Published:Updated:

`மகளின் சமோசா ஆசையும் 200 ரூபாய் போராட்டமும்!' - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

செல்விக்கு பேசலாமென நம்பரைப் போட்டு போனை காதில் வைத்தவன் அதிர்ச்சியடைந்தான். நான்கு நாட்களுக்கு முன்புதான் 50 ரூபாய்க்கு டாப்-அப் செய்திருந்தான். அதற்குள் காலியாகியிருந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கான்ட்ராக்டர் சண்முகத்தின் வீட்டு வாசலில் நின்றிருந்த ஆறுமுகம், அரைமணி நேரமாக வீட்டுக்குள் சண்முகத்தின் தலை தெரிகிறதா என எட்டிப் பார்ப்பதும் பிறகு ஏமாற்றத்தோடு தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதுமாக நின்றிருந்தான்.

வேகமாக வெளியே வந்த சண்முகத்தின் மனைவி, ”அவர் குளிச்சிட்டு வர்றவரைக்கும் சும்மாதானே நின்னுகிட்டிருப்பே... தெருமுனைல இருக்கிற சபரி ஸ்டோர்ல போய் 10 முட்டை வாங்கிட்டு வா...” என்று காசையும் பையையும் ஆறுமுகத்திடம் கொடுத்துவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

சண்முகத்தின் மனைவி இந்த அரைமணி நேரத்திற்குள், ஆறுமுகத்திற்கு கொடுத்த ஐந்தாவது வேலை இது... ஆறுமுகம் ஒன்றுமே பதில் சொல்லாமல் முட்டைகளை வாங்கிவந்து கொடுத்துவிட்டு, பழையபடி சண்முகத்தின் தலை தெரிகிறதா என்று எட்டிப்பார்க்க ஆரம்பித்தான். எல்லாம் வெறும் 500 ரூபாய் பணத்துக்காகத்தான்.

மணி 5 ஆகிவிட்டது. சீக்கிரம் வீட்டுக்குப் போயாக வேண்டும், குழந்தைகள் அவனுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

காலையில் கிளம்பும்போது, வாசல்வரை வந்து சைக்கிளைப் பிடித்துக்கொண்டே ”இன்னிக்காச்சும் தீனி வாங்கிட்டு வர்றியாப்பா... ஏதாச்சும் சாப்புடணும்னு ஆசையா இருக்குதுப்பா” என்று இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன் சுப்பு ஏக்கத்தோடு கேட்டதும், “அப்பா... எனக்கு சமோசாதான் வேணும்” என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் செல்வி ஆசையாகக் கேட்டதும் அவனுக்கு நினைவில் ஓடியது.

பாவம் குழந்தைகள், பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எந்நேரமும் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு வாய்க்கு ஏதாவது வித்தியாசமாக சாப்பிடத் தோன்றுகிறது. ஒரு வாரமாகவே தினமும் இப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆறுமுகத்தால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இன்று எப்படியாவது குழந்தைகளை திருப்திப்படுத்திவிட வேண்டும் என்று முடிவெடுத்துதான் பணத்துக்காக சண்முகத்தைத் தேடி வந்திருக்கிறான். அதோடு, வீட்டுச்செலவுக்கு கமலா கையில் 200 ரூபாயாவது கொடுக்க வேண்டும். இரண்டு நாட்களாக வெறும் ரேஷன் அரிசிக் கஞ்சியும் வீட்டுக்கெதிரே அங்காங்கே முளைத்திருக்கும் கீரைகளைப் பறித்து துவையலும் பண்ணி எப்படியோ ஒப்பேத்திக்கொண்டிருக்கிறாள்.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆறுமுகத்திற்கும் கமலாவுக்கும் மூன்று மாதமாகவே வேலையில்லை. பில்டிங் ஓனர் பணப் பற்றாக்குறையின் காரணமாக சண்முகத்திற்குத் தர வேண்டிய தொகையை சரிவர கொடுக்காததால், சண்முகம் கட்டட வேலையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து, கொரோனா ஊரடங்கு வேறு வந்துவிட்டது. மூன்றாண்டுகளுக்கு முன்பு சண்முகத்தை நம்பி சேலத்திலிருந்து சென்னைக்கு குடும்பத்தோடு வந்த ஆறுமுகத்தின் கதி இப்போது நிற்கதியாகிவிட்டது. அவ்வப்போது அடிப்படைச் செலவுக்கு ஆறுமுகம் இப்படி திடீரென்று வந்து நிற்பான். சலித்துக்கொண்டே சண்முகம் அரையும் குறையுமாகக் கொடுத்தனுப்புவார்.

யோசித்தவாறே நின்றுகொண்டிருந்த ஆறுமுகம், மீண்டும் எட்டிப் பார்க்க, சண்முகம் வெள்ளைச் சட்டையில் பளீரென வெளியே வந்தார். தன்னைப் பார்த்ததும் புன்னகைத்தவாறே கும்பிடு போட்ட ஆறுமுகத்தைப் பார்த்து, ”என்ன ஆறுமுகம்... வேலை எப்பன்னு தானே கேக்க வந்தே... அடுத்த வாரத்துல ஆரம்பிச்சிறலாம்... ஒண்ணும் கவலப்பட வேண்டாம்” என்று சிரித்தார்.

தயங்கியவாறே ஆறுமுகம், “அதுக்கில்லீங்க... அவசரமா கொஞ்சம் பணம் வேணும்... அதான் உங்களப் பாத்துட்டுப் போலாம்னு...” என்று தலையைச் சொறிய, சண்முகத்திற்கு முகம் மாறியது.

“என்ன ஆறுமுகம், நான் மட்டும் பணத்த அச்சா அடிக்கிறேன், நீ வந்து கேக்கறப்பல்லாம் எடுத்துக் குடுக்கறதுக்கு... எனக்கும் வேலைய ஆரம்பிச்சாத்தான் பணம் கைக்கு வரும்... போய் எப்புடியாவது சமாளி... அடுத்த வாரத்துல வேலை ஆரம்பிச்சுடும், பாத்துக்கலாம்...” என்று கூற, ஆறுமுகம் பிரச்னைகளை வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல் தவித்தபடி நிற்க, “ஏங்க, மத்தியானத்துலருந்து நீங்க சாப்புடவே இல்ல... உடம்பு என்னத்துக்காகும்... முட்டப் பொரியல் ஆறிகிட்டிருக்கு, மொதல்ல வந்து சாப்புடுங்க...” என உள்ளே இருந்து சண்முகத்தின் மனைவி குரல் கேட்டது.

Representational Image
Representational Image

சண்முகம் உள்ளே திரும்பி நடக்க ஆரம்பிக்க, ஆறுமுகம் நகர முடியாமல் அங்கேயே நின்றான். அவனது பழைய மாடல் பட்டன் செல்போன் முழுதாய் ஒலித்து அடங்கியது. எடுத்துப் பேச மனமில்லாமல் அப்படியே நின்றான்.

வீட்டுக்குள் சென்று திரும்பிப் பார்த்த சண்முகம் மீண்டும் வெளியே வந்து, “சரி எவ்வளவு வேணும்?” என்று கேட்க, அப்போதுதான் ஆறுமுகத்திற்கு உயிர் வந்தது.

“ஐநூறுவா வேணுங்க...” என்று சண்முகத்தையே ஆர்வமாகப் பார்த்தான்.

“நீ ஏற்கெனவே இப்பிடி நிறைய வாங்கிருக்க ஆறுமுகம், அதுக்கெல்லாம் கணக்கும் இல்ல ஒண்ணுமில்ல... இந்தா, இருநூறுவா வச்சுக்க... சமாளி” என்று கூறி இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை ஆறுமுகத்தின் கையில் திணித்துவிட்டு மீண்டும் உள்ளே திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

வெளியே வந்து காம்பவுண்டு சுவர்மீது சாய்த்துவைத்திருந்த சைக்கிளை எடுத்த ஆறுமுகம், போனை எடுத்துப் பார்த்தான். அவன் நினைத்தபடியே வீட்டிலிருந்துதான் போன் வந்திருந்தது. மகள் செல்விதான் பண்ணியிருந்தாள். ஆறுமுகத்தின் வருகைக்காக எதிர்பார்த்து எதிர்பார்த்து சலித்துப்போய் போன் பண்ணியிருப்பாள்.

செல்விக்குப் பேசலாமென நம்பரைப் போட்டு போனை காதில் வைத்தவன் அதிர்ச்சியடைந்தான். நான்கு நாட்களுக்கு முன்புதான் 50 ரூபாய்க்கு டாப்அப் செய்திருந்தான். அதற்குள் காலியாகியிருந்தது. எதிரிலேயே ரீசார்ஜ் கடை இருந்தது. ஆனாலும் கையில் உள்ள காசைக் கரைக்க வேண்டாமென முடிவெடுத்து சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

Representational Image
Representational Image

வயிறு கபகபவெனெ எரிந்தது. காலையில் கிளம்பும்போது இரண்டு டம்ளர் கஞ்சி குடித்ததோடு சரி, 10ரூபாய்க்கு இரண்டு மோர் பாக்கெட் வாங்கி வாயில் ஊற்றிக் கொண்டால் கொஞ்சம் எரிச்சல் தணியும். ஆனாலும் அந்த இருநூறுரூபாயை முறிக்க மனமில்லாமல் சைக்கிளை அழுத்தினான். இங்கிருந்து வீட்டுக்கு எட்டுக் கிலோமீட்டர். அரை மணி நேரத்தில் போய்விடலாம்.

போகிற வழியில் வளசரவாக்கம் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் உள்ள தள்ளுவண்டிக் கடையில் இந்நேரம் சூடாக சமோசா போட்டுக் கொண்டிருப்பார்கள். சுட்டுவைத்த சமோசா குவியல் மீது ஐந்தாறு பச்சைமிளகாயை அங்காங்கே போட்டுவைத்து, நடுவில் சின்னதாக கறிவேப்பிலைக் கொத்து ஒன்றைச் சொருகி வைத்திருப்பார்கள். பார்க்கவே அழகாக இருக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும்.

செல்வி சமோசா பிரியை. எப்படியும் அவளுக்கு நான்கு தேவைப்படும். சுப்புக்கு மூன்று. ஆறுமுகத்திற்கும் கமலாவுக்கும் ஆளுக்கு இரண்டு என்று வைத்தால்கூட மொத்தம் பதினோரு சமோசா வாங்க வேண்டும். பக்கத்தில் புதிதாகக் குடி வந்திருப்போர் வீட்டில் இலக்கியா என்று நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. எந்நேரமும் அவள் சுப்பு கூடவேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுக்கும் சேர்த்து வாங்க வேண்டும். சரி, மொத்தம் பதினைந்து சமோசா வாங்கிக் கொள்ளலாம். மீதியிருக்கும் பணத்தை கமலாவிடம் கொடுத்துவிட்டு வழக்கம்போல ஒப்பேற்றச் சொல்ல வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டே சைக்கிளை மிதித்தான்.

Representational Image
Representational Image
Pixabay

திடீரென்று ’கடக்’ என ஒரு சத்தம் கேட்டது. தடுமாறிய ஆறுமுகம் சைக்கிளை குனிந்து பார்க்க, செயின் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. ’கடவுளே’ என்று ஒரு கணம் வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிட்டான். அருகில் எந்த சைக்கிள் கடையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு ஆட்டோக்காரரிடம் விசாரித்தான். அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சைக்கிள் கடை இருப்பதாகச் சொன்னார். வேறுவழியின்றி வியர்த்து விறுவிறுக்க சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தான்.

கடை முன்னே சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்த இளைஞனிடம், “தம்பி... செயின் கட்டாயிருச்சு... கொஞ்சம் ஜாயின்ட் பண்ணி குடுக்கறியா?” என்றான் ஆறுமுகம்.

ஆர்வமே இல்லாமல் வந்து பார்த்த இளைஞன், ”செயின் ரொம்பத் தேஞ்சு போச்சு ஜாய்ன்ட் பண்ணாலும் நிக்காது. வேற செயின் மாத்திக்குங்க... நூத்தி இருபதுரூபா ஆகும்” என்றான்.

நூற்றி இருபது ரூபாயை இவனிடம் கொடுத்துவிட்டு மீதியுள்ள காசை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணிய ஆறுமுகம் மீண்டும் சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தான். அவன் பாக்கெட்டில் இருக்கும் ஒரு இருநூறு ரூபாய் நோட்டை அபகரிக்க வழியில் எத்தனை எத்தனை பிரச்னைகள் வருகின்றன.

ஒருவாறாக சமோசா கடைக்கு வந்து சேர்ந்தபோதுதான் ஆறுமுகத்திற்கு நிம்மதி வந்தது. உடல்சோர்வு மனச்சோர்வு இரண்டும் சேர்ந்து அடித்துப் போட்டதுபோல் உடம்பு வலித்தது. நல்லவேளை கடையில் சமோசா தீர்ந்திருக்கவில்லை. கணக்குப் போட்டது போலவே பதினைந்து சமோசா பார்சல் கட்டச் சொன்னான்.

கடைக்காரப்பெண் பார்சலைக் கட்டிக் கொடுத்துவிட்டு 75 ரூபாய் கேட்டாள். ஆறுமுகம் 200 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியதும், “சில்றை இல்லியா? இருந்த சில்றை எல்லாம் பொறுக்கி இப்பத்தான் தண்டல்காரருக்கு தூக்கிக் குடுத்தேன். கொஞ்சம் கோவிச்சுக்காம எதிர்ல இருக்கிற டாஸ்மாக்ல போய் சில்றை வாங்கிட்டு வந்துடேன்...” என்றாள்.

ஆறுமுகத்திற்கு ’திக்’கென்று இருந்தது. அவன் நான்ஸ்டாப் குடிகாரனாக இருந்த காலம் ஒன்று உண்டு. கமலாவை கல்யாணம் செய்ததிலிருந்து வாரத்தில் இரண்டுநாள் மட்டும் குடிப்பது என்று முடிவெடுத்து அவ்வாறே கட்டுப்பாடாக இருந்தும் வருகிறான். ஆனால் வேலையில்லாத இந்த மூன்று மாதமும் அவன் டாஸ்மாக் பக்கமே வந்ததில்லை. மதுவின் வாடை காற்றுவாக்கில் அவன் நாசியைக் கடந்து போனால்கூட நிதானம் இழந்துவிடுவான். எப்பாடுபட்டேனும் அன்று குடித்தே தீரவேண்டும் என்கிற வெறி அவனுக்குள் தாண்டவமாட ஆரம்பித்துவிடும்.

Representational Image
Representational Image

“யோசிக்காதப்பா... அடுப்புல பலகாரத்த விட்டுட்டு நான் போகமுடியுமா, சொல்லு... இல்லன்னா சில்றை சேர்ற வரைக்கும் கொஞ்சநேரம் நில்லு... எனக்கொன்னும் இல்ல...” என்று கடைக்காரப்பெண் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

கடையில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் யாரிடமும் ஆறுமுகத்திற்கான 125 ரூபாய் சில்லறை இருப்பதாகத் தோன்றவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் காத்துக்கொண்டிருப்பார்கள்.

யோசித்துப் பார்த்த ஆறுமுகம் டாஸ்மாக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டாஸ்மாக்கில் கூட்டம் நெருக்கிக்கொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமையானதால் வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டிருந்தது.

முண்டியடித்துக் கொண்டு பாட்டிலை வாங்கிச் சென்ற ஒவ்வொருவரையும் ஆறுமுகம் பரிதாபமாகப் பார்த்தான். எச்சரிக்கையாக கர்ச்சீப்பால் மூக்கைப் பொத்திக்கொண்டு கவுண்டரில் இருநூறுரூபாய் நோட்டை நீட்டினான். சில்லறை வேண்டும் என்று ஆறுமுகம் சொல்வதற்குள் படக்கென நோட்டை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்ட கடை சிப்பந்தி, “என்ன வேணும்...” என்றார். பிறகு வரிசையாக நான்கைந்து பிராண்ட் பேர்களைச் சொல்லிவிட்டு “இதுதான் இருக்கு, டக்குனு சொல்லு" என்று பரபரத்தார். ஆறுமுகம் “சில்றை” என்று வாயெடுப்பதற்குள் மீண்டும் அடுத்த ஆளிடம் பணத்தை வாங்கிப் போட்டு விட்டு அவனைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

Representational Image
Representational Image

கர்ச்சீப்பையும் மீறி மதுவின் மணம் ஆறுமுகத்தை வீழ்த்தப் பார்த்தது. நிலைதடுமாறியவன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகவும் போராடினான். கடைசியில் அவன் கண் முன்னால் ஒரு கணம் சுப்புவும் செல்வியும் கமலாவும் வந்து போனார்கள். இந்நேரம் ஒரு இருபது தடவையாவது சுப்பு, ‘அப்பா எப்பம்மா வருவாரு’ என்று கமலாவிடம் கேட்டிருப்பான். செல்வி வாசலிலேயே அப்பாவின் வருகைக்காக உட்கார்ந்திருப்பாள்.

ஒரு முடிவுக்கு வந்த ஆறுமுகம் மனதை திடப்படுத்திக்கொண்டு, “அண்ணே... இருநூறுபா குடுத்தனே.. அதுக்கு கொஞ்சம் சில்றை குடுங்கண்ணே...” என்றான். கடை சிப்பந்தி சடக்கென திரும்பி அவனை முறைத்துவிட்டு, ”சில்றை கேக்கற நேரமா இது...” என்று சலித்துக்கொண்டே நோட்டை எண்ணிக் கொடுத்தார்.

உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகுதான் ஆறுமுகத்துக்கு மூச்சே வந்தது. தப்பித்தோம் என்ற வெற்றிப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது. பொதுவாக அடுத்தவனை வெற்றி கொள்ளும்போதுகூட ஒரு மனிதனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. தன்னைத்தானே வெற்றி கொள்ளும்போது கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கிறதே, அது மிகவும் அலாதியானது. சுயமரியாதை சுடர்விடும் தருணம் அது.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆறுமுகம் கம்பீரமாக நடந்து வந்து கடைக்காரப் பெண்ணிடம் தனக்கான பார்சலை வாங்கிக்கொண்டு சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தான். குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை உடனிருந்து பார்த்து எத்தனையோ நாட்களாயிற்று என்று எண்ணியபோது அவன் கண்களில் நீர் துளிர்த்தது. அப்போது எங்கிருந்தோ வீசிய தென்றல் அவன் முகத்தில் இதமாக மோதிச்சென்றது. அதன் குளுமையில் ஆறுமுகம் முகம் மலர்ந்த அதேவேளை, அவனுக்கு அப்படி ஒரு ஆபத்து வந்து சேரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. டாஸ்மாக் அருகே இருந்த பாரில் தண்ணியடித்துவிட்டு படுவேகத்தில் பைக்கை கிளப்பி வந்த ஒருவன் ஆறுமுகத்தின் மீது மூர்க்கமாக மோதிச் செல்ல, ஆறுமுகம் சைக்கிளோடு தூக்கி எறியப்பட்டு தார் ரோட்டில் விழுந்தான்.

அவன் தலையிலிருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேற ஆரம்பித்தது. ஆட்கள் படபடவென கூடி ஆறுமுகத்தை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயற்சிக்க, அதற்குள் அவனது உயிர் பிரிந்திருந்தது. எல்லாம் அரை நிமிடத்திற்குள்ளாக நடந்து முடிந்தன.

பாவம், ஆறுமுகத்தின் கண்களில் மின்னிக்கொண்டிருந்த கனவுகள் எல்லாம் காற்றில் உலர்ந்து போயின. எத்தனையோ பிரச்னைகளிலிருந்து ஒரு இருநூறு ரூபாய் நோட்டை காப்பாற்ற முடிந்த அவனால் விலைமதிக்க முடியாத தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது. குழந்தைகளுக்கென்று அவன் அரும்பாடுபட்டு ஆசை ஆசையாய் வாங்கிய சமோசாக்கள் அவனது கனவைப் போலவே ரோட்டில் சிதறிக் கிடந்தன.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆறுமுகம் கடைசிவரை தன்னையும் தன் குடும்பத்தையும் சரியாகவே புரிந்துவைத்திருந்தான். அவன் எண்ணியது போலவே செல்வி வாசலில் உட்கார்ந்துகொண்டு சமோசாவுடன் வரும் ஆறுமுகத்தின் தலை தெரிகிறதா எனப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’அப்பா எப்பம்மா வருவாரு’’ எனக் கேட்ட சுப்புவிடம், “சும்மா நச்சரிக்காம அந்தப் பக்கம் போ... அஞ்சு நிமிசத்துக்கொரு தடவை வந்து வந்து, அப்பா அப்பான்னு கேட்டுகிட்டு...” என்று கமலா கடிந்து கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுச் சிறுமி இலக்கியா ஓடிவந்து சுப்புவை சீண்டிச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் ஆறுமுகம் சரியாகத்தான் புரிந்து வைத்திருந்தான். ஆனால் இந்தச் சமூகம் யாருக்கானது என்பதை மட்டும் அவன் கடைசிவரை புரிந்துகொள்ளவேயில்லை.

- ந.அன்பரசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு