Published:Updated:

கேப்டன் சென்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

செழியன் பரந்தாமன் கப்பல் வேலைக்கு வந்து அவன் பெயர் உச்சரிக்க முடியாமல் அனைவராலும் சுருக்கி "சென்" ஆகிப்போனான்.

கரையிலிருந்து கடலை பார்ப்பதற்கும் கடலுக்குள்ளிருந்து கடல் பார்ப்பதற்கும் வேறுபாடுகள் நிறைய. கரையின் கடல் அலைகளால் ஆனது. கடலுக்குள்ளான கடல் நீரோட்டத்தின் அலைகள் மிதந்து ஆவேசம் கொண்ட நிசப்தம் நிறைந்தது.

நீலவானமும் நீரும் நிறத்தில் ஒன்றையொன்று விட்டுக் கொடுக்காமல் பிரதிபலித்தன. நடுக்கடல், கேப்டன் சென்னிற்கு கப்பலின் உச்சியில் கொடிக்கம்பத்தின் கீழ் நின்றுகொண்டு விழுந்துகொண்டிருக்கும் செம்பழுப்பேறிய சூரியக் கோளத்தை காண்பதில் அலாதிப் பிரியம். அதேபோல் அதிகாலைச் சூரியன் எழுவதையும் நாள் தவறாமல் கப்பல் பயணத்தில் எல்லாம் பார்த்து விடுவான். சிலசமயம் மேகமூட்டங்களால் காணமுடியாமல் சூரியன் உச்சி வானுக்கு வரும்போது ஒரு ஹலோ மட்டும் சொல்லுவான்.

Representational Image
Representational Image

இந்தச் சூரியன் மட்டும் இல்லையென்றால் திசைகளுக்கு வேலையே இல்லை அல்லவா. நினைவுகள் மனதில் நிரம்பி வழிந்தன. ஆதிரா மூச்சோடு கலந்து விட்டாள். அவளின் பெயரை நினைக்காத நொடிகளில்லை. சகலமும் ஆகி அவனோடு இல்லாமலே போனாள். தினம் தினம் வலிக்கும் நினைவும் அது தான். அம்மாவுக்குப் பிறகு அவள் தான் என்றிருந்தவனுக்கு அவள் வாழ்வில் வராமல் போனது மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

செழியன் பரந்தாமன் கப்பல் வேலைக்கு வந்து அவன் பெயர் உச்சரிக்க முடியாமல் அனைவராலும் சுருக்கி `சென்' ஆகிப்போனான். படிக்கும்போதே கப்பல் வேலைதான் என்று முடிவு செய்து விரும்பி வந்தவன். சகலமும் அத்துப்படி, இந்த வாழ்வைத் தவிர.

சென்றுகொண்டிருந்த கப்பல் தடுமாற அவனுள் தொலைதூரத்திலிருந்த நினைவு திரும்ப மனம் ஏதோ அவசரம் என உணர்கையில் கையிலிருந்த வாக்கி அலறியது, ``கேப்டன் சென் எமர்ஜன்ஸி"... உச்சியிலிருந்து பதற்றப்படாமல் இறங்கிக் கொண்டே கேட்டான் சென்.

``எனிதிங்க் சீரியஸ்" அவன் கேட்டுக்கொண்டே வேகமான நடையில் ஓடத்துவங்கினான். நங்கூரங்கள் வேகவேகமாக இறக்கப்பட்டு கப்பலை நிலைநிறுத்தும் பணி துவங்கியிருந்தது.

அந்தக் கப்பல் சரக்கு கப்பலுடனான பயணிகள் கப்பல். வழியில் பதற்றத்தோடு கேட்டவர்களிடம் ஒரு புன்னகையில் ``நத்திங் சீரியஸ்" என்று சொல்லிக்கொண்டே அதே புன்னகையில் `டோண்ட் பேனிக்' என கடந்து கேபினுக்குப் போகும் வழியில் போனான். ஆதிராவின் நினைவு மொத்தமும் தொலைந்து போனது.

கேபினுக்குள் நுழைந்தபோது எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள். சென் உள்நுழையவும் ரிப்போர்ட்டிங் ஆபீஸர் பகத்சிங் வேகவேகமாக விஷயங்களைச் சொன்னான். கடல் நீரோட்டம் அதிகப்படியாக இருந்ததாலும், ஏதோ ஒரு பொருள் அந்த நீரோட்டத்தில் புரொப்பல்லரை சேதப்படுத்தி விட்டதாகவும் அதனால் கப்பல் சட்டென நிலைதடுமாற நங்கூரங்கள் பாய்ச்சப்பட்டதாகச் சொன்னான்.

Representational Image
Representational Image

``குட்... வாட் நெக்ஸ்ட்"....பிரச்னையை உள்வாங்கிக் கொண்டே சென் அந்த சிங்கின் முகம் பார்க்க இன்ஜின் அறையிலிருந்து நெல்சன் வேக வேகமாக வந்தான். திடகாத்திரமான கறுப்பின இளைஞன். அவர்கள் இருவரும் பல வருடங்களாக சென்னோடு பணிபுரிபவர்கள். இரட்டைகுழல் துப்பாக்கி அவர்களிருவரும் சென்னிற்கு.

``பிரஸ்ஸர் தாங்காமல் பைப்பில் கொஞ்சம் ஓட்டை விழுந்து கப்பலுக்குள் நீர் வரத் துவங்கிவிட்டது. மாற்று இயந்திரமும் பணி செய்யவில்லை. இரண்டுக்குமே கொஞ்சம் நேரம் வேண்டும். அதுவரை கப்பலுக்குள் தண்ணீர் புகாமல் ஏதாவது செய்தாக வேண்டும். மாற்று இயந்திரத்தைப் பழுது பார்க்கும் பணிக்கு ஒரு டீமையும் உடைந்த பைப்பை சரி செய்ய வேறு ஒரு டீமையும் சொல்லிவிட்டு உங்கள் உத்தரவுக்கும் சிங்கோடு வேறு என்ன செய்ய வேண்டும் என விவாதிப்பதற்கு வந்ததாக ரத்தின சுருக்கமாகச் சொன்னான்.

சென்னிற்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது. புரொப்பல்லர் மொத்தமாக சேதமடைந்துவிட்டதாக சிங் சொன்னபோது ஒரு முறை இயக்கிப் பார்க்கலாமா என்கிற ஆலோசனை மனதுக்குள் ஓட, இருக்கும் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என மனம் சொன்னது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் விபரீதம் நிகழ வாய்ப்புண்டு. பல நூறு பேர்களுடன் பயணிக்கும் இந்தப் பயணம் பாதுகாப்பாய் கரை சேரும் வரை நிலையில்லாதது. இதுபோல் நிகழ்வது புதிதில்லைதான். ஒவ்வொரு பயணத்திலும் பிரச்னைகள் வேறுபடும்.

மனம் பிரச்னைகளின் அடிப்படையை நோக்கிப் போனது. இந்த வாழ்வும் கணம் தோறும் சவால் நிறைந்ததுதானே. அதை எப்படி தீர்க்கிறோம் என்பதில் தானே மனிதர்களின் மன உறுதி வெளிப்படுகிறது. பகத்தும் நெல்சனும் சென்னின் கட்டளைக் குரலுக்காக காத்திருந்தனர். அங்கே நிமிடங்களின் முள்ளானது துடிக்கவில்லை. விநாடிகளின் முள் வேகமாக ஓடத்துவங்கியது. பயணிகள் எல்லோருக்குள்ளும் என்ன ஏதென்று தெரியாத குழப்பமான மனநிலையும் ஒருவித பயமும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.

Representational Image
Representational Image

சென் தன் தொண்டையை செருமிக்கொண்டே ``புரொப்பல்லர் அதிகப்படியாக சேதமானதாக உணருகிறாயா... மீண்டும் ஒருமுறை இயக்கிப் பார்த்தால் என்ன" என கேட்க பகத் முன்னமே முயற்சி செய்து அது இயங்காமல் போனதால் தான் நங்கூரம் பாய்ச்சியதாக சொன்னான்.

``நீரோட்டத்தின் விசை இப்பொழுது எந்த அளவில் உள்ளது" என கேட்க நெல்சன் ``ஒருமுறை இறங்கிப்பார்த்தால் என்ன"... எனும்போது ``இந்த இரவில் ஏதேனும் ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால் எடுத்துதான் ஆக வேண்டும்" என சென் சொன்னபோது அனைவர் மனமும் அந்த ரிஸ்கிற்கு தயாராகின.

வானிலிருந்து கடலைப் பார்த்தால் கடலில் கப்பல் ஒரு சொர்க்கலோக நட்சத்திரமாக மின்னுவதாகத் தெரியும். மின்னும் சொர்க்கமாகத் தெரியும் அந்தக் கப்பலுக்குள் ஒரு விபரீதம் நிகழ்ந்துகொண்டிருப்பதும் அந்த விபரீதத்தை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பது அவர்களின் மனநிலை என்னவென்பது யாருக்கும் தெரியப்போவதில்லை. எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியோ துக்கமோ எண்ணங்களாக பிரதிபலித்துக் கொண்டுதானே இருக்கும்.

முன்பொருமுறை நடந்த இதுபோன்ற ஒரு சம்பவத்தை மனம் அசை போட்டது சென்னுக்குள். படபடவென மனம் என்ன செய்வதென யோசிக்கையில் வாக்கி மீண்டும் அலறியது. இன்ஜின் ரூமில் கேஸ் லீக் ஆவதாக அடுத்த குண்டு வந்து விழுந்தது. அதே கணத்தில் சென் நெல்சனைப் பார்க்க நெல்சன் கட்டளைக்கு காத்திராமல் இன்ஜின் ரூம் நோக்கி ஓடினான். முதலில் இன்ஜின் ரூமை சரி செய்யாமல் புரொப்பல்லரிடம் போவது சரியில்லை.

Representational Image
Representational Image

``ஓ.கே. பகத்... நான் இன்ஜின் ரூமுக்குப் போறேன். இங்க இருந்து நீ உன்னோட டீம் மேட்டோட எல்லாத்தையும் மானிட்டர் பண்ணி எனக்கு அப்டேட் பண்ணு. சொல்லிவிட்டு திரும்பும்போது பகத் சொன்னான்.. ``வேணும்னா அந்த புரபொல்லர்ல ஏதாவது சிக்கியிருந்தா அத எடுக்க டிரைபண்ணலாமில்ல சார்... அதுக்கு நான் டீம ரெடி பண்ணட்டுமா என கேட்கையில், ``வெயிட்" என்கிற பதிலோடு வேகமாக இன்ஜின் ரூம் நோக்கி நகர்ந்தான்

வழியில் எதிர்பட்ட அத்தனை பேரிடமும் அதே புன்னகை. அது செயற்கையானது அல்ல. பிரச்னைகளைக் கண்டு கண்டு பிரச்னைகளே பரிசளித்தது. மனம் யோசித்தாலும் கண்கள் நாலாபுறமும் மேய்ந்துகொண்டே பிரச்னையின் ஆணிவேரை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

இன்ஜின் ரூம் நெல்சன் தன் குழுவினரை விரட்டிக் கொண்டிருந்தான். பெரிய பெரிய வால்வுகள் மூடப்பட்டும் சில வால்வுகள் திறக்கப்பட்டும் என மாறி மாறி வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது அந்த இடம். நீரை வெளியேற்றும் வேலைகளை முடுக்கி விடப்பட்டிருந்தன. போர்க்களம் போல் இருந்தது அந்த இடம்.

முதலில் மாற்று இயந்திரம் சரியாக வேண்டும். அது சரியானால் தான் எதுவும் செய்ய முடியும். அதற்குள் வேறு பிரச்னைகள் முளைக்காமல் இருந்தால் சரி. சென்னின் மனம் எங்கே கோட்டை விட்டோம் என்பது புலப்படாமல் அடிப்படையை நோக்கி நகரத் தொடங்கியது.

நேரம் விரைந்துகொண்டே இருந்தது. ஆனால், அணுவளவு கூட பிரச்னைகள் சரி செய்யப்படவில்லை. அதுவே மிகுந்த அயற்சியைத் தந்தது. அப்படியெல்லாம் தளர்ந்து போய் அமர்ந்து விட முடியுமா என்ன.... அந்தத் தடைகளைத் தகர்த்தெரிந்து கப்பல் தன் பயணத்தைத் துவக்குவது வரை வேறு சிந்தனையே இல்லை எவருக்கும்.

சென் தன் குழுவினரை உற்சாகப்படுத்தி சத்தம் போட்டான். ம்ம்ம்.... முன்னேறுங்கள்.... நம்மால் முடியும்.... அருகிருந்தவனின் தோளை தட்டி மீண்டும் உற்சாகப்படுத்தினான். இவ்வளவு நேரமும் அதனோடு போராடியதே கண்ணுக்குத் தெரியாத அதன் பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கத்தான் என்பது. மீண்டும் அவன் வாக்கி அலறியது. பகத் ஏதோ சொல்ல அந்த இரைச்சலில் எதுவும் கேட்கவில்லை. மாற்று இயந்திரம் மிகுந்த இரைச்சலோடு சத்தம் எழுப்பி தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. அனைவருக்கும் பெருமூச்சு வந்தது. சென் கேபினை நோக்கி நடந்தான். இதுபோன்ற சின்ன முன்னேற்றங்களே மனதில் நம்பிக்கை கீற்றை துளிர்க்கச் செய்கிறது.

Representational Image
Representational Image

இந்தக் கப்பல் பணி என்பது சவால் நிறைந்தது. எந்தவித தொலைத்தொடர்பு சாதனங்களும் முன்னேற்றமும் இல்லாத அந்தக் காலத்தின் கஷ்டங்களை நினைத்துப் பார்த்தான். இயற்கைச் சீற்றத்தால் அழிந்து போன எத்தனையோ கப்பல்களை அவன் வாசித்து அறிந்திருந்தான். சமீபத்தில்கூட ரஷ்யாவின் குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் போர்ப்பயிற்சியின்போது 118 பேருடன் சிறு தொழில்நுட்பக் கோளாறால் அப்படியே அமிழ்ந்து போனது நினைவில் வந்து போனது. இதுபோன்ற சவால்களே சாகசங்களை செய்ய வைக்கிறது. ஆனால், இங்கிருப்பது அத்தனையும் உயிர், அது நம்பிக்கை, பெரும்கனவு, வாழ்ந்துவிட வேண்டும் என்கிற தீரா தாகம் என‌ எல்லாமே அடங்கிவிடும். இந்த இரவு நேரத்தில் இப்படியொரு பிரச்னை என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

கேபினுக்குள் நுழைந்துகொண்டே எத்தனை நாட்டிகல் தொலைவில் இருக்கிறோம் என்றபோது 850 நாட்டிகல் என்கிற பதில் பகத்திடம் வந்தது. அருகில் இருக்கும் துறைமுகத்துக்கு தகவல் சொல்லி உதவி கேட்க முடியுமா என்கிற சிந்தனை வேறு ஓடிக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் சரிய செய்ய முடியவில்லை என்றால் உதவிக்கு அழைப்போம். இல்லையேல் என மனம் நிலையில்லாமல் தடுமாறிக் கொண்டேயிருந்தது. இது தான் மனதின் சிந்தனைகள் தடம் மாறி தடுமாறும் தருணம்.

``சிக்னல்கள் கிடைப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லையே பகத்" சென் கேட்டபோது ``அதில் ஒன்றும் பிரச்னை இல்லை" என அவன் சொன்னபோது மனம் உதவி கேட்டு அவர்கள் வரும் காலப்பொழுதை கணக்கிட்டது. இன்ஜின் அறையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதா எனக் கேட்க நினைக்கையில் வாக்கி அலறியது. நெல்சன்தான் பேசினான், கேப்டன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் நிலைமையை சரி செய்துவிடும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டியதை சொல்லிவிடுங்கள் மிகுந்த நம்பிக்கையோடு உற்சாகமாக பேசினான். அவன் உற்சாகமாகி விட்டாலே பிரச்னையின் ஆணி வேரை நெருங்கிவிட்டான் எனக் கொள்ளலாம். சென்னிற்கும் உள்ளுக்குள் உற்சாகம் பீறிட, அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டான். இந்த உற்சாகம் நீண்ட நேரம் சிலசமயங்களில் நிலைக்காமலே போகும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.

Representational Image
Representational Image

பகத் ஒலிபெருக்கியில் பயணிகளுக்கு அறிவித்தான், சிறு தொழில்நுட்ப பிரச்னையால் நம் கப்பல் பழுதடைந்துள்ளது. அதை நம் திறமை மிக்க குழு இன்னும் சில மணிகளில் சரி செய்துவிடும். யாரும் பயப்படவேண்டாம். மிகுந்த கடல் நீரோட்டமே இதற்கான சூழலை உருவாக்கிவிட்டது. அனைவரும் நம்பிக்கையோடு இருந்து பதற்றப்படாமல் எங்களுக்கு ஒத்துழையுங்கள். உங்கள் பாதுகாப்பான பயணமே எங்களுக்கு முக்கியம். நன்றி என சொல்லி வைத்து கேப்டன் சென்னின் முகத்தைப் பார்த்தான்.

``பகத், நீ சொன்னதுபோல் புரொபல்லருக்கு ஒரு குழுவை அனுப்பி ஏதேனும் சிக்கியிருந்தால் அதை எடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் இல்லையா" என யோசனை கேட்கும் விதமாக தன் மன எண்ணத்தை வெளிப்படுத்தினான் சென்.

``எஸ், கேப்டன்... அதுக்கு கணேஷ் சிதம்பரத்தை அனுப்பி வைக்கலாம்... அவன் அதில் தேர்ந்தவன்" என்றபோது சென்னின் மனம் யோசனையில் மூழ்கியது.

``ஆல்டர்நேட்டாக யாரை அனுப்பலாம் என்றபோது முன்பொருமுறை இதுபோன்ற பிரச்னையை கணேஷோடு சரி செய்த நேபாள இளைஞனைச் சொன்னான். சென் அவர்கள் இருவரையும் அழைத்து கணேஷிடம் நீ அவனோடு போக வேண்டாம் அவனுக்கு மேலிருந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தால் போதும் என்றபோது கணேஷின் முகம் மாறிப்போனது. தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்தும் அது கிடைக்காமல் போனதற்கு மிகுந்த கவலை கொண்டது. நேபாள இளைஞன் முகம் வாழ்வில் இதுபோன்ற ஒரு தருணத்துக்குக் காத்திருந்த சந்தோஷத்தைக் கொண்டது.

நால்வரும் கூடிப்பேசி தெளிவான திட்டமிடலோடு ஒரு முடிவுக்கு வந்தார்கள். ``இதுவரை பேசியது எல்லாமே இப்படி இருக்கலாம் என்கிற அனுமானம் மட்டுமே. களத்தில் இறங்கி நீ செய்யப்போகும் வேலைதான் இத்தனை உயிரை கரைக்கு அழைத்து போகப் போகிறது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மட்டுமே கணேஷ் உன்னோடு வருவான்” என தெளிவாக விளக்கினான் சென். கணேஷுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்களில் இந்தப் பயணத்துக்கு வந்ததனால் சென்னிற்கு அவனை அனுப்ப ஒருவித தடுமாற்றம் இருந்தது என்பதே நிதர்சனம். இதுபோன்ற வேலைகளில் உயிர்போகும் அளவுக்கு ரிஸ்க் அதிகம். அதுவே சென் அவனை அனுப்பத் தடையாக இருந்தது.

Representational Image
Representational Image

குழு கிளம்பத் தயாரானது. அனைவரின் மனமும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அந்த அடர் இருட்டில் நேபாள இளைஞன் கடலுக்கு குதித்தான். வெளிச்சம் தர தலையில் இருந்த ஹெட்லைட் உதவியது. அவனோடு இன்னும் மூவர் ஆழ்கடல் நோக்கிப் பயணப்பட்டார்கள். அந்த ஆபரேஷன் நல்லபடியாக முடிய வேண்டும் என குழு மொத்தமும் வேண்டிக்கொண்டது. பிரார்த்தனையைத் தவிர‌ வேறு எது அந்த நேரத்தில் நம்பிக்கையை கொடுத்து விடப்போகிறது.

நேபாள இளைஞன் சொல்லப் போகும் நல்ல செய்திக்காக அனைவரும் காத்திருந்தனர். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நெல்சன் இன்ஜின் அறையில் போராடி நிலைமையை சீர் செய்து தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சென், கப்பலின் மேல் தளத்துக்கும், கேபின் அறைக்கும், இன்ஜின் அறைக்கும் என ஓடி ஓடி எல்லாவற்றையும் சரி பார்த்தான். கடலுக்குள்ளிருந்து இதுவரை எந்தத் தகவலும் வராததே மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தது.

இன்னும் விடியலுக்கு சில மணி நேரங்களே இருந்தன. மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. சென்னின் மனம் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய கணத்தில் கணேஷிடம் இருந்து ``நான் போய் பார்க்கவா" என கேட்க மனக்குறையோடு அவன் கிளம்ப ஆயத்தமாக அவர்கள் மூவரும் மிகுந்த உற்சாகத்தோடு வெளிப்பட்டார்கள்.

சென்னிற்கு என்ன நடந்தது என்பதை கேட்கும் ஆவலில் இருக்க மேலே வந்தவர்களைக் கட்டிக்கொண்டான் கணேஷ். கேப்டன் சென் அவர்களை ஆரத்தழுவி வரவேற்று விசாரித்தான். அவர்கள் அந்தப் பிரச்னையை சரி செய்துவிட்டதாக சொல்ல, பகத் அந்த புரொபல்லரை இயக்க முயற்சி செய்தான். அது முக்கி முனகியது.

மீண்டும் மீண்டும் பகத் முயற்சி செய்ய அந்த புரொபல்லர் போக்கு காட்டி ஆட்டம் ஆடியது. சென்னின் முகத்தில் மீண்டும் கவலை ரேகை. கணேஷுக்குதான் போயிருக்க வேண்டுமோ என்கிற பதைபதைப்பு. நெல்சன் அத்தனை முயற்சிகளும் வீணானதாக உணர்ந்தான். நேபாள இளைஞன் தன் முயற்சிகள் அனைத்தும் கடலில் கரைந்து போய்விட்டதை உணர்ந்தான். பகத் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான். புரொபல்லர் முதல்முறையாக அரைவட்டம் அடித்து நின்றது. பகத் தன் முயற்சியைக் கைவிடாமல் அதனோடு போராடி இயக்கினான்.

கேப்டன் சென்! - சிறுகதை #MyVikatan

கொஞ்சம் போக்கு காட்டிய புரொபல்லர் வேகமாக சுத்தி உற்சாகமாக சிரித்தது. அந்தச் சிரிப்பு அனைவர் முகங்களிலும் எதிரொலித்தது. உற்சாக குரல் கப்பலைத் தாண்டி அந்த அதிகாலை நிசப்தத்தைக் கலைத்தது. நங்கூரங்கள் மேலேற்றப்பட்டு கப்பல் தன் பயணத்தைத் துவங்க ஆரம்பித்தது. தன் இடது கையில் பிடித்திருந்த காபி கோப்பையின் கடைசி துளியின் சுவையை ஆழ்ந்து உறிஞ்சினான் சென்.

நேபாள இளைஞன் விவரித்தது கண்முன்னே வந்து போனது. பவளப்பாறையின் கல் ஒன்று புரொபல்லருக்குள் சிக்கியிருந்தது. அதனால் அதை எடுக்க நேரமானதைச் சொல்லி அதன் கஷ்டங்களை விவரித்துக் கொண்டிருந்தார்கள். பகத்திற்குள், நெல்சனுக்குள், கணேஷுக்குள், நேபாள இளைஞனுக்குள், செழியனுக்குள், பயணப்பட்ட பயணிகளுக்குள் என அந்த இரவு கலவையான நினைவுகளை நங்கூரம் பாய்ச்சியிருந்தது. இன்னும் சூரியன் மேலெழும்ப சிறிது நேரமே இருந்தது. நேற்று மாலை மறைந்த சூரியன் மீண்டும் தன் பயணத்தில் எத்தனை தடை ஏற்பட்டாலும் தவிர்க்காமல் எப்படி மீண்டு எழுவது எனும் வாழ்க்கைப் பாடத்தை ஒவ்வொருநாளும் சொல்லிவிட்டே போகிறது. கப்பல் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

ஆதிரா.... செழியனுக்கு திருமணத்துக்குப் பார்த்த பெண், எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருந்தபோது நீர்மூழ்கிக் கப்பலில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்ட திருமணத்தை இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போடும் வாய்ப்பு இல்லாமல் தவிக்க விட்டுப் போனவள். பிறகு யாருமே அவனுக்கு பிடிக்காமல் போக.... அவனுக்கு யாரும் பெண் தராமல் போக இன்றும் பிரம்மச்சாரி. அவ்வப்போது இல்லாத ஆதிராவோடு மனம் விட்டு தன் அபிலாஷைகளை கதைப்பான். எதுவுமே நடக்காதது போல் கடல் அமைதியாக மனித மனம் போல் பொங்கிக்கொண்டிருந்தது உள்ளுக்குள்.

-ம.செ.

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு