Published:Updated:

தன்மானத்தாரகை! - சிறுகதை #MyVikatan

அந்த போட்டோவை ஆர்வமுடன் வாங்கி பார்த்த வள்ளியம்மாள் அதிர்ந்தாள். பதற்றத்துடன் குரல் நடுங்க, 'ஏம்ப்பா இவுக பேரென்ன, எந்த ஊருப்பா' என்று படபடப்புடன் கேட்டாள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து திருவிழாவிற்கு ஊருக்கு வந்த தன் பேரன் தியாகுவை பார்த்ததில் வள்ளியம்மாளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

தன் பேரனைப்பார்த்த வள்ளியம்மாள், "வா சாமி,இந்த கிழவிக்கு உன்னைய பாக்குற பாக்கியத்தை இப்பவாவது கொடுத்தியே..." என்றாள்.

"அப்பத்தா, எனக்கு ஆபிஸில் வேலை அதிகமாயிருந்ததால ஊருக்கு வரமுடியல... உன்னை எத்தனை தடவை அப்பா, அம்மா கூட பெங்களூருக்கு வான்னு கூப்பிட்டு இருக்கேன். நீதான் நம்ம ஊரை விட்டு உன் கால் வேறெங்கும் பதியாதுன்னுட்ட. என் பையன் பிறந்து ஒரு மாசமாச்சு, அவனை கூட பார்க்கவரல நீ" என்றான் தியாகு.

அதற்கு வள்ளியம்மாள் என்னப்பா செய்யுறது அடுத்தடுத்து வயலில் வேலைக வந்துருது... சரிப்பா, என் கொள்ளுப்பேரனை நேரில் தான் பார்க்க முடியல. அவன் போட்டோவையாவது காட்டுப்பா"என்றாள்.

இந்தா பாரு என்று தியாகு Ipadல் தன் மகனை விதவிதமாய் ரசித்து எடுத்த படங்களை காண்பித்து கொண்டிருந்தான்.

சிறுவன்
சிறுவன்
Representational Image | Pixabay

"பேரன் நல்லா அம்சமா இருக்கான்டா. குளிக்கும்போது கைகாலெல்லாம் நீவிவிட்டுத்தானே குளிப்பாட்றீங்க. அந்தக் காலத்திலெல்லாம் குளிப்பாட்டி முடிச்சவுடன்
துளசி, வேப்பிலை, தூதுவளை, ஓமவல்லின்னு மூலிகைகளை பெருங்காயத்தோடு கொதிக்க வச்சு சாறெடுத்து தாயோடு சேர்த்து சேய்க்கும் கொடுத்தோம். இந்தக் காலத்தில் பச்சபுள்ளைகளை கையில தூக்கவே பயப்படுதுக. இதில் பக்குவமா குளிப்பாட்டி பச்சிலைசாறெல்லாம் யாரு குடுக்கறா. எங்ககாலத்து பழக்கவழக்கம் எங்களோடேயே முடியப்போகுது" என்றாள் வள்ளியம்மாள்.

அதற்கு தியாகு, "நீ சொன்ன மாதிரி என் மகனுக்கும் பக்குவமா குளிப்பாட்டி பச்சிலை சாறெல்லாம் குடுக்கறாங்க" என்றான்.
உடனே வள்ளியம்மாள், "யாருப்பா அது, ஆச்சரியமா இருக்கு" என்றாள்.

"இங்க பாரு ஆத்தா, இந்த போட்டோல இருக்காங்கல்ல இவுங்க தான் என் மகனை குளிப்பாட்டி பச்சிலை சாறு குடுக்கற ஆயா!"

அந்த போட்டோவை ஆர்வமுடன் வாங்கி பார்த்த வள்ளியம்மாள் அதிர்ந்தாள். பதற்றத்துடன் குரல் நடுங்க, 'ஏம்ப்பா இவுக பேரென்ன, எந்த ஊருப்பா' என்று படபடப்புடன் கேட்டாள்.

"எனக்கு பேரெல்லாம் தெரியாது கெழவி. எல்லோரும் ஹவுஸ் கீப்பிங் அஜ்ஜின்னு தான் கூப்பிடுவாங்க. அஜ்ஜின்னா
கன்னடத்துல பாட்டின்னு அர்த்தம்" என்று தியாகு பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில் வள்ளியம்மாளின் மகன் வேலு, "கோயிலுக்கு கிளம்புங்க, நேரமாயிருச்சு" என்று சத்தம் கொடுத்தவுடன் அனைவரும் கோயிலுக்குக் கிளம்பினர்.

கிழவிக்கு அந்த போட்டோவில் இருக்குற முகத்தை பார்த்ததிலிருந்து மனது பாரமாகிவிட்டது. குழம்பிய மனதுடனே கோயிலுக்குக் கிளம்பினார்.

அங்கே சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சு எதுவும் கிழவிக்குக் கேட்கவில்லை. ஏதோ ஒரு நினைப்பில், மனதுக்குள் தனக்குத்தானே பேசிக்கொண்டு கண்ணுகலங்க கோயிலிலிருந்த ஆலமரத்துக்கு அடியில் போய் உட்கார்ந்திருந்தார்.

முதியவர்
முதியவர்
Representational Image | Pixabay

கிழவி சோகமாக இருப்பதைப் பார்த்த தியாகு,
"ஏன் ஆத்தா உம்முன்னு உட்கார்ந்திருக்கிற, நாங்க யாராவது உன்னையே ஏதும் சொல்லிட்டோமா?" என்றான்.

"மனசு சரியில்லப்பா, என் கொள்ளு பேரனை குளிப்பாட்டுற ஆயா வேறு யாருமில்லை அது நம்ம மீனாட்சிப்பா, அவள பார்த்ததிலிருந்து மனசுதாங்கலப்பா" என்று கண்கலங்கினாள் வள்ளியம்மாள்.

"நீ இவ்வளவு வருத்தப்பட்டு நாங்க பார்த்ததேயில்லை.
யாரு அந்த மீனாட்சி? சொல்லு..." என தியாகு கேட்டவுடன்
வள்ளியம்மாள்,

"ஊருக்கு தெக்க இருக்குற அந்த காரவீட்டு காவேரியோட செல்ல மகதான் மீனாட்சி. ஊருல பாதி சொத்து அவங்களோடதுதான். நெல்லு கொள்ளுன்னு மீனாட்சி வயல்ல விளையாததுன்னு எதுவுமில்லை. அவுக வயல்லதான் நானும் வேலை பார்த்தேன். மீனாட்சி பிறந்த பிறகு அவ ஆத்தாவுக்கு பிள்ளை வளர்க்கிறதுல ஒத்தாசையா இருந்தேன். நானென்றால் காவேரிக்கும், மீனாட்சிக்கும் கொள்ளை பிரியம்.

இதோ நாலு தலைமுறையை தாண்டி நிக்கிற இந்த ஆலமரவிழுதுலதான் அன்னிக்கு மீனாட்சி தன் தோழிகளோடு ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருந்தா.

'ஆத்தா, தூரி ஆடுனது போதும். பொங்கல் பொங்கப் போகுது... உன் கையால் வந்து இந்த அரிசியை உலையில் போடுன்னு' அவ ஆத்தா கூப்பிட்டவுடன் புதுபட்டுப்பாவாடை சரசரக்க துள்ளி வந்தா மீனாட்சி. சீட்டித்துணி கட்டியே பழக்கப்பட்ட மற்ற பொண்ணுங்களெல்லாம் அந்தப் பட்டுப்பாவாடையை ஆசையாப்பாத்துச்சுக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ ஆத்தா பொங்கல் கிண்டிகிட்டு இருந்ததால, சாமிக்கு படைத்த மாவிளக்கை ஒரு வெள்ளிக்கிண்ணத்தில் வைத்து மீனாட்சிக்கு ஊட்டச்சொல்லி என்னிடம் கொடுத்தா. நான் அவ அம்மா கொடுத்த மாவிளக்கை வெள்ளிக்கிண்ணத்தில் வச்சுக்கிட்டு, "என் செல்லம் இதை கொஞ்சம் சாப்பிடு" என்று மீனாட்சியிடம் கேட்க அதுக்கு அவள் சிணுங்கலாய் 'வேண்டாம், எனக்குசீனி கலந்த மாவிளக்குதான் பிடிக்கும். எனக்கு வெல்லம் கலந்த மாவிளக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு சாப்பிடச்சொல்லி துரத்துறீங்க. சீனி கலந்து மாவிளக்கு இடிச்சுக்கொடுங்க அப்பத்தான் சாப்பிடுவேன்னு' சொல்லி மீனாட்சி துள்ளி ஓட, "அக்கா, அவள விடாத புடின்னு" அவ ஆத்தா என்னைப்பார்த்து கத்த அன்னிக்கு கோயில்ல மீனாட்சிய சாப்பிடவைக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆயிருச்சு.

மீனாட்சி நல்ல நிறம், கலையான முகம். அவ மாமன் மகன்களுக்குள்ள அத்தைமக மீனாட்சி யாருக்குன்னு ஒரே போட்டி. கடைசியில காவேரியோட மூத்த அண்ணன் மகனுக்கு மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு பேச்சு எடுத்தாங்க. மீனாட்சி ஜாதகத்துல அந்த நேரத்துல எந்த கிரகம் எக்குத்தப்பாக உட்கார்ந்து இருந்துச்சோ! அப்பத்தான்
அவுக கரும்புத் தோட்டத்தில் விளைஞ்ச கரும்புகளை அடிக்க உடுமலைப்பேட்டையிலிருந்து மெஷின் வந்திருந்துச்சு. அதுக்கு சூப்பர்வைசரா வந்தவனை மீனாட்சி காதலித்து ஓடிப்போயிட்டான்னு எல்லோரும் சொல்றாங்க. அன்றைக்கு போனவதான் இதுநாள் வரை இந்த ஊரு பக்கம் வரல.

அவ ஆத்தாதான், தன் செல்லமகளை நினைச்சு, உருக்குலைந்து போய் இன்னிக்கு வீட்டோடு முடங்கி எத்தனையோ வருஷமாச்சு. நல்லது கெட்டது எதுக்கும் கலந்துக்கிறதில்ல.

நாம கஷ்டப்பட்ட காலத்துல நம்மள வாழ வச்ச தெய்வம் காவேரி.
அவ மகளை கண்டுபிடிச்சு அவ கண்ணுல காட்டிட்டாலே போதும். என் மனசு நிறஞ்சுரும் .நாம பட்ட கடனை அடைக்க ஒரு பாதையை இப்பதான் நம்ம சாமி காட்டியிருக்கு. ஏம்ப்பா நான் இன்னிக்கே உன்னோட பெங்களூருக்கு வந்து மீனாட்சியை பார்க்கிறேன்" என்றாள் வள்ளியம்மாள். தியாகு சம்மதித்தவுடன் பெங்களூருவை நோக்கி பயணப்பட்டாள் வள்ளியம்/மாள்.

முதியவர்
முதியவர்
Representational Image | Pixabay

"சில்க் போர்ட் வந்துருச்சு யாராவது இறங்குறீங்களா?" டிரைவர் சத்தம் கொடுத்தபிறகுதான் தியாகுவிற்குத் தூக்கமே கலைந்தது. ரொம்ப நாள் கழித்து உறவினர்களுடன் பேசி சிரித்ததில் மனது லேசாக நல்ல தூக்கம் வந்தது. ஆனால் மீனாட்சியை பார்க்கப்போகிற ஆர்வத்தில் கிழவி தூங்கவேயில்லை.

தன் பேரன் பெங்களூருவிற்கு வந்து ஐந்து வருடங்கள் ஆனாலும் இன்றைக்குதான் கிழவி கர்நாடகத்தில் கால் வைத்திருக்கிறார்.
அதிகாலை நேரமென்பதால் குளிர் அதிகமாக இருந்தது. வெளியில் குளிர்ந்தாலும் கிழவியின் மனது மீனாட்சி முகத்தை எப்போது பார்ப்போம் என்றே துடித்துக்கொண்டு இருந்தது.

வீட்டை அடைந்தவுடனேயே கொள்ளுப் பேரனை கொஞ்சிக்கொண்டே தியாகுவின் மனைவியிடம் மீனாட்சியின் கதையை கூறிக்கொண்டிருந்தாள். பேச்சின் நடுவிலேயே கண்கள் கடிகாரத்தை நோக்கியே போவதை பார்த்த தியாகுவின் மனைவி, "அப்பத்தா கொஞ்சம் பொறுமையாயிருங்க, மீனாட்சி இப்ப வந்திருவாங்கன்னு" சொல்லிக்கொண்டு இருக்கும்போதே காலிங்பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கும் போதே, "குட்டித்தம்பி என்ன பண்ணுறாரு குளிக்க ரெடியாயிட்டாரா" எனக் குரல் கொடுத்தவாறே வந்தாள் மீனாட்சி.

"வாங்க ஆன்ட்டி... உட்காருங்க! நான் பையனைக் குளிக்கத் தயார் பண்ற வரையில் இந்த மாவிளக்கை கொஞ்சம் சாப்பிட்டுங்க" என்று தட்டில் மாவிளக்கை வைத்து குடுத்தாள் தியாகுவின் மனைவி.

"எனக்கு வெல்லம் கலந்த மாவிளக்குப் பிடிக்காதும்மா, கொஞ்சமா எடுத்துக்கிறேன்" என்று மீனாட்சி கூறி மாவிளக்கை வாயில் போடும் நேரத்தில், "சீனிபோட்ட மாவிளக்குதான் வேணுமா என் செல்லத்துக்கு" என்ற குரல் அடுப்படியிலிருந்து வந்தது.

தன் ஆழ்மனதில் பதிந்த அந்தக் குரலைத்தேடி, பட்டியில் தன் தாயைத் தேடும் குட்டி ஆடு போல குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள் மீனாட்சி. அங்கே அவளைப் பார்த்தவுடனே வெடித்து அழுதுவிடக்கூடாது என தன் அழுகையை அடக்கி வைத்துக்கொண்டு பாசத்தில் ஆர்ப்பரிக்கின்ற மனதை அமைதிப்படுத்திகொண்டு நின்றிருந்த கிழவியை பார்த்தவுடனேயே "ஆத்தா எப்படி இருக்கிற" என அத்தனை நாள்களாக உள்ளுக்குள்ள உறைந்துபோன உணர்வுகள் எல்லாம் உருகி, பாச ஊற்றாய் பெருகி வள்ளியம்மாளை அணைத்துக்கொண்டாள் மீனாட்சி.

பாட்டி
பாட்டி
Representational Image | Pixabay

மீனாட்சியின் கைகளை பிடித்த வள்ளியம்மாள்,
"நீ கையில வெளக்கமாத்த புடிச்சு பார்த்ததில்லை நாங்க... கைநிறைய தங்கவளையல்களை மாட்டிக்கிட்டு நீ வீடு முழுக்க சுத்திவர்றத உன்னைபெத்த ஆத்தாவும், உன்னை வளர்த்த ஆத்தா நானும் வச்ச கண்ணு வாங்காம ரசிச்சோமே தாயி. உனக்கா இந்த நிலைமை. கையெல்லாம் காப்பு காச்சிருச்சே. செல்லமாய் வளர்ந்த மக இன்னிக்கு சீர் கொழஞ்சி நிக்குறியே" என்று அவளைப் பார்த்து அழுதாள்.

"என்ன ஆத்தா பண்றது. காதல் மயக்கதுல அப்பன் ஆத்தாள மறந்து ஊரவிட்டு அவரோட வந்துட்டேன். இங்க ஒரு கம்பெனில அக்கவுண்ட் வேலை கெடச்சுச்சு. என்னை சந்தோஷமாக பார்த்துக்கிட்டாரு. கஷ்டப்பட்டு உழைச்சு இந்த ஊரில் வீடுகட்ட ஒரு இடத்தையும் வாங்கிப்போட்டாரு. வாழ்க்கை சந்தோஷமாத்தான் ஓடுச்சு.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அடிக்கடி மயக்கம் வந்து கீழே விழுந்துகிட்டே இருந்தாரு. என்னன்னு ஆஸ்பத்திரியில பரிசோதனை செய்ததில் பார்வை நரம்புல பிரச்சனை இருக்கு. அதனால அதிகமாக எந்த வேலையும் பார்க்கக்கூடாதுன்னாட்டாங்க. இப்ப அவருக்கு பார்வை மங்கலாகத்தான் தெரியும். அப்பப்ப வலிப்பு வேற வரும்.

இதனால அவரை வேலைக்கு அனுப்பவே பயந்துக்கிட்டு வீட்டிலேயே இருங்கண்ணு சொல்லிட்டேன். சேர்த்து வச்ச சொத்தெல்லாம் அவரு மருத்துவத்துக்கே செலவாயிருச்சு. ரொம்ப வருஷமா பிள்ளையில்லாம தவமிருந்து பெத்த என் மகனையும் நல்லா படிக்க வைக்கணும், குடும்பத்தையும் காப்பாத்தணும். இது நாள் வரையில் யாரிடமும் கையேந்தியதில்லை. ஆத்தா வீட்டுக்கு வந்து பணக்கஷ்டமுன்னு நிக்கவும் மனசில்லை. மூணு வேளை கஞ்சிகுடிச்சாதான் உயிர் இந்த உடம்பில் தங்கும்னு இல்ல. ஒரு வேளை கஞ்சி குடிச்சாலும் தன்மானத்தோடு வாழணும்னு முடிவு பண்ணி என் உடம்புல தெம்பு இருக்கிறவரை நேர்மையா உழைப்போம்னு முடிவு பண்ணினேன்.

எத்தனையோ வேலைகளைப் பார்த்துட்டேன். இங்க கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கு சாப்பாடு தயாரிக்கிற கேன்டீன் வச்சு நடத்தினோம். காலையில ஆறு மணிக்கு அடுப்படிக்குள் நுழைந்தோமென்றால் மதியம்வரை அடுப்புக்கு முன்னாடியே நிக்கணும். எண்ணெய்சட்டி முன்னாடி தொடர்ந்து நிக்கமுடியல. எண்ணெய் வாசம் உடம்புக்கு ஒத்துக்குறாம மூச்சிரைப்பு நோய் வந்திருச்சு.

இப்ப ரெண்டு வருஷமாகத்தான் இந்த அப்பார்ட்மெண்டல ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்துட்டு இருக்கேன். வேலை கொஞ்சம் கஷ்டம்தான். வேலைகளை முடிச்சுட்டு வீட்டுக்குபோகிறபோது நான் கடுமையாக உழைக்கிறதைப்பார்த்து அவர் கண்கலங்கி என் தலையை கோதிவிடுவார்ல அப்போதே என் கஷ்டமெல்லாம் பறந்துரும். பையனும் குடும்பக்கஷ்டத்தை உணர்ந்து படிக்கிறான். அவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை பார்த்து எங்களுக்கு உதவுவான். குடும்பமே பாடுபட்டு உழைச்சு இப்பதான் அவர் வாங்கிய இடத்தில் சின்னதாய் ஒரு வீட்டைக் கட்டிக்கிட்டு இருக்கோம். வாழ்க்கையில் காலம் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருச்சு ஆத்தா. என் அப்பன் வீட்டு சொத்து வேணுமுன்னு நெனச்சிருந்தேனா என்றைக்கோ ஊருக்கு வந்திருப்பேன். நான் சொந்த உழைப்பில் முன்னேறி நல்லநிலைமைக்கு வந்தபிறகுதான் ஊருக்குள்ள வருவேன்னு முடிவுபண்ணிட்டேன்.

பெண்
பெண்
Representational Image | Pixabay

அடுத்த வருஷம் என் மகனுக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சுரும். கொஞ்சநாள்ல வீட்டைக் கட்டிமுடிச்சுருவோம். அடுத்த திருவிழாவுக்கு எங்க வீட்டு கிரகபிரவேசத்திற்கு பத்திரிகை கொடுக்க வரேன்னு என் ஆத்தாள பார்த்து சொல்லிடு" என்றாள்.

ஊருக்கு வந்தவுடனேயே முதல் வேலையா காவேரி வீட்டுக்கு நடைய கட்டுன வள்ளியம்மா, காவேரியிடம், கஷ்டப்பட்டாலும் கண்ணியத்தோடும், வறுமையிலும் வைராக்கியத்தோடும், வாழ்கிற மீனாட்சியின் வாழ்க்கையை ஒன்றுவிடாமல் சொன்னாள்.

வள்ளியம்மாள் சொல்வதையெல்லாம் மனது வலிக்க கேட்டுக்கொண்டே இருந்த காவேரி, "சின்னப் புள்ளையா சிரிச்சமுகமாக, என்னையே சுத்திவந்த மக, இன்னைக்கு சிந்திச்சு எவ்வளவு சிக்கனமாக குடும்பத்தை நடத்துறா?" என ஆச்சர்யப்பட்டாள்.

தன் கூட்டை விட்டு பறந்தபோது போது உலகவிவரமறியாமல் இருந்த குருவி தனக்கென ஒரு கூட்டை கட்டி தன்மானத்தோடு வாழ்வதை நினைத்து கண்ணீர் விட்டாள். இதோ அடுத்த திருவிழா எப்போது வருமென்று மகள் வருகையை நோக்கி நாள்களை எண்ண ஆரம்பித்துவிட்டாள் காவேரி.

- அனிதா மோகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு