Published:Updated:

வெளக்கமாறு..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

முறைவாசல் வேலை முடிந்ததும் அடுக்களையில் மெதுவாய் சென்று சுவரில் கையைத் தடவி switch-ஐ கண்டுபிடித்து தட்டினாள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அவள் பத்மினி.

சேவலின் கூவல் சத்தம் கேக்கும் முன்பே அவளுக்கான பணிகள் தொடங்கிவிட்டது. ஒரு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து தரையில் படர விட்டாள். சாணி தெளிக்கும் பழக்கம் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன.

அப்பகுதியில் மாடுகளை வளர்ப்பதை கௌரவ குறைச்சலாகக் கருதுபவர்களின் எண்ணிக்கை மிகுந்துவிட்டது. அவள் தண்ணீரைத் தெளித்து முடித்து வெளக்கமாற்றைக் கையில் எடுத்தாள். பூலோக மனிதனைப் போலவே ஒவ்வொரு குச்சியும் ஒவ்வொரு திசை காட்டி நின்றன. தன், வளையல் இல்லாத கையால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டினால். எல்லாம் ஒன்றானது. அப்பகுதியில் தண்ணீரால் வரையப்பட்ட எல்லை வரையில் அவள் வெளக்கமாறு சர்ருக் சர்ருக் என்று குப்பைகளைக் கூட்டி ஓரமாய் தள்ளியது. வெளக்கமாற்றை தூக்கி திண்ணையில் சற்று ஓரமாய் போட்டாள், மீண்டும் அதன் குச்சி்கள் ஒவ்வொரு திசைக்கு திரும்பி கொண்டன.

Representational Image
Representational Image
Pixabay

வீட்டினுள் சென்று வெள்ளை நிற டப்பா எடுத்து வந்தாள். மெதுவாக வாசலில் வந்து அமர்ந்து நான்கு புள்ளிகள் வைத்து மெதுவாய் இரு இழுப்பு இழுத்து கோலமிட்டு முடித்தாள். இப்படித்தான் ராமராஜன் வீட்டில் தினமும் பத்மினியின் வேலைகள் தொடங்குகின்றன. பத்மினி ராமராஜனின் மூத்த மகன் ஆனந்தைக் காதலால் கரம் பிடித்தாள். காதல் திருமணத்தில் பெரிய சிக்கல்கள் இல்லை. இருவீட்டாரும் சாதியம் பேசவில்லை. 80 பவுன் நகைதான் பேசியது.

திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே ஆனந்த் விபத்தில் இறந்துவிட்டான். பசி அடங்கா காலனின் கயிற்றுக்கு பத்மினியின் பெற்றோரும் பலியானார்கள். ஆதரவற்று நின்றவளுக்கு ராமராஜனின் வீட்டுத் திண்னைதான் அடைக்கலம்... ம்ம்ம்..

முறை வாசல் வேலை முடிந்ததும் அடுக்களையில் மெதுவாய் சென்று சுவரில் கையைத் தடவி switch-ஐ கண்டுபிடித்து தட்டினாள். அறிவியலின் வெளிச்சம் அந்த அறை முழுதும் பரவியது... fridge-ஐ திறந்து பத்மினி எனப் பெயரிட்டு இருந்த அந்த எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்தாள்.

Representational Image
Representational Image

மாவு சற்றே உப்பி பொங்கி இருந்தது. ஒரு குண்டு கரண்டி எடுத்து வேகமாய் கிண்டினாள். உயர்ந்த மாவின் அளவு சற்றே குறைந்தது. ஒன்றாய் இருந்த மாவு கூட்டத்தைப் பிரித்து தனித் தனி இட்லிகளாய் அளவாய் பதமாய் இட்லி சட்டியில் ஊற்றி அடுப்பேற்றி gas stove ஐ திருவி கிளிக் கிடிக் அடுப்பு பற்றிக்கொண்டது. பின் சில தாக்காளிகள். வெங்காயம் ,பின் சில காய்கறிகள் துணையுடன். ஏதேதோ செய்து பின் தனியாயிருக்கும். இட்லிகளுக்குத் துணையாக சட்டினியும் செய்துகொண்டிருந்தபோது மணி 6 ஐ தொட்டது. மாமியாரின், பத்மினி எனும் முனங்கல் சத்தம் கேட்டதும். வேகமாய் வாசல் சென்று பால் பாக்கெட்டை எடுத்து காஃபி போட்டாள்.

``இந்த பத்மினி பொன்னுக்கு கொஞ்சம்கூட பொறுப்பே இல்லை’’ என்று கத்திக்கொண்டே அடுக்களைக்குள் வந்தாள் அம்புஜம்.

அம்புஜம் பத்மினியின் மாமியார்...

``அத்தை போட்டுட்டேன் அத்தை இப்போ 2 நிமிஷம் நீங்க போங்க நான் கொண்டு வந்துடறேன்’’ என்றாள் பத்மினி.

``நீ கொண்டு வந்து கிழிச்ச, அத்தையாம் அத்தை... போடி அங்குட்டு... ’’என்று சொல்லி விட்டு கொதித்து நின்ற coffee ஐ இறக்கி தம்ளரில் ஊற்றிக்கொண்டு பொறுப்பாய் அங்கிருந்து நகர்ந்தவள், ``என்னங்க...’’ என்று இழுத்துக்கொண்டே நகர்ந்தாள்.

அதன் பிறகு மீதி அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு குளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டே நகர்ந்தாள் பத்மினி.

Representational Image
Representational Image

உள்ளே ஹாலில் ஏதோ சத்தம். என்ன என்று எட்டிப் பார்க்கலாம். என்று மனது சொல்லியது. உள்ளே சென்றாள். அம்புஜமும் அவளுடைய இரண்டாம் மருமகள் சாவித்திரியும் தான். அது அவர்களுக்குள்ளான சண்டை இல்லை. பத்மினிமியின் வேலைகளில் உள்ள குறைகள்.

பத்மினிக்கு அடுக்கும் வேலை. சாவித்திரி ராமராஜன் வீட்டில் இன்று வரை வெளக்கமாறு, பிடித்ததில்லை... அடுக்களையில் தீக்குச்சி கொளுத்தியதில்லை. காலை 7 மணிக்கு முன் சூரியன் பார்த்ததில்லை. அம்புஜமும் சாவித்திரியும் சேர்ந்து 1 மூட்டை துணிகளைத் துவைக்க பத்மினிக்கு வாரி வழங்கினார்கள்.

பத்மினி இந்த வீட்டிற்கு வரும்போது washing machine எல்லாம் வாங்கித்தான் வந்தாள், என்ன புண்ணியம்... போன 3 மாதங்களுக்கு முன்பு அதை அம்புஜத்தின் மகள் வீட்டிற்கு அனுப்பியாகிவிட்டது. அனைத்து துணிகளையும் துவைத்து சிண்டுகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காலை மணி 10 இருக்கும். அடுக்களைக்குச் சென்று அம்புஜம் சாப்பிட்டு வைத்த தட்டை எடுத்து கழுவிவிட்டு இட்லி சட்டியைத் திறந்து இரு இட்லி எடுத்து தட்டில் வைத்தாள்.

அம்புஜத்திற்கு எப்படி மூக்கு வேர்த்ததோ... தெரியவில்லை.. அடுக்களைக்குள் வேகமாய் வந்து குதித்தாள், என்னடி உனக்கு அதுக்குள்ளே அவசரம் சாப்பிட என்று தட்டைப் பிடுங்கி ஓரமாய் போட்டுவிட்டு...

``ஊர்ல இருந்து என் மாமா வர்ரார்... போய் கடைல இந்த list-ல உள்ள ஜாமன் வாங்கிட்டு வாடி. வந்து துன்னாலாம்’’ என்று கத்தினாள்.

பத்மினி மறு பேச்சு பேசவில்லை. இட்லி தட்டை ஓரமாய் வைத்து விட்டு கடை நோக்கி நடந்தாள். கடையில் ஒரே கூட்டம். அண்ணாச்சியிடம் லிஸ்ட்டைக் கொடுத்து ஜாமான் வாங்கி கொண்டு திரும்பி வீட்டுக்கு வரும்போது மணி உச்சியை நெருங்கியது.

Representational Image
Representational Image

``என்னடி மசமசனு ஒரு பத்து ஜாமான் வாங்க இவ்ளோ நேரமா ? சீக்கிரம் வாடி... போய் அடுக்களை வேலையைப் பாரு எல்லாரும் வந்துருவாங்க... அதுக்குள்ளே வேலைய பாரு...’’

மீண்டும் காஸை கிளிக் கிடிக் ஆன் செய்து விருந்துக்கு சமையல் செய்ய ஆரம்பித்தாள். குக்கரில் விசில் சத்தம் வர தொடங்கியிருந்தது. பின் வத்தக்குழம்பு, பொரியல், கூட்டு, அப்பளம், மாங்காய் பச்சடி என வித விதமாய் செய்ய பணித்தாள் அம்புஜம். மணி 2. கடிகார முள்ளுக்கு கூட ஆறுதல்சொல்ல அப்போ அப்போ நொடி முள் வரும்... இங்கு அவளுக்கு யாரும் இல்லை... குளிக்காமலேயே அவள் உடல் வியர்வையில் நனைந்தது. ஃபேன் காற்றுக்கு அவள் உடல் ஏங்கியது. ஹாலுக்குச் சென்று அங்கிருந்த ஃபேனைப்போட்டுக்கொண்டு அருகே இருந்த நாற்காலியை நகர்த்துவிட்டு தரையில் சுவர் ஒட்டி உட்கார்ந்தாள். 10 நொடிதான் ஆகியிருக்கும்.

``ஏய் என்னடி இங்க உட்காந்துருக்க? சமையல் வேலைலாம் என்னா ஆச்சு?’’ என்று பொரிந்தாள் அம்புஜம் .

``சமையல் எல்லாம் ஆச்சு அத்தை’’ என்றால் பணிவாய் பத்மினி. ``அப்புறம் ஏன் இங்கே உட்காந்து நேரத்தை வீணடிக்கிற, போய் எல்லா ரூம்க்கும் ஒட்டடை அடிச்சு கூட்டி சுத்தம் பண்ணு... நீட்டா கூட்டி வைடி, கடமைக்கு செய்யாத’’ என்றாள்.

பத்மினி ஏதும் பேசவில்லை... எழுந்தாள் வெளக்கமாறை எடுத்துக்கொண்டு மீண்டும் வியர்வை வழிய வேலையை தொடர்ந்தாள்.

மணி 5 அடித்தது...

Representational Image
Representational Image

அப்போது வாசலில்...

``வாங்க வாங்க ஏன் இவ்வளவு லேட்டா ஆயிடுச்சு... அம்புஜம்... மாமா வந்துடாங்க பாரு, உள்ள வாங்க...’’

என்று மாணிக்கம் மாமாவுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்து கொண்டிருந்தார் ராமராஜன்... ராமராஜன் ஒரு அப்பாவி... மனைவி அம்புஜத்தின் அத்தனை செயலுக்கும் தலை ஆட்டுவதை தவிர வேற ஒன்றும் அறியாத மனிதன்.

``வாங்க வாங்க என்னங்க நிக்க வச்சு பேசிக்கிட்டு... உட்காருங்க மாமா... வீட்டுல எல்லாரும் சௌக்யமா... அத்தை எப்புடி இருக்காங்க...’’

மாணிக்கம் மாமா புன் சிரிப்போடு... ``எல்லாரும் சௌக்யம். நீ எப்புடி இருக்க...’’ என்று சொல்லிக்கொண்டே கையில் கொண்டு வந்த பழப்பையை அவளிடம் நீட்டினார்.

``எம்மாடி சாவித்திரி... மாமா வந்துருக்கானபா பாரு காபி எடுத்துட்டு வா...’’

இரண்டாவது மருமகள் சாவித்திரி பத்மினி போட்ட காபியை தட்டில் வைத்துக்கொண்டு வந்து மிகவும் அடக்கமாய் நீட்டினாள். ராமராஜன் கைகளில் பத்மினி போட்ட காபியில் நுரை ததும்பி ஒதுங்கி அவர்களைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதுபோல் இருந்தது.

மாணிக்கம் காபியை உறிஞ்சிக்கொண்டே இதான் ரெண்டாவது மருமகளா...

என்று சொல்லும்போதே சாவித்திரி சிரிப்பை உதிர்த்தாள்.

``ஆமா மாமா... சாவித்திரி என்னை ஒரு வேலை செய்ய விடாது எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யும்...’’ என்றாள் அம்புஜம்.

மாணிக்கம், ``மூத்த பையன் சம்சாரம் எங்க...’’ என்று இழுத்தார்.

``அவ எங்க மாமா இங்க இருக்கா... எங்கேயோ ஒடிப்போய்ட்டா. நாங்களும் தேடலை... இதுதான் என் பொண்னுக்குக் பொண்ணா பையனுக்கு பையனா இருந்து என் சோகத்தைப் போக்குது...’’ என்று சொல்லிக்கொண்டே முந்தானை இழுத்து கண்ணை துடைத்துக்கொண்டாள்.

இவை அனைத்தும் கேட்டும் கேட்காதவளாய் அடுக்களை பணியில் பத்மினி...

Representational Image
Representational Image

அம்புஜம் அடுக்களைக்குள் நுழைந்து, ``இந்தாடி வெளிய மாமா இருக்கார்... அவரு கண்ணுல பட்டு தொலைஞ்சிடாத... சரியா புரிஞ்சுதா’’ என்று முறைத்தாள்.

``ம்ம் சரி’’ என்பது போல பாவமாய் தலை அசைத்தாள் பத்மினி...

அவர்கள் மதிய உணவை மாலையில் சாப்பிட்டு

மாமாவை வழி அனுப்பிவிட்டு இரவு உணவையும் பத்மினி செய்து முடித்ததும் 8 மணிக்கெல்லாம் தின்று தீர்த்துவிட்டு படுக்க ஆயதமானர்கள்... எல்லாரும் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு பார்க்கையில் சோற்று பானையில் அவளுக்கென்று ஒரு சில பருக்கைகளே மிச்சம் இருந்தன. அதைப் பார்த்து ஒரு ஏளன சிரிப்பை சிரித்தாள். ஏதோ நினைவுக்கு வந்தவள் போல தண்ணீரை அள்ளி ரெண்டு தம்ளர் குடித்தாள். திண்ணைக்கு வந்தாள். அங்கு சுவர் ஓரமாய் பாயை விரித்தாள்... அவளைப் போலவே அழுந்தி போன ஒரு தலையணை அதன் மீது அந்த சோர்ந்து போன தலை வைத்து படுத்தாள்.

அடியே என்று கத்தியவாரே அம்புஜம் அவ்விடம் குதித்தாள். காலையில் இருந்து ஒண்ணுமே திங்கலையாடி இந்தாடி புடி சாப்புடு, என்றவாரே பத்மினி காலையில் சாப்பிட எடுத்த இரண்டு இட்லிகளையும் நீட்டினாள்... பத்மினி ஏதும் பேசவில்லை...

வாங்கிக் கொண்டாள்.

``ஏண்டி உனக்கு சாப்பாடு போடாத அளவுக்கு நா என்ன கொடுமைக் காரியா சாப்பிட்டுத் தூங்கு.’’

அம்புஜம் அங்கிருந்து ஒரு முறைப்புடன் நகர்ந்தாள்.

``இவ பட்டினியா இருந்து முடியாம படுத்துக்கிட்டா வீட்டு வேலை யாரு பாக்குறது...’’

அம்புஜம் போய் விட்டாள்.

அந்த இரண்டு வறண்டு போய் இன்னும் இவளுக்காகக் காத்திருக்கும் இட்லிகளை மெதுவாய் வாய்க்குள் தள்ளினாள். அது தொண்டையைத் தொடுகையில் விக்கலுடன் அவளறியமல் கண்களில் நீர் பெருகி சொட்டியது. பின் அந்த தட்டையும் கழுவி வைத்துவிட்டு திண்ணைக்கு வந்தாள். பாயின் அருகில் விரிந்து கிடந்த வெளக்கமாற்றை சரி செய்து ஓரம் போட்டு விட்டு தானும் ஒரு ஓரமாய் அதன் அருகில் படுத்துக்கொண்டாள், அழுகையுடன் வெளக்கமாறாக...

Representational Image
Representational Image
Prashanth Pinha on Unsplash

நம் தினசரி வாழ்வில் ஒரு சில பத்மினிகளைக் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். சில பத்மினிகளை நாமே உருவாக்குகிறோம். இன்னும் சில நேரங்களில் நாமே பத்மினிகளாகவும் இருக்கிறோம்.. பத்மினிகள் உருவாவது நிறுத்தபடப் போவதுமில்லை.

பத்மினிகளின் வாழ்வு முழுக்க கண்ணீரால் நனைந்து கொண்டே தான் இருக்கிறது. அவளின் கண்ணீரைத் துடைக்க முடியாத கைக்குட்டையாகி நிற்கிற சமூகத்தில் நானும் ஒருவன்.

சொல்லப்படாத ஒரு பத்மினியின் கதை இது. இன்னும் கூட எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பத்மினியின் வாழ்க்கை இப்படி இருக்கத்தான் செய்கிறது... பத்மினிகளின் வாழ்வு நாளை நிச்சயம் விடியும். விடியலை நோக்கி நம்பிக்கையோடு...

- ச.வினோத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு