Published:Updated:

`என்னை சம்பந்தியா ஏத்துப்பீங்களா..?’ - ஃபீல் குட் ஃபேமிலி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Joshuva Daniel / Unsplash )

“ அப்பா… காப்பி வேணும்” என்று கணேசனின் மகள் ராதாவின் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தார் புதிய பால்காரர்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காலை 5:30 மணி… கோலம் போட வந்த ராஜாத்தி பக்கத்து வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

“ என்ன அண்ணே நீங்க இன்னைக்கு வாசல் தெளித்து கோலம் போட்டுட்டு இருக்கீங்க?” என்று பக்கத்து வீட்டு கணேசனை கேட்டாள் ராஜாத்தி.

“அது, பொன்னம்மாவுக்கு பீரியட்ஸ்... ரெஸ்ட் எடுக்கட்டும்னு நான் இன்னிக்கு கோலம் போட வந்தேன்” என்றார் கணேசன். கணேசனின் பதிலை கேட்டுக்கொண்டே வந்த பால்காரரிடம் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான் கணேசனின் மூத்த மகன் அருண்.

Representational Image
Representational Image

‘ “இன்னைக்கு எவ்வளோ லிட்டர் பால் தம்பி” என்று கேட்டார் பால்காரர்.

“ ஒரு லிட்டர் ஊத்துங்க அண்ணாமலை” என்று திரும்பிய கணேசன், “நீங்க யாரு... புதுசா இன்னைக்கு பால் கொண்டு வந்தி ருக்கீங்க?” என்று கேட்டார்.

“ அண்ணாமலைக்கு உடம்பு சரி இல்லைங்க, நான் அவர் பெரியப்பா பையன் தானுங்க” என்றார் புதிய பால்காரர் .

“அப்படியா... அண்ணாமலைகிட்ட நாட்டுக்கோழி முட்டை கேட்டி ருந்தேன், என் மகளுக்கு அவிச்சுக் கொடுக்க. உங்ககிட்ட கொடுத்து விட்டாருங்களா?” என்று கணேசன் கேட்டார்.

“இல்லைங்களே கடையில போனா வெள்ளை முட்டை கிடைக்குங்களே” என்றார் புதிய பால்காரர்.

“எங்க சாமி நல்ல பொருள் கிடைக்குது. நம்மளால முடிஞ்ச அளவுக்கு நல்ல பொருளை வாங்கி புள்ளைங்களுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்னு தானுங்க” என்றார் கணேசன்.

“ அப்பா… காப்பி வேணும்” என்று கணேசனின் மகள் ராதாவின் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தார் புதிய பால்காரர்.

“ வரேன் சாமி” என்றார் கணேசன்.

“ நம்ம பொண்ணுங்களா?”என்று கேட்டார் புதிய பால்காரர்.

“ ஆமாங்க ஒரு பொண்ணு, ஒரு பையனுங்க. பொண்ணு இங்க தான் கிருஷ்ணம்மாள் காலேஜ்ல லெக்சரர்” என்று கூறிக்கொண்டே விடைபெற்றார்.

ஒரு வாரம் கழிந்தது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணேசன் வீட்டின் காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தார் கணேசனின் மனைவி பொன்னம்மாள்.

Representational Image
Representational Image

``அம்மா… சிலிண்டர்” என்றான் சிலிண்டர் போட வந்த பையன்.

“வாப்பா… கிச்சன்ல வச்சிடுறியா ?” என்றார் பொன்னம்மாள். சமையலறைக்கு சிலிண்டர் எடுத்துச்சென்றான்.

அடுப்பில் உலை கொதித்துக்கொண்டிருந்தது. கணேசன் மும்முரமாக காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார். ராதா துணி துவைப்பதையும் அதை அருண் அலசுவதையும் ஓரக்கண்ணால் வாங்கி ஆழ்மனதில் பதியவைத்தான் சிலிண்டர் போட வந்த பையன். வேலை மும்முரத்தில் இவர்கள் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து பெருமூச்சுவிட்டான்.

“இந்தா தம்பி காசு” என்று கொடுத்ததை வாங்கிக்கொண்டு கிளம்பினான் சிலிண்டர் போட வந்த பையன். ஒரு மாதம் கழிந்தது… மொட்டை மாடியில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அருணிடம் தயங்கிக்கொண்டே வந்தாள் ராதா.

“என்னமா ஒரு மாதிரி இருக்க?” என்று அவன் கேட்டான்.

“ யாரோ என்னய பாலோ பண்ற மாதிரி இருக்கு அண்ணா” என்றாள் ராதா.

அன்றிலிருந்து அருண் தன் தங்கையை காலேஜுக்கு அழைத்துச் சென்றான் . முடியும்பொழுது அவனே திரும்ப அழைத்துவந்தான். ராதாவை கூட்டிச் செல்ல அருண் வருவதைக் கண்டு, அவளை ஃபாலோ செய்யும் பையன் மாயப் புன்னகையுடன் மறைந்து நின்று கவனித்துக்கொண்டிருந்தான்.

மூன்று மாதங்கள் கழிந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை… கணேசனின் வீடே பரபரப்பாக இருந்தது. ராதாவை பெண் பார்க்க வருகிறார்கள். சமையலறை சொஜ்ஜி பஜ்ஜி வாசனையில் நிறைந்தது.

Representational Image
Representational Image

“10 மணிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திடுவாங்க சீக்கிரம் கிளம்புங்க” என்று விரட்டினார் பொன்னம்மாள்.

எல்லோரும் பறந்து கிளம்பினார்… 'மணி பத்து' என்று சுவர்க் கடிகாரம் கூறியது. மாப்பிள்ளை வீட்டாரின் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன் அருண் வெளியே சென்று கேட்டைத் திறந்தான். மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் இறங்கினர். கணேசனும் பொன்னம்மாளும் “வாங்க வாங்க” என்று கைகூப்பி வணங்கி வரவேற்றனர்.

“மாப்பிள்ள வர்லீங்களா?” என்று கேட்டார் கணேசன்.

“ ஒரு அரைமணி நேரத்தில வந்துடுவாருங்க” என்றார் மாப்பிள்ளையின் தந்தை ராமசாமி. வீட்டின் உள்ளே சென்று அமர்ந்தனர். மாப்பிள்ளையின் தந்தையை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார் கணேசன்.

“ பேச வேண்டியதைப் பேசுங்க” என்று மாப்பிள்ளையின் தாய் மேகலை தன் கணவரை இடித்தார்.

“ பொண்ண வரச் சொல்றீங்களா?” என்று ராமசாமி கேட்டார். மிகவும் சாதாரண உடையில் வந்து நின்றாள் ராதா.

“ நகை எல்லாம் போடலையா முகத்தில் மேக்கப்பே இல்ல...” என்று முணுமுணுத்தார் பொன்னம்மாள்.

“ சும்மா இரும்மா. கல்யாணத்துக்கு அப்புறம் மேக்கப் போட்டு எங்கள ஏமாத்திட்டன்னு சொல்லுவாங்க. என்னோட உண்மையான நிறத்தை அவங்க ஏத்துக்கிட்டா போதும்” என்று பொன்னம்மாவின் காதில் ஓதினாள் ராதா.

ராமசாமிக்கும் ஆச்சர்யம் கலந்த திருப்தி ராதாவைக் கண்டதும். “உங்க பொண்ணுக்கு என்ன” என்ற ராமசாமியின் கேள்வியை முடிப்பதற்குள் கணேசன் பதில் சொல்லத் தொடங்கினார்.

“ நகையும் பணமும் காரும் கேட்கும் வீட்டுக்கு நாங்க எங்க பொண்ண தர மாட்டோம் சார்” என்றார் கணேசன். பொன்னம்மாள் ஒரு ஃபைலை கொண்டுவந்து ராமசாமியிடம் நீட்டினார். “இது எங்க பொண்ணு படிச்சு வாங்கின யு ஜி , பி ஜி சர்டிபிகேட்ஸ்” என்றார் கணேசன்.

Representational Image
Representational Image

“நல்லா படிக்க வெச்சு இருக்கீங்க” என்றார் ராமசாமி. “ உங்க பொண்ணுக்கு சாப்பாட…” என்ற கேள்வியை மேகலை முடிப்பதற்குள் அருண் பதில் கூற முற்பட்டான்.

“எங்கம்மா, எங்க ரெண்டு பேருக்குமே சமயலும் சகல வீட்டு வேலையும் செய்ய சொல்லிக்கொடுத்திருக்காங்க” என்றான்.

“ நீ ஏதாவது சொல்ல நினைக்கிறியாம்மா?” என்று ராதாவைப் பார்த்து மேகலை கேட்டார்.

“ நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அத கல்யாணத்துக்கு அப்புறமும் தொடர நினைக்கிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீட்டுக்கு நான் பணம் அனுப்புவேன். என்னால முடியாத பட்சத்தில என்ன கல்யாணம் பண்ணிக்கப் போறவர் என் வீட்டுக்கு தரணும். அதே மாதிரி அவரால உங்களுக்குத் தர முடியாத சூழ்நிலை வரும்போது நான் தருவேன். ஒரு சம உரிமையான சம மரியாதையான வாழ்க்கை வேணும்னு நினைக்கிறேன் “ என்று சொல்லி முடித்தாள் ராதா.

கையை தட்டியவாறு பெருமகிழ்ச்சியுடன் ராமசாமி எழுந்து நின்று கணேசனின் கையைப் பிடித்துக்கொண்டு ,

“என் பொண்ண உங்க வீட்டு மருமகளாக ஏத்துப்பீங்களா?” என்று கேட்டார்.

“என்ன..?!” என்று மேகலையைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.

அப்பொழுது ராமசாமியின் மகளும் மகனும் உள்ளே வந்தனர். “ இது, என் பொண்ணு மீனா. இது என் பையன் ஆதித்யா” என்று அறிமுகம் செய்தார் ராமசாமி. இருவரும் வணக்கம் கூறினார்கள். “ இது, சிலிண்டர் போட வந்த பையனாச்சே??” என்றார் பொன்னம்மாள். “என்னை ஃபாலோ பண்றது நீங்கதானே...” என்றாள் ராதா.

Representational Image
Representational Image

தன் காதலியைக் கண்ட அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான் அருண்.

“ இது உன் ஃபேமிலியா?” என்று கண்ணால் கேட்டான் அருண்.

“ஆமாம்” என்று கண்ணாலேயே பதில் கூறினாள் மீனா.

“நடந்தது என்னன்னு நான் சொல்றேங்க. என் பொண்ணும் உங்க பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க . உங்கள பத்தி தெரிஞ்சுக்கத்தான் நான் பால்காரனா வந்தேன், என் மகன் சிலிண்டர் போடுற பையனா வந்தான். வந்த இடத்துல உங்க பொண்ண என் மகனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு” என்றார் ராமசாமி .

“ அதுதான் உங்களை எனக்கு எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்துச்சு” என்றார் கணேசன். மேகலை தொடர்ந்தார்…

“நாங்க பணமும் நகையும் எதிர்பார்க்கிற குடும்பம் இல்லீங்க. எங்களுடைய பதில் எல்லாம் உங்க பதில்களா வந்ததுல எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோஷம். எங்க பிள்ளைங்க ரெண்டு பேருக்குமே எல்லாமே சமமாதானுங்க சொல்லிக் கொடுத்திருக்கோம். உங்க பொண்ண எங்க வீட்டுல மகாராணியா பார்த்துப்போம். உங்க முடிவைச் சொல்லுங்க” என்றார் மேகலை. கண் கலங்கி நின்ற கணேசனிடம் தாம்பூலத் தட்டை நீட்டினாள் ராதா. தன் வீட்டு தாம்பூலத் தட்டை எடுத்து ராமசாமியிடம் நீட்டினாள் மீனா. திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

-மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு