Published:Updated:

தன்மானம்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

ஊரடங்கு, அவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலை வேளையில் அந்த வீடு வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் ஏதுமற்று அமைதியாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவனான அவன் ஒரு கூலித் தொழிலாளி. தினமும் வேலைக்குச் சென்றால் மட்டுமே உணவு எனும் சூழல். அவனது வீட்டில் மனைவி, இரு குழந்தைகள் என நான்கு பேர் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு, அவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது.

கையிலிருந்த சொற்ப பணம், அரசாங்கம் ரேஷன் கடை மூலம் கொடுத்த உணவுப்பொருள்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கின் முதல் பத்து நாள்கள் சிரமம் இல்லாமல்தான் கழிந்தன.

Representational Image
Representational Image

ஆனால், நாள்கள் செல்லச்செல்ல குடும்பத்தை ஓட்டுவது அவனுக்கு சற்று சிரமமாக இருக்கிறது. அவனின் முதலாளியிடம் சென்று முன்பணம் கேட்டும், நூறு ரூபாயைத் தவிர பெரிதாக ஏதும் தேறவில்லை. முதலாளியைக் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர் ஒரு சிறிய முதலாளி. அன்றாடங் காய்ச்சி.

இந்த மாதம் வாடகை வேண்டாம் என வீட்டு உரிமையாளர் கூறிவிட்டார். எனவே, வாடகை பற்றிய கவலை இல்லை. கரன்ட் பில் தற்போதைக்கு கட்டப் போவதில்லை.

ஆனால், உணவுக்குத்தான் பெரும் சிக்கலாக இருக்கிறது.

பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று நாள்களாக தினமும் ஒருவேளை உணவு மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. அந்த ஒருவேளை உணவை மதியம் 12 மணியளவில் அவர்கள் உண்கின்றனர்.

ஐஸ்கிரீம், சாக்லேட் என குழந்தைகள் கேட்டால் அவை உடலுக்கு கெடுதல் எனக் கூறி வாங்கிக் கொடுக்க மறுக்கலாம்.

ஆனால், அவ்வப்போது சாப்பாடு கேட்டு பசியில் அழும் குழந்தைகளுக்கு என்ன கூறி சமாதானம் செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால், இந்த ஒருவேளை உணவும் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

இதுபோன்ற கொடுமையான நிலைமை தனக்கு வரும் என அவன் கற்பனை கூட செய்ததில்லை.

Representational Image
Representational Image

அவனது வீதியிலும் பக்கத்து வீடுகளிலும் உள்ளோருக்கும் அவர்களைப் போன்ற நிலைமைதான். ஆனால், அவர்களெல்லாம் இவர்கள் கொடுத்தார்கள், அவர்கள் கொடுத்தார்கள் என்று அவ்வப்போது அருகில் மைதானத்திலிருந்து உணவு பொட்டலங்களை வாங்கி வருவதை அவன் பார்த்திருக்கிறான். தான் ஏழைதானே தவிர பிச்சைக்காரன் இல்லை என்பதில் அவனுக்கு எந்தவிதக் குழப்பமும் இல்லை.

எனவே, பிறரிடம் கையேந்தி உணவைப் பெற அவனுடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மைதானத்தில் ஏதோ ஒரு குழுவினர் அசைவ உணவு கொடுப்பதாக அவ்வீதியில் தகவல் பரவியது. வீட்டுக்கு ஒருவர் என உணவுப் பொட்டலங்களை வாங்க அந்த வீதி மக்கள் ஆர்வத்துடன் செல்ல ஆரம்பித்தனர்.

கணவனும் மனைவியும் வாசலில் அமர்ந்து மக்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அவன் மனைவியின் பார்வையில் இருந்த இறைஞ்சுதல் அவனை அமர விடாமல் செய்தது. வேறு வழியின்றி அவனும் சட்டையை மாட்டிக்கொண்டு மைதானத்துக்குக் கிளம்பினான்.

சிறிது நேரத்தில் அவனுக்குப் பின்னால் சென்றவர்கள் கூட உணவுப் பொட்டலங்களை வாங்கி வருவதை அவனின் மனைவி கண்டாள். ஆனால், அவனை இன்னும் காணவில்லை. அவனை எதிர்நோக்கி வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்தவாறு ஆவலுடன் காத்திருந்தாள்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தன் குழந்தைகள் வயிராற உணவு உண்ணப் போகின்றனர் என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது.

Representational Image
Representational Image

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெறுங்கையுடனும், சோகமான முகத்துடனும் அவன் வீட்டுக்குத் திரும்பினான். அவனின் மனைவி ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தவாறு, ``உங்களுக்குப் பின்னாடி போனவங்க எல்லாம் சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டாங்க! ஏன் நீங்க வாங்கலையா?" என்று ஏமாற்றத்துடன் கேட்டாள்.

அதற்கு அவன் ``சாப்பாடு கொடுக்கும் இடத்தில் போட்டோ எடுக்கிறார்கள்" என்றபடி இயலாமையுடன் வீட்டுக்குள் சென்றான்!

பெருமிதத்துடன் அவனையே பார்த்தபடி

கண்கலங்க நின்றாள் மனைவி!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு