியிலிருந்து ஐந்து ஆறு பேர் விருவிருவென ஓடிவந்தார்கள். அவர்கள் வந்த வேகத்திற்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதோ என்று வின்சன்ட் நினைத்தான். உள்ளே வந்தவர்கள் விரைவாக கடையை அடைத்து விட்டு உடனடியாக தங்களுடன் வர வேண்டும் என்று கூறினார்கள். ஒரு ஓரமாக தினத்தந்தி பேப்பரை படித்துக் கொண்டிருந்த அண்ணன் அவர்களிடம் கேட்டான், "என்ன ஆச்சு" வந்திருந்தவர்களில் ஒருவர் கூறினார், " நம்ம பிள்ளை ஒருத்தி செத்துட்டா, வீட்டுக்கு வா" என்றார். கடையில் உள்ளே அமர்ந்திருந்த வின்சன்ட்க்கு பதட்டம் கூடியது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். "தம்பி நாளைக்கு வாங்க முடி வெட்டிருவோம்" என்று கடையை அடைக்க முயன்றார் ஐயப்பன் அண்ணன்.

"நாளைக்கு வரேன் அண்ணே" என்று கடைசியாக ஒருமுறை தன்னுடைய முடியை சரிசெய்து கடையில் இருந்து வெளியே வந்தான் வின்சென்ட். ஐயப்பன் அண்ணன் விருவிருவென கடையைச் சாத்த ஆரம்பித்தார். அவரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் விரைப்பாக தங்களது முகத்தை வைத்து இருந்தார்கள். கடையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு ஐயப்பன் வெளியே காத்திருந்த நாய்க்கு அவர் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றை உடைத்து ஒரு தட்டில் வைத்து அதற்கு வைத்தார். "வெவ்…..வெவ்…..வெவ்……" வெகுநேரமாக காத்திருந்த பசியில் லபக்கென கவ்வி கொண்டது நாய்.

நேரம் கிட்டத்தட்ட ஒன்பது ஆகிக் கொண்டிருந்தது. இரவு நேரங்களில் பெரும்பாலும் ஐயப்பன் அண்ணன் பிணங்களை எடுத்துச் செல்வது கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்வார், அதுவும் அவர் விருப்பம் கிடையாது இறந்த வீட்டார் எப்படி கூறுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு நடந்தது கொள்வார்.

இரவு நேரத்தில் பிணம் எடுத்து செல்வது ஒரு சந்தேகத்தை மனதில் உண்டு பண்ணியது ஐயப்பன் அண்ணனுக்கு.

"ஏய் ஐயப்பா சீக்கிரம் கெளம்பு, சுடுகாட்டுக்கு போவணும்" என மீண்டும் ஒருமுறை கூறினார் அவர்களில் ஒருவர்.

இந்த ராத்திரியா கொண்டு போவணும், ஏதாவது பிரச்சினையா" என்றார் ஐயப்பன்.

"ஆமா, ஆவ வேண்டிய காரியம் எல்லாம் பண்ணியாச்சு, அறுப்பு ஆஸ்பத்திரில இருந்து வண்டி வந்துட்டு இனிமேலும் வீட்டுல பொணத்தை வக்க முடியாது, நீ சீக்கிரம் வாடே!" என்றார் மற்றொருவர்.

ஐயப்பன் சலூன் கடை…! - சிறுகதை    #MyVikatan

"சரி, நீங்க முன்னாடி போங்க நான் வீட்டுக்கு போய் தள்ளு வண்டி, விறகு எல்லாம் எடுத்துட்டு இறந்தவங்க வீட்டுக்கு வாரேன்" என கூறினார் ஐயப்பன் அண்ணன்.

ஐயப்பன் அண்ணன் கடை அமைந்திருக்கும் மெயின் ரோட்டில் வழியாகத்தான் அனேக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். ஆறு மணியிலிருந்து அவரும் கடையில் தான் இருந்தார் யார் இறந்துபோனார்கள் என்ற செய்தி அவருக்கு வரவில்லை.

போஸ்ட்மார்டம் செய்துவிட்டு பிணத்தை ஏற்றிவந்த மருத்துவமனை வாகனம் கூட அவர் கண்ணில் தென்படவில்லை. சாதாரணமாக ஊரில் ஒருவர் இறந்து போனாலே காட்டுத்தீ போல் செய்தி பரவி விடும். அன்றைய தினத்தில் நிகழ்ந்த இறப்பு செய்தியும் அவர் காதுகளில் எட்டவில்லை. இதுவே அவர் மனதில் ஆழ்ந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

கடைத் தெருவில் இருந்த அனேகமான கடைகளை இரவு 9 மணிக்கு அடைத்துவிடுவார்கள். அதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது. அருகில் உள்ள கிராமத்தினர் வேலை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே ஐயப்பன் அவர் வீட்டை சென்றடைந்தார்.


வீட்டில் குழந்தைகள் இருவரும் உறங்கிவிட்டனர். ஐயப்பன் வருகைக்காக காத்திருந்த அவரது மனைவி. வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பிணம் எடுத்துச் செல்லும் வண்டியை மெதுவாக சுத்தம் செய்து அதன் கீழே உள்ள இடத்தில் விறகுகளை அடுக்க ஆரம்பித்தார்.


"என்ன எங்க வீட்டுக்கு வந்ததும் வராததுமா இப்பவே வண்டிய எடுக்க என்ன ஆச்சு. யாரும் இறந்து போயிட்டாவளா!" என்றார் ஐயப்பன் மனைவி.


"ஆமா பிள்ளை, தெக்கு தெருவுல ஒரு ஆளு இறந்து போயிட்டாங்களாம். ராத்திரியே பிணத்தை எடுக்கணும் -ன்னு ஆளுங்க கடைக்கு வந்தாங்க அதான். என்றார் ஐயப்பன்.


"இப்போம் ராத்திரி யாரு சுடுகாட்டுக்கு போவாங்க. இறந்த ஆளு தற்கொலை பண்ணிட்டாங்களா?" மனைவி.


"அதெல்லாம் தெரியாது, நான் கேக்கல வீட்டுக்கு போயிட்டு வண்டி கொண்டு வாரேன் -ன்னு சொல்லிட்டேன். அவளாங்க எல்லாம் பெரிய ஆளுங்க அவங்க பேச்சை மீறி நம்ம எதுவும் செய்ய முடியாது. நீ போய் படு நான் போயிட்டு வந்துடுவேன்" என்றார்.


"நாளைக்கு ஏதாவது போலீஸ் கேஸ் ஆச்சுன்னு வந்தா உங்களை கேஸ் கீஸ் ன்னு அலைய விட்டுருவாங்க. ,பஞ்சாயத்து போர்டுல விசயத்தை தெரிவிக்காம போவாதீங்க " என்றார் மனைவி.


"அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ படு" என்று வேகமாக வண்டியை தள்ளிக்கொண்டு தெற்கு தெரு பக்கமாக நடந்தார்.

இறந்தவரின் வீட்டுக்கு முன்னால் சில ஆட்கள் கூடி இருந்தார்கள். காலையில் இருந்து மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட ஆடுகள் வீட்டுக்கு முன்னால் முழுக்கை கள போட்டு அதன் மீது பசியோடு படுத்து இருந்தன. தெரு நாய்கள் ஒரு ஓரமாக குறைத்துக்கொண்டிருந்தன. தெருவிளக்குகள் ஓரிரண்டு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் யார் யார் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை ஐயப்பன் அண்ணனால் கவனிக்க முடியவில்லை. வீட்டுக்குள்ளிருந்து பிணத்தை எடுக்க சென்றவர்கள் வெளியே வருவதற்குள் போலீஸ் வாகனம் வந்து நின்றது!

-பாண்டி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு