Published:Updated:

விவசாயி மகனாகப் படிப்பை முடிப்பது சுலபமல்ல! - வாசகர் பகிரும் நினைவலைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Vijayakumar.M )

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த கால கட்டம் அது. அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். ஐந்தாம் வகுப்பு முடிப்பவர்களே மிக குறைவாக இருப்பார்கள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1937 ஆம் வருடம் வடக்கு சித்தாம்பூர் என்ற சிறிய கிராமத்தில் ஐந்தாவதாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு அப்பா அம்மா வைத்த பெயர் முத்துசாமி. பிற்காலத்தில் அந்த கிராமம் அவருக்கு வைத்த பெயர் வாத்தியார். அன்றைய காலகட்டத்தில் அந்தச் சிறிய கிராமத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து படித்து வாத்தியார் ஆவது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை.

பிறக்கும்போதே யாரும் நான் இந்தத் தொழில் அல்லது இந்த வேலைக்குதான் செல்வேன் என்று முடிவு செய்து பிறப்பதில்லை. காலத்தின் தேவை, பொருளாதார வசதி வாய்ப்புகள், குடும்பச் சூழ்நிலை, தனிமனித விருப்பம், அதற்கான முயற்சி மற்றும் அதற்கு தேவையான அறிவை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவையே நாம் பிற்காலத்தில் என்னவாக ஆகிறோம் என்பதற்கான காரணிகளாக அமைகின்றன.

Representational Image
Representational Image
Kuruz_Dhanam.A

நான் என்னுடைய 13 வயதில் ஒரு அகழ்வாராய்ச்சி நிபுணனாக (Archaeologist) ஆக வேண்டும் என நினைத்தேன். காரணம் என்னுடைய வரலாறு மற்றும் புவியியல் பாடத்தில் நான் பெற்ற அதிக மதிப்பெண் மற்றும் அந்தப் பாடத்தில் எனக்கு இருந்த ஆர்வம். பின்னர் என் அப்பா நான் ஒரு பேராசிரியாக வரவேண்டும் PhD படித்து டாக்டரேட்(Doctorate) ஆகி என் பெயருக்கு முன்னே Dr. என்ற அடை மொழி இணைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். ஆனால் நான் சாப்ட்வேர் என்ஜினீயராக (Software Engineer) ஆவேன் என்று நான் எப்பொழுதும் நினைத்துப் பார்த்ததில்லை.

என் பாட்டனாருக்கு (அப்பாவின் அப்பா) விவசாயம்தான் தொழில். அந்தக் காலத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கிராமங்களில் மிக முக்கியமான தொழில். என் பாட்டனாருக்குக் கையெழுத்து போட தெரியும். என் அப்பாயி (அப்பாவின் அம்மா) இரண்டாம் வகுப்பு வரை படித்தவர் என்று சொல்வார்கள் மற்றும் அவர் பஞ்சாங்கமெல்லாம் பார்த்துச் சொல்வார்கள் என்று என் அம்மா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஓரளவு படிக்கத் தெரிந்திருந்தால் மட்டுமே பஞ்சாங்கம் பார்க்க முடியும். சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு திண்ணைப் பள்ளிக்கூடம் என்று சொல்வார்கள் அதில்தான் படிக்க வேண்டும். அதுவும் கல்வி அனைவருக்கும் பரவலாக்க படாத, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் இது மிக பெரிய விஷயம்.

Representational Image
Representational Image
Aravind.M

இத்தகைய சூழலில் என் அப்பாவிற்கு தான் படிக்க வேண்டும், படித்து அரசாங்க வேலைக்குச் செல்லவேண்டும் என்று எது உந்தியது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் படித்த சூழ்நிலையையும் எத்தகைய தடைகளைக் கடந்து படித்தார் என்பதையும் எங்களுக்குப் பலமுறை கூறியிருக்கிறார்.

எங்கள் ஊரில் என் அப்பா படித்த காலத்தில் தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். ஐந்தாம் வகுப்பு முடிப்பவர்களே மிகக் குறைவாக இருப்பார்கள். ஐந்தாம் வகுப்பு முடித்து மேலே படிக்க வேண்டும் என்றால் சற்று தொலைவில் 7 அல்லது 8 மைல் தொலைவில் உள்ள தீராம்பாளையம் என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்.

Representational Image
Representational Image
Vijayakumar.M

போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் நடந்துசென்றுதான் படிக்க வேண்டும். அவருடைய தினசரி நடைமுறை (Routines) என்பது அவர் படித்த காலகட்டத்தில் அவ்வளவு எளிதானதாக இருந்திருக்காது என்பது என்னுடைய அனுமானம். இதுதான் அவருடைய தினசரி நடைமுறை என்பதாக எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து வயலுக்கு நீர் பாய்ச்ச செல்ல வேண்டும். கிராமத்தில் மின்சாரம் என்றால் என்ன என்று தெரியாத, அறியாத காலகட்டம். மாடுகள் பூட்டி ஏற்றம் இறக்கும் முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். அதை ஏற்றத்துளை என்று சொல்வார்கள். பிற்காலத்தில் கிணறு நிரம்பிய காலங்களில் நாங்கள் அந்த ஏற்ற துளைக் கல்லின் நுனியில் நின்று கிணற்றில் குதித்து நீந்தியிருக்கிறோம். இன்றும் எங்கள் தோட்டத்திலுள்ள கிணற்றில் அது இருக்கிறது. ஆனால் வெகு நாள்களாக மழை இல்லாத காரணத்தால் கிணறு நீரின்றி வறண்டு கிடக்கிறது.

கிணற்றின் சுவரிலிருந்து இரண்டு நீண்ட படுக்கைக் கல் தரை மட்டத்திற்குப் பதிக்கப்பட்டிருக்கிக்கும். அதன் நுனி கிணற்றுக்குள் நீண்டிருக்கும். நுனியில் இரண்டு துளைகள் இருக்கும். அந்தத் துளைகளில் இரண்டு உறுதியான மரச்சட்டம் நடப்பட்டு ஒரு குறுக்குச் சட்டத்தால் இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் குறுக்குச் சட்டத்தில் ஓர் உருளை வளையத்தில் மாட்டப்பட்டிருக்கும். கற்களின் அடிப்பகுதியில் ஒரு உருளை பொறுத்தப்பட்டிருக்கும்.

Representational Image
Representational Image
Sai_Dharmaraj.S

நீர் சேந்தும் (சேகரிக்கும்) உபகரணத்தை நீர் சால் என்று சொல்வார்கள். அது இரும்பினால் ஆன மேற்பகுதி ஒரு பெரிய வட்ட வடிவப் பாத்திரம் (Drum) போல கீழே ஒரு வட்ட வடிவ வாயுடன் (Open) இருக்கும் அதனுடன் மாட்டுத் தோலினால் செய்யப்பட்ட பெரிய பை போன்ற அமைப்பு ஒரு பகுதி இணைக்கப்பட்டு மற்றொரு பகுதியில் கயிறு கட்டப்பட்டிருக்கும். இரும்பு வாளியின் மேற்புறத்தில் குறுக்காக நான்கு புறமும் அரை வடிவ வளையம் இணைக்கப்பட்டு நடுவில் ஒரு கயிற்றால் இணைக்கப்பட்டு இரண்டு கயிறும் நுகத்தடியுடன் இணைத்து இரண்டு மாடுகளின் கழுத்தில் இணைக்கப் பட்டிருக்கும்.

மாடுகள் பின்னே செல்லும்பொழுது நீர் சால் கிணற்றுக்குள் செல்லும், நீர்மட்டத்தைத் தொட்டவுடன் இரும்பு வாளியின் கனத்தால் நீருக்குள் அமிழ்ந்து நீர் சேகரிக்கப்படும் பின் மாடுகளை முன்னே செலுத்த மேற்பகுதி நிமிர்ந்து கீழே கயிற்றினால் கட்டி அடைக்க பட்ட தோல் பை மடங்கி சுமார் 100 அல்லது 150 லிட்டர் நீர் சேகரிக்கப்பட்டு மேலே வரும். மேலே வந்தவுடன் தோல் பையின் கீழ்ப்பகுதி வழியாக நீர் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டு வயலுக்குப் பாய்ச்சப்படும். நீர் மட்டத்தைப் பொறுத்து ஒரு நடைக்கு(ஒரு முறை மாடு பின்னே வந்து முன்னே செல்வதை நடை என்று சொல்வார்கள்) 5 லிருந்து 10 நிமிட நேரம் ஆகும்.

Representational Image
Representational Image

(ஒருநடையில் வரும் நீர், அடுத்த முறை நீர் சால் நீரைத் தொடும்போது முதலில் முகர்க்கப்பட்ட அளவு நீர் மீண்டும் ஊறியிருக்கும் என்று என் அப்பா சொல்வார். அப்படியென்றால் ஒரு நடைக்கு ஆகும் நேர இடைவெளிக்கும் அதே அளவு நீர் கிணற்றில் ஊற ஆகும் நேரமும் சமம் என்பது இங்கே கொசுறு தகவல்)

இது போல காலை 5 மணி வரை வயலுக்கு நீர்பாய்ச்சி விட்டு பிறகு குளித்து 6 அல்லது ஆறரை மணியளவில் பள்ளிக்குக் கிளம்புவாராம். ஆனால் இங்கு நான் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் என் அப்பாவை என்னுடைய பாட்டனார் வயலுக்கு நீர் பாய்ச்ச சொல்லி கட்டாயப் படுத்தியதாக எப்பொழுதும் குறிப்பிட்டதில்லை. இயல்பாகவே என் அப்பவிற்கு தான் ஒரு விவசாயியின் மகன் என்ற எண்ணம் ஆழப் பதிந்திருக்க வேண்டும். தன்னுடைய படிப்பு காரணமாக இது போன்ற வேலைகள் தடைபடக்கூடாது என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். அதனாலேயே பிற்காலத்தில் தான் ஒரு ஆசிரியராக ஆன பின்னும் விவசாயத்தைக் கைவிடாது செய்து கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

இங்கு ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அன்றைய நாள்களில் பெரும்பாலும் அரிசி சோறு என்பது அரிதாக சமைக்கப்பட்ட உணவாக இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய அத்தை (அப்பாவின் அக்கா) பக்கத்துக்கு ஊரில் வசித்து வந்தார். அவர்கள் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தியிருக்கிறார்கள். தினமும் என்னுடைய அத்தைக்கு வழங்கப்படும் காலை உணவான 4 இட்லிகளை என்னுடைய அப்பா பள்ளிக்குச் செல்கையில் (அந்த ஊரின் வழியாகத்தான் பள்ளிக்குச் செல்லவேண்டும்) அவருக்குக் கொடுத்து விட்டு என் அப்பா கொண்டு செல்லும் பழைய சாதத்தையோ அல்லது கம்புச் சோறு அல்லது வேறு எதாவது உணவையோ என் அத்தை எடுத்துக்கொள்வார் என்று என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் இட்லி தோசை போன்ற உணவுகள் ஆடம்பர உணவாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் தனக்குக் கொடுத்த உணவை தன் தம்பிக்குப் பாசத்துடன் கொடுத்து தன் தம்பி பள்ளிக்குச் சென்று படிப்பதை மிகப் பெருமையாக எண்ணியிருக்கிறார் என்னுடைய அத்தை. இந்த விஷயத்தை எங்களிடம் சொல்லும்போதெல்லாம் என்னுடைய அப்பா நெகிழ்ச்சி அடைவதை பார்த்திருக்கிறேன்.

Representational Image
Representational Image
Ramkumar.R

எட்டாம் வகுப்பு முடித்த பிறகு 9, 10, 11 (Old SSLC) வகுப்புகளை இன்னும் அதிக தொலைவு 10 மைல் தொலைவிலுள்ள மண்ணச்சநல்லூர் என்ற ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் (பிற்காலத்தில் நானும் எனது அக்காவும் இதே பள்ளியில் +1, +2 படித்தோம்) படித்திருக்கிறார். பின்பு பயிற்சியற்ற ஆசிரியர் (Untrained Teacher) நியமனம் மூலம் ஆசிரியராக அரசாங்க வேலையில் சேர்ந்து பின் அரசாங்க உதவி தொகையுடன்(stipend) ஆசிரியப் பயிற்சி கல்வியை முடித்து மீண்டும் பணிக்குத் திரும்பி இருக்கிறார்.

இவ்வாறாக முத்துசாமி என்ற என்னுடைய அப்பா வாத்தியார் என்ற அடைமொழியை என்னுடைய கிராம மக்களிடம் பெற்று முத்துசாமி வாத்தியார் என்ற அடையாளத்தைப் பெற்றார்.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு