Published:Updated:

கைம்பெண்! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Casey Nguyen / Unsplash )

``உங்கம்மாவுக்கு வேற வேலையே இல்ல. காலங்காத்தால லீவு நாள் அதுவுமா கூட எதுக்கு எழுப்புறாங்கனு தெரியலை" என முனங்கி கொண்டே கதவைத் திறந்தாள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அதிகாலை ஆறு மணிக்கு அறையின் கதவை யாரோ தட்டினார்கள்.`காலையிலேயே இவ்வளவு வேகமாக யாரு கதவை தட்டுறா? இவளும் பக்கத்துலதான் படுத்திருக்கா' என யோசித்தேன்.

``உங்கம்மாவுக்கு வேற வேலையே இல்ல. காலங்காத்தால லீவு நாள் அதுவுமா கூட எதுக்கு எழுப்புறாங்கனு தெரியலை" முணங்கிக் கொண்டே கதவைத் திறந்தாள்.

நான் ஒன்றும் பேசவில்லை. காலையிலேயே அம்மாவைக் குறை சொல்வது கோபம்தான். அதைவிட அங்கிட்டு அதிகமாக இருக்கும்போது இப்படித்தான் பேசமாட்டேன்.

எனக்குத் திருமணம் ஆனதிலிருந்து என்னை எழுப்பும் வேலையை அவளிடம் கொடுத்துவிட்டார்கள்.

Representational Image
Representational Image

நானும் எழுந்து, ``என்னமா?" என்றேன்.

``பால் வாங்கப் போனேன்" என்றார்.

அம்மா கூறி முடிக்கும் முன்பே அவள் மீது இருந்த கோபத்தை அம்மாவிடம் காட்டினேன்.

``ஏம்மா கொஞ்சம் லேட்டாதான் காபி குடிச்சா என்ன? காலையிலேயே இப்படி தொல்லை பண்ணுற?"

ஆண்களின் கோபமே இப்படித்தான் எதன் மீது காட்டவேண்டுமோ காட்டமாட்டர்கள். அலுவலக கோபத்தை வீட்டிலும், வீட்டின் கோபத்தை ரோட்டிலும் காட்டுவார்கள்.

(இரவு வரும்போது பால் வாங்கி வரச் சொல்லியிருந்தார். இருவரும் வர தாமதமானதால் அவள் வாங்கியிருப்பாள் என்று நானும், நான் வாங்கி இருப்பேன் என அவளும் வந்துவிட்டோம்).

``இல்ல. அப்பாவுக்கு காலையிலேயே டீ போட்டு குடுத்து பழக்கமாயிடுச்சுல. அதனால்தான் பால் வாங்கப் போனேன்."

அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. வேலைக்கு ஒரு பெண் வைத்துக்கொள்ளலாம் என்பதில் மட்டும் மாமியும் மருமகளும் ஒற்றுமையாக மறுத்துவிட்டார்கள்.

``பால் வாங்கிட்டியாம்மா?"

``இல்லை" என்றார்.

``ஏன்?"

``அந்தக் கடைக்காரர் என்னிடம் காசு வாங்க மாட்டேன்னு சொல்றாரு, காலையிலேயே கடைக்கு வராதீங்கனு சொல்றாரு."

ஒரு நொடி எனக்குப் புரியவில்லை, புரிந்தவுடன் செம ஆத்திரம் வந்தது. சட்டை போட்டேனா என்றுகூட நினைவில் இல்லை. எப்போதும் அருகில் என்றால் நடந்துதான் செல்வேன். இருந்த ஆத்திரத்தில் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பைக்கின் சக்கரம் தேயும் அளவு கடை வாசலில் நின்றேன்.

முதலில் ஏற்பட்ட ஆத்திரம் கொஞ்சம் பைக்கு மடை மாற்றப்பட்டதால் சற்று தணிந்து இருந்தேன். கடையில் மூன்று பேர் இருந்தனர். தினமும் ஒரு முறையாவது வரும் கடை தான் அது.

``அம்மா வந்தாங்களாம். காலையிலேயே கடைக்கு வராதீங்கனு யார் சொன்னது?"

அதற்குள் அம்மாவும், மனைவியும் என் பின்னாலே வந்திருந்தனர். அம்மா அதில் ஒருவரை கைகாட்டினார்.

``தம்பி இங்க வா" என்றேன்.

Representational Image
Representational Image

``உனக்கு நாலு கழுதை வயசாகுதுல. எப்பிடி நடந்துக்கணும்னு தெரியாது....." வாயில் ஏக வசனமாதான் வந்து விழுந்தது.

``இல்லண்ணா. கோயிலுக்கு மாலை போட்டு இருக்கேன். அதான் மொத காசு லேடீஸ்கிட்ட வாங்குறதில்லை" என்றார்.

``எந்தக் கோயிலுக்கு?"

``முத்தாரம்மன் கோயிலுக்கு அண்ணா" என்றான்.

அவ்வளவு தான். கோபம் இன்னும் தலைக்கேறியது.

``ஏன் தம்பி. அதுவும் பெண் சாமி தானே? அது வந்து சொல்லுச்சா. காசு வாங்கக் கூடாதுனு?"

``அண்ணா அது சாமி" என்றான்.

``அப்ப இவங்க யாரு. பெண்களே சாமி தானே. பெண்களை சாமியா கும்பிடுற நீங்க தான் இப்படி பெண்களை அசிங்கப்படுத்துறீங்க. சரி ஏன் காசு வாங்கலை அதைச் சொல்லு" என்றேன்.

அமைதியாக நின்றான்.

``என்னடா அமைதியா நிக்குற" என்று அதட்டினேன். கடையில் இருந்த மற்ற இருவரும் சமாதானப்படுத்தினார்கள்.

``இல்ல அண்ணா அவங்க கைம்பெண். அதான் அவங்ககிட்ட எப்படி மொத போணி பண்ணுறதுனு வாங்கலை."

செம கோபம் அடிக்க கையை ஓங்கிவிட்டேன். ஒரு நொடி சுதாரித்து அவனிடம்,

``மீனு வித்த காசு நாறுமா. திரவியம் வித்த காசு மணக்குமா? நீ போட்டு இருக்கியே மாலை அந்த சாமி சொல்லுச்சா கணவனை இழந்த பெண் கிட்ட காசு வாங்காதன்னு. புருஷன் செத்துட்டா பொட்டு வைக்கக் கூடாது, சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது, எதுக்க வரக் கூடாது, எவ்வளவு கட்டுப்பாடு. புருஷன் விதி முடிஞ்சது அவர் போய்ட்டாரு. அவங்களே எவ்வளவு கஷ்டப்படுவாங்க. ஏன்டா இப்படி இருக்கறவங்களையும் இந்த சமுதாயத்துல இருக்குற மூடநம்பிக்கையால் மேற்கொண்டு கஷ்டப்படுத்துறீங்க. யார் காசு கொடுத்தாலும் அதுல காந்தி இருக்காரானு பார்க்குற நீங்க, எல்லாரையும் சமமாக பார்க்க தெரிஞ்சுக்கோங்க.

Representational Image
Representational Image

இதே பொண்டாட்டி செத்து போயிட்டா புருஷன்கிட்ட அப்படி நடந்துக்குவீங்களா? அவங்களே புருஷனை பறிகொடுத்துட்டு, பிள்ளையை மருமகளுக்கிட்ட கொடுத்துட்டு இருக்காங்க. இந்த சமூகத்தை இப்படி பண்ணியே கெடுத்து வச்சுருக்கிங்க உங்கள மாதிரி ஆளுங்க. அடுத்த முறை இப்படி நடந்துச்சு. கடை மட்டும்தான் இருக்கும். நீ இருக்க மாட்ட" என்று கோபமாக சொல்லிட்டு வேகமாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.

ஏனோ என் வாடிக்கையாளர் சேவை மைய நிறுவனத்தில் ஒரு கைம்பெண்கூட இல்லை என்கிற உண்மை எனக்கு அன்றுதான் உரைத்தது.

-சுகேஷ் சங்கரலிங்கம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு