Published:Updated:

ஈரம்! - குறுங்கதை #MyVikatan

Representational Image
News
Representational Image ( Credits : Pixabay )

அதுவரை கைப்பேசியுடன் இணைக்கப்பட்டு காதுவரை நீண்ட ஓர் வயருடன், தனி உலகத்தில் மிதந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் நிகழ்கால பூமியை வந்தடைந்தான்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வேலூரில் இருந்து சென்னையை நோக்கிச் செல்லும் ரயில் அது.

கடிவாளம் கட்டிய குதிரையைப் போல கொஞ்சம் மந்தமாகவே ஓடிக்கொண்டிருந்தது.

மாலைக்கும் இரவுக்கும் இடையிலான மத்திய பொழுது என்பதால், வெளியே தென்பட்ட மனிதத் தலைகள் ஒவ்வொன்றாக குறையத்தொடங்கின.

ரயிலின் ஜன்னல் வழியே வரும் மழைச்சாரல் சில்லென காற்றாக மாறி, ரயில் பெட்டிகள் முழுவதிலும் பரவிக்கொண்டிருந்தது.

கட்டடங்களும் கூரைகளும் மாறிமாறி வந்து மறைந்து போவதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை ஒன்று.

ஜன்னல் கம்பிகளில் வழிந்தோடும் மழை நீரைப் பிடித்தும், அதை மாறி மாறி முகத்தில் தெளித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர் சிறுமிகள் இருவர்.

அக்ராவாரம் ரயில் நிலையம் வந்தடைந்தபோது மணி இரவு 7-ஐ கடந்திருந்தது.

Representational Image
Representational Image

`காபி டீ, காபி டீ ' என மாறி மாறி கூவி பயணிகளின் பசியைத் தூண்டினர் ப்ளாட்ஃபார்ம் வியாபாரிகள்.

சிறிது நேரம் ஓய்வெடுத்த ரயில், புறப்படத் தயாராகும் அறிகுறியாக `வீங்ங்ங்ங்' என சத்தத்துடன் மெதுவாக அசையத் தொடங்கியது. அதுவரை ப்ளாட்ஃபார்மில் நின்று, சூடாக வடை சமோசா என நொறுக்கிக் கொண்டிருந்தவர்கள், அரக்கப் பறக்க ஓடிவந்து தங்களின் பெட்டிக்குள் புகுந்தனர்.

சிறிது நேர பரபரப்புகளுக்கிடையே அந்த ரயில் பெட்டியின் உள்ளே நுழைந்தான் அவன்.

இடதுபுறம் வகிடெடுத்து அழகான நேர்கோட்டில் சீவிய தலைமுடி, கறுப்பு கலர் கூலிங் கிளாஸ், நுணுக்கமாக அளவெடுத்துத் தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, தரையை சுத்தம் செய்தவாறு வலம்வரும் காக்கி கலர் பேன்ட், இடது கையில் வறுத்தெடுத்த அப்பளம் போன்று பழைய பித்தளைத் தட்டு ஒன்று, வலது கையில் முழங்கால் வரை நீண்ட மரத்தால் செய்யப்பட்ட ஸ்டிக் ஒன்று என `காசி' பட விக்ரம் போல காட்சியளித்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவன் வந்ததைப் பெரிதாக யாரும் கண்டுகொள்ள நியாயமில்லை.

கோயிலில் அடிபிரதட்சணம் செய்வதைப் போல, தனது மர ஸ்டிக் உதவியுடன், ஒரு ஒரு அடியாக மிகவும் கவனமுடன் வைத்து நடந்துவந்தான்.

வேண்டாதவர்களைக் கண்ட ஆமை, தன் தலையை அதன் ஓட்டுக்குள் விடுக்கென இழுத்துக்கொள்வதைப்போல, அவனைக் கண்டதும் சாவகாசமாகப் படுத்துக்கொண்டிருந்த பலர், தங்களின் போர்வைக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டனர்.

மந்தமான வேகத்தில் அதுவரை ஊர்ந்து வந்துகொண்டிருந்த ரயில், கொஞ்சம் கொஞ்சமாக தன் வேகத்தைக் கூட்டத் தொடங்கியது.

ஆடாமல் உறுதியாக நிற்க தனக்கான இடம் ஒன்றைத் தேடிக் கொண்ட அவன், மெல்ல தன் குரலால் பழைய கண்ணதாசன் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தான்.

Representational Image
Representational Image

மலை உச்சியிலிருந்து கிளம்பும் அருவி செல்லும் இடமெல்லாம் தாளமிட்டு ஓடிவருவதைப் போல, ஓயாது ராகம் மீட்டும் பறவைகளைக் கண்டு மேகங்கள் வழிவிடுவதைப் போல, தாலாட்டுப் பாட்டு கேட்டு தவழ்ந்து வரும் தனயனைப் போல,

ரயிலின் சத்தத்தின் நடுவிலும் நேர்த்தியாவும் கம்பீரமாகவும் ஒலித்தது அவனது குரல்.

அதுவரை கைப்பேசியுடன் இணைக்கப்பட்டு காதுவரை நீண்ட ஒரு வயருடன், தனி உலகத்தில் மிதந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நிகழ்கால பூமியை வந்தடைந்தான்.

அதுவரை வெறுமனே வேர்க்கடலையை மென்று கொண்டிருத்த கிழவன் ஒருவன், கொசுக்கள் குடிபோகும் அளவுக்கு வாயை பிளந்துகொண்டு பார்க்க ஆரம்பித்தான்.

எதையோ கேட்டு அடம்பிடித்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த குழந்தை ஒன்று, செவியில் அறை ஒன்று விட்டதைப் போல கப்சிப் என்றானது.

எல்லோரின் பார்வையும் இப்போது அவன்மீது விழுந்தது. அவனை ஏளனமாகப் பார்த்த எல்லோரும், அவன் குரலைக் கேட்டு மயங்கினர்.

முழுப்பாடலையும் பாடி முடித்த அவனை பாராட்டும்விதமாக அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்பு ஒவ்வொருவரிடமும் தன் தட்டை நீட்டினான் அவன். அகமகிழ்ந்து தங்களால் முடிந்த உதவியை அனைவருமே செய்தனர்.

Representational Image
Representational Image

அங்கு நடப்பது எதையும் கண்டுகொள்ளாது ஒருவித தயக்கத்துடன், காசிக்குப் போக காசு இல்லாமல், உள்ளூரில் சுற்றித் திரியும் ஒரு சித்தரைப் போல, இரு கைகளையும் தன் தொடைக்கு நடுவில் கிடத்தி ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார், பெரியவர் ஒருவர்.

அவர் அருகில் சென்ற அவன், தன் தட்டை நீட்டினான்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அந்தப் பெரியவர், நெற்றிச் சுருக்கங்கள் தெளிவாகத் தெரியும்படி தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டார்.

பஞ்சம் பிழைக்க திருட்டு ரயில் ஏறி பட்டினம் போகும் அவரை, தனது உள்ளுணர்வுகளைக் கொண்டு அடையாளம் கண்டுகொண்டான் அவன்.

தன் தட்டில் இருந்த காசுகளை, அவன் கைகொள்ளும் அளவுக்கு எடுத்து அந்தப் பெரியவரிடம் நீட்டினான்.

அவன் கைபட்டு விழித்தார் அவர்.

வாங்கிக் கொள்ளுங்கள் என்ற தொனியுடன் அவர் முகத்தருகில் காசுகளைத் திணித்தபோது தன் கைகள் முழுவதும் ஈரம் படர்ந்ததை உணர்ந்தான் அவன்.

-மருத்துவர் சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/