Published:Updated:

குட்டி ஜாக்..! - சிறுகதை #MyVikatan

Kids
Kids ( Andrew Seaman on Unsplash )

செலவு இவர்கள் எதிர்பார்த்ததைவிட இரு மடங்கானது. அஸ்வின் நாய்க்குட்டி வரும் நாளை எதிர்நோக்கி, நாட்களை எண்ண ஆரம்பித்தான்... ``அம்மா, எப்போ வாங்கித் தருவீங்க’’ அன்று மணிக்கொரு தரம் கேட்க ஆரம்பித்தான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

’’அம்மா, அம்மா, இங்க பாருங்க, நேத்து சொன்னேன்ல, இதுதான் கோல்டன் ரெட்ரீவர், இது அமெரிக்கா, பிரேசில் அப்புறம் ஆஸ்திரேலியாவிலே ரொம்ப famous மா... கண் தெரியாதவங்க, காது கேக்காதவங்களுக்கு வழிகாட்டியாவும் உதவியாவும் இருக்கும்’’ என்று அம்மா தாமரையிடம் ஆர்வத்துடன் மொபைலில் நாய்க்குட்டிகளின் புகைப்படங்களைக் காட்டியபடியே கூறிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

மொபைலை வாங்கிப் பார்த்த தாமரை அந்தப் புகைப்படங்களை ரசித்தபடியே, ``ஆமாம் அஸ்வின், ரொம்ப அழகா இருக்கு, fur கூட நிறைய இருக்கு’’ என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு திரும்ப,

‘’அம்மா, அம்மா என்ன அவ்ளோதானா? ஒண்ணும் சொல்லாம போறீங்க, இந்த நாய்க்குட்டி வாங்கி குடுங்கம்மா... ஜஸ்ட் 25,000 தான்’’ என்று கெஞ்ச ஆரம்பித்தான் அஸ்வின்.

Puppy
Puppy
Stephen Noble on Unsplash

‘’அஸ்வின், ஏதோ 50 ரூபாய் பொம்மை வேணும்னு கேக்கற மாதிரி ரொம்ப ஈஸியா கேக்கற? உங்க மூணு பேருக்கும் சமைச்சுப்போட்டு, வீட்டு வேலை செய்யவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல நாய்க்குட்டியை நான் எப்படி கவனிச்சுக்க முடியும்? அதுவும் இவ்ளோ விலையில்?’’ என்று தாமரை சொல்ல,

‘’இல்லேன்னா லாப்ரடார் வாங்கி குடுங்க, அது friendly dog, just 15,000 தான்’’ என்று கேட்டபடியே அறையிலிருந்து வெளியே வந்தான் மூத்த மகன் வினய்.

‘’வாடா வா, நான் நாய்க்குட்டியே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்கேன், இதுல இவன் வேற சாய்ஸ் குடுக்கறான்... ரெண்டு பேருக்கும் நாளைக்கு டெஸ்ட் இருக்குல்ல, படிக்கற வேலையைப் பாருங்க’’ என்று விரட்ட, ’’என்ன அம்மாவுக்கும் பசங்களுக்கும் பிரச்னை?’’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் சுப்பு.

’’உங்க பசங்களுக்கு நாய்க்குட்டி வேணுமாம், அதுவும் 25,000 ரூபாய்க்கு, இங்க நம்ம ஸ்கூட்டி, பைக் நிறுத்தவே இடமில்லை, நம்ம வீடு இருக்கறது முதல் மாடில, இவங்க ஓடியாடி விளையாடக்கூட முடியாத நிலைமை. கிச்சன்ல பாத்திரம் கீழ விழுந்த சத்தம் கேட்டாலே, ஓனர் அம்மா என்ன சத்தம்ன்னு ஓடி வந்து 1,000 கேள்விகள் கேப்பாங்க’’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் தாமரை.

‘’சரி சரி டென்ஷன் ஆகாத, பசங்களுக்கு நம்ம நிலைமையைப் பொறுமையா எடுத்து சொல்லு, புரிஞ்சுக்குவாங்க’’ என்று அழுது கொண்டிருந்த அஸ்வினைக் கட்டிப் பிடித்து சமாதானம் செய்ய முற்பட்டார் சுப்பு.

‘’அப்பா, ப்ளீஸ்ப்பா’’ என்று கண்ணைக் கசக்கினான் அஸ்வின்.

’’சரி சரி எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்’’ என்று இருவரையும் சமாதானப் படுத்தி, சாப்பிட வைத்து உறங்க வைத்தார் சுப்பு. பிறகு, தாமரையிடம், ‘’நாம தனிவீடு பார்த்து குடி போயிடலாமா’’ என ஆலோசனை கேட்க, ’’எதுக்குங்க’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் தாமரை.

Father son
Father son
Conner Baker on Unsplash

‘’நமக்கு கல்யாணம் ஆகி 20 வருஷமா, அப்பார்ட்மென்ட் வீட்லயே இருந்து காலத்தைக் கழிச்சுட்டோம். நமக்கான வாழ்க்கையை நாம நினைச்ச மாதிரி சந்தோஷமா வாழ முடியல, வீட்டு ஓனருக்கும், அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் அனுசரிச்சு வாழப் பழகிட்டோம். பசங்களும் வளர்ந்துட்டே வராங்க, அவங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். பெத்தவங்க நாம்தான் அது சரியா தவறான்னு ஆராய்ஞ்சு நிறைவேத்தி வைக்கணும். இன்னும் கொஞ்ச காலம்தான் அவங்க நம்ம கூட இருக்கப் போறாங்க. அதுக்கப்புறம் படிப்பை முடிச்சு, வேலை கிடைச்சு வெளியூர் அல்லது வெளிநாடுன்னு போற வரைக்கும் நம்ம கூட சந்தோஷமா இருக்கட்டும்’’ என்று தீர்க்கமாகக் கூறினார் சுப்பு.

அதெல்லாம் சரிதான், ’’தனி வீடுன்னா வாடகை அதிகமா இருக்குமே?’’ என்று கேட்ட தாமரையிடம், ’’கொஞ்சம் நகரத்தை விட்டு தள்ளி பார்க்கலாம், வாடகை கொஞ்சம் குறைவா இருக்கும்’’ என்று கூற தாமரையும் சம்மதித்தாள். மறுநாள் காலையில் சுப்பு மகன்கள் இருவரையும் அழைத்து, ``அப்பாவும் அம்மாவும் உங்களுக்கு நாய்க்குட்டி வாங்கித் தரலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்று கூற இருவரும் மகிழ்ச்சியில் கைதட்டி தாமரை, சுப்புவின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு தங்கள் நன்றியைத் தெரிவிக்க...

’’அப்புறம் ஒரு கண்டிஷன், ரெண்டு பேரும் ஒரு உறுதிமொழி தரணும்’’ என்று கூற, வினய்யும் அஸ்வினும் திருதிருவென விழித்துக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்தனர்.

‘’நாய் வாங்கறது மட்டும் முக்கியமில்லை, அதுக்கு முறையா பயிற்சி குடுக்கணும், தேவையான ஆகாரம் தந்து வளர்க்கணும், ஆசைக்கு வாங்கிட்டு, வளர்க்க முடியலன்னு தெருவுல விட்டு விடக்கூடாது... நம்ம மூணு பேரையும் கவனிச்சுக்கவே அம்மாவுக்கு நேரம் சரியா இருக்கும்.

அப்பாவும் ஆபீஸ் போயிட்டு நைட்தான் வருவேன்... நாய்க்குட்டியை நீங்க ரெண்டு பேரும்தான் கவனமா பார்த்து வளர்க்கணும். அந்தப் பொறுப்பை உங்க கிட்ட விடறேன். நாய்க்குட்டி வீட்டுக்குள்ள யூரின் அல்லது டாய்லெட் போயிட்டா, அருவருப்போ, கோபமோ படக்கூடாது. அதுக்காக நேரம் ஒதுக்கி அரை மணி நேரம் முன்னதாக நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு வெளியில் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தை தேர்வு செஞ்சு பழக்கணும் .

Puppies
Puppies
sergio souza on Unsplash

நாய்க் குட்டிகள் டாய்லெட் போன பிறகு திரும்ப கூட்டிட்டு வரணும். தினமும் இதை செய்யணும். அது போக, நாய்க்குட்டிக்கு சாப்பிட எது தரணும் எது தரக்கூடாதுன்னு வரைமுறை இருக்கு. இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும். அம்மாவும் அப்பப்போ உங்களுக்கு உதவியா இருப்பாங்க. இதை எல்லாம் சரியா செய்வீங்கன்னு உறுதிமொழி தந்தா அப்பா கண்டிப்பா நாய்க்குட்டி வாங்கித் தருவேன். அப்புறம் புது வீடு பார்க்கணும், நிறைய வேலை இருக்கு. அம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது, ஓகே வா ?’’ என்று கேட்க,

பசங்க ரெண்டு பேரும் ஒரு நொடிகூட தாமதிக்காமல், ’’ஓகே’’ என்று சப்தமாகக் கூறினர்.

`என் ஏஞ்சலு..!' - லோன்லி ஹோம் மேக்கர் பகிரும் புது காதல் அனுபவம் #MyVikatan

ஒரு மாதத்திற்குப் பிறகு, இவர்கள் எதிர் பார்த்ததைவிட நல்ல வீடு அமைந்தது. தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர் சுப்புவும் தாமரையும். ஆனால், செலவு இவர்கள் எதிர்பார்த்ததை விட இரு மடங்கானது. அஸ்வின் நாய்க்குட்டி வரும் நாளை எதிர்நோக்கி, நாட்களை எண்ண ஆரம்பித்தான்.

‘’அம்மா, எப்போ வாங்கித் தருவீங்க’’ அன்று மணிக்கொரு தரம் கேட்க ஆரம்பிக்க, தாமரை, சுப்புவிடம், ‘’என்னங்க, நாய்க்குட்டி வாங்கித் தரோம்ன்னு ப்ராமிஸ் பண்ணிட்டோம், பசங்க கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... எனக்கும் நிலைமை புரியுது. இருந்தாலும்’’ என்று இழுக்க ஆரம்பித்தாள்.

புரிந்து கொண்ட சுப்பு, ’’அதுக்காக வெச்சிருந்த பணம்தான் வீடு பெயின்ட் பண்ண சரியா போயிடுச்சு. நானும் விசாரிச்சுப் பார்த்தேன், குறைஞ்சது 15,000 ரூபாய் வேணும் இப்போ, நம்ம பட்ஜெட்ல இப்போ அவ்ளோ தொகைக்கு இடமே இல்லை.

நல்ல நாட்டு நாய் வாங்கினா, விலை பரவாயில்லையா இருக்கும், தெரியாதவங்க வந்தா குரைக்கும். நாங்க இல்லாத நேரத்துல உனக்கு காவலா இருக்கும். ஆனால், பசங்க கேக்கற இனம் வாங்கினா அவங்க சந்தோஷப்படுவாங்கதான். ஆனால், அந்த வகை நாய்கள் எல்லாம் அவ்வளவா குரைக்காதுன்னு கேள்விப்பட்டேன்’’ என்று சுப்பு சொல்லிக்கொண்டிருக்கையில்,

‘’அப்பா, என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க’’ என்று கேட்ட வினயிடம் , ‘’மன்னிச்சுடு தங்கம், அப்பா கிட்ட இப்போ அவ்ளோ பணம் இல்ல... புது வீட்டுக்கு எதிர் பாராத நிறைய செலவு, உங்களுக்காகதான் நாய்க்குட்டி வாங்கலாம்ன்னு வீடு மாத்தினோம். ஆனால் எதிர் பார்த்தது போல நடக்கல, இன்னும் மூணு மாசம் கழிச்சு வாங்கித் தரேன், கொஞ்சம் பொருத்துக்கங்க’’ என்று தன் இயலாமையை எண்ணி சுப்பு கண் கலங்கினார்.

‘’அப்பா, நீங்க வாங்கித் தரோம்ன்னு சொன்னதே போதும், பணம் இருக்கும்போது வாங்கிக்கலாம். அழாதீங்க!’’ என்று சுப்புவின் கண்களைத் துடைத்து விட, அஸ்வினும் சேர்ந்துகொண்டு, சுப்புவின் முதுகை இறுகக்கட்டிக்கொள்ள, தாமரையின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

Puppy
Puppy
Bogdan Todoran on Unsplash

சில வாரங்களுக்குப் பிறகு, சுப்புவின் நண்பர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் எனக் கேள்விப்பட, அவர் வீட்டிற்கு சென்றார். நலம் விசாரிக்கையில், அவர் உடல்நலம் குன்றியதற்கான காரணம் கேட்டு அதிர்ந்தார் சுப்பு.

``ஆறு வருஷமா ஒரு நாய் வளர்த்திட்டு இருந்தேன், ஜாக் அவளோட பெயர். அதுக்கு ஒரு குட்டி பிறந்து ஒரு மாதம்தான் இருக்கும். அது பிறந்து ஒரு வாரத்துல, என் தம்பி வீட்ல விட்டுட்டு, அவசரமா வெளியூர் போயிட்டேன், என்ன ஆச்சுன்னு தெரியல, நான் வரதுக்குள்ள ஜாக் இறந்து போயிட்டா. என்னால ஜீரணிச்சுக்கவே முடியல. என் மனைவியைப் பிரிஞ்சு 10 வருஷம் ஆச்சு. அவள் போன பிறகு, ஜாக்தான் என் வாழ்க்கையில எல்லாமேன்னு இருந்தேன். ஆனால் இப்போ...’’ என்று வழியும் கண்ணீரைத் துடைத்தார்.

‘’சார், அதுதான் குட்டி ஜாக் வந்துட்டாள்ல, மகிழ்ச்சியா இருங்க’’ என்று ஆறுதல்படுத்திய சுப்புவிடம், ’’எனக்கு ஒரு உதவி பண்ணுங்க, உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கங்க, இல்லேன்னா இவளை யாருக்காவது கொடுத்துடுங்க, எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். இன்னொரு இழப்பை என்னால தாங்கிக்க முடியாது’’ என்று கீச் கீச் என்று கத்திக்கொண்டிருந்த குட்டியை எடுத்து சுப்புவிடம் கொடுத்தார்.

குட்டியை தன் கையில் வாங்கிக் கொண்ட சுப்பு, ''சார், இது என்ன இனம்'' என்று கேட்க, ''லாப்ரடார்'' என்றார் நண்பர்..!

- நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு