Published:Updated:

50 பைசா! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

தொட்டியம்பட்டியிலேயே... ஏன் பக்கத்துக் கிராமங்களிலேயே பாண்டி தன் 4 வயது மகன் சுந்தரத்தை முதன்முதலாக அந்தப் பள்ளியில் சேர்க்கப்போகிறான்...

தண்ணீரில் கல்லை எறிந்ததைப்போல சண்முகநதியில் புனிதநீராடி மேலெழும்பும் பலநூறு பேரில் இருவராக மேலெழும்பினார்கள் நாற்பதைத் தொட்ட பாண்டியும், அறுபதைத் தாண்டிய தவசும்.

பழனி முருகனுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாலயே சொல்லிவச்சு, சொன்ன நாள் வந்ததும் 230 கிலோமீட்டர் நடந்தே போயி, மலையேறி, முன்னவனுக்கு முப்பாட்டனான முருகன பாத்து, "எம்பகவானே சொன்ன மாதுரியே உன்ன வந்து பார்த்துபுட்டேன். இனி நீ நான் கேட்டதா பண்ண வேண்டியதுதான் பாக்கி, பார்த்து பண்ணிக்குடுத்துப்புடு"னு சொல்லிப்புட்டு, வேண்டுனதுல இருந்து "கார்த்திகேயனுக்கு"னு வெட்டாம வச்சிருந்த முடிய காணிக்கையிட்டு, இந்தச் சண்முகநதியில முங்கி எழுவாக தொட்டியம்பட்டி ஆளுக. பஞ்சாமிர்தமெல்லாம் கடைகள்ல இதுக வாங்கிரக்கூடாது, அது நம்ம குலசாமிக்கி ஒத்துக்காது.

Palani Temple
Palani Temple

எப்ப பழனிக்கிப் போனாலும் அம்ம ஊருல வெள்ளாடு மேச்ச செம்பட்டியா வழியில வந்த எவுகலயாச்சும் கூட்டிக்கிட்டுப்போயி அவுக கையால கரைக்கச்சொல்லி, கரைச்சவுகளுக்கு கரக்கூலியா ஒரு சின்ன வாலில குடுத்துட்டு, மிச்சத்த கூட்டிக்கிட்டுப் போனவுக எடுத்துக்குவாக. செம்பட்டியா வழி வந்த கடைசி ஆம்புள தவசுதே. எப்போவும் தொட்டியம்பட்டி ஆளுக ஊரோட சேர்ந்துதே நேந்துக்கிட்டது நிறைவேறணும்னு, பழனிக்கி தை மாசம் வருவாக. ஆனா, ஆனி மாசத்துல தவசக்கூட்டிக்கிட்டு பழனிக்கி தனியா வந்துருக்கான் `நம்ம பய பாண்டி.'

பைப்ப தொறந்துவுட்டு ஒண்ணுக்குப் போகும்போது தடவ கையி ரெண்டயும் தேச்சுத் தேச்சு கலுவுறாரு தவசு. அப்புறம், பேரீச்சம்பழத்தையும் வாழப்பழத்தையும் சட்டியில போட்டு பிசய ஆரம்பிக்குறாரு. அதுக்கப்புறம் வெள்ளம், நெய்யி, தேனு, ஏலக்கா எல்லாதையும் போட்டு கையவிட்டு நல்லா ஒரு கிண்டு கிண்டி, கடைசியா கையக் கழுவப் போகும்போது பசையாட்டம் கையில ஒட்டிக்கிட்டுக் கெடக்க பஞ்சாமிர்தத்த நாக்க வச்சு ஒரு நக்கு நக்க, சுர்ருனு ஏறுது மூளக்கி. கையக்கழுவிப்புட்டு வந்து, காயாத எளந் தென்னமட்டய பாயி மாதிரி விரிச்சுப் படுத்துருந்த பாண்டிக்கிட்ட வந்து, "ஏ பாண்டி அமுருத தோத்துப்போகுமுடா, அம்புட்டு சொவ".

Representational Image
Representational Image

புன்முருவலோடு எழுந்து உட்கார்ந்த பாண்டி "இருக்காதா பின்ன" என்றான். ஆமப்பா ! நடுத்தெருவுல பொருளயும், கடைசித் தர பொருளயுந் தே வச்சு எனக்கு விவரந்தெரிஞ்ச நாளா நா பஞ்சாமிர்தம் பெசஞ்சுக்கிட்டு இருக்கேன். நம்ம ஊருலயே மொதத் தரப் பொருளுல பெசஞ்சது ஓங் காசுதேப்பா. எம் புள்ள, ஒலகத்தயே ஆளப்போற படிப்பு படிக்யப் போரே, இந்நேரத்துல போயி காசு கண்ணியல இதுக பாக்கலாமா. இம்புட்டு செலவு பண்ணி படிக்ய வக்யப் போறியே, அம்மளுக்கு அந்தப் படிப்பப் பத்தி சொன்னீயனா தெரிஞ்சுக்கிடுவோம்ல. ஏன்னா, நாளப்பின்ன வெளியூருக்கிதுக போகும்போது "குண்டு, குழி, கல்லு, மண்ணு"னு கெடக்குற தொட்டியம்பட்டி ரோட்டுல மொத மொதல்ல பஸ்ஸு வந்த வரலாத்த, அந்த ஊரு காரங்யக் கிட்ட சொல்லி பீத்திக்கிடலாமுல. அட செம்பட்டியா வழி வந்த தவசு, ஒனக்கில்லாததா... வா நடந்துக்கிட்டே பேசுவோம். வழியில் நிறைந்திருந்த இளநீர் கடைகளைக் கடந்தபடி சண்முகநதியிலிருந்து பேருந்து நிலையத்தை நோக்கி பேசிக்கொண்டு வந்தனர்.

தவசு, "ஊரு பாஷ தெரிஞ்சவே ஊர ஆளுரே, ஒலக பாஷ தெரிஞ்சவே ஒலகத்த ஆளுரே." எம் மயே ஒலகத்த ஆளப்போறாவே அவனுக்கு ஒலக பாஷய சொல்லிக்குடுக்குறது தானே மொற. ஆமப்பா, "நீரு சொல்றதும் சரி தானப்பா." போன வருஷமே எம்மகன இங்கிலீசு மீடியத்துல சேக்குறதாதே இருந்துச்சு. எம் பொண்டாட்டி முண்டகண்ணிதே, "பத்து வருஷமா தவம் இருந்து பெத்த புள்ள மாமா, ஒரு வருஷத்துக்கு நம்ம ஊரு பால்வாடிக்கிப் போயிட்டு வரட்டும். அடுத்த வருஷம் பட்டணத்துல இருக்க லயன்ஸ் இங்கிலீசு மீடியத்துல சேத்து விடுவோம்"னு கண்ணக் கசக்கிக்கிட்டு நின்னா, அவ கண்ணு கலங்க ஏ மனசு கலங்கிப் போச்சு.

Representational Image
Representational Image

என்னத்த பண்ண பொண்டாட்டியாச்சே. லயன்ஸ் ஸ்கூல் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும், தொட்டியம்பட்டிக்கு அருகிலிருக்கும் இங்கிலீஷ் மீடியம். தொட்டியம்பட்டியிலேயே... ஏன் பக்கத்துக் கிராமங்களில்யே பாண்டிதான் தன் 4 வயது மகன் சுந்தரத்தை முதன்முதலாக அந்தப் பள்ளியில் சேர்க்கப்போகிறான். இந்த ஸ்கூல்ல குழந்தைகளை நாம் கொண்டு சென்று விட்டு, கூட்டி வரத் தேவையில்லை. வீட்டு வாசல்வரை ஸ்கூல் பஸ்ஸை ஓட்டிக்கிட்டு வந்து கூட்டிக்கிட்டுப் போய்ருவாங்க. மாலையில் அவர்களே வந்து வாசலில் விட்டுச் சென்றுவிடுவார்கள். இன்னும் ரோடுகூட போடாமல் இருக்கும் தொட்டியம்பட்டி மண் சாலையில் முதன்முதலாக பஸ் வரப்போகும் வரலாற்று நிகழ்வு நிகழப்போவதும் இ்தனால்தான்.

சுந்தரம் இப்போதைக்கு ஊரில் இருக்கும் பால்வாடிக்கு போய்க்கொண்டு இருக்கிறான். அடுத்த மாதம் அவனை லயன்ஸ் ஸ்கூலில் சேர்க்கப்போகிறான் பாண்டி. அவன் நன்றாகப் படிக்க வேண்டுமென்றுதான், இந்த ஆனி மாதத்தில் பழனி வந்திருக்கிறான் தவசை கூட்டிக்கொண்டு.

"வந்தா வாடி வராட்டினா போடி" "ஏபிசிடி கொப்பந் தாடி வந்தா வாடி வராட்டினா போடி." பால்வாடிக்கு பக்கத்துல இருக்க சின்ன பெட்டிக்கடையில இருந்து ஏதோ ஒண்ண வாங்கிட்டு வந்து கூட்டமா நின்னு "ஏபிசிடி கொப்பந் தாடி வந்தாவாடி, வராட்டினா போடி"னு தன் கூட படிக்குற பசங்க விளையாடிக்கொண்டு இருப்பதை சுந்தரம் பால்வாடிக்குள்ளிருந்து சன்னல் வழியாகப் பார்த்தான். ஆர்வமாக வெளியில் வந்து அவர்கள் பக்கத்தில் போய் பார்க்கிறான் சுந்தரம். அதில் ஒருவன் அதை வாங்கிக்கொண்டு வந்து, பேப்பரைப் பிய்த்து உள்ளே இருக்கும் இனிப்பை கீழே கொட்டுகிறான். பின்னர், அந்த பேப்பரை வளைத்து வளைத்து, சுழற்றி சுழற்றி மாற்ற அதில் முகங்கள் மாறும் அதிசயங்கள் நடக்கிறது.

Representational Image
Representational Image

அதிசயம் செய்து காட்டியவன் அதன்பின் அந்த பேப்பரை மேலே தூக்கிக் காட்டி "ஏபிசிடி கொப்பந் தாடி, வந்தா வாடி வராட்டினா போடி "னு கத்திக்கொண்டே ஓட மற்றவர்களும் தங்களது பேப்பரை மேலே தூக்கிக் காட்டியபடி அவன் பின்னே காத்திக்கொண்டே ஓடுகின்றனர். சுந்தரம் கடையினுள் சென்று, சரம் சரமாய் கம்பியில் தொங்க விடப்பட்டிருந்த அந்த இனிப்பைக் கைகாட்டி தனக்கு வழங்குமாறு கடைக்காரனிடம் சொன்னான். மரச்சேரில் அமர்ந்திருந்த கடைக்காரனுக்கு தரையில் அமர்ந்திருந்த அவனது மனைவி கால் விரல்களுக்கு நெட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். சுந்தரம் வந்து கேட்க, கடைக்காரன் எழுந்து கம்பியில் தொங்கிய இனிப்புகளில் ஒன்றைப் பிய்த்துக் கொடுத்தான். மகிழ்ச்சியான சுந்தரம், வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியேறினான். "அடியாய்த்தே காசக் குடுக்காம ஓடுறதப் பாரு மச்சான்" என்றாள் கடைக்காரனின் மனைவி. கடைக்காரன், "காரியந்தாண்டி பாண்டி மவன்லே, அந்த வகையறா வெஷம் இருக்காதா"னு சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியேறி, சுந்தரத்தின் கையில் இருந்த இனிப்பை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு திரும்பினான்.

"அம்மா... அம்மா... எனக்கது வேணும்." அழுதுகொண்டே கடைக்காரனிடம் முறையிட்டான் சுந்தரம். "காசு குடுத்தாத்தே இதத் குடுப்பேன், ஓ அப்பேன் மட்டும் பொழச்சா பத்தாது. நாங்களும் பொழக்கணும்." காசு என்ற வார்த்தையைக் கேட்டு அழுகையை நிறுத்திய சுந்தரம், "காசா அப்டினா " என்றான். ஏளனச் சிரிப்புச் சிரித்த கடைக்காரனின் மனைவி, "அப்பன் ஊரையே ஏச்சுப் புடுவான், நீ காசுனா என்னனு தெரியாம இருக்கியா"என்றவள் `ஐம்பது பைசா'வைக் காட்டி "பாண்டி மவனே இந்தாப் பாத்துக்கடா, இதக் குடுத்தா இதக் குடுப்பி"னு சொன்னாள். அதில் தெரிந்த மூன்று சிங்கங்களின் முகத்தைப் பார்த்து, "ஓ இந்த முகத்தக் குடுத்து அந்த முகத்த வாங்கணுமா? சரி சரி"னு தனக்குள் சொல்லிக்கொண்டான். புளிச் சாக்கிலிருந்து கை நிறைய புளியை அள்ளி அடுப்பிலிருக்கும் குழம்புச்சட்டியில் போடுகிறாள், பாண்டியின் மனைவி கனகு. பால்வாடியிலிருந்து சுந்தரத்தை அவன் பாட்டி கூட்டிக்கொண்டு வந்தாள். வீட்டுக்கு வந்தவுடனேயே சமயலறையில் சமைத்துக்கொண்டிருக்கும் தன் அம்மாவை நோக்கி ஓடினான் சுந்தரம்.

Representational Image
Representational Image

"ம்மா... ம்மா..." என்று அம்மாவின் சீலை நுனியைப் பிடித்து இழுத்தான். "என்ன தங்கம்" என சமைத்துக்கொண்டே பேசினாள். இன்னக்கி பால்வாடிப் பயலுக எல்லாரும் ஒரு இனிப்பு பேப்பர வச்சு விளையாடிட்டு இருந்தாங்யல, நான் போயி பாத்தனா, அதுல மூஞ்சி மாறுதுமா. "அத வாங்குறதுக்கு என்ன பண்ணணும்"னு கடக்காரர் கிட்ட கேட்டனா, அவரு பொண்டாட்டி வட்டமா ஒன்னக் காமிச்சாங்கலா, அதுல மூணு சிங்கத்தோட முகம் இருந்துச்சு மா. சுந்தரத்தின் பேச்சை இடை மறிதது தாயின் சிரிப்பு. "தங்கோம் அது அம்பது காசு முட்டாயி, கடக்காரி காமிச்சது காசு." அந்தக் காசக் குடுக்குறீயாமா, நா போயி வாங்கிட்டு வாறேன். "வீடே ஒலகமுனு வாழுரவ நான், " எனக்கெதுக்கு காசு. தெனமும் ஒங்க அப்பாதானே பால்வாடியில ஒன்னய கொண்டுபோயி விடுறது, பழனியில இருந்து காலையில 4 மணிக்கி அப்பா வந்துருவாரு.

காலையில அவரு கூட பால்வாடிக்கிப் போகும்போது வாங்கிக்க. "ஏ கெளவீ... கெளவீ, காலயில 4 மணிக்கி நீ சாணி தொளிக்க எந்திருக்கும்போது, என்னையும் எழுப்பி விடு சரியா" என்று முற்றத்தில் புளி குத்திக்கொண்டிருந்த பாட்டியிடம் சொன்னான் சுந்தரம். "ஏ வைரோம்" என்றவள் பேரனைத் தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள். காலையில அப்பா வர்றாரு, கடக்கிப் போகணும். நான் காலையில 5 மணிக்கிதேன் எந்திருப்பேன், அதுக்கு முன்னாடி எந்திரிச்சா எழுப்புறேன்டா வைரக்கல்லு. பேரன் முடியைக் கோதியவாறு இருந்தவள், அவன் தலையில் ஒரு முத்தமிட்டு, "நீ, 4 மணிக்கி எழுந்திருக்கணும்னா ராத்திரி 8 மணிக்கி எல்லாம் தூங்கணுமே, நீ ராத்திரிப் பூரா சிட்டி டிவி பாத்துட்டு 10 மணிக்கி தேன் படுப்ப." இன்று பத்து அல்ல, ஒன்பதும் அல்ல, எட்டும் அல்ல, சுட்டி டிவியும் அல்ல.

Representational Image
Representational Image

ஏழுக்கே சாப்பிட்டு ஏழரைக்கே படுக்கையறை சென்றுவிட்டான் சுந்தரம். நாளை முட்டாயியைப் பெறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு, அவனை உறங்க விடவில்லை. தூங்கியும் தூங்காதவாரும் கிடக்கிறான். சேவலானது பகலின் வருகையை எப்போது தெரிவிக்குமென எதிர் பார்த்துக் கிடக்கிறான். எண்ணத்தின் படங்கலானது அந்த மிட்டாய் பேப்பரோடு, தான் விளையாடுவது போன்ற காட்சிகளால் நிறைந்திருந்தது. கொக்...கரக்...கோ... கொக்கரக்கோ... கோ... முதல் சேவலின் கூவல் தெரிவித்தது, அப்பா சற்று நேரத்தில் வரப்போகிறார் என்பதை. துள்ளி எழுந்த சுந்தரம், ஐயோ! அம்மா இந்நேரத்தில் எழுந்தால் திட்டுவாளே என யோசிக்கலானான். அம்மாவை எழுப்பினான். "ம்மா...ம்மா ஆய் வருதுமா..." என்றான். அவள் சுந்தரத்தை கொள்ளைப் புறத்துக்கு அழைத்துச் சென்றாள். தாயும் சேயும் கொள்ளைப் புறத்திலிருந்து வீடு திரும்பினர்.

முற்றத்தில் பரப்பப்பட்டிருந்த பொம்மைகள், ரயில் வண்டி, ரிமோர்ட் கார், சிறுவர்கள் ஓட்டும் சைக்கிள் போன்றவை தந்தையின் வரவை தெரிவித்தன. தாயின் கையை உதறிவிட்டு, வீட்டுக்குள் சென்று ஒவ்வொரு அறையா சென்று அப்பாவைத் தேடினான். சுந்தரம் ஓடும் சத்தம் கேட்டு எழுந்தால் பாட்டி. என்னடா வைரோம் ஓடிக்கிட்டு இருக்க என்றவளின் ஓசையை, செவிமடுக்காமல் தேடிக்கொண்டே இருந்தான். சாமி கும்பிடும் அறையிலிருந்து வெளியில் வந்தான் பாண்டி.

Representational Image
Representational Image

"அப்பா..." என சுந்தரம் தந்தையை நோக்கி ஓடி வர, அவனைக் கட்டித்தழுவினான் பாண்டி. அப்பாவை பார்த்த சந்தோஷம், ஓடிவந்த இளைப்பு ரெண்டும் ஒருசேர திக்கித் திக்கித் தன் விருப்பதைச் சொன்னான் சுந்தரம். "அடியே முண்டக்கன்னி ஓம் புள்ளக்கி வந்த புத்தியப் பாத்தியா. பாண்டி மவேன் கலி திங்க ஆசப்படலாமா", டேய் தம்பி, "பழனியில இருந்து மூணாயிர ரூவாக்கி ஒனக்கு வெளயாட்டுச் சாமே வாங்கிக்கிட்டு வந்துருக்கேன். நீ என்னனா அம்பது காசு முட்டாயிப் பேப்பர வச்சு வெளயாடுறேன்னு சொல்ற." என்றான் பாண்டி. வாங்கிக் கொண்டு வந்த சைக்கிளை, வீட்டு வாசலில் வைத்து விடிய விடிய சுந்தரத்ததுக்கு ஓட்டச் சொல்லிக் கொடுத்துக்கொண்டு, இருந்தான் பாண்டி. அப்பாவுடன் விளையாடும்போது சிரித்துக்கொண்டே விளையாடினான் சுந்தரம்.

ஆனால், அவன் கண்கள் சிரிக்கவில்லை. "உதடுகளை பொய்யாக சிரிக்க வைத்துவிடலாம், கண்களை அவ்வாறு செய்ய முடியாதல்லவா." அப்பாவிடம் எப்படிச் சொல்வதென்று தெரியாமல், சுந்தரத்தின் அன்றைய நாள் விடிந்தது. 7 மணிவரை ரோட்டில் சென்றவர்களளெல்லாம், "என்னா பாண்டி, மவனுக்கு விளயாட்டுச்சாமான் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்க, அவர்களது வார்த்தைகளில் மனம் மழிந்தான் பாண்டி. அவனது மனமழிச்சியை அவனது புன்முறுவல் வெளிப்படுத்தியது. சுந்தரத்தை பால்வாடியில் விட்டுவர அவனது கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் பாண்டி. சுந்தரம், எப்போதும் பால்வாடிக்கு செல்லும் வழியில் அப்பாவிடம் இடைவிடாது பேசிக்கொண்டே வருவான். இன்று அது நிகழவில்லை. இதை உணர்ந்த பாண்டி, "என்னடா தம்பி ஒரு மாதிரியா இருக்க" என்று வினவினான். சிரித்திக்கொண்டே "ஒண்ணும் இல்லப்பா" எனப் பதிலளித்தான் சுந்தரம்.

Representational Image
Representational Image

இருவரும் பால்வாடிக்கு வந்தனர். "டேய் தம்பி பத்தரமா படிடா, அப்பா பால்வாடி முடியும்போது கூட்டியாற வாறேன்" என்ற பாண்டியின் குரலை செவிமடுக்காமல் பால்வாடிக்கு அருகிலிருந்த பெட்டிக் கடையையே பார்த்துக்கொண்டு இருந்தான் சுந்தரம். அட முண்டக்கண்ணி பெத்த மவனே, ஓன் ஆத்தா எனக்குத்தேன் பெத்தாலானு தெரியல, ஓம் புத்தி என்னடா இப்புடி இருக்கு. அப்பன மாதிரி வளந்ததுக்கப்புறம் இப்புடியெல்லாம் இருக்காதடா "பொளக்கெத் தெரியாதவேன்"னு சொல்லிப்புடுவாங்ய்கே என்ற பாண்டி பால்வாடியில் சுந்தரத்தை நிறுத்திவிட்டு, கடையை நோக்கி நடந்தான். தந்தை திரும்பி வரும்போது அவரது கையில் அந்த மிட்டாய் இருப்பதைக் கண்ட சுந்தரம், "அவனது வாழ்வில் முதன்முதலில் விண்மீன்களைக் கண்டபோது, எவ்வளவு மகிழ்ச்சி் கொண்டானோ அதில் இருமடங்கு மழிச்சியை அடைந்தான்." சுந்தரத்தின் அருகில் வந்த பாண்டி, அந்த மிட்டாய்யை சலிப்புடன் "இந்தா" என அவனது வலதுகையைப் பிடித்து வைத்தான். சுந்தரம், மகிழ்ச்சி வேகத்தில் மிட்டாயின் பேப்பரரைக் கிழித்து அதிலுள்ள இனிப்பைக் கீழே கொட்டினான். அதன் பேப்பரை தன் முகத்தின் அருகில் கொண்டு வந்து மேல் பக்கம் திருப்புகிறான் "டாடி", கீழ் பக்கம் திருப்புகிறான் "மம்மி".

- ஆர்.விக்னேஷ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு