Published:Updated:

மினி பஸ்..! - லாக்டெளன் குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Vishva Navanjana from Pixabay )

வண்டி ஒரு குறுகலான வளைவில் திரும்பியது. பெரியவர் ஒருவர் இரண்டு கைகளிலும் பைகளை வைத்துக்கொண்டு வண்டியை மறித்தார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரை மணி நேரக் காத்திருப்புக்குப்பின் மினி பஸ் மெல்ல கிளம்பியது. கூட்டத் தள்ளுமுள்ளுக்குள் சக்கையாய் பிழியப்பட்டிருந்தேன் நான். பட்டணம் சென்று திரும்பும் எனக்குள் டன்டன்னாக அலுப்பு அப்பிக் கிடந்தது. போனக் காரியம் நடக்கவில்லை. அதுவே மிகவும் சோர்வூட்டியது. உடன் படித்த சக மாணவர்கள் ஊரில் கிடைத்த சிறுசிறு வேலையில் தேங்கிவிட்டனர். நான் மேலே படிக்கவும், அப்படியே வேலையில் அமரும் எண்ணத்தில் பட்டணம் சென்றவன். வெறுங்கையுடன் வரும் எனக்குள் குடும்பத்தார் முகத்தில் விழிக்கக் கூச்சமாக இருக்கிறது.

பட்டணத்திலிருந்து டவுன் வந்ததும் ரொம்ப நேரம் காத்திருப்புக்குப் பின் இந்த மினி பஸ் வந்தது. இங்கு இன்னும் பஸ் வசதி நடைமுறைப்படுத்தவில்லை. கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளனர். பரவல் அதிகம் உள்ள பட்டணத்தில் அனைத்து வாகனமும் ஓடுகிறது. தொற்று அறவே இல்லாத ஊரில் எந்த வாகன வசதியும் இல்லை. அன்றாடம் மக்கள்படும் அவதி, துயரம் அவர்கள்விடும் பெருமூச்சில் தெரிந்தது.

Representational Image
Representational Image

வண்டி ஒரு குறுகலான வளைவில் திரும்பியது. பெரியவர் ஒருவர் இரண்டு கைகளிலும் பைகளை வைத்துக்கொண்டு வண்டியை மறித்தார். பசுவைக்கண்ட கன்றுபோல் அவர் அருகே பவ்வியமாக நின்றது மினி பஸ்.

"ஏய்யா... அடுத்த வண்டிக்கு வரவேண்டியது தானே... உள்ளவங்களுக்கே நிற்க இடமில்ல, இதுல இவர் லக்கேஜ் உடன் ஏறுராரு."

"அய்யா மன்னிச்சுக்கோங்க. ரொம்ப நேரம் காத்துக் கிடந்தேன். ஒரு வண்டியும் போகல. கால் கடுக்குது. ஏறிக்கிறேன்."

ஐந்துபேர் இறங்கி அவரை ஏற்றி விட்டனர். அவர்கள் ஏறிக்கொண்டதும் வண்டி நகர்ந்தது. ஒத்த கை பேலன்ஸில், ஒன்றைக்காலில் நின்றுக்கொண்டிருந்த என்னருகே அவர் வந்ததும், பைகளைத் தொப்பென என் கால்மேல் போட்டார். பாரம் தாங்காமல் உதரினேன். ஒன்னு இரண்டு அழுக்குத் துணி சிதறியது.

"கோச்சிக்காத தம்பி" என்றவர், குனிந்து அதனைச் சரிசெய்துவிட்டு, அவரது பாக்கெட்டுக்குள் கைவிட்டு கொத்தாக பணம் எடுத்தார்.

"தம்பி நான் கொஞ்சம் குடிச்சிருக்கேன். தப்பா நினைச்சுக்காதே. இதுல டிக்கெட்டுக்கு மட்டும் பணம் எடுத்துக்கிட்டு, ஒன்னு வாங்கிக் கொடு" என்றார்.

ஐநூறு, நூறு, ஐம்பது, இருபது, பத்து என மொத்தமும் கசங்கிப் பிரசங்கி சுருண்டு இருந்தது. பட்டும் படாமல் பத்து ரூபாய் எடுத்து டிக்கெட் வாங்கிக் கொடுத்தேன்.

"ஏன் பெரியவரே இப்படிக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கனுமா" எனக் கேட்டேன்.

"தம்பி நான் மூட்டை தூக்கிறவன். டவுன்ல ஒரு வாரம் தங்கி, இராப்பகலா கிடைக்கிற வேலை எல்லாம் பார்த்தேன். அலுப்பு தீரக் கொஞ்சம் குடிச்சேன். அதுமட்டும் இல்ல தம்பி, ஒருவாரம் கழிச்சி மனைவி மக்களைப் பார்க்கப் போறேன்லே அந்த சந்தோஷம். இன்ன ஒன்னும் இருக்கு தம்பி. நான் படுற கஷ்டத்தை அவுங்க கண்டுபிடிச்சிட கூடாது பாருங்க. கொஞ்சம் போட்டுட்டுப் போனா எதுவும் தெரியாது பாருங்க. எல்லாம் அவுங்கள சந்தோசப்படுத்த தானே, தப்பில்லையே" என்றவரை திரும்பி பார்த்தேன், இருக்கையில் அமர்ந்திருந்தார். அதன்பின் என் மனதைவிட்டு அவர் இறங்கவேவில்லை.

-மம்சை செல்வக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு