Published:Updated:

சோப்பு கம்பெனியும் அறிவாளி தாத்தாவும்! - ஒரு குட்டிக் கதை #MyVikatan

Representational Image
Representational Image

அது ஒரு பிரபலமான சோப்பு கம்பெனி. எண்ணற்ற விளம்பரங்கள் மூலமாக அந்த கம்பெனி மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து இருந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்.

அவ்வாறே ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகளும், சிக்கல்களும் தனித்துவமானவை. எனவே, சிக்கல்களுக்கான தீர்வுகள் மட்டும் பொதுவானவையாக என்றுமே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் உடல்ரீதியான வேதனையை வேறொருவர் உணர்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதபோது, அவரின் மன ரீதியான பிரச்னைகளை மட்டும் வேறொருவர் எப்படி உணரமுடியும்? எனவே, ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னையை அவரைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆயினும் ஒரு சிக்கல் உருவாகிறது என்றால், அதற்கு நிச்சயமாகத் தீர்வு என்று ஒன்று இருக்கும். அதைக் கண்டறிவதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது.

Representational Image
Representational Image

இருப்பினும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒருவருடைய பிரச்னைக்கு அவரைச் சுற்றிலும் உள்ள பல்வேறு மூலங்களில் இருந்தும், அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்தும் பல்வேறு தீர்வுகள் கிடைக்கும். ஒருவருடைய பிரச்னைக்கு அவர் மட்டுமேதான் தீர்வு காண முடியும். அவர் மட்டுமே இதற்கு பொறுப்பு என்பதுதான் சரியானதாக இருப்பினும், தன்னுடைய மற்றும் நெருங்கியவர்கள் கூறக்கூடிய தீர்வுகளில் எது சிக்கலைத் தீர்க்க பொருத்தமானதாய் இருக்குமோ அதை ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்.

ஒருவரது பிரச்னையை அவர்தான் தீர்க்க வேண்டும் என்பதும், நெருங்கியோர் கூறுவதில் சிறந்த முடிவுகளை ஏற்கலாம் என்பதும் ஒன்றுக்கொன்று முரணுடையவையாகத் தோன்றலாம்.

இங்கு சற்று ஆழமாக நோக்கினால், ஒரு பிரச்னைக்கான தீர்வு என்பது அதுகுறித்த சரியான இறுதி முடிவெடுத்தலே.

எனவே, நம் முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் நமக்குத் தேவையானவற்றை நாம்தான் இறுதியில் தேர்வுசெய்கிறோம். நாம் சிந்திக்கக்கூடிய மற்றும் பிறர் கூறக்கூடிய தீர்வுகள் என்பவை நம்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றே!

Representational Image
Representational Image

தீர்வுகளை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது நல்லதல்ல.

பல்வேறு தீர்வுகளை நாம் சிந்திக்கும்போது அல்லது நம் முன் வைக்கப்படும்போது, சிறந்த முடிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேவைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களை மேற்கொண்டு செயல்படுத்துவோர், வாழ்வில் வெற்றியடைகின்றனர்.

இதுவே சிக்கல்களைத் தீர்க்கும் முறையும், முடிவெடுக்கும் கலையும் ஆகும்.

ஒரு சிக்கலுக்கான தீர்வு எனும்போது, அது எங்கிருந்து வருகிறது அல்லது யார் கூறுகிறார்கள் என்பதை கருத்தில்கொள்ளாமல், அந்தப் பிரச்னைக்கு அது சரியான தீர்வாக இருக்குமா என்பதை மட்டுமே கருத்தில் கொண்டால், அந்த சிக்கலை மிக எளிதாகத் தீர்த்துவிட முடியும் என்கிறது மேலாண்மையியல்.

இதை ஒரு கதை தெளிவாக விளக்கும். நான் கல்லூரி படிக்கும்போது என் பேராசிரியர் சொன்ன கதை இது.

அது ஒரு பிரபலமான சோப்பு கம்பெனி.

எண்ணற்ற விளம்பரங்கள் மூலமாக அந்த கம்பெனி மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து இருந்தது. அந்த குறிப்பிட்ட வகை சோப்பை உபயோகிப்பது மக்களிடம் பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது.

அந்த சோப்பு கம்பெனி முழுக்க முழுக்க கணினிகளின் கட்டுப்பாட்டில் தானியங்கி முறையில் இயக்கப்படக்கூடியது. தானியங்கி இயந்திரங்களை இயக்க சில பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

Representational Image
Representational Image

மூலப்பொருள்கள் இடுகை முதற்கொண்டு, சோப்புகள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வெளியே வருவது வரை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இருந்தன.

உற்பத்திக் கருவிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தக் கம்பெனியில் படிப்படியாக ஒரு பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்தது. தயாரிக்கப்பட்டு வெளியே செல்லக்கூடிய சோப்புகளின் சில பெட்டிகளில் சோப்பு இல்லாமல் வெறும் அட்டைப் பெட்டி மட்டுமே வெளியே செல்லத் தொடங்கியது. சிறியதாகத் தொடங்கிய இப்பிரச்னை, விரைவிலேயே அந்த கம்பெனிக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது.

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர் குழுக்கள் மூலம் அந்த விலைமதிப்புமிக்க சோப்பு தயாரிக்கும் தானியங்கி யூனிட் முழுக்க பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. யூனிட்டில் எந்தக் குறையும் இல்லை. சில சோப்பு டப்பாக்கள் மட்டும் ஏன் காலியாக வெளியில் செல்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் இந்த தானியங்கி யூனிட்டை முழுக்க சோதனைசெய்துபார்த்து, எந்தப் பிரச்னையும் இல்லை என்றே சான்றளித்தனர்.

இருந்தாலும், சோப்புகள் இல்லாமல் பல காலி டப்பாக்கள் மார்க்கெட்டுக்கு போவது அதிகரித்துக்கொண்டே இருந்தது.

Representational Image
Representational Image

ஒற்றையாக சோப்பு வாங்குபவர்களுக்குப் பிரச்னை இல்லை. எடை குறைவு மூலம் சோப்பு இல்லாமல் காலியாக இருப்பதை உடனே கடைக்காரர்களிடம் கூறிவிட முடியும். ஆனால், அந்த சோப்பை மொத்தமாக வாங்குபவர்கள்தான் அதிகம்.

மற்ற பொருள்களுடன் இந்த நிறுவன சோப்புகளையும் மொத்தமாக வாங்கி, வீட்டுக்குச் சென்று அவற்றைத் திறந்து பார்க்கும்போது, சில பெட்டிகள் சோப்பு இன்றி காலியாக இருந்ததால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

இதனால் இந்த சோப்பு கம்பெனி பற்றிய மக்களின் நம்பிக்கை படிப்படியாகச் சரிய ஆரம்பித்தது. கம்பெனியின் பங்குகளும் வீழ்ச்சியடையத் தொடங்கின. விற்பனையும் பெருமளவு குறைந்தது.

கம்பெனியின் உரிமையாளர் இந்தப் பிரச்னையைத் தீர்க்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்துப்பார்த்தார். ஆனால், எதுவுமே முழுமையான தீர்வு அளிக்கக்கூடியதாக இல்லை. தானியங்கி இயந்திரங்கள் என்பதால், ஆட்களை வைத்து ஒவ்வொரு சோப்பாக செக் பண்ணி பார்த்து அனுப்புவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

இத்தகைய சூழலில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அந்த நிறுவனத்தில் கொள்முதல், உற்பத்தி, விற்பனை மற்றும் விளம்பரத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

Representational Image
Representational Image

"நம்முடைய கம்பெனியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேபோகிறது.

நமது தயாரிப்பை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் விற்பனை என்பது குறைந்து கொண்டேதான்வருகிறது. இது நமது கம்பெனிக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துவிட்டது.

"இந்தப் பிரச்னைக்கு தீர்வை நீங்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். யாரிடமிருந்து சரியான தீர்வு வருமாயின் அதை நாம் ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

ஊழியர்கள் அனைவரும் அமைதியுடன் நின்றனர். அனைத்துத் துறை உயரதிகாரிகள் தங்களுடைய ஆலோசனைகளை ஏற்கெனவே கூறியிருந்தனர். அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. எனவே, அனைவருமே அமைதியுடன் நின்றனர்.

அப்போது, அந்த நிறுவனத்தில் நீண்டகாலமாக துப்புரவுப் பணி செய்யக்கூடிய வயதான முதியவர், "நான் ஒரு யோசனை சொல்றேன் சார்" என்றார். இப்பெரிய பிரச்னைக்கு இவரால் என்ன தீர்வு கூறிவிட முடியும் என்று அனைவரும் வியப்புடன் முதியவரையே நோக்கினர்.

Representational Image
Representational Image

கம்பெனி உரிமையாளரும் சற்று ஆச்சர்யத்துடன் முதியவரை நோக்கியவாறு, "சொல்லுங்க தாத்தா நாம் என்ன செய்யலாம்?" என்றார்.

தாத்தா கூறத் தொடங்கினார், "நாம் தயாரிக்கும் சோப்புகள் எல்லாமே தனித்தனி டப்பாக்களில் பேக் ஆன பிறகு, தனித்தனியா இந்த கன்வேயர் பெல்ட் வழியா வெளியே போகுது. அதுல, காலியான சோப்பு டப்பாவும் போகுது.

சோப்பு இருக்கிற சோப்பு டப்பாவும் போகுது. கன்வேயர் பெல்ட் முடிவில்தான் மொத்த மொத்தமா பேக் ஆகுது.

நாம் கன்வேயர் பெல்ட்டுகளுக்கு அருகில் ஒரு பெரிய ராட்சச பெடஸ்டல் ஃபேன் ஒன்னை வச்சுடலாம்.ஃ பேன் வேகமா ஓடும்போது கன்வேயர் பெல்ட்ல போகும் காலியா இருக்கக்கூடிய சோப்பு டப்பா காற்றின் வேகத்திற்கு கீழ விழுந்துடும்.

சோப்பு உள்ள டப்பாக்கள் வெயிட்டா இருக்கறதால கீழே விழாது. அதனால, சோப்பு உள்ள டப்பா மட்டுமே மார்க்கெட்டுக்கு வெளியே போகும்" என்றார்.

இந்த எளிய, மிகச்சிறந்த தீர்வைக் கேட்ட அனைவரும் 'எவ்வளவு பெரிய பிரச்னைக்கு எவ்வளவு சிறிய தீர்வு!' என ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனார்கள். கம்பெனி உரிமையாளர் பெருமூச்சுவிட்டபடி மகிழ்வுடன் தாத்தாவை கட்டியணைத்துக் கொண்டார்.

Representational Image
Representational Image

தாத்தா கூறியபடி இரண்டே நிமிடத்தில் கன்வேயர் பெல்ட் அருகே ஃபேனை வைத்தனர். அதற்குப் பின் அந்த கம்பெனியில் இருந்து காலியான சோப்பு டப்பாக்கள் வெளியே போகவே இல்லை!

ஆம் நண்பர்களே! பிரச்னை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு சிறியதாகத்தான் இருக்கிறது. நமக்கு சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலையில் பற்பல தீர்வுகள் நம்மிடமிருந்தும், பிறரிடமிருந்தும் நமக்குக் கிடைக்கும். அவற்றில் நாம் எதனை ஏற்றுக்கொண்டு இறுதியான முடிவை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது!

சில நேரங்களில் நமக்குக் கீழ் பணியாற்றக்கூடிய அல்லது படிப்பறிவு குறைந்தவர்களிடமிருந்துகூட நமக்கான மிகச் சிறந்த தீர்வுகள் வெளிப்படலாம்.

அவற்றை நாம் ஈகோ இன்றி திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

அவர்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பும் கொடுத்து அந்தத் தீர்வை நமக்குரிய மாற்றங்களுடன் செயல்படுத்தத் தொடங்குவோமாயின், நமக்கான வெற்றி தொடர்கதையாக மாறத் தொடங்கிவிடும்!

ஏனெனில், நமது பிரச்னையை நாம்தான் தீர்க்க முடியும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு