Published:Updated:

வாரிசு! - சிறுகதை

என்னதான் அள்ளி அள்ளி போட்டு வீட்டில் செய்தாலும் கிடைக்காத சுவை எப்படி பகவானுக்கு கோவில் மடப்பள்ளியில் தயாராகும் இந்த நைவேத்திய பிரசாத்துக்கு மட்டும் வந்து விடுகிறது?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மகா சிவராத்திரி காலை சந்திர மௌலீஸ்வரர் கோவில்


மடப்பள்ளியிலிருந்து வந்த தளிகை மனம் கோவில் பூராவும் பரவி கிடந்தது. பச்சை கற்பூரம் சுக்கு ஏலக்காய் கலந்த அக்கார அடிசில் மற்றும் மிளகு போட்ட நெய் பொங்கலின் மனம் நாசியை துளைத்துக் கொண்டிருந்தது. கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் விரதத்தை முடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிரசாத மனம் அவர்கள் வயிற்றிலிருந்த பசியை அதிகமாக்கி கொண்டிருந்தது. இல்லையா பின்னே இன்றைய கட்டளையை சுந்தரம் பிள்ளையின் குடும்பத்தினுடையது அல்லவா. வருட வருடம் தவறாமல் இந்த மகா சிவராத்திரி விழாவுக்கு வரும் ஜனங்களுக்கு சிவ பெருமானின் ஆசியுடன் வயிறார கிடைக்கும் இந்த கோவிலின் பிரசாதமும் ரொம்பவே ஸ்பெஷல். என்ன நடந்தாலும் எந்த குறையுமில்லாமல் அதே ஜபர்தஸ்துடன் இந்த கைங்கர்யம் தொடர்ந்து கொண்டிருந்தது சந்திர மௌலீஸ்வரரின் அருளா அல்லது பிள்ளை அவர்களின் முன்னோர்கள் செய்த புண்ணியமோ எதோ ஒன்று நிச்சயமாக காரணமாக இருக்க கூடும்.

விஸ்வநாத குருக்கள் மடப்பள்ளியிலிருந்து வந்த இரண்டு பெரிய பித்தளை வாளியில் வாழை இலை போட்டு மூடியிருந்த அடிசிலையும் நெய் மிளகு பொங்கலையும் சுவாமிக்கு முன்பு வைத்து,

பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் பிரம்மாக்னோ பிரம்மனாகுதம் பிரம்மைவதேன கந்தவ்யம் பிரம்ம கர்ம சமாதினா என்று உச்சாடனம் செய்தார்.


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

என்ற திருவாசகத்தை ஓதுவார்கள் கணீரென்று பாட

பிரசாதத்தின் மேல் நீர் தெளித்து நைவேத்தியத்தை முடித்தார். இரண்டு பித்தளை வாளியின் மேலிருந்த வாழை இலையை சற்றே திறந்து பகவானுக்கு காட்டிய பின்னர் அதை அப்படியே எடுத்து கொண்டு வைத்து பிள்ளையிடம் கொடுத்தார். அதை தொட்டு கும்பிட்ட பிள்ளைக்கு தாமரை இலை சருகு தொன்னையை கொடுத்தார் குருக்கள். பின்பு அடிசிலையும் நெய் பொங்கலையும் ஒவ்வொரு கரண்டி எடுத்து தொன்னையில் போட்டார். மணமான பசு நெய் மிதக்க தொன்னையில் விழுந்த பொங்கலை இரண்டு விரலால் எடுத்து வாயை திறந்து போட்டு கொண்டார் பிள்ளை. அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே சென்ற பொங்கலின் சுவையில் மெய் மறந்து நின்றார் பிள்ளை.

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி

அவர் மனம் ஆஹா ....ஆஹா ... என்று ரசித்து கொண்டிருந்தது.


என்னதான் அள்ளி அள்ளி போட்டு வீட்டில் செய்தாலும் கிடைக்காத சுவை எப்படி பகவானுக்கு கோவில் மடப்பள்ளியில் தயாராகும் இந்த நைவேத்திய பிரசாத்துக்கு மட்டும் வந்து விடுகிறது. தளிகை பாஷ்யம் அய்யரின் மூலம் சிவபெருமானே இந்த பிரசாதத்தை சமைக்கிறாரோ என்பது பிள்ளைக்கு எப்போதும் விடை தெரியாத கேள்விதான். அது தெரிந்து விட்டால் இந்த ஜனங்களும் பகவானை மறந்து விட்டு வேறு வேலை பார்க்க போய்விட மாட்டர்களா என்ன என்று தனக்குள்ளே நினைத்து கொண்டார் பிள்ளை.

என்ன பிள்ளைவாள் பிரசாதத்தை வாயிலே போட்டுட்டு அப்படியே மெய் மறந்து நிக்கறேள் போலிருக்கே. பகவானுடைய பிரசாதம் எப்பவுமே அமிர்தம் போலத்தான் இருக்கும் காணும். ஆனா தலைமுறை தலைமுறையா பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் பிராப்தம் எல்லாருக்கும் கெடைக்காது ஒய். என்ன நாஞ் சொல்றது என்ற குருக்களின் குரல் பிள்ளையை இந்த உலகத்திற்கு இழுத்து வந்தது.


அவரே தொடர்ந்து எப்போ சுந்தரத்துக்கு கல்யாணம் முடிக்கறதா உத்தேசம்...அதது காலா காலத்திலே நடந்தாத்தானே நல்லது... இந்த புண்ணிய காரியம் அடுத்த தலைமுறைக்கு தொடர வேணாமோ என்ன சொல்றேள் என்றார்.


அதிருக்கட்டும் மொதல்லே ஜனங்களுக்கு பந்தியை போட சொல்லுங்க .. ஜனங்கல்லாம் பசியாறட்டும். என்று இடை மறித்தார் பிள்ளை.


உமக்கு பிரசாதம் கொடுத்த ஒடனே ஜனங்களுக்கு பந்தியை போட சொல்லி பிச்சுமணியண்டே சொல்லிப்பிட்டென் காணும். அது இந்நேரம் ஜோரா நடந்துட்டுருக்கும் நீர் ஒன்னும் கவலை படாதீரும் என்றார் குருக்கள்.


இப்போ சொல்லுங்கோ...இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஒண்டிக்கட்டையா உங்களையும் தம்பி தங்கையெல்லாம் பாத்துண்டு சிரம படுவான் குழந்தை... சீக்கிரமே ஒரு நல்ல பொண்ண பாத்து சட்டு புட்டுன்னு கல்யாணத்தை பண்ணிடுங்கோ... கேட்டீரா ..... என்று மீண்டும் கல்யாண பேச்சை தொடர்ந்தார்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை விஸ்வநாதா...சயனத்துல இருந்த உங்களை எழுப்பி அசௌகர்ய படுத்திட்டனோன்னு ஒரு சின்ன சந்தேகம்.

காலேலேர்ந்து கோவில் வேலையில் அசதியாயிட்டுது பிள்ளைவாள், அதனால செத்த கண்ண மூடி கட்டைய சாச்சுக்கிறது. தூங்கறதெல்லாம் ஒண்ணுமில்லே என்றார் குருக்கள்.


தொண்டையை செருமிக்கொண்ட பிள்ளை எல்லாம் காலேல பேசினது தான். சுந்தரத்தோட ஜாதகத்தை கொண்டு வந்திருக்கேன் என்றார் பிள்ளை.


அடேடே அது பத்தின யோசனையிலதான் படுத்துண்டிருந்தேன். நல்லதா போச்சு செத்த இருங்கோ பொண்ணோட ஜாதகத்தை கொண்டாந்திடறேன் பொருத்தமிருக்கானு பத்துப்பிடுவோம் என்றார்.


அப்படியே வீட்டுக்கு உள்ளே சென்று பெண்ணினுடைய ஜாதக நோட்டையும் பஞ்சாங்கத்தையும் எடுத்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்தார். பிள்ளையும் துண்டை கீழே போட்டு அமர்ந்து கொண்டார். சுந்தரத்தினுடைய ஜாதகத்தையும் அய்யரிடம் கொடுத்தார் பிள்ளை. இரண்டு ஜாதகத்தையும் பார்த்த அய்யர் சிறிதுநேரம் சில கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முக மலர்ச்சியுடன் நிமிர்ந்தார் விஸ்வநாத அய்யர்.


கேளுங்கோ பிள்ளைவாள் ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்கு... ஒன்பது பொருத்தம் பொருந்தி இருக்கு. இப்படி ஒன்பது பொருத்தம் அமையறதெல்லாம் ரொம்ப அபூர்வம்... அதனால நான் நாள காத்தாலேயே போயி அவாள்ட்ட பேசிப்பிட்டு அவா என்ன நெனைக்கிறானு தெருஞ்சுண்டு வந்திடறேனு சொன்னார்.


பிள்ளைக்கு சந்தோஷத்தில் சில நொடி பேச்சே வர வில்லை. ஒரு வழியாக ஈஸ்வரன் அருளால் மகனுக்கு திருமணம் கைகூட போகிறது என்று ஈஸ்வரா.... என்று கோவில் இருக்கும் திசை நோக்கி கையை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டார்.

Representational Image
Representational Image

இரண்டு தம்பி ஒரு தங்கையை விட்டுவிட்டு அம்மை இறந்த பொது சுந்தரம் பிள்ளைக்கு பதினெட்டு வயது. அப்பா கந்தப்பிள்ளைக்கு போஸ்ட் மாஸ்டர் உத்யோகம். அது போக தாமிரபரணி பாசனத்தில் கொஞ்சம் நிலபுலன்கள் உண்டு. ஊரில் கொஞ்சம் வசதியான குடும்பம் என்ற பெயரும் மரியாதையும் உண்டு. ஊரில் உள்ள சிவன் கோவில் நிர்வாகமும் இவருடைய குடும்பத்திடம் இருந்தது. வருட வருடம் மகா சிவராத்திரி கைங்கர்யம் கந்த பிள்ளையினுடையது. அன்று மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு போஜன செலவு மற்றும் அனைத்து பூஜை செலவும் கந்த பிள்ளையின் பரம்பரை உரிமையாக இருந்தது. ஆற்றங்க கரையிலிருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் பெரிய எட்டு கட்டு வீடு. அந்த கால காரை சுவர் மெத்தை வீடு.

இருந்த நிலபுலன்கள் மாடு கன்றுகளை பார்ப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள். என்ன வரவு என்ன செலவு என அனைத்தும் நிர்வாகம் செய்தது என்னவோ சுந்தரம் பிள்ளையின் அம்மை அன்னலட்சுமி அம்மைதான். கந்த பிள்ளை பார்க்க ஆள் கம்பீரமாக இருப்பாரே ஒழிய குழந்தை போன்றவர். அவர் வாங்கிய அரசாங்க சம்பளம் முதல் நிலபுலன்களிலிருந்து வந்த வருமானம் வரை திறம்பட நிர்வாகம் செய்தவர் அன்னலட்சுமி அம்மை தான். படுக்கையில் இல்லாமல் பிறருக்கு எந்த தொந்தரவும் இன்றி திடீரென்று ஒரு நாள் தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது. அம்மை இறந்ததில் கந்தபிள்ளைதான் கொஞ்சம் அதிக மாகவே ஆடி போய்விட்டார்.

தம்பி தங்கயைருடன் அப்பா கந்த பிள்ளையையும் சேர்த்து கவனித்து கொள்ளும் பொறுப்பு சுந்தரம் பிள்ளையிடம் வந்தது. அப்பொழுது தான் பி யு சி (PUC) முடித்திருந்தார். படிப்பில் கெட்டி காரர். மிக சிறப்பான ஆங்கில புலமை உண்டு. இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடக்க வில்லையென்றால் மேற்கொண்டு கல்லூரி படித்து கலக்டெர் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் போல ஆகி விட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருந்தாலும் பள்ளிகளில் படிக்கும் தம்பி தங்கைக்காகவும் வீடு நிர்வாகத்தை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து கொண்டதால் திருநெல்வேலி டவுனில் இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கொண்டார். வெள்ளி முளைக்கையில் எழுந்து காலை மற்றும் மதியத்திற்கு சேர்த்து உணவு சமைத்து விட்டு அப்பாவுக்கும் தனக்கும் மதிய உணவை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து விட்டு இரு தம்பி மற்றும் தங்கையை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்து விட்டு அவர்களை நேரத்துக்கு பள்ளிக்கு செல்லும்படி சொல்லிவிட்டு எட்டரை மணிக்கு சைக்கிள் எடுத்து கொண்டு கிளம்பி விடுவார். ஒரு ஒன்பது மணி வாக்கில் மற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கந்த பிள்ளையும் பக்கத்துக்கு ஊரிலிருக்கும் போஸ்ட் ஆபீஸ்க்கு சென்றுவிடுவார்.


இப்படியாக நான்கைந்து வருடங்கள் உருண்டோட ஆசிரிய பயிற்சி முடித்து விட்டு இப்போது ஐந்து மைல் தொலைவில் பணியிலும் சேர்ந்து விட்டார். அவருடைய முதல் சம்பளம் பதினைந்து ருபாய். அப்பொழுது ஒரு சவரன் பன்னிரெண்டு ருபாய் தான். முதல் தம்பிக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை. இரண்டாவது தம்பியம் தங்கையும் எதோ சுமாராக படித்து ஓல்ட் எஸ் எஸ் எல் சி (Old SSLC) முடித்து விட்டார்கள். முதல் தம்பி நன்றாக படிக்க வில்லையென்று பொறுக்க முடியாமல் ஒரு நாள் நன்றாக ஏசி விட்டார் சுந்தரம் பிள்ளை. அன்று காணாமல் போனவர் தான் ரெங்க பிள்ளை. வெகு நாட்கள் தேடி சலித்து விட்டு பின்பு எங்கேயாவது ரங்கா பிள்ளை இருப்பான் ஒரு நாளில்லை ஒரு நாள் நிச்சயம் திரும்பி வருவான் என்று விட்டு விட்டார் சுந்தரம் பிள்ளை.


இப்படியிருக்க குடும்பத்தையும் கவனித்து கொண்டு வேலையும் பார்ப்பதில் சற்று சிரமப்பட்டு போனார் சுந்தரம் பிள்ளை. மகன் சிரம படுவதை பார்த்த கந்த பிள்ளைக்கு சுந்தரத்திற்கு ஒரு கல்யாணம் செய்து விட்டால் வீட்டு பொறுப்பை மருமகள் பார்த்து கொள்வாள் என்று தோன்றியது. இது பற்றி சுந்தரத்திடம் பேச அவருக்கும் இது சரியான யோசனையாக பட சரியென்று ஒத்து கொண்டார்.

Representational Image
Representational Image

அய்யர் சொன்னது போல அடுத்த நாளே சீனிவாச பிள்ளை வீட்டிற்கு சென்றார்.


வாங்க ... வாங்க ... என்று வாய் நிறைய அழைத்தார் சீனிவாச பிள்ளை. உக்காருங்க என்ன இவ்வளவு தூரம்.... என்று கேட்டார்.


ஒம்ம பொண்ணுக்கு வரன் தேடிட்டு இருந்தீங்க இல்லையா?... அது விஷயமா பேசிட்டு போகலாம்னு தான் என்றார் அய்யர்.


ஆமாம் அய்யர்வாள், இன்னும் ஒன்னும் சரியா அமையலே.. சொல்லுங்க ஏதாவது நல்ல வரன் இருக்கா?


கவலை படாதீங்கோ நல்ல வரனா அமைஞ்சுட்டுது. பய்யன் நம்ம ஊர்தான். எனக்கு ரொம்ப தெரிஞ்ச குடும்பம். பையனோட தோப்பனார் எனக்கு சிநேகிதம். ரொம்ப மரியாதைபட்ட குடும்பம். பையனுக்கு அம்மா இல்லை, அவா போனதிலிருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கிறது தம்பி தங்கைகளை வளக்குறதுனு எல்லாத்தையும் பாத்துகிறது சுந்தரம் தான். அது போக பக்கத்துக்கு ஊரிலே வாத்தியார் உத்தியோகம். மாசமான சம்பளம் வர்றது. தோப்பனாருக்கு போஸ்ட் ஆபீசில் வேலை. தோப்பு தொரவு எல்லாம் இருக்கு. அரசாங்க உத்தியோகமும் பார்த்துண்டு வீட்டையும் பாத்துண்டு ரொம்ப சிரமப்படறான்.


யாரு போஸ்ட்மாஸ்டர் கந்தப்பிள்ளை குடும்பமா? கேள்வி பட்டுருக்கேன்... கொஞ்சம் வசதியான குடும்பமாச்சே... எங்க வசதிக்கு சரிப்பட்டு வருமான்னு தெரியலியேன்னு சந்தேகமா இழுத்தார் சீனிவாச பிள்ளை.

அவா சீர் செனத்தியெல்லாம் பெரிசா ஒன்னும் எதிர் பார்க்கலே. மருமகளா வர போறவ இந்த பொறுப்பையெல்லாம் நன்னா கவனிச்சுக்கணும் அவ்வளவுதான்.


இருந்தாலும் கொஞ்சம் யோசனை பண்ணி சொல்றேன்னாரு.


அதெல்லாம் ஒன்னும் நீங்க யோசனையே செய்ய வேணாம். பையனுக்கும் அவா குடும்பத்துக்கும் நான் கேரண்டி என்றார் அய்யர்.


சீனிவாச பிள்ளையின் மனைவி பிள்ளையை உள்ளே அழைத்தாள்.


ஏங்க நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க. அய்யர் சொல்றத பாத்தா நல்ல சம்பந்தமா தெரியுது. அவங்க குடும்பம் நல்ல குடும்பமாவும் தெரியுது. மொதல்ல அவங்கள வந்து பொண்ண பாக்க சொல்லுங்க. அவங்களுக்கு புடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் இந்த சம்பந்தத்தை முடிச்சுப்பிடுவோம்னு சொன்னாப்ல.


சீனிவாசனும் வெளியில் வந்து


சரிங்க அய்யர்வாள். நீங்க அவங்கள வந்து தெய்வானையை பாத்துட்டு போக சொல்லுங்க. மத விஷயமெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.


விஸ்வநாத குருக்களும் வந்த வேல நல்லபடியா முடிஞ்ச சந்தோஷத்துல குதிரை வண்டியில ஏறினார். பரிசல் துறைக்கு வந்து எதிர்கரைக்கு பரிசல் ஏறினார்.


அடுத்த வாரத்தில் ஒருநாள் கந்த பிள்ளை மற்றும் தம்பி தங்கைகளோடு தெய்வானையை பெண் பார்த்து விட்டு வந்தார் சுந்தரம் பிள்ளை. முன்பே தகவல் சொல்லி விட்டு பெண் பார்க்க வந்ததால் சீனிவாச பிள்ளையும் ஓரளவு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார். சுந்தரத்திற்கும் தெய்வானையை பிடித்திருந்தது.


அடுத்த ஒரு மாதத்தில் திருமணம் நல்லபடியாக முடிந்து தெய்வானை கந்த பிள்ளை மருமகளாக ஊருக்குள் நுழைந்தாள்.

Representational Image
Representational Image

வருடங்கள் உருண்டோட சுந்தரம் பிள்ளையின் தங்கைக்கு திருமணம் நடந்தது. அம்மையின் நகைகளோடு தெய்வானையின் நகைகளையும் சேர்த்து, கொஞ்சம் நிலபுலன்களையும் விற்று ரயில்வேயில் வேலையில் இருந்த மாப்பிள்ளைக்கு சிறப்பாக செலவு செய்து தாய் தகப்பனாக முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்கள் சுந்தரமும் தெய்வானையும். ஓய்வு பெற இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்போது கந்த பிள்ளையும் இறந்து போனார். அவருடைய வேலை இரண்டாவது தம்பிக்கு கிடைத்தது. நிலபுலன்களிலிருந்து வந்த வருமானமும் குறைந்து போனது.


ஒரு வழியாக இரண்டாவது தம்பியின் திருமணத்தையும் பெண்பார்த்து முடித்து வைத்தார் சுந்தரம் பிள்ளை. இதற்கிடையில் தெய்வானையும் இரண்டு முறை கருவுற்று இரண்டு மாதத்துக்கு மேல் தங்கவில்லை.

அடுத்தடுத்து தங்கையின் பிள்ளை பேறு, தம்பி மனைவியின் பிள்ளை பேறு என தெய்வானைக்கு சரியாக இருக்க பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. திடீரென்று திரும்பி வந்த முதல் தம்பி இந்தியா முழுவதும் தேசாந்திரியாக சுற்றி யாரிடமோ நன்கு சமைக்க கற்று கொண்டு சமையல் காரராக இருக்க, அவருக்கு யாரும் பெண் தர மறுக்கவே, அவரும் மீண்டும் கோபித்து கொண்டு ஊரை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவ்வப்போது வருவதும் அண்ணனிடம் சண்டை போட்டு கொண்டு செல்வதுமாக இருந்தார்.


தம்பிக்கு மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். குறைவான வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்ட தம்பி குடும்பத்தையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பும் சுந்தரம் பிள்ளைக்கு வந்து சேர்ந்தது. தம்பியின் பெண்களுக்கும் செலவு செய்து திருமணம் நடத்தி வைத்தார். இப்படியே ஊரில் இருந்த அனைத்து சொத்துக்களும் கரைந்தன.

மேலும் பல வருடங்கள் உருண்டோடின. இப்போது சுந்தரம் பிள்ளையும் ரிட்டயர்டு ஆகிவிட்டார். பென்ஷன் வருகிறது. இரண்டு பேர்க்கு போதுமானதாக இருந்தது. மீதமிருந்த சொத்துக்களையும் விற்று தம்பிக்கும் தங்கைக்கும் பிரித்து கொடுத்து விட்டு அருகிலிருந்த நகரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தெய்வானையை அழைத்து,

என்ன மன்னிச்சுரு தெய்வானை. நான் ஒனக்கு ஒண்ணுமே செய்யலியேடி... என்று கண் கலங்கினார்.


ஏங்க இப்படியெல்லாம் சொல்றீங்க...என்னோட இந்த வாழ்க்கை நீங்க கொடுத்தது....வருத்த படாதீங்க என்று சொன்னார் தெய்வானை.


ஒன்ன வஞ்சிக்கணும்னு இல்லடி ... என் தம்பி தங்கை அவங்களோட குழந்தைகள்னு யோசனை பண்ணதுல நமக்குன்னு ஒரு பிள்ளை வேணும்னு யோசிக்க நேரமில்லாம போச்சு. எனக்கப்புறம் உன்ன பாத்துக்க யார் இருக்கா .... என்றார்.


அவருடைய சேமிப்பு மற்றும் பென்ஷன் டிரான்ஸ்பர் என அனைத்தையும் தெய்வானை பெயருக்கு எழுதி வைத்து விட்டார்.


இறக்கும் தருவாயில் தம்பி கல்யாணத்தின் போது தம்பியின் மாமனார் தன்னிடம் "ஒங்க தம்பிக்கு இருக்க வருமானத்துக்கு அவரு எப்படி பிள்ளைகளை பெத்து வளப்பாருனு எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி ஒரு வேல எம் பொண்ணோட குடும்பத்துக்கு கஷ்டம் வந்தா அவங்கள பாத்துகிடவேண்டியது ஒங்க பொறுப்புன்னு எனக்கு சத்தியம் செஞ்சு கொடுங்க மாப்பிள்ளைன்னு" கேட்டார். சுந்தரம் பிள்ளையும் தம்பி மேல இருந்த பாசத்துல எதையும் யோசிக்காம அவருக்கு சத்தியம் செஞ்சு கொடுத்ததும் அதனால தன்னோட குடும்ப வாழ்க்கையை தியாகம் செஞ்சதும் தெய்வானைக்கு அநீதி இழைச்சுட்டதா நெனைச்சு ஒரு சொட்டு கண்ணீர் விட்டபடியே சுந்தரம் பிள்ளையினுடைய உயிர் பிரிந்தது.


அன்னைக்கு மகா சிவராத்திரி. உச்சி கால பூஜைக்கான மணி அவரோட ஊர்ல இருந்த சந்திர மௌலீஸ்வரர் கோவில்ல அடிச்சிக்கிட்டு இருந்தது. அடுத்து பிள்ளை இல்லாததால பிள்ளையோட குடும்ப கைங்கர்யம் இல்லாமையே பகவானுக்கு நைவேத்தியம் ஆச்சு.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு