Published:Updated:

எரியும் மெளனம்..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஜெயிக்க வாய்ப்பிருப்பவர்கள் விளையாடலாம் என்பார்கள். தோற்க இருப்பவர்கள் வெளிச்சம் இல்லை என்பார்கள். அப்போது அடிதடி ஆரம்பிக்கும்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

குணாவும் அவன் நண்பர்களும் தெருவில் நின்று நூலை இழுத்துக் கொண்டிருந்தனர். தனது சுற்றுப்பாதையின் கீழ் பட்டங்கள் இடையூறு செய்வதும், அதை அவனுடைய அம்மா வசந்தாமணி ரசித்துக்கொண்டிருப்பதும் வானத்தில் வட்டமிடும் கழுகுக்கு எரிச்சலூட்டியது.

பட்டம் விடுவது வெறும் விளையாட்டல்ல. அது ஒருவகை மனவெழுச்சியின் வடிகால் என்கிறது உளவியல். இதெல்லாம் எதுவும் தெரியாமல் வாயில்லாத ஜீவன்களுக்கு அரிசி வீசிக்கொண்டிருந்தாள் சித்தி ஜீவிதா. வாய்பேசாத ஜீவன்.

கோழிகளுக்கும் அவளுக்கும் ஒலி பரிமாற்றம். நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது குணாவை அவருடைய நண்பர்கள் இழுத்து வந்தார்கள். குணா சுற்றம் சூழ. குற்றம் சூழ. வந்து நின்றான். கூட்டாளிகளின் பிரதிநிதியாக மோகன் பேசினான். வசந்த் ஒத்தூதினான் அவர்களுடைய பட்டங்களை குணா தனது மாஞ்சா நூலைக் குறுக்கே விட்டு அறுத்துவிட்டான் என்பதுதான் அவர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.

Representational Image
Representational Image
Muhammad Muzamil on Unsplash

இப்படி அவ்வப்போது அடிதடி சண்டைகளின் நீட்சி வீடுகளையும் எட்டிப்பார்க்கும். அவனின் சித்தி ஜீவிதா பிறவியில் வாய் பேசாதவள். ஆனால், அவனை யாராவது சீண்டினால் பொங்கி எழுவாள். வார்த்தைகள் எறிய முடியாதே தவிர, கல் எறிவாள். உணர்வுகளைப் பதுக்கி வைக்கும் வேங்கை. அம்மாவின் தங்கை. மூக்கைச் சொறிந்தால் வாய்ப் பேச முடியாதவர்களுக்கு கோபம் வரும் எனச் சொல்லக்கேட்டு சித்தியை அவமானப்படுத்துபவர்களைப் பாய்ந்து அடிக்கும் சூத்ரக்காரன். அளவில்லா பாசக்காரன் குணா.

வெளியே நின்றிருந்த வசந்தாமணி குணாவின் முதுகில் நாலு சாத்து சாத்தினாள். ஜீவிதா குறுக்கே விழுந்து தடுத்து கைகளை வீசியும் சைகையிலும் “பே… பே… பே” எனக் கத்தினாள். அதாவது ”விளையாட்டில் இதெல்லாம் சகஜம். தனக்கு இன்பமான ஒன்றை எதிரி அடையவிடாமல் தடுப்பதில் இன்பம் கிடைக்கிறது. அதைத் தான் மகன் செய்தான்” என்பதைச் சொல்ல வந்தாள்.

இதுதான் சமயமெனத் தனித்த நின்றதொரு கோழிக்குஞ்சை கழுகு பாய்ந்து வந்துத் தூக்கிப் போனது. அதைத் துரத்தின வேகத்தில் மூச்சு வாங்கிய நேரத்தில் மற்றவர்கள் ஜீவிதாவுக்கு பெப்பே காட்டிவிட்டு ஓடினார்கள்.

தங்கை எப்போதும் மகன் சார்பாகத்தான் பேசுவாள். தன்னை ஏசுவாள் எனத்தெரியும். ஆனால், சரியான பதங்களில் ஒருபோதும் அர்த்தம் கொண்டதில்லை. அது அவளுக்குத் தேவையும் இல்லை. காரணம், குடும்பம் என்பது அவர்கள் மூன்று பேருதான். மூன்றே பெயர்தான்.

இன்னொரு பெயர் இருந்திருந்தால் குணாவுடைய அப்பா பெயர் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வந்திருக்கலாம். ஆடிப்பெருக்கு அன்று மட்டும் அவரின் ஞாபகங்கள் நிழலாடிவரும்.

அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் தானாகச் சுழல வாய்ப்பே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், ரேஷன் கார்டு கூட இல்லாதவர்கள்.

ஊராரின் தேவையைப் பொறுத்தே இவர்களுக்கு ரேஷன் அரிசி கிடைக்கும். தேவையான ரேஷன் பொருள்களை குணா வாங்கிப்போய் வீட்டில் கொடுக்க வேண்டும். பள்ளிக்கு குணா செல்லாத நாள்களின் எண்ணிக்கை அதிகமாகும். காலப்போக்கில் அந்தப் பள்ளி அவனுக்குச் செல்லாது போய்விட்டது.

Representational Image
Representational Image

அந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் என்பது கோயில் புல்வெளி தான். எஸ்டேட் முதலாளிகள் சாமி தரிசனம் செய்தப்பின் புல்வெளியில் இளைப்பாறுவார்கள் என்பதால் அங்கு விளையாடுவதைத் தடை செய்திருந்தார்கள்.

சுற்றியும் கம்பி வேலி போட்டிருந்தார்கள். சுற்றியும் இறங்கி விளையாடுவார்கள். அது தானே இயல்பு. குணாவும் அவன் நண்பர்களுக்கு கம்பிவேலிக்கு காயம்படாமல் ஏறி இறங்குவதில் கில்லாடிகள். கில்லி ஆடிகள்.

அவர்களுக்கு கிரிக்கெட் என்றால் குணாவுக்குக் கோலி குண்டுதான் மோதல் களம். நுணுக்கமாகக் குண்டுகளை ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு கண்ணால் குறிபார்த்து தூரத்தில் இருக்கும் குண்டை ”டுக்” என குணா அடிப்பது ஒலிம்பிக்கில் கூட நடக்காத ஒன்று. பாக்கெட்டில் எப்போதும் கோலி குண்டுகள் இருக்கும்.

ஜெயிக்க வாய்ப்பிருப்பவர்கள் விளையாடலாம் என்பார்கள். தோற்க இருப்பவர்கள் வெளிச்சம் இல்லை என்பார்கள். அப்போது அடிதடி ஆரம்பிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூக்குத்தி! - ரொமான்டிக் சிறுகதை #MyVikatan

ஒரு நாள் வசந்தை அடித்துவிட்டார்கள். அடித்தவர்களுக்கெல்லாம் அவரவர் வீடுகளில் பதுங்கிக்கொள்ள வெளியே நின்றிருந்த குணாவை நோக்கி, வசந்தின் அம்மா கோபம் திரும்பியது. இனிமேல் எங்களிடம் ரேஷன் அரிசி கேட்டு வராதே எனச்சொல்லிச் சென்றாள். அதிலிருந்து தலையே போனாலும் வசந்த் வீட்டின் ரேஷன் அரிசி வேண்டாம் என ஜீவிதா உறுதியாக நின்றாள்.

ஆரஞ்சு பறிக்க குணாவோடு நான்கு பேர் எஸ்டேட் பங்களா தோட்டத்திற்குள் புகுந்தார்கள். இதொன்றும் புதிதல்ல. இவர்களின் எல்லைக்குள் இருக்கும் அத்துணை மரங்களின் வரலாறும் அத்துப்படி. மத்தபடி சமத்தாகப் பறிப்பார்கள். சமமாகப் பிரிப்பார்கள். பறிக்கும் வரை ஓய்வில்லை. பிரிக்கும் வரை பிரிவில்லை.

Representational Image
Representational Image

``பிடிங்கடா அந்த நாய்களை…” என்ற அதிகாரக்குரலுக்கு அடுத்த நொடியில் விளையாடும் மைதானத்திற்குள் ஆட்கள் புகுந்தார்கள். குணாவும் மோகனும் வகையாகச் சிக்கிக்கொண்டார்கள்.

குணாவின் கைகள் அவனுடைய சட்டையாலேயே கட்டப்பட்டு முழங்காலிடப்பட்டான். அவனுக்கு முன்னால் நின்றிருப்பவன் கையில் நீண்ட மூங்கில் குச்சி குணாவின் தாடையை நீவி மேல் தூக்கியது. அநியாயத்திற்கு அடிப்பவனுக்கு எதாவது திரைப்படக் காட்சி கண்முன் வந்திருக்க வேண்டும்.

இதுவரை ஐந்து அடிகளுக்கு மேல் விழுந்திருக்கும்.

''எத்தனை பேர் திருட வந்தீங்க?''

''இரண்டு பேர் மட்டும்தான்…''

''அவன் யாரு?''

''மோகன்…''

டீக்கடைக்காரரின் மகன்.

இனி மேல் இந்தப் பக்கமே வரக்கூடாது. ஓடிப்போ. என மோகனைத் துரத்தினார்கள். அவங்கப்பா பரிச்சயமானவர் என்பதால்.

மற்றவர்கள் பயந்து நெடுநேரம் பதுங்கியிருந்து போனார்கள். குணா மட்டும் ஒதுங்கியிருந்து போனான்.

அடுத்த நாள் அந்தக் கோயில் சாமிகளிடம் என்னென்னமோ சித்தி பேசிக்கொண்டிருந்தாள். அந்த மொழி கடவுளுக்கும் அவளுக்குமான ரகசியமொழி. இறுதியில் எஸ்டேட்டு பங்களா இருக்கும் திசையில் மண்ணைத் தூற்றியப் பின்னான அமைதி வசந்தாமணிக்கு பெரும்புதிராக இருந்தது.

Representational Image
Representational Image

கொஞ்ச நாள் யாரோடும் ஒட்டும் இல்லை உறவுமில்லை. பிறகு குணாவை ஊர்த் திருவிழாவில்தான் பார்த்தார்கள்.

திருவிழா நடக்கும் அந்த நாளில் காலையில் சாமி அழைப்பு தொடங்கியிருந்தது. கூட்டமாக ஆடிக்கொண்டு வந்தனர். குணா முன் வரிசையில் ஆடிக்கொண்டு வந்தான்.

ஆடற ஆட்டத்தைப் பாரு… என்னோட சட்டையைக் கழட்டுடா

எனக்கு உன்னோடதுன்னு தெரியாது…

ஆட்டம் உச்சதோனியில் இருக்கும்போது மோகன், குணாவின் சட்டையைப் பிடித்து அவனை அடித்துவிட்டான். மோகன் தள்ளி விட்டதில் குணாவிற்கு கால் சுளுக்கியது.

அடுத்த நாள் குணாவின் அம்மாக்கள் மோகனின் வீட்டிற்கே வந்துவிட்டார்கள்.

``உங்க பையன் குணாவை முதுகில குத்தியிருக்கான்” என்றதும் மோகனின் அம்மா ஞானம்மாள் மோகனை விசாரித்தாள்

``அவன் என்னுடைய சட்டைய போட்டு தினுசா ஆடிட்டு வந்தான்”

``அன்னிக்கி முதலாளி அடிச்சு சட்டை கிழிஞ்சு போச்சுன்னு நீங்க தானே வேற சட்டைக் கொடுத்தீங்க. அன்னிக்கு அவங்க அடிச்சாங்க, இன்னிக்கு உங்க பையன் அடிச்சிருக்கான். இது நல்லாயில்ல…’’

``எது நல்லாயில்ல… சோத்துக்கு இல்லாம… எங்க கார்டில அரிசி வாங்கிறது மட்டும் நல்லாயிருந்ததா… ரோசப்பட்டு வர அந்தளவுக்கு பெரிய ஆளு ஆயிட்டீங்களா…’’

Representational Image
Representational Image

``உதவி செஞ்சீங்க வாஸ்தவம்தான். அதுக்காக நாங்க அடிமையா? எங்களுக்கு கை கால் இருக்கு. நாங்க சம்பாதிக்கிறோம்.’’

கூட வந்த ஜீவிதா வாயசைப்பதும் கைகளால் சைகை செய்வதும் காற்றில் வீணானது.

மூன்றாவது நாள் மஞ்சள் நீராட்டு விழா. ஊரே அமர்களமாயிருந்தது. குணா மிளகாய்தூளை கரைத்துக் கொண்டிருந்தான். நல்லவேளை அந்த வழியாக மோகன் கடைசிவரை வரவே இல்லை.

அடுத்த நாள் வசந்தாமணி குணாவிற்கு காலுக்கு எண்ணெய் போட்டு நீவிக்கொண்டிருந்தாள். எதோ கருகும் வாசனை நாசியைத் துளைத்தது.

இரு கைகளிலும் எண்ணெய் படர்ந்து இருந்ததால் அவள் எழாமலேயே குணாவை ஏவினாள்.

``சித்தி எங்கே போனா? குணா, என்னவோ கருகிற நாத்தம்… போய்ப்பாரு.’’

நொண்டியபடியே வெளியே எட்டிப்பார்த்தான்.

``அம்மா… சீக்கிரம் ஓடி வா.’’

வசந்தாமணி வெளியே ஓடிவரவும் கழுத்திற்கு நெருப்பு படரவும் சரியாக இருந்தது.

Representational Image
Representational Image

ஒரு கை கடைசி தடவையாக டாடா காண்பித்து சுருங்கிக்கொண்டது.

இன்னொரு கை முழுதாக பொசுங்கியிருந்தது.

குணாவுக்கு ஆனந்தமாக இருந்தது…

நெருப்பில் முடி சுருங்குவது போலத் தனது உடலை தானாகவே சுருக்கிக்கொண்டது மோகனின் சட்டை.

மோகனின் சட்டையை அடுப்பில் திணித்து குச்சியில் வதம் செய்துகொண்டிருந்தது சித்தியின் கைகள். அவளின் மனது போலவே சட்டையும் மெளனமாக எரிந்துகொண்டிருந்தது. அண்ணாந்து பார்த்தான். கழுகு அடுத்த கோழிக்குஞ்சுக்கு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு