Published:Updated:

150 ரூபாயும் முட்டை புரோட்டா ஆசையும்! - லாக் டெளன் குறுங்கதை #MyVikatan

செல்வி, பாத்திரங்களைக் கழுவிவிட்டு வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அப்போது, பக்கத்து காம்பவுண்டில் குடியிருக்கும் உமா வந்தாள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

செல்வியின் கணவன் தங்கவேலுக்கு கொரோனா லாக்டௌனில் வேலை இல்லை. டி.வி-யில் எல்லா சேனல்களையும் மாத்தி மாத்தி பார்த்துவிட்டு, எதுவும் சரியில்லை என தெரு முச்சந்தியில் நண்பனின் வீட்டுக்கு தாயம் விளையாடச் சென்றான்.

செல்வி, பாத்திரங்களைக் கழுவிவிட்டு வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அப்போது, பக்கத்து காம்பவுண்டில் குடியிருக்கும் உமா வந்தாள்.

"ஏ செல்வி... குழம்பு ஏதும் வச்சியா... கொஞ்சம் இந்தக் கிண்ணத்துல குடேன்" என்றாள்.

"சாம்பார்தான் வச்சேன், உள்ள வா தாறேன்" என்று அழைத்தாள் செல்வி.

"உன் வீட்டுக்காரு இருக்காரா?" என உமா கேட்க,

"இல்லடி பொழுது போகலனு சுரேஷ் அண்ணே வீட்டுக்கு தாயம் விளையாட போயிருக்கு " என்றதும் வீட்டைப் பெருக்கி ஒதுக்கிய குப்பை மேல் கால் படாமல் எம்பி நடந்து, வீட்டுக்குள் வந்தாள் உமா.

Representational Image
Representational Image

செல்வி, அந்தக் குப்பையை முறத்தில் அள்ளிக்கொண்டே,

" ஏண்டி சமைக்கலயா இன்னைக்கு?" என்றாள்.

"இல்லடி நேத்து என் வீட்டுக்காரு முட்டை புரோட்டாவும் மட்டன் சுக்காவும் வாங்கிட்டு வந்துச்சு... அது மிச்சம் இருக்கு. நான் அதை சாப்பிட்டுக்குவேன். அவங்களுக்கு மட்டும் கொஞ்சம் சோறு வடிச்சேன். அதான் கொஞ்சம் குழம்பு உன்கிட்ட இருந்தா வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்" என்றாள்.

"அப்புடியா, உனக்கும் கொஞ்சம் சோறு சேத்து வடிச்சிருக்கலாம்ல. கூட கொஞ்சம் சாம்பார் தர மாட்டேனா நானு" என்று செல்வி சொன்னதும்,

"வேணா வேணா முட்டை புரோட்டா தான் சாப்பிடுவேன். செம்ம டேஸ்ட்டுடி. கடைக்காரன் 2 புரோட்டாவும் 1 முட்டையும் போட்டு தான் செய்வான். ஆனா, என் வீட்டுக்காரு எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கூட 2 புரோட்டாவும் முட்டையும் போட்டு ஸ்பெசலா வாங்கிட்டு வந்துச்சு. நெறய இருந்துச்சா அதான் பாதி சாப்பிட்டு மீதியை வச்சிருக்கேன்" என்றாள் உமா.

"அடேங்கப்பா அவ்ளோ பிடிக்குமா உனக்கு. ஆமா, ஹோட்டல் கடைலாம் திறந்து இருக்கா" என செல்வி கேட்க,

" நம்ம ஏரியா முச்சந்தில ராஜேஸ்வரி புரோட்டா கடை இருக்குல... அது தொறந்து இருக்குடி. பார்சல் மட்டும் குடுக்குறாங்கடி. நீ ஒரு தடவ அந்தக் கடைல முட்டை புரோட்டாவும் மட்டன் சுக்காவும் வாங்கி சாப்பிட்டுப் பாரு... அப்போ தெரியும். நான் ஏன் இப்படி பேசுறேன்னு" பூரித்துப்போய் உமா சொன்னாள்.

"அதெல்லாம் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லடி. என் வீட்டுக்காரு வாங்கித் தர மாட்டாரு. நானும் கேக்க மாட்டேன் " என்றாள்.

Representational Image
Representational Image

"மாசத்துல ரெண்டு தடவை அவரே வாங்கிட்டு வந்துருவாரு. இல்லாட்டி நானே அடம் பிடிச்சு வாங்கிட்டு வரச் சொல்லிருவேன். நீயும் உன் வீட்டுக்காரர்ட்ட கேட்டுப்பாரு வாங்கித் தர மாட்டேனா சொல்லப்போறாரு..." என்றாள் உமா.

"ஆமா இப்டி நீ வாயப் பொளக்குற அளவுக்கு அப்டி என்ன டேஸ்ட்டு அதுல" என கேட்க, உமா சொல்ல ஆரம்பித்தாள்.

"அடுப்புல நல்லா காஞ்ச தோசைக் கல்லுல எண்ணெய ஊத்தி, வெங்காயம் பச்சைமிளகா கருவேப்பிலைய போட்டு, மசாலாவை போட்டு வதக்கி, முட்டையை உடைச்சு ஒரு கிண்ணத்துல போட்டு தகடகனு அடிச்சு அதுல ஊத்தி, முட்டை பொறிஞ்சதும் 2 புரோட்டாவ பிச்சுப்போட்டு சால்னாவ கொஞ்சம் ஊத்தி கொத்துற பிளேட்ட வச்சு டகடகடகடக னு அடிக்கும்போது ஒரு வாசம் வரும் பாரு, அப்போவே சாப்பிடணும்னு எச்சி ஊரிடும். அப்பறம், அதை ஒரு பேப்பர்ல வாழை இலை வச்சு கொஞ்சம் தயிர் வெங்காயம் அதுமேலே இன்னொரு இலையை வச்சு முட்டை புரோட்டடாவ வச்சு கட்டிக்குடுப்பான். வீட்டுக்கு வந்து அதை ஓப்பன் பண்றப்போ அந்த இலை வாசத்தோட சேர்ந்து ஒரு வாசம் வரும் பாரு... அப்டியே அதுல ஒரு கை எடுத்து மட்டன் சுக்காவை தொட்டு சாப்பிட்டா... ஹப்பா.. அப்டி இருக்கும். 150 ரூபாய்க்கு இவ்ளோ டேஸ்ட்டா ஒரு ஐட்டம் எந்த ஹோட்டலேயும் கிடைக்காது" என உமா சொல்லி முடிக்க,

செல்வி சிரிக்க ஆரம்பித்தாள். "என்னடி நீ இப்டி சின்ன புள்ளையாட்டம் பேசுற... சரி இந்தா லேசா சூடு பண்ணிக்கோ" என்று சாம்பார் கிண்ணத்தை நீட்டினாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ம்க்கும். உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நான் கெளம்புறேன்" என்று சொல்லிவிட்டு கிண்ணத்தை வாங்கிட்டு கிளம்பினாள்.

அவள் போனதும், வேலைபார்த்த சோர்வில் வியர்வையைத் துடைத்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள். உமா சொன்ன முட்டை புரோட்டா ஞாபகம் வந்தது. அவள் ரசித்துச் சொன்ன விதம் செல்விக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. மற்றவர்களின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்து நாம் அவர்களை கிண்டல் செய்தாலும், உள் மனத்தில் நமக்குள் இருக்கும் சிறுபிள்ளைத்தனம் சிறிது வெளியே வரத்தான் செய்யும்.

"கேட்டுப்பாரு... வாங்கி தரமாட்டேனா சொல்லப்போராரு" என்று உமா சொன்னது மனத்தில் ஓடியது.

"சரி கேட்டுத்தான் பார்ப்போமே" என்று நினைத்தாள்.

தங்கவேலு இரவு வீட்டுக்கு வந்ததும் அவனிடம் கேட்டாள். "என்னங்க, எனக்கு புரோட்டா சாப்பிடணும் போல இருக்கு, வாங்கிட்டு வரீங்களா?" என்றாள்.

Representational Image
Representational Image

"அதுக்குலாம் என்கிட்ட இப்போ காசு இல்ல. வேலை இல்லாம வீட்ல உக்காந்து இருக்கேன். உனக்கு புரோட்டா கேக்குதா" என்றான்.

அவனிடம் காசு இருப்பது தெரிந்தும் "சரி சரி இப்ப இல்ல. எல்லாம் சரியானதும், வேலைக்குப் போனதும் வாங்கித் தர்றீங்களா" எனக் கேட்க,

"அப்பறம் பாப்போம்" என்றான்.

" சரின்னு தான் சொல்லுங்களேன். ஒரு 150 ரூபாய்க்கு எனக்கு முட்டை புரோட்டாவும் மட்டன் சுக்காவும் ஒரே ஒரு தடவை வாங்கித் தாங்க" என்று கையைப் பிடித்தாள்.

படக்கென்று கையை உதறி, "என்னமோ 2 புரோட்டா கேக்குறனு பாத்தா முட்டை புரோட்டா, மட்டன் சுக்கா. இன்னைக்கு இது கேக்குற... நாளைக்கு சிக்கன் பிரியாணி கேப்ப. அப்பறம் தினம் தினம் ஹோட்டல்ல வாங்கிட்டு வரச்சொல்லி சமைக்காம உட்கார்ந்திருப்பியா..?" என கத்தினான்.

"இப்போ எதுக்கு இப்டிலாம் பேசுறீங்க? நான் ஒரே ஒரு முறை தானே கேட்டேன். சரி விடுங்க. எதுவும் வேணாம் எனக்கு" என்று லேசாய் கண் கலங்கி கிச்சனுக்குள் சென்றாள்.

தங்கவேலுவின் போன் அடித்தது. போன் எடுத்துப் பேசினான்.

"சுரேசு... சொல்லுடா. என்னது கடை தொறக்குறாங்களா? செய்தி பாத்தியா சொல்லிட்டாங்களா..? சூப்பர்டா. நாளைக்கு முதல் ஆளா போய் சரக்கு வாங்கிட்டு வந்துருவோம்டா. ஆளுக்கு ஒரு ஃபுல்லு வங்கிருவோம். ம்ம்ம்? கூட்டம் இருந்தா என்ன இப்போ. என்னது காசா..? நான் இருக்கும்போது நீ எதுக்கு காசப்பத்தி கவலப்படுற. நீ பேசாம வா. நான் பாத்துக்கிறேன். விழுகுறது தாயமா பன்னிரண்டானு ஒண்ணும் தெரியக்கூடாது. அம்புட்டு குடிச்சுட்டு ஜாலியா விளையாடணும்" என்று சிரித்துவிட்டு போனை வைத்தான்.

கிச்சனுக்குள் இருந்து கேட்ட செல்வி வெளியே வந்து கேட்டாள். "என்னங்க... 2 ஃபுல்லு எவ்ளோங்க?"

- மாடசாமி மனோஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு