Published:Updated:

`என் இறப்பு இந்த லாக்டெளன் நேரத்திலா நிகழணும்?’ -ஓர் உன்னத ஆன்மாவின் புலம்பல் #MyVikatan

கொரோனாவினால் கூட்டம் சேரவில்லையா... இல்லை, யாருக்கும் என் சாவுக்கு வர விருப்பமில்லையா எனத் தெரியவில்லை! மூன்று வீடுகளில் மட்டும் ’உச்’ கொட்டி பேசிக்கொண்டார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னை எரிக்கவோ புதைக்கவோ வேண்டாம், பசுமைத் தகனம் செய்துவிடலாம் என்ற புதிய முறையை யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தோனேஷியாவில், டோராஜா இன மக்கள், இறந்த குழந்தைகளைத் துணியால் போர்த்தி மரத்தில் துளையிட்டு அதில் புதைப்பார்கள். அதுதான் பசுமைத் தகனம் என நினைத்தேன்.

ஆனால், வீட்டிற்குள் இருந்தவர்கள் வேறுவிதமாகப் பேசியது எனக்கு பகீர் என்றது! அதாவது, ஆல்கலைன் ஹைட்ரோலிசிஸ் என்பதுதான் பசுமைத் தகனம்! என்னுடைய உடலை பொட்டாசியம் ஹைட்ராக்சைட் என்ற வேதிப்பொருள் உள்ள கரைசலில் போடுவது. என் சதையெல்லாம் கரைந்து எலும்புக் கூடு மட்டுமே தங்கும்.

Representational Image
Representational Image
Pixabay

நினைத்தாலே முடி சிலிர்க்க வாய்ப்பில்லை... நான் இறந்து போயிருக்கிறேன்.

யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் எல்லாம் புதைப்பதுதான் வழக்கம். இங்கு, இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் இருப்பதால், இவர்கள் என்னை புதைப்பதா இல்லை எரிப்பதா என முதலில் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியைப் புதைக்க சுடுகாட்டிற்குப் போனபோது, அங்கே நிறைய பேரை புதைத்து சமாதி கட்டியிருப்பதை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்! மதத்தலைவர்களைப் புதைத்து, அதிஷ்டாணம் கட்டி வழிபடுவார்கள். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கப்போவதில்லை! ஆனாலும் எரிக்காமல் இருக்கலாமே!

பெங்களூரு மாகடிரோடு சுமனஹள்ளியில் 2.35 கோடி ரூபாய் மதிப்பில் மயானம் அமைக்கப்பட்டதாக இந்தத் தெருவில் உள்ள பெங்களூரில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் சொன்னது ஞாபகம் வந்தது. அந்த மாதிரி மயானத்தில் என்னைத் தகனம் செய்ய வேண்டும் என நான் நினைக்கவில்லை.

இன்னொரு பயமும் இருக்கு. எரிக்கும்போது நரம்புகள் முறுக்கேறி, சவம் எழுந்து நிற்கும். அப்போது, அதைப் பெரிய தடியை வைத்து ஓங்கி அடிப்பார்களே... அப்படி அடித்தால் நான் தாங்குவேனா என்ற பயம் வேறு. அதுமட்டுமல்ல, எரிக்கும்போது சுமார் 1,600 முதல் 2,000 டிகிரி வெப்பம் வரும். நான் சாதாரண வெயிலில்கூட நடந்ததில்லை.

நினைத்தாலே அழுகை வருகிறது. ஆனால், நான் ஏற்கெனவே இறந்து போனதால் கண்ணீர் வர வாய்ப்பு இல்லை.

இது லாக்டெளன் 4.0 காலம்!

என் இறப்பு இந்த நேரத்திலா நிகழவேண்டும்?

Representational Image
Representational Image
Pixabay

நான் இறந்து போய் ஒரு மணி நேரத்துக்கு மேலாயிருக்கும். கொரோனாவினால் கூட்டம் சேரவில்லையா... இல்லை, யாருக்கும் என் சாவுக்கு வர விருப்பமில்லையா எனத் தெரியவில்லை! மூன்று வீடுகளில் மட்டும் ’உச்’ கொட்டிப் பேசிக்கொண்டார்கள். என் கணக்குப்படி, மொத்தமே 10 பேர்தான் என் மரணம் குறித்தான கவலையில் மூழ்கினார்கள்.

கடந்த ஒரு வருடமாகக் கண்ணில் கோளாறு. அதனால் பழையபடி ஓடியாடி நடக்க முடியவில்லை. கால்களில் வீக்கம், ஒரு மாதமாக நடக்க முடியாத சூழ்நிலை. கண்கள் முழுவதுமாக செயல் இழந்துவிட்டிருந்தன.

லாக்டெளன் 2.0-ல் என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவசர சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும் எனக் கூறி மருத்துவமனைக்குள்ளே அனுமதிக்கவில்லை. யாரோ தெரிந்த டாக்டரிடம் மருந்து பெயரைக்கேட்டு வைத்தியம் பார்த்தார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன் டாக்டரிடம் கேட்டு ஊசி போட்டார்கள். அதிலிருந்தே எனக்கு ஆகாயத்தில் பறப்பதான உணர்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடுவில் இருமுறை குளிக்கவைத்தார்கள். அந்தப் பாட்டி உடல்நிலை சரியில்லாதபோது இப்படித்தான் குளிக்கவைத்து ஹாலில் வடக்கில் தலை வைத்துப் படுக்கவைத்தார்கள். எனக்கும் நேற்று மூச்சுத் திணறல் வந்தது. நேற்று மாலையில் குளிக்க வைத்து, வடக்கு பார்த்து படுக்கவைத்தார்கள். இன்று காலையில் வந்த பக்கத்து வீட்டுக்காரர்தான் தொட்டுப்பார்த்துவிட்டு, நான் இறந்துவிட்டதை உறுதிசெய்தார்.

வாசலில் ஓரமாகப் படுக்கவைத்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே எனக்காக அழுதார்கள். மற்றபடி உலகம் எப்போதும்போல இயங்கிக்கொண்டேதான் இருந்தது. இறந்த தகவலைச் சொல்வதில்கூட அலட்சியம்தான். அவர்களாகவே தெரிந்து கேட்டால், ``ஆமாங்க, இரண்டு நாளா சோறு தண்ணி இறங்கலை. இன்னிக்கு காலையில போயிடுச்சு’’ என எந்த சுரணையுமில்லாமல் சொல்கிறார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

இந்த ஊருக்குக் கிழக்கே ஒரு ஏக்கரில் சுடுகாடு இருக்கிறது. ஆனால், அங்கே புதைக்க மறுக்கிறார்கள். ஒருவேளை தேசிய நெடுஞ்சாலையான பின் புதைக்க அனுமதியில்லையோ! போனவாரம் இறந்த ஒரு தாத்தாவைக்கூட மின்மியானத்திற்குத்தான் எடுத்துச்சென்றார்கள்.

எனக்கு எந்த அலங்காரமும் செய்யவில்லை. அதுகூட கெளரவப் பிரச்னையாகத் தெரியவில்லை. என்னை அடக்கம் செய்யக் காரசார விவாதம் இன்னும் போய்க்கொண்டிருப்பதுதான்.

புதைக்க இடமில்லையென என்ற இடநெருக்கடி பிரச்னை உலகில் எங்கும் வந்ததில்லை. ஆனால், புதைக்க விடமாட்டோம் என்ற பிரச்னைகள்தான் வந்துள்ளன.

வாழ்ந்த மண்ணில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகத்தான் எனக்கு விருப்பம்.

வீட்டிற்குள் புதைப்பதா, எரிப்பதா, பசுமைத் தகனமா என்ற விவாதம் முடிவிற்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இறுதியில் புதைப்பதாகத் தீர்மானித்திருப்பதை அவர்கள் வாங்கச் சொல்லும் பொருட்களிலிருந்து புரிந்துகொண்டேன். கொஞ்சம் ஆறுதலடைந்தேன்.

மஞ்சள் மற்றும் சில பொருட்களோடு அரை லிட்டர் பால் வாங்கி வரச் சொல்கிறார்கள். அதற்கான ஆள் காசு வாங்கிக்கொண்டு வெளியே செல்லும் காலடிச் சத்தத்தை உணர்கிறேன்.

என்னை தூக்கிச்செல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். என்னுடைய குலம் சார்ந்த எந்தத் தகவலும் இல்லை. ஆகவே, எனக்கு எந்த வகையில் இறுதிச்சடங்கு செய்வார்கள் எனத் தெரியவில்லை.

Representational Image
Representational Image
Unsplash

அடக்கம் செய்யும் ஆள் வந்துவிட்டார். அவர் வந்தவுடன் விஷயங்கள் வேகமாக நடந்தன. மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன.

யாரோ, ”தூக்கலாம்!” எனச் சொன்னதும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எங்கே கொண்டுசெல்கிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசியாக, என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள் என நினைத்தேன். குறைந்தபட்சம் வெள்ளைத் துணியாவது போர்த்துவார்கள் என நினைத்தேன்.

எத்தனையோ பேர், ரோட்டில் விபத்தில் சிக்கி அநாதையாய் உயிரிழக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது என் மரணம் எவ்வளவோ பரவாயில்லை என ஆறுதலடைந்தேன்.

நான் சுற்றித்திரிந்த தெருவிலிருந்து ஆட்கள் வருவார்கள் என எதிர்பார்த்தேன். எனது முகத்தைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது என வரவில்லையாம். அங்கேயே அழுதுகொண்டு இருப்பதாக பேசிக்கொண்டார்கள். வேறு யாராவது முக்கியமான ஆட்கள் என் சவ ஊர்வலத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தேன்.

என் சாவு நல்ல சாவுதான். ஆனால், நான் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இன்னும் இடம் முடிவு செய்யாதது எனக்கு பெரும் கவலையாக இருந்தது, கோபத்தைக் கிளறியது.

என்னை தூக்கிக்கொண்டு நடக்க நடக்க என்னை எங்கே புதைக்கலாம் எனப் பேச்சு எழுந்தது.

Representational Image
Representational Image
Vikatan Team

”இந்த ரயில் தண்டவாள ஓரத்தில்….” எனப் பதில் வந்தது.

”சரி… சரி அங்கேயே போகலாம்!” என அதற்கு ஒப்புதல் கிடைத்தது.

தண்டவாளத்திலிருந்து ஐம்பதடி தூரத்தில் என் உடலை இறக்கி வைத்தார்கள்!

எத்தனை அடி தோண்டுவது?

சும்மா… பாடி உள்ளே போனா போதும்! நாய், காக்கா வந்து இழுக்காம இருந்தா போதும்... ரொம்ப ஆழம் வேண்டாம்!

பேசிக்கொண்டே என் மானத்தைக் குழிபறித்தார்கள்.

மண்ணைக்கூட மெதுவாகத் தள்ளவில்லை. மண்வெட்டியில் மளமள எனத் தள்ளி, காலால் மிதித்து மேற்பாகத்தை சமன் செய்து இருப்பார்கள் போல. எலும்பு உடையும் அளவுக்கு வலி.

ஊதிபத்தி பற்ற வைத்தார்கள். நான் செத்துப்போய் மூச்சு நின்று போனதால் மூக்குக்கு வேலையில்லாமல் போயிருந்தது.

இந்த ஊரில் பதினைந்து வருடங்களாக வாழ்ந்த சரீரம் என்னுடையது.

பதினைந்து வருடங்களுக்கு முன் பேருந்து நிறுத்தத்தில் திக்குத்தெரியாமல் அலைந்துகொண்டிருந்த என்னை, பாட்டிதான் பாவப்பட்டு தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். எங்கயோ போயிருந்த பாட்டியின் பேரன் ஓடிவந்து என் தலைமாட்டில் பாலை ஊற்றினான்.

அவர்கள் புறப்பட்டார்கள்!

Representational Image
Representational Image
Vikatan Team

என்னைப் புதைத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது கண்ணீரோடு எனது எஜமான் பேசிய வார்த்தைகள்தான் நான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்! மேலிருந்து குழிக்குள் ஒழுகிவந்த பாலை நக்கிக்கொண்டே நான் நிம்மதியாகக் கண்களை மூட ஆரம்பித்தேன். அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

``பதினைந்து வருஷமா எங்க காலையே சுத்திவந்தது...

ஜெர்ரி மாதிரி நாய் இனி கிடைக்காது!

நாய் நன்றியுள்ளது. எங்க ஜெர்ரி அதுக்கும் மேல!"

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு