Published:Updated:

`பிரச்னைகளை எதிர்கொள்ள 3 வழிமுறைகள்!' - திருடனால் பாடம் கற்ற மாணவர்கள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஓடுவது யாரென்று மாணவர்கள் பார்த்தபோது அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்த விடுதி வளாகமே அல்லோலகல்லோலப்பட்டது. மாணவர்கள் ஆளாளுக்குக் கத்தியபடியே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவு நேரத்தில் விடுதியினுள் திருடன் புகுந்ததுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

அது கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி. விடுதியின் உள்ளே எப்படியோ ஒரு திருடன் நுழைந்துவிட, அதைக் கண்ட மாணவர்கள் திருடனை விடுதி வளாகம் முழுக்கத் துரத்த ஆரம்பித்தனர். நீண்ட நேர ஆடுபுலி ஆட்டத்துக்குப் பிறகு, ஒருகட்டத்தில் மாணவர்களிடம் திருடன் பிடிபட்டான்.

Representational Image
Representational Image
Pixabay

அவனை ஓர் அறையினுள் வைத்துப் பூட்டிவிட்டு, அடுத்து என்ன செய்வது என மாணவர்கள் ஆலோசித்தனர். 'அடித்து உதைத்து துரத்திவிடலாம்', 'போலீஸில் பிடித்துக் கொடுக்க வேண்டும்' என ஆளாளுக்கு ஆலோசனைகள் கூற ஆரம்பித்தனர்.

மாணவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. விடுதியின் அருகில் உள்ள குவார்ட்டர்ஸில் தங்கியிருக்கும் தங்களின் பேராசிரியரிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்கலாம் என இறுதியாக முடிவு செய்தனர்.

அந்த இரவு நேரத்தில், தூங்கிக்கொண்டிருந்த பேராசிரியரை எழுப்பி விடுதிக்கு அழைத்து வந்தனர். திருடனை அடைத்து வைத்திருந்த அறையை மாணவர்கள் திறந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. அவன் பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக வெளியே தப்பித்திருந்தான்.

'என்ன இப்படி ஆயிருச்சு...' என மாணவர்கள் சலித்துக்கொண்டே தத்தம் அறைகளுக்குக் கலைந்து செல்லத் தொடங்கியபோது, கல்லூரி மைதானத்தில் பல நாய்கள் சேர்ந்து குரைக்கும் சத்தமும் நாய்களுக்கு பயந்து யாரோ ஓடும் சத்தமும் கேட்டன.

Representational Image
Representational Image
Pixabay

ஓடுவது யாரென்று மாணவர்கள் பார்த்தபோது அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன், விடுதி அறையிலிருந்து தப்பித்த திருடன்தான். அவன் கல்லூரியில் உள்ள நாய்களுக்கு பயந்து மைதானத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத திருடன் மீண்டும் விடுதிக்குள்ளேயே வேகமாக ஓடி வந்துவிட்டான். அவனை மாணவர்கள் பலத்த சிரிப்புடன் பிடித்துக்கொண்டனர்.

'இவனை என்ன செய்வது சார்..?' எனத் தங்கள் பேராசிரியரிடம் புன்னகையுடன் கேட்டனர்.

அந்தப் பேராசிரியர் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். கண்டிப்பைக்கூட புதுமையான வகையிலும், ரசிக்கக்கூடிய வகையிலும் காட்டக்கூடியவர். வாழ்வியலை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எப்போதுமே அவர் கற்றுக்கொடுப்பார். எனவே, மாணவர்கள் அவர் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தனர். அவர் என்ன சொன்னாலும் ஏற்பதற்குத் தயாராக இருந்தனர்.

பேராசிரியர் அந்தத் திருடனை நோக்கி, "ஏம்ப்பா, உலகத்துல எத்தனை வேலையிருக்கு? இந்தத் திருட்டு தொழில் செய்யலாமா?" எனக் கேட்டார்.

அதற்குத் திருடன், "சார்... வேலைசெய்ய நான் தயாராக இருக்கேன். ஆனா ஒரு தடவை தப்பு பண்ணிட்டதால என்னை இங்க யாரும் நம்பத் தயாரா இல்ல. எனக்கு வேலை கொடுக்கவும் யாருக்கும் விருப்பம் இல்ல" என்று சோகத்துடன் கூறினான்.

Representational Image
Representational Image
Pixabay

அப்போது அந்தத் திருடன் தன் கைகளில் வைத்திருந்த ஒரு காகிதத்தை அப்படியும் இப்படியும் மடக்கியபடியே இருந்ததைப் பார்த்த பேராசிரியர், "பேப்பர மடக்கி என்ன பண்ற?" என ஆச்சர்யத்துடன் கேட்டார். அதற்கு அவன்,

"சார், நான் ஜெயில்ல இருந்தப்போ, பேப்பர்ல உருவங்கள் செய்யும் ஓரிகாமி கலையைக் கத்துக்கிட்டேன். அதனால எந்தப் பேப்பரை எடுத்தாலும் என் கை சும்மாவே இருக்காது" என்றான் புன்னகையுடன்.

உடனே பேராசிரியர் மாணவர்களிடம் அவனுக்குக் கொஞ்சம் A4 காகிதங்களையும், கத்தரிக்கோலும் கொடுக்குமாறு கூறினார். பேப்பர்களைப் பெற்ற திருடன் மிக அழகாக அவற்றில் ஓரிகாமி உருவங்களைச் செய்து அசத்தினான். ஓரிகாமி கலையை மாணவர்கள் திருடனிடம் ஆர்வமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு திருடனுக்கு தண்டனை பெற்றுத்தர யாருக்கும் விருப்பமில்லை. மறுநாள் காலை கல்லூரியில் தன்னை வந்து சந்திக்குமாறு பேராசிரியர் திருடனிடம் கூறி அவனை அனுப்பி வைத்தார்.

Representational Image
Representational Image
Rebecca Freeman on Unsplash

மனம் திருந்துதலை விரும்பும் ஒரு திறமையான மனிதன், சமுதாயத்தின் தவறான கண்ணோட்டத்தால் திருடனாகத் தொடர்வதை விரும்பாத பேராசிரியர், கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை செய்து அந்தத் திருடனுக்கு கல்லூரியிலேயே அலுவலக உதவியாளர் வேலை வாங்கிக்கொடுத்தார்.

பிறகு அன்றைய வகுப்பில் பேராசிரியர் மாணவர்களைப் பார்த்து "மாணவர்களே, நேற்று ஒரு திருடன் நம்மிடம் பிடிபட்டான். பிறகு அவன் திருட்டிலிருந்து மீண்டு இன்று நம் கல்லூரியிலேயே பணிக்குச் சேர்ந்துள்ளான். இதிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்?" என்று கேட்டார்.

மாணவர்கள் ஒவ்வொருவராகத் தமது கருத்துகளைக் கூறத் தொடங்கினர்.

"திருடுவது தவறு.''

''திருட்டு அவமானத்திற்குரிய செயல்.''

''உழைத்துப் பிழைக்க வேண்டும்.''

''தவறு செய்தவர்கள் திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.''

''ஒவ்வொரு மனிதனிடமும் ஏதேனும் ஒரு திறமை இருக்கும்." என்ற பல பதில்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன.

பேராசிரியர் அவற்றுக்கெல்லாம் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டே வந்தார். இறுதியாக, "நீங்கள் கூறியவை அனைத்துமே ஏற்கக்கூடியவைதான். இந்த விஷயத்தில் நான் எனது கருத்தைக் கூறுகிறேன், கவனமாகக் கேளுங்கள்" என்றார்.

அவர் புதுமையான ஒரு கோணத்தைக் கூறப்போகிறார் என மாணவர்கள் அவரை ஆர்வத்துடன் நோக்கினர்.

`சொகுசு கார்னா சந்தேகம் வராது!’ - போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

மாணவர்களின் ஆர்வமான முகங்களைப் பார்த்த பேராசிரியர் புன்னகையுடன்,

"மாணவர்களே, நேற்றைய திருடன் அவனுக்குத் தெரியாமலேயே நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளான். அது, மனிதனது பிரச்னைகள் குறித்த ஓர் உளவியல் பாடம்.

பிரபல ஜெர்மன் தத்துவ ஆசிரியரும், எழுத்தாளருமான எக்கார்ட் டோலே ஒரு மனிதன் தன் பிரச்னைகளைச் சந்திக்க மூன்று வழிமுறைகள் இருப்பதாகக் கூறுகிறார்.

அவை,

* பிரச்னையை ஏற்றுக்கொள்

* பிரச்னையிலிருந்து தப்பி ஓடு

* பிரச்னையை மாற்றப் பார்

நேற்று நம்மிடம் அந்தத் திருடன் வசமாக மாட்டிக்கொண்டபோது எக்கார்ட் டாலே கூறுவதுபோல, பிரச்னையை ஏற்றுக்கொண்டு அந்த அறையினுள் அமைதியாக இருந்தான். அப்போது அந்த அறையிலிருந்து தப்பிக்க அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பிரச்னையிலிருந்து தப்பி ஓடும் கொள்கையின்படி வெளியே ஓடினான். ஆனால், அவனது துரதிர்ஷ்டம், நாய்களால் துரத்தப்பட்டு மீண்டும் விடுதிக்கே வந்தான்!

இறுதிக் கொள்கை, 'பிரச்னையை மாற்றப் பார்' என்பது. அவனுடைய முக்கியமான பிரச்னை, வேலை கிடைக்காமல் இருப்பதால் திருட்டில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டது. அவனுக்குத் தெரிந்தது, ஓரிகாமி பேப்பர் கலை.

வாய்ப்புக் கிடைத்ததும் அந்தக் கலையை உங்களுக்குக் கற்றுக்கொடுத்து நம்மிடம் நல்ல பெயர் வாங்கி திருட்டுத் தொழிலிருந்து மாறிவிட்டான். இந்தக் கல்லூரியிலேயே வேலைக்கும் சேர்ந்துவிட்டான்!

இந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள்! -  முன்னோடியாகத் திகழும் தமிழகம் #MyVikatan

எக்கார்ட் டோலேவின் வழிமுறைகள் எதுவும் திருடனுக்குத் தெரியாது. ஆனால், இயல்பாகவே பிரச்னைகள் உருவாகும்போது மனிதர்கள் மேற்கொள்ளும் செயல்கள் இவைதான். என்றாலும், பிரச்னைகளின்போது நாம் என்ன வழிமுறையைப் பின்பற்றுகிறோம் என்பதை இத்தனை நாள்களாக அறியாமல் இருந்தோம். இப்போது இந்தத் திருடனால் அவற்றை அறிந்துகொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைத்தது!

எனவே மாணவர்களே, எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட மூன்று வழிமுறைகள் உள்ளன என்பதை நாம் நேரடிப் பாடமாக நேற்றிரவு கற்றோம். இனி உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் வரும்போது நேற்றைய இரவை நினைவில் கொள்ளுங்கள்.

பிரச்னையின்போது நீங்கள் இதில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? மற்றும் இனி என்ன செய்யப்போகிறீர்கள்? முடிவு எடுக்க இது உதவும்!"

பேராசிரியர் நிறுத்த, மாணவர்கள் ஆச்சர்யத்துடன் கைகளைத் தட்ட ஆரம்பித்தனர்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு