Published:Updated:

நிறைமாத அணிலும் லாக்டெளனும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

அழகாய் உருவான அந்த இடம் இருள் கவ்வி, சூரியனின் ஒளி குழியில் ஊடுருவி காலை விடிந்தது. கீச் கீச் சென்று நிறைமாத அணிலின் மகிழ்ச்சி சப்தம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலையில் இருந்து பல்வேறு இடங்களைத் தேடித் தேடி அந்த நிறைமாத அணில் களைத்துப்போய் சோர்ந்துவிட்டது. இன்றோ, நாளையோ அழகான குட்டிகளை ஈன்றெடுத்துவிடும். கோழிமுட்டைக்கும் குறைவான அளவு உள்ள அந்த வயிற்றை வைத்துக்கொண்டு நடப்பது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல.

அதைப் பொறுத்தவரை, நடக்கும்போது வயிறு கோலிசோடாவில் உள்ள கோலி போன்று உருண்டது. இப்போதே பிரசவித்துவிடும்போல் இருந்தது அதன் நிலை. சூரியன் வெப்பத்தை உமிழ்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தது, முடிவு பெறவில்லை.

Representational Image
Representational Image

கடந்த ஒரு வாரகாலமாக அது இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கிறது. வீடு வாங்குபவர் எப்படி புரோக்கர் காட்டும் ஒவ்வொரு வீட்டையும் பார்த்து ஏதோ சில காரணத்தால் திருப்தி இல்லாமல் செல்வார்களோ? அப்படித்தான் இந்த நிறைமாத அணிலும் ஒவ்வோர் இடத்தையும் பார்த்து திருப்தி இல்லாமல் இந்த நிமிடம் வரை அலைந்துகொண்டிருக்கிறது .

இந்த ஒரு வாரகாலத்தில் முதலில் ஒரு வீட்டின் கண்ணாடி செருகப்பட்ட குளியலறை ஜன்னலைத் தேர்ந்தெடுத்தது. நல்ல அழகான இடம். எந்த ஊர்வன, நடப்பன, பறப்பனவற்றுக்கும் பயப்படத் தேவையில்லை. பாதுகாப்பான இடம் என்று தீர்மானித்தது. ஜன்னல் அருகே ஐந்து, ஆறு வாழை மரங்கள், சிலுசிலுவென காத்து பிடித்துப்போனது. இதுதான் நமக்கு சரியான இடம் என்று மனம் மகிழ்ந்து தன் இருப்பிடத்தைக் கட்டுவதற்கு உண்டான வேலைகளில் ஆயத்தமானது.

தேங்காய் நார், இலவம் பஞ்சு, வானில் பளிச்சிடும் மின்னல் போன்ற மெல்லிய குச்சிகள் எனக் கொண்டு வந்து கட்டியது. அதையெல்லாம் கொண்டு வருவதற்கு அதுபட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பின்னே அந்த வயிற்றை வைத்துக்கொண்டு எப்படி?

இவ்வளவு சிரமப்பட்டும் அதன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை . கொரானா லாக்டௌன்னா சும்மாவா... அந்த மிடில் கிளாஸ் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே தினம் தினம் சண்டைதான்.

"உன்கிட்ட தினம் தினம் சாவறதுக்கு ஒரேடியா வெளியில போய் கொரானாவால செத்துப் போய்டலாம்" என்ற நிலைக்கு ஆளான கணவன். போதாக்குறைக்கு குழந்தைகளின் இரைச்சல்கள் வேறு. முடியவில்லை அந்த அணிலுக்கு.

தங்கியிருந்த இரண்டு நாள்களுக்கும் ஒவ்வொரு நொடியும் திடுக் திடுக்கென்று அதன் ஹார்ட் பீட் தூக்கிப் போட்டுக்கொண்டே இருந்தது. அவர்களின் சண்டை இரைச்சல்களில் இனி இங்கே ஒரு நொடிகூட இருக்கக் கூடாது என்று அடுத்த இடத்தைத் தேடிப்போக முடிவு செய்தது, அந்த வயிற்றில் உள்ள சுகமான சுமையோடு.

Representational Image
Representational Image

அதன்படி மற்றொரு இடத்தை தேர்வு செய்தது. அது பாதி வீடு கட்டி முடிந்த நிலையில் உள்ள ஒரு கட்டடம். கொரானாவால் இப்போது நின்று போயுள்ளது. இல்லையேல் இந்நேரம் அந்தக் கட்டடத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே கூத்தும் கும்மாளமுமாக இரட்டை அர்த்த வார்த்தை கலாட்டா முதல் உள்ளூர் பிரச்னையிலிருந்து உலக பிரச்னை வரை ஓடிக்கொண்டிருக்கும் அந்தக் கட்டடத்தில்.

சரி இங்கு யார் தொந்தரவும் இருக்காது என்று நினைத்தது அணில். நினைத்த மாத்திரம் வந்து சேர்ந்தது தொந்தரவு. அந்தக் கட்டடத்தில்தான் தெரு நாய்கள் எல்லாம் அலைந்து திரிந்து இறுதியாக இங்க வந்து குழுமும்.

அப்படித்தான் இப்போது திடீரென்று எங்கோ இருந்து ஒன்றுக்கொன்று குலைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டே கட்டடத்துக்குள் வந்தது நாய்கள் கூட்டம். இன்னும் சற்று அதிகமாக சர், புர்ரென்று உறுமிக்கொண்டு ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. மிரட்சியுடன் ஒரு மறைவான இடத்தில் இருந்து பார்த்து பயந்த அணில் இந்த இடம் நமக்கு பாதுகாப்பு இல்லை என்று தீர்மானித்து, அடுத்த இடத்தை நோக்கி வயிற்றுச் சுமையோடு, மூச்சிரைத்து மெதுவாகப் பயணித்தது.

இப்படித்தான் ஒரு வாரமாக ஒவ்வோர் இடத்தையும் பார்த்துப் பார்த்து இப்போது சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் சற்று நிழலில் ஒதுங்கி இளைப்பாறியது. "எப்படி நாம இடத்தை பார்க்கப்போறோம்" என்ற கவலை தொற்றிக்கொண்டது. நிறைமாதம் என்பதால் முன்பு போல் பயணிக்கும் வேகம் இல்லை.

ஒரு சில நாழிகளில் பத்து பதினைஞ்சு மாதுளம் பழங்களின் தோள்கள் வந்து விழுந்தன. பார்த்த அணிலுக்கு சோர்வாய் இருந்த உடலுக்கு ஒரு சக்தி கிடைத்தது போல் இருந்தது. அந்த மாதுளம் தோளில் உள்ள சில பருக்கைகளைக் கொறித்து முடித்தது. அதைக் கொறிப்பதற்குள் காகத்திடம் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. ஒரு வழியாகக் காகம் விருப்பம் இல்லாமல் போனதால் அதன் பசி நீங்கியது. சோர்வு கலைந்தது.

அதீத ஆற்றலுடன் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் வேகமாய் இடத்தைத் தேடி பயணித்தது.

Representational Image
Representational Image

ஒரு வழியாகக் கள்ளக்குறிச்சி டு சேலம் புறவழிச்சாலை மேம்பாலம் வந்தடைந்தது. அந்த மேம்பாலத்தில் ஒவ்வொரு பத்து, பதினைஞ்சு அடிக்கும் தள்ளித் தள்ளி பொந்து போன்று வட்ட வடிவிலான குழி இருந்தது. மூச்சிரைத்து மெல்ல மெல்ல வயிற்றுச் சுமையோடு அதைப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தது. அந்தக் குழிகள் எல்லாம் மழைக்காலங்களில் தார்ச்சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டவை.

அந்த குழிகளில் ஒரு குழியைத் தேர்ந்தெடுத்தது, இப்போது மழைக்காலம் இல்லை என்ற நம்பிக்கையில். அதற்குள் அழகான குட்டிகளை ஈன்றெடுத்துவிட்டு வேற இடம் பிரவேசித்துக் கொள்ளலாம் என்று நினைத்தது. குறிப்பாக அந்த மேம்பாலத்தில் எந்த உயிரினத்தாலும் பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்தது.

அதுபோல் அந்த புறவழிச் சாலையில் ஒரு ஈ, காக்கா, குருவி நடமாட்டம் இல்லை, கொரானா ஊரடங்கால். இல்லையேல் அந்தப் புறவழிச்சாலை மேம்பாலம் பரபரப்பாக இருக்கும். எத்தனை கார்கள், எத்தனை ஆம்னி பேருந்துகள், எத்தனை அரசுப் பேருந்துகள், டூவீலர்கள், லாரிகள் என மொத்தத்தில் ஏனைய வாகனங்கள் சர், புர்ரென்று ஓய்வே இல்லாமல் இருக்கும். ஆனால், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனாவால்.

இப்போது நிறைமாத அணில் ஒரு நாழிகூட தாமதிக்காமல் தன் இருப்பிடத்தைத் தயார் செய்வதற்கு முனைப்பானது. அதன்படி சிறு சிறு குச்சிகள், பஞ்சுகள், சணல்கள், தேங்காய் நார்கள் என இப்படிப் பல்வேறு பொருள்களைத் தேடித் தேடி எடுத்து வந்து இடத்தைத் தயார் செய்தது. ஒரு காலில் ரத்தம் காய்ந்து, உறைந்து போயிருந்தது. பஞ்சு எடுக்கும் இடத்தில் நிறைய கண்ணாடி பாட்டில்கள் உடைந்திருந்தது. அதில் பார்த்து பார்த்து எடுத்தும் ஒரு துகள் குத்திவிட்டது. இருந்தும் அதை நினைத்துக் கவலைப்படவில்லை. முன்பைவிட இப்போது மனித இனம் விழிப்படைந்திருக்கிறது.

ஒரு சிலரின் தவற்றைப் பொருட்படுத்தாமல், பலரின் விழிப்புணர்வு விஞ்ஞானம் போன்று வளர்ந்திருக்கிறது என்று எண்ணி... தனது இடத்தை குட்டிகளுக்காகப் பார்த்துப் பார்த்து குச்சிகளைச் சுற்றியும் அதன் மேல் தேங்காய் நாறும் வைத்து நடுவில் மட்டும் இலவம் பஞ்சுகளைக் குவியலாகச் சேர்த்து கட்டியது. குட்டிகளுக்கு ஒரு சிறு துரும்புகூட குத்திவிடக் கூடாதென்று!

Representational Image
Representational Image

அழகாய் உருவான அந்த இடம் இருள் கவ்வி, சூரியனின் ஒளி குழியில் ஊடுருவி காலை விடிந்தது. கீச் கீச்சென்று நிறைமாத அணிலின் மகிழ்ச்சி சப்தம்.

கண் விழிக்காத, உடலினுள் ரோமங்கள் இல்லாத மில்லி கிராம் அளவே எடை கொண்ட மூன்று அழகான குட்டிகளை ஈன்றெடுத்திருந்தது. தன் குட்டிகளுடன் அளப்பரியா அன்புடன் பேசிக்கொண்டிருந்தது. தாயை பெரும் சிரமத்துக்கு ஆளாக்காமல் இரண்டு குட்டிகள் தொல்லை தராமல் இலகுவாகப் பிறந்தது. ஆனால், மூன்றாம் குட்டி வருவதற்கு தாய் அணில் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்றாலும் எல்லாம் சுகமாய் அமைந்தது. முனகிக்கொண்டிருக்கும் குட்டிகளுக்குத் தாய்ப்பாலை கொடுத்தது தாய்மை மகிழ்ச்சியுடன்!

30 நாள்கள் கடந்தது அணிலின் குடும்பம்!

30 நாள்களுக்குப் பிறகு அரசும் அறிவித்தது லாக்டவுன் தளர்வுகளை. அந்தத் தளர்வினால் வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனிதர்களின் தலைகள் வெளியில் தெரிய ஆரம்பித்தன.

அந்தப் புறவழிச்சாலை மேம்பாலத்தில் டூவீலர்கள் பயணிக்கத் தொடங்கின. டூவீலர்களின் சத்தத்தைக் கேட்டு, குட்டி அணில்கள் வெளியில் வந்து எட்டிப் பார்த்தும், வாகனங்கள் அருகே வரும்போது ஓடிப்போய் பொந்துக்குள் புகுந்துகொள்வதும் இப்படி தமாஷாக, குறும்பாக விளையாடிக்கொண்டிருந்தது.

Representational Image
Representational Image

தாய் அணில் உணவுகளைச் சேமித்துக்கொண்டு வந்து குட்டிகளின் பசியை ஆற்றியது. அந்த உணவைக் கொண்டு வருவதற்குள் காக்கை, நாய், பன்றி இவற்றுடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும்.

அரசின் தளர்வுகள் நீண்டுகொண்டே போனது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு எல்லா போக்குவரத்துக்கும் அனுமதி. ஒரு ஈ, காக்கா, குருவி இல்லாமல் இருந்த சாலை இப்போது ஓய்வில்லாமல் ஆனது. தாய் அணில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேறு ஓர் இடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது.

அதன்படி பாதுகாப்பான, ஒரு அமைதியான இடத்தைத் தேர்வு செய்து கட்டியது. மிகுந்த மன நிறைவோடு தன் குட்டிகளை நோக்கி வரும்போது, ஆறடி நீளமுள்ள திடகாத்திரமான பார்ப்பதற்கே மிரட்சியான ஒரு பாம்பு ஊர்ந்து வந்து லாவகமாக தன்னைப் பிடிக்க வருவதை எண்ணி மயிரிழையில் தப்பியது. தன் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து, அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு போராடி ஒரு வழியாக மேம்பாலத்தை நோக்கி வந்தது.

குட்டிகளை அழைத்துக்கொண்டு மாற்று வழியில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று நினைத்தபடியே எதிரே உள்ள தன் இருப்பிடத்துக்கு செல்ல சாலை குறுக்கே கடந்து போக, 120 கி.மீ வேகத்தில் பறந்து வந்த ஒரு காரின் டயரில் சிக்கியது கீச் என்ற சப்தத்தோடு. அந்த காரின் டயரில் கூழாய் போனது அந்த அணில். தன் குட்டிகளை மாற்று வழியில் பாதுகாப்பாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்த அணிலின் எண்ணம் கண் இமைக்கும் நேரத்தில் ஈடேறாமல் போனது.

Representational Image
Representational Image

தாயின் சத்தம் கேட்டதே என்று எண்ணி குட்டிகள் வெளியே வந்து பார்க்க, எதிரே கூழாய் கிடக்கும் தாயைப் பார்த்து ஓடி வந்து மூன்று குட்டிகளும் கீச் கீச்சென்று நுகர்ந்து நுகர்ந்து பார்த்து சத்தமிட்டுக்கொண்டிருந்தன. மனிதர்கள் பாஷையில் அழுது கொண்டிருந்தன. அவற்றுக்கு உலகமே இருண்டதுபோல் ஆனது. இறைவனின் மனம் இறங்கவில்லை. அடுத்த சில நாழிகளில் அந்த மூன்று குட்டிகளின் சப்தங்களும் அடங்கிப்போனது. ஆம், அதேபோன்று நூற்றி இருபதில் வந்த மற்றொரு காரில் டயரில் சிக்கி குட்டிகள் கூழாய் போயின.

குட்டிகள் இறந்து போயின. கீச் கீச்சென்று ஒரு சத்தம் முனகியவாறு வந்துகொண்டிருந்தது. மேம்பால சுவரின் ஒரு ஓரமாய் மூன்றாவதாகப் பிறந்த குட்டி அணில் ஒரு காலை இழந்து, வலியில் கத்திக்கொண்டிருந்தது. வாகனங்கள் சர், புர்ரென்று வந்து கொண்டிருக்க பயந்து பயந்து மேம்பாலத்தின் ஒரு ஓரமாய் மூன்று கால்களுடன் வலியோடு நொண்டி நொண்டி திக்கு தெரியாமல் ஒதுங்கி, ஒதுங்கி எங்கேயோ வாழப் போகலானது இருக்கும் காலம் வரை!

அது வரை அந்தக் குட்டி அணில் எங்கேயும் ஆபத்தில் சிக்காமல் பிழைத்துக்கொள்ள வேண்டும்! நாம் பிரார்த்திப்போம்!

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு