Published:Updated:

புரிதல்..! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

கவின், அவனுடைய சைக்கிள் பெல்லை, லயா வீட்டு வாசலில் நின்று கொண்டு அடிக்கும் போதுதான் கவனித்தான், அவளுடைய வீட்டு காம்பௌண்ட்க்குள் புது லேடி பேர்ட் சைக்கிள் இருப்பதை. கவினுக்கும், லயா வயதுதானே! புரியாமலையா இருந்திருக்கும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“தெய்வங்களும் எங்களைத்தான் நேசிக்குமே...தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே...” - அந்த மெல்லிய இருள் சூழ்ந்த ரெஸ்டாரெண்டில், ஸ்வர்ணலதாவின் குரல் மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்தது.

"எனக்கு உன் சம்மதத்தை விட, நம்ம வீட்டு சம்மதம்தான் ரொம்ப முக்கியம்", தெளிவாக சிரித்துகொண்டே கூறினான் கவின்.

"ஓ...அப்போ ப்ரொபோஸ் பண்ணும்போது , நேரா எங்க வீட்டிலேயே சொல்ல வேண்டியதுதானே. என்கிட்டே ஏன் சார் சொன்னீங்க?" செல்லமாக கோபப்பட்டாள் லயா.

கவின்-லயா, இரண்டு பேருக்குமே ஒரே வயதுதான். இன்னும் சொல்லப்போனால் கவினை விட லயா இரண்டு நாட்கள்தான் சிறியவள். இரண்டரை வயது முதல், ஒரே ஸ்கூல், ஒரே கல்லூரி, அதற்கும் மேல் கல்லூரியிலும் ஒரே குரூப். கம்ப்யூட்டர் சயின்ஸ். இருபத்து மூன்று வருடங்களாக ஒருவருக்கு ஒருவர்,நல்ல பழக்கம், ஃப்ரண்ட்ஷிப். அப்புறம் எப்படி திடீரென்று காதல்? லவ் வர்றதுக்கு ஏதாவது கண்டிஷன் இருக்கா என்ன?

இருவர் வீடும் இருப்பது ஒரே தெருவில்தான். கொஞ்சம் தள்ளி தள்ளி இருக்கும். கவினுடைய அம்மா, அவனை பிரசவித்த ஒரு வருடத்தில் அவனுடைய அப்பா சுப்புராமன் வங்கியில் கடன் வாங்கி இந்த தெருவில் வீடு கட்டியிருந்தார். கவினுடைய வீட்டிற்கு ஏழு வீடு தள்ளி புதிதாக கட்டியிருந்த வீட்டை விலைக்கு வாங்கும் முன், இந்த தெருவை பற்றி விசாரிப்பதற்காக வந்திருந்த போது சுப்புராமனை எதேச்சையாக சந்தித்தவர்தான் கோழிக்கோட்டில் இருந்து திருச்சி BSNL-கிற்கு ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருந்த ஹரிதாஸ்.

Representational Image
Representational Image

“இந்த வீடு கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நல்லா விசாரிச்சிட்டேன் சார். நல்ல தெருதான். எல்லா வீட்டிற்கும் கார்பொரேஷன் வாட்டர் கனெக்ஷன் இருக்கு. அப்பறம் ரொம்ப முக்கியமா, ஸ்ட்ரீட் லைட் இருக்கு. அந்த தைரியத்துலதான் நானும் வீடு கட்ட இறங்கினேன். இப்போ ஆறு மாசமா கட்டிட்டு தான் இருக்கேன். நெஸ்ட் மந்த் கிரஹப்பிரவேசம். நீங்க தாராளமா வாங்குங்க சார். ஒரே ஒரு விஷயம், டாக்குமெண்ட்ஸ் மட்டும் கரெக்ட்டா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.” தெளிவாக சொல்லி முடித்தார் சுப்புராமன்.

"ரொம்ப நன்றி சார், நிறைய இன்ஃபர்மேஷன் குடுத்தீங்க" கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் கூறினார் ஹரிதாஸ்.

அதன் பிறகும் இருவரது குடும்பமும் பரஸ்பரம் பேசியது, ஒன்றாக வெளியே செல்வது என்று நாலரை வருடங்கள் ஓடிவிட்டது. இரு பெற்றோரும் முடிவு செய்து, கவினையும் , லயாவையும் அந்த ஊரில் உள்ள பெரிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்தனர். அங்கே இருந்துதான் ஆரம்பமானது கவின்-லயாவின் புனிதமான உறவு. அவர்கள் எப்படி ஆரம்பத்தில் பழகினார்கள், ஸ்கூலுக்கு எப்படி போனார்கள், எப்படி லஞ்ச் ஷேர் செய்தனர், லாயவை யாராவது கிண்டலடித்தால் கவின் எப்படி ரியாக்ட் செய்வான் என்பதையெல்லாம் உங்கள் அழகான யூகத்திற்கே.

"லயா, இனிமே நீ கவின் கூட சைக்கிள்ல டபுள்ஸ் எல்லாம் போகாத. அச்சன் உனக்கு தனியா புது சைக்கிள் வாங்கி தருவார். அங்கோட்டு நீ ஸ்கூலுக்கு போனா மதி, கேட்டோ?" - ஃபங்க்ஷன் எல்லாம் முடிந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு லயாவிடம் கண்டிப்புடன் கூறினாள் பார்வதி.

"சரிம்மா..." ஒரு வித அரை மனதோடு சன்னமான குரலில் வார்த்தை வந்தது.

கவின், அவனுடைய சைக்கிள் பெல்லை லயா வீட்டு வாசலில் நின்று கொண்டு அடிக்கும் போதுதான் கவனித்தான், அவளுடைய வீட்டு காம்பௌண்ட்க்குள் புது லேடி பேர்ட் சைக்கிள் இருப்பதை. கவினுக்கும், லயா வயதுதானே! புரியாமலையா இருந்திருக்கும். வீட்டுக்குள் எட்டிப் பார்த்து விட்டு சைக்கிளை ஸ்கூலை நோக்கி விரட்டினான்.

அன்று மதியம், லஞ்ச் நேரத்தில் லயாவை சுற்றி அவளுடைய தோழிகளின் சிரிப்பு சத்தம், கிண்டல்கள். என்னதான் கவினுக்கும் அவர்கள் தோழிகள் என்றாலும் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. எல்லாம் ஒரு வாரம்தான், பின் எப்பொழுதும் போல் சண்டை, கோபம், சமாதானம்.

Representational Image
Representational Image

கல்லூரியின் கடைசி செமஸ்டரின் போதுதான் இருவருக்குமே புரிந்தது, அவர்களை அறியாமல் அவர்களை அது தாக்கியிருப்பது. அதற்கு காரணம் சதீஷ்தான். அவர்களுடைய க்ளாஸ்மேட். மழை பெய்த ஒரு நல்ல நாளில், சதிஷ் லயாவிடம் ப்ரொபோஸ் பண்ணும்பொழுது அவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள். கவின் சதீஷை அடிக்க, பிரின்சிபல் இருவரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்ததைதெல்லாம் பின்னாளில் எவனோ ஒருவன் கவின்-லயா கதையை எழுதும் போது சொல்லக்கூடும்.

"நீ ஏன், சதீஷை அடிச்ச?"

"தெரியலை"

"தெரியலையா..? இல்லை பொய் சொல்றியா?"

"நான் ஏன் பொய் சொல்லணும்?"

"உன் கண்ணுல தெரியுதே"

"என்ன தெரியுது?"

"என்னமோ தெரியுது...போ..." சொல்லி விட்டு வீட்டிற்குள் போய் விட்டாள்.

"ராட்சசி...தெரிஞ்சுக்கிட்டே கேக்கறா" முனங்கி கொண்டே வீடு நோக்கி நடந்தான்.

இரண்டு பேருக்குமே கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைக் கிடைக்க, கடவுள்னு ஒருத்தர் இங்கேதான் கொஞ்சம் செல்லமா விளையாடினார். இரண்டு பேருக்குமே வெவ்வேறு கம்பெனியில் வேலை. வெவ்வேறு ஊரும் கூட.

"லயா, பார்த்து இரும்மா. உங்க ஊருதான். இருந்தாலும் தனியா இருக்க போற. பாத்திரமா இரு." கவினுடைய அம்மா, லயா கொச்சின் கிளம்பும் முன் வீட்டிற்கு வந்தவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"கவின், சென்னைதான் போறான். நம்ம ஊருதான். பிரச்சினை இல்லை. நீ கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோம்மா" அவனுடைய அப்பாவின் குரலில் கொஞ்சம் கவலை ஒட்டியிருந்தது.

"ஓகே அங்கிள். ஆண்ட்டி, கவின் எங்கே? "

"மேலே...அவன் ரூம்ல இருக்கான்மா"

கதவை லேசாக சாத்திக்கொண்டு, கண்களை மூடி மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

"சார், எந்து செய்து கொண்டிருக்கு?" கதவை முழுவதையும் திறந்து உள்ளே சென்று அவனை தட்டினாள்.

"ஹே, லயா...வா. நாளைக்கு காலையில டிரையினா?"

"ஆமாண்டா. உன் ஆளு ஊருக்கு போறாளே, கொஞ்சம் கூட பீலிங்கே இல்லையா உனக்கு?"

"எதுக்குபா ஃபீல் பண்ணனும்? சென்னை டூ கொச்சின், நைட் பஸ்ஸோ, ட்ரைனோ பிடிச்சா காலங்கார்த்தால வந்துரலாம். அது தவிர வாட்ஸ்அப் , ஸ்கைப்னு எவ்வளவோ டெக்னாலஜி இருக்கு. அப்புறம் என்ன?"

"ப்ரோபஸ் பண்ண இந்த ஆறு மாசத்துல, இன்னைக்குதான் ரொம்ப தெளிவா பேசற. கள்ளன்" மண்டையில் செல்லமாக குட்டினாள்.

Representational Image
Representational Image

"ஓகே...காலையில ஸ்டேஷன் வந்துரு" சொல்லிவிட்டு போய்விட்டாள். அவளுக்கு தெரியவில்லை, அவன் என்ன பாடலை கேட்டு கொண்டிருந்தான் என்று.

லயாவுக்கு இந்த இரண்டு வருடங்களில் பல ப்ரொபசல்கள். அத்தனையும் ரிஜெக்டெட். காரணம் கவின். மெதுவாக அவள் வீட்டில் கல்யாண பேச்சை எடுக்க ஆரம்பித்த நாட்களில்தான், கவின் சென்னையில் இருந்து கொச்சினுக்கு வந்திருந்து, இருவரும் அந்த ரெஸ்டாரண்டில் பேசிக்கொண்டிருந்தனர்.

"உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி, நம்ம வீட்ல தான் சொல்லணும்னு நினைச்சேன். பட், நம்ம ஃபேமிலி ரிலேஷன்ஷிப்புக்கு ஏதும் ஆகிருமோனு, பயந்து விட்டுட்டேன்."

"புரியுதுடா, ஆனா இப்போ எப்படி இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும்”

"ஆமா லயா, அதான் எப்படினு தெரியலை"

"அச்சா வேற நெஸ்ட் வீக் வர சொல்லியிருக்கார். ஏதோ ப்ரோபோசல் வந்துருக்காம்"

"ம்...அப்பாவும் நேத்து காலையில பேசும்போது ரொம்ப நல்ல இடம்னு என்கிட்டயே சொன்னாரு. அதான் உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன்."

"ஒண்ணு பண்ணலாம், ரெண்டு பேருமே நெஸ்ட் வீக் நேரா போயி ரெண்டு வீட்டையும் வெச்சு விஷயத்தை போட்டு உடைச்சுரலாம்"

"நல்ல ஐடியாதான், எனக்கு என்ன பயம்னா ஒத்துக்கலைன்னா என்ன பண்றதுங்கறதுதான்"

"எடா கோப்பே, நீ எனிக்கு வேணும், உனக்கு ஞான் வேணும். போல்டாயிட்டு போய் பேசுவோம் வா"

பெண்களின் அன்பும், காதலும் எவ்வளவு ஆழமானது, அர்த்தமானது என்று கவின் படித்திருக்கிறான். அதை இப்பொழுதான் நேரில் பார்க்கிறான்.

"என்னடா, சர்ப்ரைஸ் விசிட்டா வந்துருக்க?" காலை ஐந்தரை மணிக்கு வீட்டிற்குள் நுழையும்போதே சுப்புராமன் கேட்டார்.

"இல்லைப்பா, ரெண்டு நாள் கிளையண்ட் ஹாலிடே. அதான் ஊருக்கு வந்துட்டேன்"

"சரி, நல்ல வேளை நீயே நேரா வந்துட்ட. லயாவுக்கு இன்னைக்கி ஏதோ மேரேஜ் பத்தி பேச போறாங்களாம். அவங்க வீட்ல வர சொன்னாங்க. நாம பத்து மணிக்கு போகணும். நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடி ஆயிரு. நான் வாக்கிங் போயிட்டு வந்துர்றேன்"

"ஓ...அப்படியாப்பா. லயாவும் வந்துருக்காளா என்ன?"

"டேய்...நடிக்காதடா. ஏன் உனக்கு தெரியாதா? அதான் ரெண்டு பேரும் தினமும் போன்ல பேசிட்டுதானே இருக்கீங்க. லயா சொல்லலியா?"

Representational Image
Representational Image

கவின் ஏதும் பேசாமல் ஃபீயூஸ் போன பல்பாய் உள்ளே சென்று விட்டான். மேலே அவனுடைய ரூமிற்கு சென்று, லயாவை மொபைலில் பிடித்து, வீட்டிற்கு வரும்பொழுது சேர்ந்தே சொல்லலாம் என்று பேசிக்கொண்டான். கண்ணாடி முன் நின்று கொண்டு, பலமுறை பல விதமாய் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தான்.

"வாங்க சுப்புராமன் சார், வாங்கம்மா" ஹரிதாஸும், லயாவின் அம்மாவும் வாசலில் இருந்தே அவர்களை வரவேற்றனர்.

"மோனே, கவின் எப்போ வந்தே? ஜோலி எங்கன போகுது"

"மார்னிங்தான் அங்கிள் வந்தேன், வேலையெல்லாம் பரவாயில்லை" ஒற்றை வரியில் ஒரு வித பதட்டத்துடனே பதில் வந்தது.

"பார்வதிம்மா, அவங்கள்லாம் எப்போ வராங்களாம். லயா எங்கே?" கவினின் அம்மா வாய் நிறைய சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டே கேட்டாள்.

"லயா உள்ளே ரெடி ஆகிட்டு இருக்காம்மா. லயா ரெடி ஆகிட்டனா, இங்க வா. ஆண்டியும், அங்கிளும் வந்துருக்காங்க”

ஆரஞ்சும்,மஞ்சளும் கலந்த பட்டுப் புடவையில் லயா மிக மெதுவாக நடந்து வந்தாள். அந்த ஆறு முழம் மல்லிகை பூவை, எட்டாக மடித்து அதில் நாலை வலது தோள்பட்டைக்கும் கழுத்திற்கும் இடையே முன் பக்கமாக விட்டிருந்தாள். லேசான காஜல் போட்டிருந்த அந்த கண்கள் வலது பக்கம் அமர்ந்து கொண்டிருந்த கவினையே பார்த்துக்கொண்டிருக்க, பாதம் மட்டும் பெரியவர்கள் இருந்த இடம் நோக்கி நடந்துக் கொண்டிருந்தது. காற்றுக்கு கூட கேக்காத முறையில் "ஆரம்பிடா" என்று மெதுவாக உதட்டை உச்சரித்தாள்.

"என்ன சார், எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்?" ஹரிதாஸ் சுப்புராமனை பார்த்து கேட்டார்.

கவின், வாயை திறக்கும் அந்த நொடியில், லயாவின் அப்பாவின் அந்த கேள்வி அவன் காதுகளுக்குள் சென்றிருந்தது.

"அடுத்த மாசம் பத்தாம் தேதி, சௌடேஸ்வரி ஹால்ல வெச்சுக்கலாம்"

லயா திரும்பி பார்க்கும் முன்,ன்சுப்புராமன் கூறியது அவளது கவனத்தை சிதற விட்டது.

"என்ன பார்க்கறீங்க? நீங்க ரெண்டு பேரும் சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு, காத்திருந்து நாங்க பொறுமைய இழந்திட்டோம். அதான், சின்னதா ஒரு கேம் பிளான் பண்ணி இந்த ஏற்பாட்டை செஞ்சோம். இப்போ வரைக்கும் நீங்க ரெண்டு பேருமே வாயை திறக்கலை. நாங்க உங்க பேரன்ட்ஸ்டா. எங்களுக்கு தெரியும் உங்களுக்கு என்ன பண்ணனும்னு. சந்தோஷமா லைஃப்ப என்ஜாய் பண்ணுங்க" சுப்புராமன் மெலிதாக சிரித்துக்கொண்டே சொல்லி முடித்தார்.

அதைக்கேட்டதும், லயாவும் கவினும் ஒருவரையொருவர் பார்த்துகொண்ட அந்த பார்வையில் அவ்வளவு காதல் மற்றும் நன்றிகள். ஆனால், இருவர் மனதிலும் ஓடியது ஒன்றே ஒன்றுதான். ரெஸ்டாரெண்டில் ஓடிய பாடலின் அந்த வரிகள். ஸ்வர்ணலதா அம்மா நீங்கள் வாழ்க...!!!


-வெங்கடேஷ் ஜெயராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு