Published:Updated:

செய்யாமல் செய்த உதவி... ! - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image

நான் நல்ல நிலைக்கு வந்தபிறகு என்னுடைய சொந்த ஊருக்குச் சென்று முதலில் அந்த ஹோட்டல் முதலாளியைப் பார்த்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு தொழிலதிபரை அந்த இளம் நிருபர் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார். நிருபரின் பல்வேறு வினாக்களுக்கு அவர் மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் கூறிக்கொண்டிருந்தார்.

``உங்களுடைய சிறுவயது பற்றிக் கூறுங்கள்" என்ற நிருபரின் கேள்விக்கு தொழிலதிபர் சில நொடிகள் கண்களை மூடி யோசித்தார்.

Representational Image
Representational Image

பிறகு சரளமாகப் பேச ஆரம்பித்தார்.

``கொடிது கொடிது வறுமை கொடிது,

அதனினும் கொடிது இளமையில் வறுமை" என ஒளவையார் வறுமை குறித்து மிக அற்புதமாகக் பாடியுள்ளார். அந்தக் கொடிய வறுமையை நான் எனது இளமைப் பருவத்தில் அனுபவித்துள்ளேன். எனது குடும்பத்தின் வறுமை மிகமிக அதிகம் என்பதால் அவ்வப்போது சில நாள்கள் எனக்கு சாப்பிட எதுவும் கிடைக்காது.

அவ்வாறு மிகவும் பசியில் இருந்த ஒருநாள் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீதியில் உள்ள ஒரு ஹோட்டல் வழியாக நடந்து சென்றேன். ஹோட்டலின் கண்ணாடிகளுக்குள் அடுக்கப்பட்டு இருக்கும் பதார்த்தங்களை ஆவலுடன் நோக்கியவாறே நான் செல்வதை அந்த ஹோட்டலின் உரிமையாளர் பார்த்தார்.

என்னை உள்ளே அழைத்த அவர், என்னிடம் சாப்பிடுமாறு கூறினார். நான் என்னிடம் பணம் இல்லை என்றேன். பரவாயில்லை கிடைக்கும்போது கொடு என்று கூறி என்னை வற்புறுத்தி உண்ண வைத்தார்.

ஆனால் அவருக்குக் கொடுக்க எனக்கு பணம் கிடைக்கவே இல்லை.

அதன் பிறகு எனக்கு வீட்டில் உணவு இல்லாத போதெல்லாம் நான் அந்த வழியாகச் செல்வேன். அவரிடம் சென்று உணவு கேட்பதற்கு எனக்கு எப்போதுமே தயக்கம். எனவே அந்த வழியாக வெறுமனே நடந்து செல்வேன். என்னைப் பார்த்ததுமே நான் பசியில் இருப்பதை உணர்ந்து, உடனே என்னை உள்ளே அழைத்து உணவு கொடுத்து விடுவார்.

இவ்வாறு பல நாள்கள் நான் அந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன்.

Representational Image
Representational Image

எனது இளமையின் வறுமை எனக்கு நேர்மையாக முன்னேற வேண்டுமென்ற வைராக்கியத்தைக் கொடுத்தது. அந்த வைராக்கியத்துடன் படித்த நான் படிப்படியாக உயர்ந்து இன்று பல மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறேன்.

நான் நல்ல நிலைக்கு வந்தபிறகு என்னுடைய சொந்த ஊருக்குச் சென்று முதலில் அந்த ஹோட்டல் முதலாளியைப் பார்த்தேன். அவர் அதே இடத்தில் இன்னும் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

என்னை அவருக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது நீங்கள்தான் எனக்கு உணவு கொடுத்தீர்கள், இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று கூறிக் கண்கலங்கினேன். ஆயினும் பல பேருக்கு அவர் இவ்வாறு உதவி செய்து இருப்பதால் அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சரி நாம் இப்போது அவருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்றால் அதை அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

நான் சிறுவயதில் இருந்தபோது எனக்கு நீங்கள் செய்த உதவி தான் என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது.

Representational Image
Representational Image

நீங்கள் உணவு கொடுக்காமல் இருந்திருந்தால் நான் பசியில் திருடனாகக் கூட ஆகியிருப்பேன். ஆகவே உங்களுக்கு உதவி செய்வது என்னுடைய கடமை என்று நான் அவரிடம் வாதிட்டபோது அவர், ``தம்பி! நன்றியுணர்வு என்பது பெறுபவரின் கடமையாக இருக்கலாம். ஆனால் அது அளிப்பவரின் உரிமையாக ஒருபோதும் மாறிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

பதில் உதவி எதையும் எதிர்பார்த்து நான் உனக்கு உதவி செய்யவில்லை. மேலும், நான் உனக்கு உதவி செய்ததே எனக்கு மறந்து போய்விட்டது எனும்போது உன்னிடமிருந்து பதில் உதவியைப் பெற்றுக்கொள்வது நிச்சயமாக நியாயமாக இராது.

அதனுடன் இவ்வாறு செய்த உதவிக்கு பலன் பெறுவதும், விளம்பரப்படுத்துவதும் எனது கொள்கைக்கும், மனசாட்சிக்கும் விரோதமான ஒன்று” என்று கூறி எனது உதவியைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

மேலும் வேறு யாராவது இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நீ உதவி செய் என என்னைத் திருப்பி அனுப்பி விட்டார். அவர் கூறியது போன்று நான் பலருக்கும் தற்போது உதவுகிறேன். இப்போதும் நான் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் அவரிடம் இது குறித்து விவாதித்துக் கொண்டே தான் இருக்கிறேன். நான் இவ்வளவு சாதித்தபோதும், பெரும் பணம் சம்பாதித்த போதும் இன்று வரை அவருக்கு ஒரு ரூபாய் கூட என்னால் கொடுக்க முடியவில்லை. இது எனக்கு மிகப் பெரிய மனக்குறையாக உள்ளது. இன்றும் என்னை ஒரு பெரும் கடனாளி போன்றே நான் உணர்கிறேன்.

Representational Image
Representational Image

இப்போது நாமெல்லாம் சில சிறு சிறு உதவிகள் செய்து முடித்தவுடன் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கிறோம்.

ஆனால், எந்தவிதமான விளம்பரங்களும், வெளிச்சங்களும் இல்லாமல் இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர் இதுபோன்ற உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் அந்த தொழிலதிபர்.

இதைக்கேட்ட நிருபர், ``உண்மையிலேயே அந்த ஹோட்டல்காரர் ஒரு சிறந்த மனிதர்தான் சார்" என்றார் கண்கலங்கியபடி.

தொடர்ந்த நிருபர், ``நீங்கள் கூறியதில் ஒரு விஷயம் குறித்து எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது சார். இப்போதெல்லாம் நாம் உதவிகளை விளம்பரப் படுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால், ஒருவர் செய்யும் உதவியைப் பார்த்து மற்றவர்களும் உதவி செய்ய இது தூண்டுகோலாக அமையும் தானே" என்றார்.

``உங்கள் கோணம் அளிப்பவர் பார்வையில் சரியானதுதான். ஆனால் உதவியைப் பெறுபவர் மனநிலையில் இது சற்று அவமானத்திற்கு உரிய ஒன்றாகக் கொள்ளப்படும்தானே" என்றார் தொழிலதிபர் புன்னகையுடன்.

நமது ஒவ்வொரு கருத்துக்கும் வெவ்வேறு நியாயமான கோணங்கள் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட நிருபர் புன்முறுவலுடன் தொழிலதிபரிடம் இருந்து விடைபெற்றார்.

Representational Image
Representational Image

வெளியே வந்தவுடன் கேமராமேன், ``ஏன் தம்பி, இந்தத் தொழிலதிபர் உங்க ஊர்க்காரர்தானே? இதை ஏன் நீங்க கடைசிவரை அவர்கிட்ட சொல்லலை?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.

``அதை அவர்கிட்ட சொல்லணும்னு தோணலை அண்ணா" என்று புன்னகைத்தார் நிருபர்.

தான் புதிதாகத் தொழில் தொடங்க வங்கியில் கடன்பெற வேண்டி, தன் சொந்த ஊரைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரிடம் செக்யூரிட்டி கையொப்பம் பெற நினைத்ததைக் கடைசிவரை வெளியில் சொல்லக் கூடாது என மனதிற்குள் நினைத்தபடியே கேமராமேனிடம் இருந்து விடைபெற்றார் அந்த ஹோட்டல்காரரின் மகனான நிருபர்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு