Published:Updated:

டிஜிட்டல் புதிரும் புதையலும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Setyaki Irham on Unsplash )

அதிகாரிக்கு பதற்றமும் பயமும் மேலிட்டது. அவர்கள் யாராக இருக்கும்... என்ன வேலை நமக்கு கொடுக்கப்போகிறார்கள் என்று குழம்பினார். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு தகவல் புகைப்படத்துடன் வந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அந்த அதிகாலை வேளையிலேயே அவர் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி அவர். சற்று நேரத்திற்கு முன்பு, அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே ஒரு வரியில் மெசேஜ் ஒன்று வந்திருந்தது. "உங்கள் போனை ஹேக் செய்துள்ளோம், காத்திருக்கவும்". அவ்வளவுதான் அந்தத் தகவலில் இருந்தது. இது அவருக்குப் பெரும் குழப்பத்தை அளித்தது.

சிறிது நேர குழப்பமான சிந்தனைக்குப் பிறகு, தனது ட்விட்டர் பக்கத்தை ஓப்பன் செய்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

தற்போது டிரெண்டிங்கில் உள்ள ஒரு பிரச்னை குறித்த மக்களின் கருத்திற்கு எதிரான ஒரு கருத்து அவரது பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மிகுந்த பதற்றத்துடன் அப்பதிவை அழித்தார்.

Representational Image
Representational Image
Luis Villasmil on Unsplash

தனது போன் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் என்பது அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சி விலக சிறிது நேரம் ஆனது. பிறகு ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தனது வாட்ஸ்அப் பக்கத்தினை ஓப்பன் செய்தார். அதிகாலையில் மெசேஜ் வந்த அதே எண்ணில் இருந்து மற்றொரு தகவல் வந்திருந்தது. பதற்றத்துடன் படிக்க ஆரம்பித்தார்.

"நாங்கள் எங்களை நிரூபிக்கவேண்டி, ட்விட்டரில் உங்கள் கணக்கிலிருந்து பதிவு போட வேண்டியிருந்தது. மன்னிக்கவும். நாங்கள் அளிக்கும் வேலையை நீங்கள் செய்தால், எங்களால் எந்தப் பிரச்னையும் வராது. காத்திருக்கவும்" என்றது தகவல்.

அதிகாரிக்கு பதற்றமும் பயமும் மேலிட்டது. அவர்கள் யாராக இருக்கும்? என்ன வேலை நமக்கு கொடுக்கப்போகிறார்கள்? என்று குழம்பினார். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு தகவல் புகைப்படத்துடன் வந்தது. அந்தப் படத்தில், எளிதில் புரிந்துகொள்ள முடியாதவாறு குறியீடுகளுடன்கூடிய ஒரு மேப் இருந்தது. "இந்த மேப் குறிக்கும் இடத்தை விரைவில் கண்டறிந்து வாட்ஸ் அப்பில் பகிரவும், நன்றி" என்றது தகவல்.

அவர், 30 ஆண்டுகள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டில் வேலை செய்திருந்தபோதும், அந்த மேப் குறிக்கும் இடம் எதுவென அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை. ஆனால், இந்தப் பிரச்னைக்காக போலீஸிடம் போனால், போனில் தான் ரகசியமாக வைத்துள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியே கசிந்துவிடும். மேலும், தனது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் பிரச்னைகள் உண்டாகும். எனவே, இந்தப் பிரச்னையில் இருந்து தான் வெளிவர இந்த மேப் குறித்த புதிரை விடுவிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

Representational Image
Representational Image
Muhannad Ajjan on Unsplash

அவர் அந்த மேப்பை தீவிரமாக ஆராயத் துவங்கினார். மேப்பின் புதிரை விடுவிக்கவேண்டி, வேறு பல பொய்யான காரணங்களைக் கூறி தன் துறையின் சீனியர்கள் மற்றும் ஜூனியர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றார். துறையின் தொழில்நுட்பத்தையும் முழுக்கப் பயன்படுத்தினார்.

பலத்த முயற்சிகளுக்குப் பின், அவர் அந்தப் புதிரை விடுவித்தார். அது ஒரு புதையல் இருக்கும் இடம் குறித்த என்கோடு (Encode) செய்யப்பட்ட மேப். புதையல் குறித்து அவருக்கு சிறிது சபலம் ஏற்பட்டாலும், அதைவிட மானம் பெரிது என்பதால் அதனை முழுக்க டீகோடு ( Decode) செய்து, அந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினார்.

'மிக்க நன்றி' என உடனே பதில் கிடைத்தது.

அவர் அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சுவிட்டபடி தனது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்தார்.

ஆனால், சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த எண்ணிலிருந்து தகவல் வந்தது. "உங்கள் உதவி மீண்டும் தேவை. காத்திருக்கவும்" என்ற தகவல் அவருக்குப் பீதியூட்டியது.

சில நிமிடங்களில் இரு போட்டோக்கள் வாட்ஸ்அப் மூலமாக வந்தன. ஒன்றில் ஒரு மேற்கத்திய நாட்டின் ரூபாய் நோட்டும், இன்னொன்றில் சில புரியாத குறிப்புகளும் இருந்தன.

"இதனையும் கண்டுபிடிக்கவும்" என்ற தகவலும் உடன் வந்தது.

Representational Image
Representational Image
Caspar Camille Rubin on Unsplash

அவர் பலநாள் முயற்சி செய்தும் இரண்டாவதாக அனுப்பப்பட்ட போட்டோக்களின் புதிரை அவரால் விடுவிக்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் சென்றன. அவருக்கு மிரட்டல் மெசேஜ்கள் வருவது சுத்தமாக நின்றுவிட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில், அவர் அந்த இரண்டாவது புதிரையும் விடுவித்து விட்டார். புதிரை Decode செய்து வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தார். நன்றி என்ற தகவலுடன் அந்த எண்ணிலிருந்து பிறகு தகவல்கள் வருவது நின்றுபோய்விட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தன்னுடைய மகன் வசிக்கக்கூடிய அமெரிக்காவிற்கு பயணம் செல்ல ஆயத்தமானார். ஏர்போர்ட்டுக்குச் செல்ல வழக்கமான வழியில் செல்லாமல் வேறு ஒரு வழியில் காரைச் செலுத்துமாறு தன் டிரைவரிடம் கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்கினார் அந்த அதிகாரி.

அது ஒரு குப்பைக் கிடங்கு! சற்று நேரம் குப்பைக் கிடங்கையே ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு காரில் ஏறி அமர்ந்து ஏர்போர்ட்டுக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்.

டிரைவருக்கு, அவர் எதற்கு குப்பைக் கிடங்கிற்கு வாகனத்தை செலுத்தக் கூறினார் எனப் புரியவில்லை.

குழப்பத்துடன் வாகனத்தை ஏர்போர்ட்டை நோக்கிச் செலுத்தினார் டிரைவர்.

Representational Image
Representational Image
Pixabay

அமெரிக்காவில் அவரை உற்சாகமாக வரவேற்ற மகன், "என்னப்பா ஏதோ புதையல் கொண்டு வர்ரேன்னு சொன்னீங்க?" என்றான் எதிர்பார்ப்புடன்.

"கொண்டு வந்திருக்கேன்!" என்று புன்னகையுடன் கூறினார் அதிகாரி!

"அது என்ன புதையல்? இவ்வளவு டைட்டான கஸ்டம்ஸைத் தாண்டி அதை எப்படிக் கொண்டு வந்தீங்க?" என ஆச்சரியத்துடன் கேட்டான் மகன்.

அதற்கு அவர், "என் போனை ஹேக் செஞ்சு எனக்கு மிரட்டல் வந்த கதையை ஏற்கெனவே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு மிரட்டல் வந்தபோது, முதன்முதலில் அனுப்பப்பட்ட மேப்பை பார்த்ததுமே அது யாராக இருக்கும் என நான் கண்டுபிடிச்சுட்டேன். ஏன்னா நான் வேலையில் சேர்ந்த புதிதில் இந்த மேப்பை என் அதிகாரியிடம் காட்டி விளக்கம் கேட்க ஒரு அரசியல்வாதி அடிக்கடி வருவார். அவர், ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் இறந்தார்.

அவருடைய மகன் ஒரு புத்திசாலியான சாஃப்ட்வேர் என்ஜினீயர். அவர் இறந்த பிறகு, அவரோட மகன்தான் இந்த மாதிரி என்னை மிரட்டுகிறான் எனக் கண்டறிய எனக்கு கஷ்டமாக இல்லை!

மேப்பை டீகோடு செய்ததில், மேப் குறிப்பிடும் இடத்தில் மேற்கத்திய நாட்டின் ஒரு ரூபாய் நோட்டும் ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரிந்தது. அவனுக்கு அந்த இடத்தை நான் சரியாகக் கூறிவிட்டேன்.

அவனும் அந்த இடத்தில் தோண்டி, ஒரு கெட்டியான பிளாஸ்டிக் டப்பாவினுள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டையும், ஒரு குறிப்பையும் எடுத்தான். அது என்னன்னு அவனுக்குப் புரியாததால மீண்டும் நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அவற்றைப் போட்டோ எடுத்து அனுப்பினான்.

Representational Image
Representational Image
Antoine GIRET on Unsplash

அந்தக் குறிப்பு மிகச் சுலபமானது. பார்த்தவுடனே நான் அதைப் புரிந்துகொண்டேன். ஆனால், புரியாதது போல நடித்தேன். அது வேறு ஒரு இடத்தைப் பற்றிய குறிப்பு. அங்கு சென்று தோண்டிப் பார்த்தபோது எனக்கு ஒரு பழைய செய்தித்தாள் கிடைத்தது. அந்த செய்தித்தாள்தான் உண்மையான புதையலே!

ஏன்னா, அந்த செய்தித்தாளில் ஒரு ஐரோப்பிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படவேண்டிய அரசனின் படம் இடதுபுறத்துக்குப் பதில் வலதுபுறம் சில ரூபாய் நோட்டுகளில் மட்டும் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாக இருந்தது.

மேலும், தவறு கண்டுபிடிக்கப்பட்டதுமே அவை அனைத்தையும் அரசாங்கம் உடனே திரும்பப் பெற்றுவிட்டதாகவும் செய்தி இருந்தது. ஆனால், ஒரே ஒரு ரூபாய் நோட்டு மட்டும் அரசாங்கத்திடம் திரும்ப வரவே இல்லை என்றும், அரிய பொருள்களைச் சேகரிப்பவர்கள் அந்த ரூபாய் நோட்டுக்கு அப்போதே லட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் செய்தி வந்திருந்தது.

மேலும், 50 வருடங்களுக்குப் பிறகு இதன் மதிப்பு கற்பனைகூட செய்ய முடியாதது என்றும் இருந்தது. இப்போது இது நடந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது அந்த ரூபாய் நோட்டின் மதிப்பை சிந்தித்துப் பார்" என்றார் அந்த அதிகாரி புன்னகையுடன்.

"சரி அந்த நோட்டு இப்ப உங்ககிட்ட இருக்கா? என்றான் மகன் ஆர்வத்துடன்.

Representational Image
Representational Image
Hermes Rivera on Unsplash

"பல நாட்களா என்னால இரண்டாவது குறிப்பைக் கண்டுபிடிக்க முடியாததால அவன் அந்த ரூபாய் நோட்டையும் குறிப்பையும் குப்பையில தூக்கிப் போட்டுட்டான். இப்படித்தான் நடக்கும்னு நான் முன்கூட்டியே கெஸ் பண்ணினேன்.

அந்த வீட்டில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும் என நான் அவன் வீட்டு குப்பைத்தொட்டி அருகில் ஒரு ஆளைப் போட்டு வைத்திருந்தேன்.

அவ்வாறு ஒருநாள், குப்பையில் கசங்கிப்போன இந்தப் பணம் கிடந்தது.

பணம் கிடைத்த அடுத்த நாளே செய்தித்தாள் இருக்கும் இடம் குறித்த குறிப்பை நான் அப்போதுதான் கண்டுபிடித்ததுபோன்று அவனுக்கு தகவல் அனுப்பினேன்.

நான் படித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்த செய்தித்தாளைப் படித்தவன், அந்த ரூபாய் நோட்டைத் தேடி தன் வீட்டுக் குப்பை இறுதியாகப் போய்ச் சேரும் குப்பைக் கிடங்கே கதியாகக் கிடக்கிறான்.

இங்கு வருவதற்கு முன்புகூட அவனை அந்த குப்பைக் கிடங்கில் கடைசியாகப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்" என்று சிரித்தபடி அந்தக் கசங்கிய ரூபாய் நோட்டை எடுத்து மகனிடம் கொடுத்தார் அதிகாரி!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு