Published:Updated:

மீனா பாட்டியும் நாட்டுக் கோழிக் குழம்பும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

வயலில் நடவு நாள். ராசு தாத்தா வந்து ஏர் பூட்டி உழுதால்தான் நட முடியும். தாத்தாவுக்காக நடவு ஆட்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இது எனக்கு முதல் முறை அல்ல. இன்று கரீம் பாய் கடையில் ஆசையுடன் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து முழுவதும் சாப்பிடாமல் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். எத்தனையோ முறை ஆசையாய் சிக்கனோ மட்டனோ மீனோ வாங்கி முழுவதும் சாப்பிடாமல் பாதியில் எழுந்து வந்திருக்கிறேன். அதனால் இன்று இப்படிச் செய்தது எனக்கு முதல் முறை அல்ல.

ஞாயிறு மதியம் ஹாஸ்டலில் போடும் சிக்கன் பிரியாணியைத் தொட்டுக்கூட பார்த்ததில்லை. விடுதியில் பலரும் என்னை சைவம் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதில் சிலர் என்னிடம் இந்த வயசுல சாப்பிடாம எப்போடா சாப்பிடப்போற உடம்பு தெம்பா இருக்கணும்னா நான்வெஜ் சாப்பிடுடா சத்துடா அவாய்ட் பண்ணாத என்பார்கள். யாராவது என்னிடம் இப்படிச் சொல்லும்போது என் மீனா பாட்டிதான் நினைவுக்கு வருவாள். அவள் நினைவுக்கு வராமல் வேறு யார் வருவார்கள். அவள்தானே வர வேண்டும்.

Representational Image
Representational Image
Rick Barrett / Unsplash

வயலில் நடவு நாள். ராசு தாத்தா வந்து ஏர் பூட்டி உழுதால்தான் நட முடியும். தாத்தாவுக்காக நடவு ஆட்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா கொஞ்சம் பிடிப்பு இல்லாதவர். எங்காவது யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் அவருக்கு நேரம் போவதே தெரியாது. அனைத்தையும் மறந்து அங்கேயே நின்றுவிடுவார். அன்றும் யாருடனோ எங்கோ பேசிக்கொண்டு நின்றுவிட்டார்.

``பொழுது போய்க்கொண்டிருக்கிறது இனிமேலும் இந்த மனுஷன நம்பிக்கிட்டு இருந்தா இன்னைக்கி பொழப்பு நடக்காது’’ என்று தானே ஏர் கலப்பையில் மாட்டைப் பூட்டி உழுதுவிட்டாள் பாட்டி. கலப்பையோடு கனத்தை சமாளித்து ஏர் பூட்டி உழுதல் என்பது சாதாரணமான விஷயம் இல்ல. ஒரு முதிர் பெண் இதை செய்கிறார் என்றால் அவள் எவ்வளவு திடகாத்திரமானவளாக இருந்திருக்க வேண்டும். இந்தளவு திடகாத்திரமான பாட்டி மாமிசம் சாப்பிடமாட்டாள்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். அதில் ஐந்து பேர் பெண்கள் ஒருவர் ஆண். வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் பெண்பிள்ளைகளை கட்டிக்கொடுத்தார்கள். நான், வித்யா அக்கா, கார்த்தி அண்ணா, அபி அக்கா, கெளசி அக்கா, தம்பிகள் கெளதம், கோபி, ராகவன், தங்கைகள் பவானி, அனிதா, செல்வா, மீரா உட்பட நாங்கள் பன்னிரண்டு பேர் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் ஆனோம். பாட்டி வீடு பக்கம் என்பதால் வாரத்தின் பெருவாரியான நாள்கள் அங்குதான் இருப்போம். நானெல்லாம் 10 வயதுவரை பாட்டி வீட்டில்தான் இருந்தேன். பெரியவர்கள் சிறியவர்கள் சேர்த்து குறைந்தது 15 பேர்களாவது எப்போதும் பாட்டி வீட்டில் இருப்போம்.

Representational Image
Representational Image
Zosia Korcz / Unsplash

பாட்டி வீட்டில் எப்போதும் மனிதர்கள் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் என்றால் மற்றொருபுறம் வயலில் கோழிகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். வீட்டிலிருந்து தெற்குப்பக்கம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 3,000 பிராய்லர் கோழிகளை வளர்க்குமளவுக்கான கோழிப்பண்ணை இருந்தது. கோழிப்பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவைப்பட்டதே இல்லை. அதுதான் எப்போதும் குறைந்தது 15 பேர்களாவது பாட்டி வீட்டில் இருப்போமே பிறகு, எதற்கு வேலை ஆட்கள். சிறு வயதில் நாங்கள் அனைவரும் கோழிப்பண்ணையில் வேலைபார்த்து இருக்கிறோம். பிராய்லர் கோழிகளைத் தவிர ஐம்பது அறுபது நாட்டுக் கோழிகளும் வயலில் நிற்கும்.

எங்கள் குடும்பத்தில் வாரத்தில் ஒரு நாள் கறி எடுக்கலாமா மாதத்தில் ஒரு நாள் கறி எடுக்கலாமா என்ற பேச்சு எல்லாம் வந்ததே இல்லை. இவ்வளவு கோழிகள் இருந்ததால் வாரத்தில் மூன்று நாட்களாவது கறிக்குழம்பு செய்துவிடுவார்கள். ஒரு கறிக்குழம்பு வைக்கும் நாளுக்கும் அடுத்த கறிக்குழம்பு வைக்கும் நாளுக்கும் இடையில் ஒரு நாள் இடைவெளி இருக்கும். வாரத்தில் மற்ற நான்கு நாள்கள் ஏதாவது சைவக்குழம்பு வைப்பார்கள். அப்போதும், `நேற்று வைத்த கறிக்குழம்பு மிச்சமிருக்கு சூடு பண்ணி வச்சிருக்கோம் வேணுமா?’ என்று சோற்றில் ஊற்றுவார்கள்.

Representational Image
Representational Image

கோழிக்குழம்பை எப்பொழுதும் பாட்டிதான் சமைப்பாள். நான் முன்பு சொன்னதுபோல் எங்களுக்கு இவ்வளவு ருசியாகக் கோழிக்குழம்பு வைத்துதரும் பாட்டி ஒரு நாளும் கோழிக்குழம்பு சாப்பிட மாட்டாள். அவளுக்கு கேப்பைக் கஞ்சியும் வெங்காயம் வத்தலுடன்கூடிய பழைய கஞ்சியும் எப்போவாது வைக்கும் முருங்கை சாம்பாரும்தான் பிடித்த உணவுகளாக இருந்தன. `நீதான் கோழிக்குழம்பு சாப்பிடுவது இல்லையே, பிறகு ஏன் எல்லாருக்கும் வச்சுக்குடுக்குற?’ என்று யாராவது பாட்டியிடம் கேட்டால், `எனக்கு கோழிக்குழம்பு பிடிக்காது. ஆனா, என் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் பிடிக்கும். அவங்களுக்கு கோழிக்குழம்பு பிடிக்கும். அதுனால அவங்களுக்கு வச்சுக்கொடுக்கிறேன்’ என்பாள் பாட்டி.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பாட்டியின் பிள்ளைகளான என் அம்மா, பெரியம்மா, சித்தி யாருக்குமே சரியாகக் கோழிக்குழம்பு வைக்கத்தெரியாது என்பதுதான். ஊரில், `போலீஸ் மகன் திருடன் மாதிரி மீனா மகளுக ஒருத்திக்கிக்கூட கறிக்குழம்பு வைக்கத்தெரியல’ என்று அவ்வப்போது சொல்லிக் கலாய்ப்பார்கள். அவர்களுக்கு வைக்கத் தெரியவில்லை என்பதோடு பாட்டி யாரையும் வைக்க விட்டதில்லை என்பதே உண்மை. கோழிக்குழம்பு வைக்கும் செயல்முறையில் கோழியின் உயிரை எடுக்கும் செயல் என்பது குற்ற உணர்ச்சியானது. அதற்கு பழக்கப்படாதவர்களால் செய்வது கடினம்.

விரும்பி மாமிசம் சாப்பிடுபவர்களை அழைத்து அந்த உயிரினத்தின் உயிரை எடு என்று சொன்னால் எத்தனை பேர் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பலரால் அந்த இடத்தில் சும்மாகூட நிற்க முடியாது. பாட்டிதான் எப்போதும் கோழியின் உயிரை எடுப்பாள். அவள் ஒரு நாளும் தன் பிள்ளைகளைக் கோழியின் உயிரை எடுக்க அனுமதித்ததில்லை.

Representational Image
Representational Image

பாட்டியின் கோழி அறுக்கும் செயல் ஊரில் மற்றவர்கள் செய்வதைவிட சற்று மாறுபட்டது. கோழி அறுக்கும் முன் குளித்துவிட்டு சாமி அறைக்குச் சென்று சின்னக்கருப்பு சாமி முன் அரிவாளை வைத்துக் கும்பிடுவாள். பின் அம்மா சித்தி பெரியம்மா இவர்களில் யாரையாவது ஒருவரைக் கூட்டிக்கொண்டு பிடித்து வைத்த கோழியைக் கூடையிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டிற்கு பின்னுள்ள கிணற்றடிக்குச் செல்வார்கள். கோழி அறுக்கும்போது சிறுவர்களை அந்த இடத்தில் இருக்கவிட மாட்டார்கள். ஏன் நம்மை அங்கு அனுமதிக்க மாட்டேங்குறார்கள் என்று யோசித்திருக்கிறேன்.

பல நாள்கள் மறைந்து நின்று பார்த்திருக்கிறேன். கிணற்றடியில் பாட்டி கோழியின் இரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து தனது வலது காலால் மிதித்துக்கொள்வாள். இரு சிறகுகளையும் ஒன்றாகச் சேர்த்து இடது காலால் மிதித்துக்கொள்வாள். பின் அரிவாளை எடுத்து கோழியின் கழுத்தைப்பிடித்து கற...கற...கற... சில விநாடிகளில் கோழியின் கழுத்து தனியாகவும் உடல் தனியாகவும் துடித்துக்கொண்டிருக்கும். ஓர் உயிர்தானே உடலில் இருக்கிறது பிறகு எப்படி வெட்டுப்பட்டு உடலும் தலையும் தனியாக ஆன பின்பும் இரண்டும் துடிக்கின்றன என்று ஆச்சர்யமாக இருக்கும் எனக்கு. சிறிது நேரத்தில் இரண்டும் துடிப்பது நின்று விடும். பிறகு என்ன கோழியின் உடலிலுள்ள இறகுகளைப் பிய்த்து துண்டு துண்டாக வெட்டுவார்கள். வெட்டப்பட்ட இரண்டு மணிநேரத்தில் கோழி குழம்பாகி விடும். அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.

Representational Image
Representational Image

ஒரு நாளும் எங்கள் வீட்டிலோ சித்தி வீட்டிலோ பெரியம்மா வீட்டிலோ கோழிக்குழம்பு வாசனை வீசியதில்லை. அப்படி தப்பித்தவறி வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ வீசினால் அதுவும் பாட்டி அவர்கள் வீட்டுக்குச் சென்று வைத்ததாகவே இருக்கும். அந்த அளவுக்கு நாங்கள் மாமிச ருசிக்காகப் பாட்டியைச் சார்ந்திருந்தோம். சிறுவயதில் இவ்வளவு கோழிகளைச் சாப்பிட்டு வாழ்ந்த எனக்கு பெரியவன் ஆக ஆக கேள்விகள் தோன்ற ஆரம்பித்தது. நான் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். நாம இவ்ளோ கோழிகள சாப்பிடுறோமே அது எல்லாம் உயிர் இல்லையா நாம பன்றது பாவம்தானே என்றெல்லாம் கேள்விகள் கேட்டேன். எல்லாரும் என்னை மேலும் கீழும் பார்ப்பார்கள். என்னடா சாமியாரா ஆகப்போறியா என்று சிரிப்பார்கள். அதிகபட்சம் எனக்குக் கிடைத்த பதில், "கொன்றால் பாவம் தின்றால் போச்சு", அதப்பத்தி எல்லாம் யோசிக்காதடா சாப்பிடத்தானே வளர்க்குறோம்.

ஒரு முறை பாட்டியிடமே கேட்டுவிட்டேன்.

``ஏன் பாட்டி கோழி எல்லாம் உயிர் இல்ல சாப்பிடுறது பாவம்தானே பாட்டி, நீ சாப்பிடுறது இல்ல நாங்க எல்லாரும் சாப்பிடுறோம். நாங்க பாவம் பன்றோம்ல பாட்டி’’ என்றேன்.

அதற்கு அவள் பதிலுக்கு ஒரு கதை சொன்னாள்.

``வேடன் காட்டுக்கு துப்பாக்கியோட வேட்டைக்குப் போனானாம். ஒரு மானை சுடணும்னு சுட்டப்போ குறி தவறி ஒரு யானைக்குட்டி மேலப்பட்டு யானைக்குட்டி இறந்துருச்சு. அந்த வேடனை தாய் யானை நான்றாகப் பார்த்து வச்சுக்குச்சு. இறந்த அந்த யானைக்குட்டியின் உடலை காட்டில் ஏதாவது உணவு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நரி செந்நாய் கழுகு மற்றும் இதர விலங்குகள் சாப்பிட்டன. யானைக்குட்டியின் உடலை சாப்பிட்ட அந்த விலங்குகளைத் தாய் யானை ஏதும் செய்யவில்லை. ஆனால், நீண்ட நாள் கழித்து அந்த வேடன் வேட்டைக்கு வந்தபோது தாய் யானை அவனைக் காலால் மிதித்துக் கொன்றது.’’

அவள் சொல்லி முடித்ததும் நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் எனக்குப் புரியவில்லை என்றேன். அவள் லேசாக சிரித்துவிட்டு எதுவும் சொல்லாமல் அவளது வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

Representational Image
Representational Image

நாள்கள் நகர்ந்தது நானும் இந்தக் கேள்வியைக் கேட்பதை நிறுத்தி விட்டேன். அந்த நாள்களில் நாட்டுக்கோழிகள் வயலில் குறைவாக நின்றதால் நாட்டுக்கோழிக்குழம்பு வைக்கவில்லை. பிராய்லர் கோழிக்குழம்பு மட்டுமே வைத்தார்கள். கார்த்தி அண்ணனுக்கு நாட்டுக் கோழிக்குழம்பு மிகவும் பிடிக்கும். பாட்டியிடம் நாட்டுக்கோழிக்குழம்பு வைக்கச்சொல்லி நச்சரித்துக்கொண்டே இருந்தான்.

நாட்டுக் கோழிகள் குறைவாக உள்ளது. வீட்டில் வைத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அதனால், ஒரு நாள் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிய பிறகு, அண்ணனும் நானும் பாட்டியைக் கூட்டிக்கொண்டு சமையலுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு கோழிப்பண்ணை இருக்கும் வயலுக்குச் சென்றோம். அண்ணன் கீழிருந்து டார்ச்சை அடிக்க நான்தான் மோட்டார் அறைக்கு அருகிலிருந்த நெல்லிக்காய் மரத்தில் ஏறி மரத்தில் அடைந்திருந்த நாட்டுக்கோழிகளில் ஒன்றைப் பிடித்தேன். இரவில் டார்ச் வெளிச்சத்தில் தென்னை மரத்தினடியில் அமர்ந்து பாட்டி கோழியின் உயிரை எடுத்துக்கொண்டிருந்தால்.

அருகில் அண்ணனும் நானும் அமர்ந்திருந்தோம். அப்போது பாட்டி குற்ற உணர்ச்சி மேலோங்க சொன்ன வார்த்தைகள் என்னை அதிர்ச்சியடைய செய்தன. அவள் ஏன் மாமிசம் சாப்பிடுவதில்லை? அவள் ஏன் தன் பிள்ளைகளைக் கோழிகளின் உயிரை எடுக்க அனுமதிப்பதில்லை. அவள் அன்று என்னிடம் சொன்ன அந்தக் கதையின் அர்த்தம் என்ன போன்ற அனைத்துக் கேள்விகளுக்குமான பதில் அந்த வார்த்தைகளில் இருந்தன.

``பேரன்களா எவ்வளவோ கோழிகளை என் கையால கொன்னு இருக்கேன். இதுக்கு எல்லாம் நான் இறந்ததுக்கு அப்றோம் சாமி என்ன தண்டிக்குமா பேரன்களா....’’ என்றார் பாட்டி அப்பாவித்தனமாக.

சிறிது நேரம் கழித்து அண்ணன் பேசினான். ``அப்டி பாத்த காய்கறிகளும் தானே உயிர். அதக் கொன்னா மட்டும் பாவம் இல்லையா. அவங்களையும் தானே சாமி தண்டிக்கனும். நீ கும்பிடுற சின்னக் கருப்பசாமியே அந்தக் காலத்துல வேட்டையாடிட்டு இருந்தவரு தானே. அப்படி இருக்கும்போது அவருடைய பக்தர்கள் மட்டும் சாப்பிட்டா தண்டிப்பாரா என்ன? தேவை இல்லாம குற்றயுணர்ச்சி ஆகாத பாட்டி’’ என்று பாட்டிக்கு புரியும்படி சொல்லி சமாதானப்படுத்தினான்.

அதன்பிறகு படிப்புக்காக நான் கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்துக்கு வந்துவிட்டேன். இங்கு அசைவம் சாப்பிட ஆசையுடன் ஹோட்டலுக்கு செல்வேன். ஆனால் பாட்டி கைப்பக்குவத்தில் நாட்டுக் கோழி சாப்பிட்டு வளர்ந்த எனக்கு எந்த ஹோட்டல் அசைவ சாப்பாட்டும் இன்றுவரை திருப்தி அளிக்கவேயில்லை.

- அரிமா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு