Published:Updated:

அவர்கள் அப்படித்தான்..! - சிறுகதை #MyVikatan

சரியாக… 500 லைக்குகள் விழ பத்து லைக்குகள் பற்றாக்குறை இருக்கும்போது மாட்டு வியாபாரி வந்துவிட்டார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலையில் விழித்தவுடன் லைக் தரும் நல்ல ஃபேஸ்புக். அப்புறம் கனிவு தரும் நல்ல காபி எனப் பழகப்படுத்திக்கொண்டேன்!

இங்கு கனிவு என்பது வெறும் சம்பிரதாயம் சொல்ல அல்ல, சாட்சாத் அது என் மனைவி பெயரேதான். கனிமொழி!

``ஏங்க, கண்ணைத்தொறந்ததும் மொபைல் தானா?''

என்ற குரல் வரும்போது நேற்று இரவு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த கிரகப்பிரவேச பதிவுக்கு மட்டும் இதுவரை 300 லைக்குகள் தாண்டியிருந்தன.

``கனி இங்கே வந்து பாரேன்!''

``சொல்லுங்க…''

Representational Image
Representational Image
Pixabay

``நேத்து நம்ம வீட்டு பங்ஷனுக்கு 300 லைக்குக்கு மேல போயிடுச்சு!''

``அப்படியா? அந்தக் கிறுக்கு `ருக்கு' லைக் போட்டிருக்காளா?''

``ஆமா, வாழ்த்துகள் கமென்ட் கூட போட்டிருக்காங்க. உங்க ஹெட்மாஸ்டர் லைக் கூட போட்டிருக்காங்க!''

``ஓ!''

``ஆனா எங்க ஸ்கூல் பொன்னுசாமி மட்டும் இன்னும் லைக் போடல. கண்டிப்பா அந்த ஆளு பார்த்திருப்பான். புது வீடு கட்டிட்டேன்னு பொறாமை அவனுக்கு. நேத்தே வீட்டை சுத்திசுத்தி பார்த்தான்!''

நேரம் ஆக ஆக… லைக்குகள் உயர்ந்தன.

சரியாக… 500 லைக்குகள் விழ 10 லைக்குகள் பற்றாக்குறை இருக்கும்போது மாட்டு வியாபாரி வந்துவிட்டார்.

நானும் வியாபாரியும் பழைய வீட்டுக்குச் செல்ல வாசலைத் தாண்டும்போது லைக்குகள் 500-ஐ தாண்டியது. கடிகார முள்ளும் காலை 10-ஐ தாண்டியிருந்தது.

பைக் சத்தம் கேட்டவுடன் ஆடுகள் மிரண்டு ஓடின. கட்டப்பட்டு ஓட வாய்ப்பில்லாத எருமைகள் ``அம்மே...” எனக் கத்தியவாறு கண்களை உருட்டி தங்களது இருப்பை பலவந்தமாகக் காட்டின.

சின்ன ஆட்டுக்குட்டியோடு பேசிக்கொண்டிருந்தார் அப்பா! அவரைப் பார்த்தால் நிச்சயம் 70 வயதென யாரும் சொல்லிவிட முடியாது. தலையில் உருமால். கையில் ஆடுமாடுகளுக்குத் தழை ஒடிக்கும் கொக்கி. கட்டியிருக்கும் கோவணத்தை மறைக்கும் அளவுக்கு பைஜாமா தோணியில் முழங்கால் அளவு தொங்கும் சட்டை. மர அழுக்கு!

Representational Image
Representational Image
Element5 Digital on Unsplash

*

600 லைக்குகள்!

*

நேற்று வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு வந்தவர்களை வரவேற்க வெள்ளையும் சொள்ளையுமாக நின்றிருந்த அப்பா பார்க்கவே விசேஷமாகத் தெரிந்தார்!

அதுவும் நேற்று அப்படியொரு பூரிப்பு. அந்த வீட்டைக் கட்டிமுடிக்க அல்லும்பகலும் பாடுபட்டவர்.

இந்த ஒரு வருட காலம் வீடுகட்டுவதில் ஒரு 10 நாள்கள் மட்டுமே வேலை ஏதும் நடைபெறவில்லை. அதுவும் என்னால்தான்.

நானும் மனைவியும் டீச்சர்கள் என்பதால் மிரட்டுவது எங்களுக்குப் போதையாகியிருந்தது. அதோடு சேர்ந்து வீடு கட்டும்போது எனக்கு முதலாளி என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன செய்வது? இதுதான் சமூகத்தில் என் பரம்பரை அதிகார வர்க்கத்தினுள் நுழையும் முதல்படி.

புதுப்பணக்காரனின் அனைத்து நடத்தைகளும் வந்து சேர்ந்தன.

நான்தான் வீட்டு ஓனர். சொல்லப்போனால் சித்தாள்கள் ஒருவரும் ஒரு வணக்கம்கூடச் சொல்வதில்லை என்பதான எரிச்சல் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

கூலி கொடுக்கிற நான் சொன்னதை மேஸ்திரி கொஞ்சம்கூட மதிக்கிறது இல்லை.

ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என மனம் வெதும்பித் தத்தளித்தது.

சும்மாவா? 40 லட்சம் போட்ட புராஜெக்ட்.

Representational Image
Representational Image
Brett Jordan on Unsplash

700 லைக்குகளைத் தாண்டி இருந்தது.

*

ஒரு நாள் சைட் பக்கமாகப் போனேன்.

குண்டுநூல் தொங்கிய படி இருக்க, அதன் நூலின் மீது இரண்டு செங்கல் வைத்துக் குத்து நேர் பார்த்துக்கொண்டுருந்தார் மேஸ்திரி.

``ச்சே..!”

``த்தூ…”

ஓனர் நான் இருக்கும்போதே பொளிச்சு என்று வெற்றிலை எச்சிலை அங்கேயே துப்பினார்.

``அங்கெயே துப்பாதே, வேலையைப்பாரு!” எனச் சட்டென வார்த்தையை விட்டேன்!

இடத்துக்கும் புது வீட்டுக்கும் சொந்தக்காரன் என்பதை இன்று நிரூபித்துவிட்டேன் என மனது பெரும் ஆறுதல் அடைந்தது.

அன்று இரவு இதை மனைவிடம் சொன்னேன்.

``மேஸ்திரியை இன்னிக்கு ஒரு வாங்குவாங்கிட்டேன்!"

அடுத்த நாள் காலை 10 மணிக்கு, அதே கம்பீரத்துடன் போனேன்.

வேலை நடப்பதான அறிகுறியே இல்லை.

நேற்று பார்த்த அதே இடத்திலிருந்து மேலே பார்த்தேன். அதே குண்டுநூல் தொங்கிக்கொண்டிருந்தது. அடுத்தடுத்த நாள்களில் ஆடிக்கொண்டிருந்த குண்டு நூல் சிரிக்க ஆரம்பித்தது.

``ச்சே..!”

``த்தூ…”

இவ்வாறாக, எல்லோரும் மனவெழுச்சிக்களை எங்கேயாவது எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டியிருக்கிறது. மேஸ்திரிக்கு வெற்றிலை எச்சில்!

ஒரு வாரமாக வேலை நடக்கவே இல்லை!

ஆனால், ஏழு நாளும் ஏழுவிதமான சண்டை இப்படியாக நடந்தது.

``வாயை வைச்சுட்டு இருக்க வேண்டியது தானே?''

``அனுசரிச்சு வேலை வாங்கணும்!''

``இப்ப யாருக்கு நஷ்டம்?''

பத்து நாள்களுக்குப் பிறகு ஒரு வழியாக அப்பா போய் சமாதானம் செய்து மீண்டும் வேலையைத் தொடங்கினார்.

அதற்குப் பின் சைட் பக்கம் போனாலும் மேஸ்திரி பக்கம் போகாது இருந்தேன்.

காலையில் வந்தால் மதியம் சாப்பிடப் போய்விட்டு மீண்டும் மாலை வரை புது வீடுகட்டும் சைட்தான். சில இரவுகள் காவலுக்கு அங்கேயே படுத்துக்கொள்வார். அவர் போல அனுசரணையாக வேலை வாங்க யாராலும் முடியாது.

*

750 லைக்குகள்.

*

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆசைகளாலும் கட்டாயங்களாலும் கட்டியெழும்புவதுதானே புது வீடு.
- சி.ஆர்

இப்படி நம்ம பிளான் போட்டபடி எதுவும் நடக்கிறது இல்லை.

வீட்டு பிளான் போட எவ்வளவு கஷ்டம்?

அதுவும், மாமனார் சொன்னார் என்பதற்காக வாஸ்துப்படி தென்கிழக்கு மூலையில் அடுப்பு வைத்து மேற்கு சுவரில் ஸ்டோரேஜ் ஷெல்ப் வைக்க வேண்டுமென மனைவி ஒற்றைக்காலில் நின்றாளே.

சராசரி மனிதனுக்கு எதிலும் சராசரி நம்பிக்கைதான். அறிவியல் மீது சராசரி. ஜோசியத்தின் மீது சராசரி. வாழ்க்கை சராசரியில் ஆரம்பித்து சராசரியில் முடிகிறது.

அவள் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன?

Representational Image
Representational Image

அது மட்டுமா?

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆசைகளாலும் கட்டாயங்களாலும் கட்டியெழும்புவதுதானே புது வீடு.

சில காயங்களுக்கு மருந்தாகக்கூட இருக்கும்.

``அந்தக் கடைசி வீட்டு ராஜம்மா, பால் கொடுக்க போகும்போது தெரியாம கேட்டை இழுத்து சாத்திட்டேன். என்னவோ அவ வீட்டு கதவு தங்கத்தில செஞ்ச மாதிரி அலப்பறை செய்றா, நம்ம வீட்டு கேட்டை அவ பார்த்து வயிறு எரியணும்!”

எனச் சொன்ன அம்மா, சொன்ன மாதிரியே கேட் வேலை முடியும் வரை அருகிலிருந்து கவனித்தாள்.

நேற்று ராஜம்மா வரும்போது தவறாமல் அந்த வேலைப்பாடுடன் கூடிய கேட்டை பேச்சு வாக்கில் முன்னும் பின்னும் இழுத்துக் காண்பித்தாள். அவ்வளவு பெரிய வீட்டில் சின்ன கேட் தான் அவள் மன அசைவில் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது.

``அந்த மச்சு வீட்டு மைனர், என்னவோ அவன்தான் பெரிய ஆளுன்னு நினைச்சுட்டு மனுஷனை மதிக்காம இருக்கான். வீட்டுக்குள்ள விட மாட்டேன்றான். நம்ம கட்டறது அவன் வீட்டை விட உசரமா இருக்கணும்!”

அப்பாவின் விருப்பம் இது! இதுதான் முதல் மாடி உசரமான கதை! இப்படி சின்ன கதைகளால் உருவானதுதான் இந்தப் புது வீட்டுக்கதை.

*

800 லைக்குகள்!

*

Representational Image
Representational Image
Derek Story on Unsplash

ஆனாலும், நேற்று வந்த யாரும் வீட்டைக் குறை சொல்லவே இல்லை.

``எல்லோரும் சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டாங்க” என்ற சந்தோஷமே என்னை நிம்மதியாகத் தூங்க வைத்தது.

அது அப்பாவும் அம்மாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மனைவியின் சந்தோஷம் இன்று காலையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

``அந்த ருக்குமணி டீச்சர் வீட்டைவிட நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க! இவ்வளவு பெரிய வீடு கட்டிட்டோம்! ஆடுமாடு உள்ளே வந்து அசிங்கம் செய்யாம இருக்கணும்.”

``நானும் யோசிச்சேன். இன்று 10 மணிக்கு வியாபாரியை வரச் சொல்லியிருக்கேன். அந்த ஆடு, மாடுகளை விற்றுவிட்டால் அப்பா, அம்மா சிவனேன்னு வீட்டுக்குள் சந்தக்‌ஷமாகக் கிடப்பார்கள்.”

நேற்றுகூட அப்பாவின் நண்பர் பேசியது நினைவுக்கு வந்தது.

சின்ன வயசிலிருந்து அப்பா ஆடு, மாடு மேய்ச்சு, கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைச்சு, இந்த அளவுக்கு வளர்த்து விட்டாரு. அவரை பத்தரமா பார்த்துக்கோ.

``அங்கிள், அப்படி விட முடியுமோ, மாமா அத்தைக்கு தனி ரூம் கட்டிட்டோம்! ’’ என மனைவி சொன்னதும் என்னை நெகிழச் செய்தது.

இப்படி எல்லோரும் விருப்பங்களை நிறைவேற்றி என் விருப்படி நேற்று பால் காய்ச்சியாகிவிட்டது. முக்கால்வாசி பொருள்கள் எடுத்தாகிவிட்டது. இன்னும் எடுத்து வர வேண்டியது கொஞ்ச பாத்திர பண்டங்களும் துணிமணிகளும்தான். சில ஆடுகளும் இரண்டு எருமைகளும்!

அதனால், மாட்டு வியாபாரியை இன்று காலையில் வரச் சொல்லியிருந்தேன்.

*

900 லைக்குகள்!

``அப்பா… வியாபாரி வந்திருக்கார்.’’

``அப்படியா...’’

``என்ன சுப்பா, எத்தனை உருப்படி இருக்கு?’’

பழைய அதிகார தோரணை இன்னும் அப்படியே இருந்தது.

``யாரு கந்தசாமிங்களா?’’

வழக்கமாக, சாமி! என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தியிருப்பார்.

``ஆமா… உன் பையன்தான் வரச் சொன்னான். அவனைக் கேளு சுப்பா!’’

``அவர் வரச் சொன்னார்?’’

அப்பா ``அவனை அவர்” ஆக்கினார்!

``பழைய வீட்டைக் காலி செஞ்சுட்டு எப்ப புது வீட்டுக்குப் போற சுப்பன்?’’

சுப்பா… சுப்பன் ஆயிருந்தது!

``அப்பா நான்தான் வரச் சொன்னேன்.’’

``எதுக்கு?’’

``ஆடு, மாடுகளை வித்துட்டு நிம்மதியா இருக்கத்தான்!’’

Representational Image
Representational Image
Vikatan Team

*

900 லைக்குகள்!

*

இன்னும் 100 லைக்குகள் வந்தால் 1,000 வந்துவிடும். இதெல்லாம் சர்வசாதாரணமான விஷயங்கள். தினமும் என் பதிவுக்கு 1,000- க்கு மேல்தான் லைக்குகள் வரும். ஆனாலும், புது வீட்டுக்கு ஆயிரம் லைக்குகள் என்பது சந்தக்‌ஷம்தானே?

ஒவ்வொரு முறையும் அந்தப் பொன்னுசாமி லைக் போட்டாச்சா எனப் பார்த்தேன். அவன் 979 லைக்காகப் போட்டிருந்தான். அதுவும் ஒரு திருப்திதான்.

ஒரு வீடு எத்தனை மாற்றங்களை தோற்றுவிக்கிறது. அம்மாக்குள் ஒரு ராஜம்மா, மனைவிக்குள் ஒரு ருக்குமணி, என்னுள் பொன்னுசாமி என ஒவ்வொருவரின் மனதில் யாரோ ஒருவர் ஆக்கிரமிப்பில் இருந்து இருக்கிறார்கள். நாங்கள் குடியிருக்கத்தான் மெத்தைவீடு இல்லாமல் இருந்திருக்கிறது.

*

998 ஆனது. இன்னும் இரண்டு லைக்குகள்தான். ஆயிரம் எட்டிவிடும். கொஞ்ச நேரம் பேசாமல் நின்று ஆயிரத்தைத்தொடுவதைப் பார்க்க தலைகுனிந்து கொண்டிருந்தேன்.

*

அப்பா பேச ஆரம்பித்தார்

``நான் வேபாரியைக்கூட்டி வரச் சொன்னேனா?’’

``இல்லை…’’

Representational Image
Representational Image
Pixabay

*

998…

வியாபாரி ஆடுகளை நோட்டமிட்டார்!

அப்பா வியாபாரியை நோட்டமிட்டார்!

நான் மொபைலை நோட்டமிட்டேன்!

998…

.

.

.

998...

*

``இந்தக் கட்டை இங்கேயே சாயட்டும்! ச்சூ… ச்சூ…’’

யாரை விரட்டுகிறார் எங்களையா, ஆடுகளையா?

999 ஆவது ஆகுமா, ஆயிரம் எட்டும் பாக்கியம் கிடைக்குமா? திரும்பிப் பார்த்தேன்.

அம்மா சாணம் அள்ளிக்கொண்டிருந்தாள்.

மீண்டும் தலைகுனிந்தேன்.

998… தான்!

இரண்டு லைக்குகள் கிடைக்கப்போவதில்லை!

``அவர்கள் அப்படித்தான்..!’’

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு