Published:Updated:

அட்டைக் காசும், அவ்வூர் வாத்தியார் மகனும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

``தாத்தா. ஓரணாவுக்குக் கடலை மிட்டாயும், ஓரணாவுக்குப் பொட்டுக் கடலையும் கொடுங்க'' என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான்.

அந்தச் சிற்றூரில் தர்மலிங்கம் கடைதான் அப்பொழுது பிரசித்தம். சிறிய கடைதான் என்றாலும், அப்பகுதி மக்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும். வயதான தர்மலிங்கத்துக்கு பார்வை சற்றே மங்கி வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கடையை நடத்திக்கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

மாதத்துக்கு இரண்டு முறை அவர் மகன் ராமசாமி வண்டியில் டவுனுக்குச் சென்று மொத்தமாகச் சாமானை வாங்கி வந்து கொடுத்துவிடுவார். தர்மலிங்கம் கடையும் வீடும் ஒன்றுதான். பக்கத்தில்தான் அவரின் பூர்வீக வீடு என்றாலும், மகனைக் குடும்பத்துடன் அங்கு இருக்க விட்டுவிட்டு, அவர் கடையிலேயே தங்கிவிடுவார். மாலையானால், கடைக்கு எதிரேயுள்ள வேப்ப மர நிழலில் ஈசி சேரைப் போட்டுச் சாய்ந்துகொள்வார். கடைக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது மட்டும் எழுந்து உள்ளே சென்று, கேட்பதைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஈசி சேரில் தஞ்சம் அடைந்துவிடுவார்.

கண்மாய்க்குள் காடு வளர்க்கும் பேராவூரணி இளைஞர்கள்..! #MyVikatan

எப்பொழுதும் கடையிலேயே அவர் இருப்பதனால், `கடை சாத்தியிருக்காது’ என்ற நம்பிக்கை காரணமாக அவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். அவர் கடைக்கு இடதுபுறமாகத் திரும்பி, நான்கு வீடுகள் தாண்டினால் பள்ளிக்கூடம். `ப’ வடிவில் அமைந்த கட்டடத்தில், 5-ம் வகுப்பு வரை கொண்ட ஆரம்பப் பள்ளி. எதிரே திருக்குளம்.

Representational Image
Representational Image

திருக்குளத்தின் வடகரையில் வாத்தியார் வீடு. அவரும், அந்தப் பள்ளியில்தான் பணிபுரிந்தார். வாத்தியாரின் மூத்த பையன் ராஜன், அந்தப்பள்ளியில்தான் நான்காம் வகுப்புப் படித்தான். பள்ளிக் கூடச் சாவி அவர்கள் வீட்டில்தான் இருக்கும். பள்ளிக்குப் பின்னாலேயே அலமேலுவின் வீடு. அலமேலுவின் கணவர் அகால மரணமடைய, மூன்று ஆண் பிள்ளைகளுடன் அவள் வாழ்க்கையைக் கஷ்டப்பட்டு நடத்திவந்தாள். அவளின் இரண்டாவது மகன்தான் சிங்காரம். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தான். சிங்காரம் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் கை தேர்ந்தவனாக இருந்தான்.

பள்ளியில் குழந்தைகளுக்குக் கணக்குப் பாடம் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பதற்கும், அவர்கள் நாணயங்களைத் தெரிந்து கொண்டு சரியாகச் செயல்படவும் ஏதுவாக, பள்ளியில் அட்டை நாணயங்கள் இருந்தன. காலணா, அரையணா, ஓரணா, ரெண்டணா என்று பல நாணயங்களும் நிறைய இருந்தன. அவை, பார்ப்பதற்கு நிஜக் காசுகள் போலவே தோற்றமளிக்கும். மாணவர்களுக்கு அந்தக் காசுகளைக் கொடுத்து, கணக்கிடுவதற்குச் சொல்லிக் கொடுப்பர் ஆசிரியர்கள்.

Representational Image
Representational Image

சில நாள்களாகவே, அந்தக் காசுகள் சிங்காரத்தின் எண்ணத்தில் வந்துபோக, ஒரு நாள் ஒரு ரெண்டணா காசை நைசாக எடுத்து, கிழிந்து தொங்கும் தன் கால்சட்டையில் பத்திரப் படுத்திக்கொண்டான். ஆசிரியர் அவசரத்தில், அவன் காசை அமுக்கியதைக் கவனிக்கவில்லை. சாயந்திரம் பள்ளி விட்டதும், கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, சற்றே இருள் கவிழ்ந்ததும், சிங்காரம் ரெண்டணாவுடன் தர்மலிங்கம் கடைக்குச் சென்றான்.

உள்ளே, இரண்டொருவர் ஏதோ வாங்கிக்கொண்டிருக்க, வெளியில் காத்திருந்தான். துணிச்சலான பேச்சு சிங்காரத்தின் பலம். அவர்கள் கடையை விட்டுப் போனதும், சிங்காரம் உள்ளே போனான். தர்மலிங்கத்தின் பார்வைக் குறைபாட்டை அவன் ஏற்கெனவே அறிந்துவைத்திருந்தான். அதனாலேயே அந்த நேரத்தை அவன் தேர்வு செய்திருந்தான்.

``தாத்தா. ஓரணாவுக்குக் கடலை மிட்டாயும், ஓரணாவுக்குப் பொட்டுக் கடலையும் கொடுங்க.” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். அவர் இரண்டையும் எடுத்துக் கொடுக்க, ரெண்டணா அட்டைக் காசை சத்தம் வராமல் கல்லாப்பெட்டி மேல் வைத்து விட்டு நடையைக் கட்டினான். தாத்தாவும் காசை உள்ளே தட்டி விட்டார். அன்றிலிருந்து சிங்காரத்துக்கு நல்ல துணிச்சல் வந்துவிட்டது. பள்ளிக்கூட அட்டைக்காசுகள் மெல்லக் குறைய, தர்மலிங்கத்தின் கடை கல்லாப் பெட்டியில் அவை நிறைய ஆரம்பித்தன. அப்படித்தான் அன்று மாலையும், அவன் கடலை மிட்டாயை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, வாத்தியார் பையன் ராஜன் அவனிடம் வந்தான். வாத்தியார் பையன் என்பதால், தன்னை விடச் சிறிய வகுப்பில் படித்தாலும், அவனிடம் பிரியம் காட்டுவான் சிங்காரம். அவன் பிரியத்துக்கு மற்றொரு காரணமும் உண்டு. ராஜனை நண்பனாக்கிக்கொண்டால் அட்டைப் பெட்டியில் இருக்கும் அட்டைக் காசுகளைப் பயந்து பயந்து எடுக்க வேண்டாமே.

Representational Image
Representational Image

ராஜனின் தயவில் நிறைய அட்டைக் காசுகளை அள்ளிக் கொள்ளலாமே என்பது அவன் கணிப்பு. அந்த நினைவுடனே, அருகே வந்த ராஜனுக்கு ஒரு கடலை மிட்டாயைத் தாரை வார்த்தான். ராஜனும் நன்றியுடன் வாங்கிக்கொள்ள, ``சாப்பிடுங்க தம்பி. இது மாதிரி தினமும் நீங்க நெனச்சா சாப்பிடலாம். ஆனா, நீங்கதான் எதையும் கண்டுக்கிறதில்ல” என்று பூடகம் போட, ராஜன் ஏதுமறியாமல் விழித்தான். அதைச் சாதகமாக்கிக் கொண்டு, அட்டைக் காசு பற்றியும், தர்மலிங்கம் கடை பற்றியும், தன் பிரதாபம் பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தான்.

`ஓ. இதுதானா விஷயம். இனி சமாய்ச்சிடலாம்’ என்று ராஜன் மனதுக்குள் கணக்குப்போட்டு, கற்பனையில் கடலை மிட்டாயை அப்பொழுதே ருசிக்க ஆரம்பித்துவிட்டான். பொழுது விடியட்டும் என்று காத்திருந்தவன்போல், விடுமுறை நாளான அன்று வாத்தியாருக்குத் தெரியாமல் சாவியை எடுத்துக்கொண்டு சென்ற ராஜன், போதுமான ஓரணா, ரெண்டணாவை அள்ளிச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வீட்டுக்குக் கூட வராமல் நேராக தர்மலிங்கம் கடைக்குச் சென்றான்.

Representational Image
Representational Image

``தாத்தா. ரெண்டணாவுக்குக் கடலை மிட்டாய் கொடுங்க” என்ற அதிகாரத் தொனியில் ராஜன் கேட்க, ``கொடுக்கிறேன் ஐயா. நீங்க காசைக் கொடுங்க” என்றார் தர்மலிங்கம். இளங்கன்று பயமறியுமா? அதிலும் புதுக்கன்று ஆச்சே. அட்டைக்காசு ரெண்டணா கைமாற, ராஜன் அறியாதவாறு அவர் காசை தகர டப்பா மேல் போட்டார். சத்தம் வரவில்லை. புரிந்துகொண்டார். எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், கடலை மிட்டாயை நீட்டினார் தர்மலிங்கம்.

ஆசையாய் அதை வாங்கக் கை நீட்டிய ராஜனின் கைகளை இறுகப் பிடித்தபடி, ``திருடன். திருடன். ஒடியாங்க. ஒடியாங்க.” என்று உரக்கக் கத்தினார். எதிரேயுள்ள நடராசப்பத்தர் வீட்டுக்குக் கல்யாணத்துக்கு நகைகள் ஆர்டர் செய்ய வந்த ஒரு கூட்டம் திடீரென ஓடிவர, பொறியில் சிக்கிய எலியாக, என்ன செய்வதென்றே தெரியாமல், திகைப்பில் உறைந்து போய் நின்றான் ராஜன். திமிறிக்கொண்டு ஓட வேண்டுமென்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. திமிறியிருந்தாலும் தப்பித்திருக்க முடியாது. ஏனெனில் அவரின் பிடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது.

``என்னாச்சு அண்ணே. ஏன் இப்படிக் கத்தினீங்க? நீங்க கையில பிடிச்சிருப்பது யாருன்னு தெரியுதா? நம்ம வாத்தியார் பையன் அண்ணே.

``எனக்கு, தெரியுதுப்பா. அவன்தான் இத்தனை நாளா அட்டைக்காசைக் கொடுத்து என்னை ஏமாத்தினாங்கறதும் இப்பத்தானே தெரியுது” என்று சொல்லிக்கொண்டே, சிறு பொட்டலமாகக் கட்டி வைத்திருந்த காசுகளை எடுத்து எல்லோரிடமும் காட்ட, கூட்டம் வியந்து நிற்க, அதற்குள்ளாக, ஆண்கள், பெண்களென்று கூட்டம் பெரிதாகிவிட்டது.

Representational Image
Representational Image

விஷயம் தெரிந்து தர்மலிங்கத்தின் மகன் ராமசாமியும் ஓடிவர, ராஜன் `மானம் பறக்கிறதே’ என்ற சோகத்தில், கடலை மிட்டாய்க்காக நாவில் ஊறிய எச்சில் சற்றே மேலேறி கண்ணீராய் மாறிக் கண்களை நிறைக்க, பரிதாபமாக நின்றான். தன் மகன் குரல் கேட்ட பிறகே, பிடியைத் தளர்த்தினார் அவர். இனி மகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில்.

வாத்தியாருக்கு ஆள் அனுப்பப்பட்டது. இடையில் நடந்தது இதுதான். டவுனுக்குச் சாமான் வாங்கச் செல்வதற்காக ராமசாமி கல்லாப் பணத்தைக் கணக்குப் பார்த்தபோது, நிறைய அட்டைக் காசுகளைக் கண்டார். இது ஏதோ பள்ளிச் சிறுவர்களின் திருட்டு வேலை என்பதை உணர்ந்த அவர், தன் தந்தையிடம் ஓர் உபாயத்தைக் கூறினார். ``இங்க பாருப்பா. கடலை மிட்டாய், பொட்டுக்கடலைன்னு ஓரணா, ரெண்டணாவுக்குத் தின்பண்டம் கேட்டு வர்ற பசங்ககிட்ட, மொதல்ல காசை வாங்கி, இந்த டின் தட்டு மேல போட்டுப்பாரு. சத்தம் வரணும். அட்டைக்காசுன்னா சத்தம் வராது. சத்தம் வரலைன்னா அப்படியே மிட்டாய் கொடுக்கிற மாதிரி, கையைப் பிடிச்சுக்கிட்டு, நீ சத்தம் போடு” என்று கூறிவிட்டு, `உனக்குக் கண்ணும் சரியாத் தெரியலை. காதும் சரியாக் கேட்கலை. கடையை விடு. நான் பார்த்துக்கிறேன்னா அதையும் கேட்க மாட்டாங்கிறே’ என்று மனதுக்குள் நொந்தபடி போனார் ராமசாமி. ஆனால், அவர் கூறிய உபாயம் இவ்வளவு சீக்கிரம் பலன் தருமென்று அவரே நினைக்கவில்லை.

ஐயங்குளத்தில் குளித்தபடி சிங்காரம் மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தான். `அட்டைக்காசு ரெண்டணா கரையில் கிடக்கும் கால் சட்டைப்பையில் இருக்கிறது. நேரே தாத்தா கடைக்குச் சென்று பொட்டுக் கடலை, சர்க்கரை வாங்கி ஆசை தீரத் தின்றுவிட்டு அப்புறந்தான் மறு வேலை’ என்று. தர்மலிங்கம் கடையில் நடந்துகொண்டிருக்கும் களேபரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. அவனையும் தேடி ஆட்கள் வந்து, கரையில் காத்திருப்பதை அவன் உணரவில்லை. அலமேலுவுக்கும் ஆள் விட்டாயிற்று.

-ரெ.ஆத்மநாதன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு