Published:Updated:

மறுபக்கம்! - சிறுகதை #MyVikatan

அம்மாவுக்குத் திருக்குறள்! அப்பாவுக்குக் கவிதை என நினைத்திருப்பார்கள் போலும். அப்பா என்பதே கவிதைதானே அந்த வரிகள் என்னை என்னவோ, என்னன்னவோ செய்தன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“உங்கப்பனா செலவு செய்வான்?”

என்ற கேள்வி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மகனை பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க முன் பணம் கட்டிவிட்டு திருமான்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து வெளியே வரும்போது மதியம் 1 மணி. பள்ளியின் பிரதான கேட்டின் முன் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை.

சமீபத்தில்தான் நிழற்குடைக் கட்டியிருப்பார்கள் போலும். நோட்டீஸ் ஒட்டாதீர் என்பதற்குக் கீழே திருமான்கோட்டையில் உள்ள புஷ்பா தியேட்டரின் காலைக்காட்சி மட்டும் எனப் போட்டு `கெளரவம்' சினிமா போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற ஞாபகம்.

Representational Image
Representational Image

திருக்குறள் ஒன்று எழுதப்பட்டு அதன் மீது வேறு சில நோட்டீஸ்கள் பரப்பப்பட்டு, “சான்றோன் எனக்கேட்டத் தாய்…” என்ற இரண்டாவது வரி மட்டும் தப்பிப் பிழைத்து நின்றது. நிஜத்திலும் அம்மாவின் சந்தோசங்களே நினைவில் தப்பிப் பிழைக்கின்றன.

அதனையொட்டி, எழுதப்பட்ட கவிதை வரிகள் எனக்கு ஆச்சர்யமளித்தன. பொதுவாகக் கவிதைகள் பொது சுவரில் எழுத மாட்டார்கள்.

ஆனால், கைக்கு எட்டாத தூரத்தில், ``தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தந்தை அன்பின் முன்னே… - நா.முத்துக்குமார்”

என்பதை மட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அம்மாவுக்குத் திருக்குறள். அப்பாவுக்குக் கவிதை. என நினைத்திருப்பார்கள் போலும்! அப்பா என்பதே கவிதைதானே? அந்த வரிகள் என்னை என்னவோ, என்னன்னவோ செய்தன.

பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே பதினொன்றாம் வகுப்பிற்கு எந்தப் பள்ளி, எந்த குரூப்? என்ற விவாதம் வீட்டிற்குள் போய்க்கொண்டே இருந்தது.

நேற்று வீட்டிற்குள் ஏகப்பட்ட களேபரம். எங்கள் இருவருக்கும் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசை. அதனால், சயின்ஸ் குரூப் எடுக்கச் சொன்னோம். மகன் ஆர்ட்ஸ் குரூப்தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறான். சண்டையை முடிவுக்குக்கொண்டு வர, நான் மட்டும் பள்ளிக்கு வந்து மகனின் விருப்பம் போல ஆர்ட்ஸ் குரூப்புக்கு பணம் கட்டிவிட்டு வந்து நிற்கிறேன்.

எங்கள் வீட்டுச்சண்டை போலவே, அப்பா, அம்மா, மகன் என மூன்று பேர் கொஞ்சம் தள்ளி நின்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

மகனுக்கும் அப்பாவுக்கும் இடையில் அம்மா அல்லாடிக்கொண்டிருந்தாள்.

Representational Image
Representational Image

"அவன் படிச்சது போதும்! வேலைக்குப் போகட்டும்!"

என அப்பா கூற...

'நான் ஸ்கூலுக்குதான் போவேன்!'

என மகன் கூற...

அவனை அடிக்க அப்பா பாய்ந்தார்.

இந்தக்காட்சி எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. எனக்கு இப்போது வயது 40. என் மகனுக்கு 15. ஏறக்குறைய 25 வருட இடைவெளி! இது இடைவேலியும் கூடதான். அந்தத் தலைமுறை இடைவெளியை என்னால் பாசத்தால் மட்டுமே நிரப்ப முடியும்.

ஆனால், அவன் வளர்ந்து வருவதோ ஆண்டிராய்டு உலகம். நான் வளர்ந்து வந்ததோ நோக்கியா உலகம். இரண்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இது என் பொதுப்புத்திக்கு எட்டாமல் இல்லை. ஆனாலும், சில சமயம் கோபம் எல்லைமீறிப்போய் விடுகிறது. அதுதான் இங்கும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பா மற்றும் மகன் இருவருக்கிடையில் அம்மா புகுந்து,

”வீட்டில் போய் பேசலாம்!"

என ஒப்புக்குச் சமாதானம் செய்தாள்.

”இவன் படிச்சா பாஸ் ஆனான்? ஓசி பாஸ்தானே?”

என மகனுடைய தன்மானத்தை கிளறிவிட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட மகன் முகத்தில் கோபம் கொப்பளித்து, அது இயலாமையில் அழுகையாக மாறியது. இப்படிதான் உணர்ச்சியைப் பொங்கியெழச் செய்யும் எதாவதொரு கேள்வி ஆழ்மனதிற்குள்ளாக தொக்கி நிற்கும். அந்தக் கேள்வி ஒருவனை வாழ்நாள் முழுவதும் பதம்பார்க்கும்.

அந்தப் பையனின் அப்பாவா?

அந்தத் தூக்குப்போட்ட பொண்ணின் அம்மாவா?

அந்த ஓடிப்போனவனின் தம்பியா?

அந்தக் குடிகாரனின் மகளா?

இப்படி ஏகப்பட்ட “அந்த”க்கள் நம் அந்தரங்கத்தை அந்தரத்தில் சுழன்றடிக்கும்.

Representational Image
Representational Image

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டம். எப்பவாவது ரேங்க் வாங்குவேன் என்பது எக்ஸ்டிரா டிப்ஸ். அப்பா பயங்கர ஸ்ட்ரிட். பெயிலானால் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என மிரட்டுவார்.

மிரட்டும்போது நானெல்லாம் அமைதியாகத்தான் நிற்பேன். நான் கனகச்சிதமாக பொளபொள எனக் கூடுதல் கண்ணீரை வரவழைப்பேன் அவ்வளவுதான். ஆனால், ஒருபோதும் எதிர்த்து பேசியதில்லை. என்னைப்போலவே என் மகனும் எவ்வளவோ பரவாயில்லை. யாரையும் எதிர்த்துப்பேச மாட்டான். இந்த பையன் எதிர்த்துப் பேசுகிறானே. அதுவும் அப்பாவை என்னவா முறைக்கிறான்?

அப்பா நினைவின் மீதியில், கொரோனா பீதியில் பேருந்து நிறுத்தத்தில் தனித்து நின்றிருந்தபோதுதான் இப்படியொரு சண்டை ஆரம்பித்துப் போய்க்கொண்டிருந்தது.

வெட்ட வெயிலின் சூடு தணியாமல்,

”ஏங்க, அவன் படிக்கிறேன்னு சொல்றான். படிக்க வைப்போம்!”

என அம்மாகாரியின் குரல் உயருகிறது.

வீட்டுக்காரியின் குரல் உஷ்ணத்தைத் தாங்காமல்தான் அவளின் அப்பாவை சண்டைக்குள் இழுத்து,

“உங்கப்பனா செலவு செய்வான்?”

என பொது இடம் எனக்கூட பார்க்காமல் உரக்கக் கத்தினான். எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

இப்படியொரு கேள்வி சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்ல, அப்பா மீது பாசம் வைத்திருக்கும் எல்லோருக்கும் கோபம் வர வைக்கும் தானே? எனக்கும் கோபம் வந்தது.

Representational Image
Representational Image

இந்தக் கேள்வி அம்மாவை உசுப்பி விடும் என மகன் எதிர்ப்பார்த்து அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

“எங்கப்பன் எதுக்கு செலவு செய்யணும்?”

என்ற எதிர்க்கேள்வி அவளிடமிருந்து வரும் என நானும் கூட எதிர்ப்பார்த்தேன். ஆனால், அவள் தலைகுனிந்து நின்றிருந்தாள். இனி பேசுவதற்கு எதுமில்லை என நினைத்திருக்க வேண்டும் அல்லது முச்சந்தியில் மகன் படிப்பு பற்றிப் பேசுவது உகந்த இடமல்ல என முடிவெடுத்திருக்க வேண்டும்.

திரும்பவும் அவர் ஆரம்பித்தார்,

”இன்னும் ஏகப்பட்ட செலவு இருக்கு! அதெற்கெல்லாம் பணம் கொட்டியா கிடக்கு?”

”அம்மா நீ சொல்லும்மா…”

என மகன் அம்மாவை நோக்கி ஏக்கத்துடன் பார்வைக் கரங்களை நீண்டினான்.

”உன்னை மிதிச்சா சரியாயிடும்…”

என அப்பா அம்மாவை நோக்கி வார்த்தைகளில் உதைத்தார்.

”ஏங்க, உங்களுக்கு பணம்தான் பிரச்னையா? விடுங்க கவர்மென்ட் ஸ்கூலில் சேர்ப்போம்! என அம்மாவானவள் அடுத்தகட்டத்திற்கு இறங்கிப்போனாள்.

எல்லோரும் வேடிக்கை பார்ப்பதால் எழுந்த மனவெழுச்சி பையனை அந்த இடத்திலிருந்து தள்ளியிருக்க வேண்டும். மகன் அழுதுகொண்டே, கொஞ்சம் தள்ளி என்னருகில் வந்து நின்றான்.

பையனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

”எதுக்குப்பா அழற?... அப்பா ஆதங்கத்தில் பேசுகிறார். கோபம் தணிஞ்சதும் பேசலாம் விடுப்பா...” என்றேன்.

Representational Image
Representational Image

அவன் என் முகத்தைப் பார்த்தான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி,

”அப்பாங்க பாசம் எப்படிப்பட்டது தெரியுமா? அங்கே பார்” என

”தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே…”

என்ற வரிகளைப் படிக்க சொன்னேன்.

அதைப்படித்து விட்டு மேலும்… மேலும்… அழ ஆரம்பித்தான்!

அவன் அப்பாவைப் பாசத்தை உணர்ந்து அழுகிறான் என நம்பினேன். எனது பிள்ளையை சமாதானம் செய்துவிட்டது போல பெருமிதமடைந்தேன்.

”அட விடு தம்பி..."

”அந்த ஆளு சேர்த்த மாட்டார்”

அப்பாவை அந்த ஆளு எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை! யார்தான் ரசிப்பார்கள்? நானெல்லாம் பொதுவெளியில் அடுத்த மனிதரை ஆளு சொல்லவே யோசிப்பேன். இந்தப் பையன் அப்பாவையே ஆளு சொல்றானே.

ஒரு முறை உறவினரிடம் ”நல்லாயிருக்கீங்களா?” என ஆர்வமாகக் கேட்டேன்.

”எனக்கென்ன கேடு?” எனப் பதில் வந்தது.

அந்த மாதிரி இவனும் ஏடாகூடமாக ”உன் வேலையைப்பார்!” எனச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?

பையனின் மீதான கரிசனம் குறைந்து கோபம் மேலோங்கியது. அவனோட தொடர்ந்து பேச விருப்பமில்லை. ஆனாலும் தொடங்கிய உரையாடலை முடிக்க வேண்டிய கட்டாயம். ஆர்வமாக ஆரம்பித்த உரையாடல்களை அவசரமாக முடிக்க வேண்டிய நிலை எல்லோருக்கும் வாய்த்திருக்கும்தானே?

Representational Image
Representational Image

”ஏன்பா... வசதியில்லையா?”

”இல்லை ஆண்டி!

வேறென்ன?

அவர் என் அப்பா இல்லை!

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு