Published:Updated:

கோழியும் கொரோனாவும்..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Saravanakumar.P )

"இல்லப்பா இனி இது ஓஞ்சொத்து... அத வளர்த்துப் பெருக்குவியோ இல்ல அடிச்சு சாப்பிடுவியோ அது உம்பாடு…" இப்படித்தான் வீராசாமியின் கோழிகள் முத்துசாமியிடம் வந்து சேர்ந்தன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முத்துசாமிக்கு காலையில் இருந்தே இருப்புக் கொள்ளவில்லை. பக்கத்து வீட்டு வீராசாமி ஊரைவிட்டு குடும்பத்துடன் வெளியேற முடிவு செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறான். குடும்பம் என்றால் அவன் மனைவி, 10 வயதில் ஒரு மகன், 8 வயது மகள் இவர்கள்தான். குரோனா தாக்கம் அதிகரித்து ஊரடங்கு நாள்கணக்கில் மாதக் கணக்கில் நீடித்துவிட்டதால் எல்லாத் தொழில்களும் முடங்கிப்போனதால் தினக்கூலி வேலைக் காரர்கள் தெருவுக்கு வந்தபோது அந்தப் பட்டியலில் வீராசாமியும் இடம்பெற்று எதிர்காலம் என்னவென்று தெரியாமல் புலம் பெயர முடிவு செய்து கிளம்பியும்விட்டார்கள்.

"கிளம்பத்தான் போறீகளா அத்தாச்சி, இங்கனே கிடந்து தாக்குப் பிடிங்களேன்" என்று முத்துசாமியின் மனைவி அழுது சிவந்த கண்களுடன் கேட்டாள்.

Representational Image
Representational Image
Robert_Selvaraj

"இல்லத்தா, இங்கன இருக்கையில ஒத்தருக்கு ஒத்தர் ஒத்தாசையா இருந்தம். எனக்கு ஒண்ணுன்னா நீ நிப்ப ; உனக்கு ஒண்ணுன்னா நாங்க நிப்பம்... ஆனா யாருமே நல்லா இல்லையில்ல... என்னவோ உம்மவன் ஒரு வேலைபாக்குறதுனால நீங்க தாக்குப்பிடிக்கிறீங்க... எங்களுக்கும் தாயா பிள்ளையா பழகிட்டுப் போறதுக்கு மனசில்லதான்... ஆனா வேற வழி இல்லையே."

விடை பெற்ற வீராசாமியை வருத்தத்துடன் வழி அனுப்பத் தயாரானபோதுதான் வேறு ஒரு பிரச்னை எழுந்தது.

இருக்கிற தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டார்கள். நடந்துதான் போக வேண்டும் என்பதால் கை கொள்ளும் சாமான்களை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு சிலவற்றை அக்கம்பக்கத்தார்க்குக் கொடுத்துவிட்டார்கள். முத்துசாமிக்கும் சில சாமான்கள் தந்தார்கள். அதில்தான் முத்துசாமியிடம் இந்தக் கோழிகள் வந்து சேர்ந்தன.

Representational Image
Representational Image
Saravanakumar.P

"சாமான்களை எல்லாம் அள்ளிக்கிட்டுப் போக முடியுமா… நாங்க போறதே எப்படின்னு தெரியல... வழியும் தெரியாம வாக்கும் தெரியாம தடுமாறிக்கிட்டு இருக்குறோம்... இதில கோழியத் தூக்கிக்கிட்டு திரிய முடியுமா. நம்ம உசிரக் காப்பாத்திக்கணும்னு ஓடுறம். இந்த உசிறு அம்மாந்தொல தாங்குமா… முத்துசாமி நீயும் தங்கச்சியும் எங்கள ஒட்டா ஒறவா நினச்சு எவ்வளவோ ஒத்தாசை பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு எவ்வளவோ செய்யணும். உம் மவன் கல்யாணத்துக்கு எதுனாச்சும் பெருசா செய்யலாம்னு நெனச்சோம். ஆனா இப்படியெல்லாம் ஆகும்னு நெனக்கலியே... இந்தக் கோழிங்களை உங்கிட்ட வச்சிக்க... ஒனக்கு பிரயோசனமா இருக்கும்" என்றான் வீராசாமி.

"இத்த ஏம்ப்பா எங்கிட்ட கொடுக்குற. இத வச்சு நான் என்ன செய்ய... கொண்டு போப்பா."

"இல்லப்பா இனி இது ஓஞ்சொத்து... அத வளர்த்துப் பெருக்குவியோ இல்ல அடிச்சு சாப்பிடுவியோ அது உம்பாடு…"

இப்படித்தான் வீராசாமியின் கோழிகள் முத்துசாமியிடம் வந்து சேர்ந்தன.

னால், கோழிகள் வந்தபின்தான் முத்துசாமிக்கு புதிய சங்கடங்கள். கோழிகள் என்றால் மூன்று பெட்டைக் கோழிகள். அருகில் சேவல்களும் இல்லை. கோழிகள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகள் எல்லாம் வெறிச்சோடிப் போயிருந்தன. அங்கிருந்த பல குடும்பங்களும் வெளியேறி விட்டிருந்தார்கள்.

Representational Image
Representational Image

முத்துசாமியின் மகன் ஒரு அப்பார்ட்மென்டில் காவலாளியாக இருந்ததால் அவனுக்கு மட்டும் கூலி கிடைத்து வந்தது. அதனால் மற்றவர்களைப்போல் முத்துசாமியால் ஊரைவிட்டுக் கிளம்ப முடியவில்லை. மற்ற எல்லோருக்கும் ஊரடங்கால் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாமும் முத்துசாமிக்கு இருந்தன. ஆனால், அவன் ஊரைவிட்டுக் கிளம்பவில்லை. அவன் மகன் கொண்டுவரும் கூலியை நம்பி அவன் அங்கேயே தங்கிவிட்டான். முத்துசாமியின் மனைவியும் அக்கம் பக்கம் சென்று இலவசமாகக் கொடுக்கும் பொருள்களை வாங்கி வந்தாள். அரிசி பருப்பு எல்லாம் கிடைத்தபோதும் குடும்பத்துக்கே பத்தவில்லை என்ற நிலைதான்.

அருகில் வேறு யார் வீட்டிலும் கோழிகள் இல்லை. முத்துசாமியிடம் மட்டுமே மூன்று கோழிகள் மிஞ்சியிருந்தன. அவற்றிற்கு உணவிடுதல் பெரும் பிரச்னையானது. மீண்டும் இலவச பொருள்கள் கிடைக்கும்வரை இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதால் அவனால் கோழிகளை பராமரிக்க முடியவில்லை . கோழிகளும் வீட்டை சுற்றிச் சுற்றி வந்தன.

முத்துசாமியின் மகன் இந்தப் பிரச்னையில் தலையிட்டான் . கோழிகளுக்குத் தீனி கொடுக்க முடியவில்லை என்றால் அவற்றை உண்டு விடலாம் என்று முடிவு செய்தான். ஆனால், முத்துசாமியின் மனைவி அதை ஏற்க மறுத்துவிட்டாள். கோழிகள் என்பது அவளைப் பொறுத்தவரை வெறும் கோழிகளாகப் பார்க்கவில்லை. தன் உயிருக்குயிரான சினேகிதியின் உருவமாகவே பார்த்தாள்.

Representational Image
Representational Image

"இது ஒண்ணும் உசிர் இல்லை. இதுகளைப் பார்க்கும்போதெல்லாம் அவுக நெனப்புதான் வருது. இதப்போய் சாப்பிடலாம்னு சொல்றியே. மனசு கேக்கல... அதுங்க பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் நாம சாப்பிடுறதுல அதுங்களுக்கும் கொடுக்கலாம்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

முத்துசாமிக்கும் அதுவே சரியென்று பட்டது. வேற வழி இல்ல. நின்னுட்டுப் போகட்டும் என்று முடிவு பண்ணினான் முத்துசாமி.

மகன் முணுமுணுப்பு ஒரு பக்கம் மனைவியின் பிடிவாதம் ஒருபக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், சில நாள்கள்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது .கோழிகளுக்கு தானியமோ அரிசியோ போட முடியவில்லை. ரேஷனில் மாதமொருமுறை கொடுக்கும் அரிசியும் பருப்பும் ஒரு மாசம் அவர்களுக்கே போதவில்லை. இந்த நிலையில் கோழிகளின் தீவனத்துக்கு எங்கே போவது. தடுமாறினான் முத்துசாமி.

நாள்கள் செல்லச் செல்ல கோழிகளும் பசியால் வாடத் தொடங்கின. என்னதான் கோழிகளுக்கான கஞ்சியை மீதம் பிடித்து அவன் மனைவி ஊற்றினாலும் தானியங்ளைத் தின்பதற்கு வழியில்லாமல் கோழிகள் குன்னிக்குன்னி அமர்ந்தன. முனகலும் அதிகமானது.

கோடையின் அனல் வெப்பம் மனிதர்களை மட்டுமல்ல, அந்தக் கோழிகளையும் வாட்டி வதைத்தது. பூமியின் ஈரப்பதம் முற்றிலும் வறண்டு போனதால் பூச்சி புழுக்களையும் காணவில்லை. மண்ணைக் கிளறி உணவைத் தேட முடியாமல் மரத்தடியில் மயங்கி மயங்கி அமர்ந்தன. தண்ணீரைத் தண்ணீரைக் குடித்து வெப்பம் தணித்தன. பார்க்கப் பார்க்க முத்துசாமிக்கு மனச்சங்கடம் அதிகமாயிற்று. 'இதென்ன இப்படிச் சங்கடத்துல விட்டுட்டானே இந்த வீராசாமி' அவ்வப்போது அங்கலாய்க்கத் தவறுவதில்லை.

இடையில் மகன் வேறு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டான்.

Representational Image
Representational Image

'கோழியால கொரோனா பரவும்னு பேசிக்கிறாங்கப்பா... வெளியில விடாம அடச்சுப் போட்டு வைங்க' என்று பரபரப்பாக வந்து சொன்னதோடு அவற்றைப் பிடித்து அடைத்து வைக்கவும் செய்தான்.

பிறகு, அக்கம் பக்கம் விசாரிச்சு வந்ததில் 'கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் விக்கிற கடைகளைத்தான் அடைக்கச் சொல்லுறாங்க... கோழியால கொரோனா எல்லாம் பரவாதுன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லி அவனே அவற்றைத் திறந்து விட்டான்.

இப்படிக் கோழிகள் அவர்களுடன் ஒன்றிப்போனது.

பிறிதொரு நாளில் அக்கிராமத்துக்கு கால்நடை டாக்டர்கள் மாடு ஆடுகளுக்கு ஏதேனும் தொற்றுகள் இருக்கிறதா என்ற ஆய்வுக்கு வந்தபோது முத்துசாமியும் கோழிகளைக் கொண்டு போய்க் காட்டி தடுப்பூசி போட்டு வந்தான்.

"கோழிகளுக்கு நல்ல ஊட்டம் தரணும்... இந்தக் கோடையில தீனி கிடைக்காது. அதனால தானியம் தண்ணினு நெறையத் தரணும்."

டாக்டர்கள் கூறிச்சென்றது வேறு மனதை உறுத்தியது.

"இதுங்களுக்கு நல்ல தீனி கொடுக்க முடியல. கிளறித் திங்கறதுக்கும் தரையில ஈரம் இல்ல... ஒரு சேவல் இருந்தாச்சும் கருக்கட்டிக்கும். முட்டையப் போடும்.. அடைவச்சுப் பெருக்கி விடலாம்னு பாத்தா அதுக்கும் வழியில்ல…" மனைவியிடம் புலம்பித் தவித்தான் முத்துசாமி.

ஒருகட்டத்தில் கோழிகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்ற நிலையும் வந்தது. வேறு வழி தெரியாமல் கோழிகளை விற்கலாம் என்று முடிவானது. மகனுடன் முத்துசாமியும் கோழிகளுடன் டவுனுக்குச் சென்றான். ஆனால், கிராமத்தில் இருந்து கொண்டுவந்த கோழிகள் என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை.

Representational Image
Representational Image

"உறிச்ச கோழி அல்லது சிக்கனா இருந்தா வாங்கிக்கலாம்... அதுவும் கவர்மென்டு தடையிருக்குற நேரம்

இது.. .தேவையில்லாம இப்படிக் கோழியெல்லாம் விக்கிறது தெரிஞ்சா போலீசே பிடிச்சிட்டுப் போயிருவாங்க… பத்திரமா போய்ச்சேருங்க" என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். அந்த முயற்சியும் பலனின்றிப் போனது.

" வேற வழியில்ல … சமைச்சுப் போட்டுரு" என்று அரை மனதுடன் ஒரு முடிவுக்கு வந்தான் முத்துசாமி. மறுநாள் ஒரு கோழியைச் சமைத்துவிட ஏற்பாடாகியது.

உள்ளூரில் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் டவுனில் இருந்து மசால் சாமான்கள் வாங்கி வருவதாக முத்துசாமியின் மகன் சொல்லியிருந்தான்.

ன்று முழுவதும் அவன் மனைவிக்கு எதுவும் ஓடவில்லை.

எதையோ பறிகொடுத்தவள்போல் வளைய வந்தாள்.

"முத்துசாமி …." யாரோ வாசலில் அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்தார்கள். உள்ளூர் மாரியம்மன் கோவில் பூசாரி நின்றிருந்தார். அவர் கையில் ஒரு சேவல் இருந்தது.

"சாமி... வாங்க வாங்க... உள்ளாற வாங்க..."

"இருக்கட்டும் முத்துசாமி நீ ஒரு ஒபகாரம் பண்ணணும்ப்பா."

சொல்லுங்க சாமி... என்ன செய்யணும்."

Representational Image
Representational Image
Pixabay

"ஒண்ணுமில்லப்பா, இந்தச் சாவல கோயிலுக்கு நேந்து விட்டிருக்கு... அது பாட்டுக்கு கோயிலைச் சுத்திக்கிட்டுத் திரிஞ்சிச்சு. இந்தக் குரோனா வந்திச்சில்ல… கோயிலைத் திறக்க முடியாது. ஒரு நேரம் பூசை செஞ்சிட்டு மூடிருவேன்... கோயிலுக்கு யாரும் வரக்கூடாதில்ல. ஆனா, இந்தச் சாவ என்ன பண்ணும் வச்சிப் பார்த்துக்க யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்தப்பதான் ஓ நினைப்பு வந்திச்சு... இங்கனைக்குள்ள நீ தானே கோழி வளர்க்குற... நீயே இதையும் பார்த்துக்க... கொரோனா எல்லாம் முடிஞ்சி கோயிலு தெறந்தப்புறம் கொண்டு விட்டுரு... பார்த்துக்கிறியா..."

"என்ன சாமி நீங்க சொல்லி நான் மாட்டேன்னு சொல்லுவனா...

பார்த்துக்கிறேன். விட்டுட்டுப் போங்க."

"அப்புறம் முத்துசாமி... எங்கூட கோயில் வரை வாரியா... ஒரு மூட்டை உமியும் தவிடும் குருணையும் கிடக்குது... எடுத்துக்க."

முத்துசாமியின் மனைவியின் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியின் காரணத்தை அறிந்திராத பூசாரி முத்துசாமியுடன் நடக்கத் தொடங்கினார்..!

- கமலநாபன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு