Published:Updated:

சீதம்..! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

சிதம்பர விலாஸில் காலை முதலே மின்சாரம் இல்லை. அதனால் மதிய உணவு சாப்பிட வந்தவர்கள் மொத்தமே ஆறு பேர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

யோவ். அந்த ஃபேன போடேன் யா'

'கரெண்ட் இருந்தா போட மாட்டோமா'

'என்ன இப்படி புழுங்கித் தொலையுது...'

சிதம்பர விலாஸில் காலை முதலே மின்சாரம் இல்லை. அதனால் மதிய உணவு சாப்பிட வந்தவர்கள் மொத்தமே ஆறு பேர்.

ஹோட்டல் கூரையைத் தாண்டி, உள்ளே எட்டிப் பார்த்த வெப்பம் அனைவரையும் எரிச்சலடைய வைத்தது.

'பேசாமா வேற கடைக்குப் போக வேண்டியது தான்...'

அந்தப் பெரிய மீசை வைத்திருப்பவர் அலுத்துக் கொண்டார்.

ஆனால் அடுத்த ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு கடைகள் ஏதும் இல்லை.

அவரது டேபிளின் முன்னே வயதான ஒரு கிழவி. பேரனுடன் வந்திருப்பது தெரிந்தது.

'சாப்பிடப் போற நேரத்துல எதுக்கு இப்போ வெத்தல கேக்குற...?'

கிழவியிடம் கடிந்து கொண்டான் பேரன்.

அதைக் கேட்ட பொக்கை வாய்க் கிழவி சிரித்த போது, வாயின் ஒரு பக்கத்திலிருந்து எச்சில் ஒழுகியது.

Representational Image
Representational Image
Pexels

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மீசைக்காரர், முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

'ஏம்பா. ரசம் கொண்டு வர இவ்வளவு நேரமா?'

விரலின் நுனியில் இருக்கும் வத்தல் குழம்பை உறுஞ்சியபடி ரசத்துக்காக காத்துக் கொண்டிருந்தார் அந்த கூலிங் கிளாஸ் ஆசாமி.

கழுத்தில் இருந்து வழியும் வியர்வை, வாழை இலையுடன் கலப்பதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நால்வர் போக இரண்டு பெண்கள்.

அதில் ஒருத்தி, மற்றொருவளிடம் இருந்த அப்பளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'சாப்பாடு தீந்து போச்சு. இனிமே கரெண்ட் வந்தா தான் செய்ய முடியும்'

இது ஹோட்டல் உரிமையாளர்.

மீசைக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.


'யோவ். இத முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது தான?'


ஹோட்டல் உரிமையாளர் எதையோ சொல்ல வர,


'ரசம் கூடவா இல்ல...'

என்றார் கூலிங்கிளாஸ்.

மீசைக்காரர் கூலிங்கிளாஸிடம் திரும்பி,

'அதோ. மூஞ்சில இருந்து கொட்டுது பாரு. அத அப்படியே வழிச்சு குடி...'என்றார் சிவந்த முகத்துடன்.

இடைவெளி..! - லாக் டெளன் சிறுகதை #MyVikatan

'டேய் அனாதப் பயலே. உன்ன எவன்டா இப்ப கேட்டான்?'

மீசைக்காரருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அப்படியே அமைதியாக உட்காந்து கொண்டார். அவரின் கண்கள் பனித்தன.

பொக்கை வாய்க் கிழவி, 'ஆ...' வென வாயைப் பிளந்து கொண்டிருந்தாள்.

பேரன், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் இருந்தான்.

இன்னும் அந்த ஒருத்தி, அப்பளத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமோ' என்ற தயக்கத்துடன் டேபிளில் சினுங்கிக் கொண்டிருந்தார் கூலிங்கிளாஸ். அதற்குள் ரசம் வேறு வந்திருந்தது. அதை எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு.

அனல் கக்கும் அவ்வேளையில் சாரல் மழை தெறிப்பது போல, குழந்தை ஒன்றின் சத்தம் கேட்கத் துவங்கியது.

கோலி குண்டு கண்கள், நெற்றியில் சுருண்டு விழும் தலைமுடி, உப்பிப் போன கண்ணங்கள், சிரித்தால் அதில் தோன்றும் அழகான குழிகள்.

கலகலவென பரவிய குழந்தையின் சிரிப்பு சத்தம், எல்லோரின் முகத்திலும் பன்னீரை தெளித்தது போன்று இருந்தது.

'எந்த ஊரு கண்ணு...?'

பொக்கை வாய்க் கிழவி, நெற்றிச் சுருக்கம் விரியக் கேட்டாள்.

'பக்கத்து ஊரு தான் பாட்டி...'

இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையை மெல்ல கீழே விட்டபடி பதிலளித்தாள் அவள்.

பிறந்த கன்றுக்குட்டி தள்ளாடியபடி பசுவின் காம்பை தேடிச் செல்வது போல, இரு கைகளையும் விரித்து துழாவிக் கொண்டே மீசைக்காரர் அருகில் சென்றது குழந்தை.

மீசைக்காரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உதட்டோரம் சிரித்தபடி அங்கிருந்து எழ முயற்சி செய்தார்.

அதற்குள் அவரது வேட்டியின் ஒரு முனையை குழந்தையின் கை பற்றிக் கொள்ள, பட்டும் படாதவாறு குழந்தையை அள்ளினார் மீசைக்காரர்.

குழந்தையின் கண்ணக் குழியை தொட்டுப் பார்த்தார். அடர்த்தியான அவரது உள்ளங்கை மிருதுவானது.

உடனே குழுந்தையை அழுத்தமாக அணைத்துக் கொண்டார்.

கூலிங்கிளாஸ் ஆசாமி முதல் பொக்கை வாய் கிழவி வரை எல்லோரும் மீசைக்காரரையே பார்த்துக் கொண்டு இருந்தனர், மின்சாரம் வந்திருப்பதைக் கூட கவனிக்காமல்.

-சரத், கடலூர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு