Published:Updated:

`அன்புள்ள மாமியார்!' - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மனம் கனத்தது அனுவுக்கு. எண்ண அலைகளில் தன் மனவலியை மென்று கொண்டிருந்தாள். வேறு ஒரு நல்ல காப்பியை தன் மாமியாருக்குப் போட்டுக் கொடுத்துவிட்டு, சமையலில் இறங்கினாள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``அத்தை, காபி இந்தாங்க” என்று தோட்டத்தில் காய்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தன் மாமியாரிடம் காபி டம்ளரை நீட்டினாள் அனு.

``தேங்க்ஸ்மா...” என்று தண்ணீர் பைப்பை அனுவிடம் கொடுத்துவிட்டு, டம்ளரை வாங்கிக் கொண்டார் பார்வதி. காபியை ஒரு வாய் குடித்துவிட்டு,

``நீ குடிச்சியாம்மா?” என்று கேட்டார்.

``இல்ல அத்தை. இனிமேதான்” என்றாள்.

``காபில சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுட்டம்மா. அதான் கேட்டேன்...” என்றார் பார்வதி புன்னகையோடு.

``ஐயோ! ஸாரி அத்தை...” என்று பதறினாள் அனு.

``பரவாயில்ல பரவாயில்ல... ஒண்ணும் டென்ஷனாகாதம்மா. என்ன ஆச்சு? எதுவும் கவலையா உனக்கு?” என்று கேட்டார் பார்வதி.

``அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. குடுங்க நான் உங்களுக்கு வேற காபி போட்டுக் கொண்டு வரேன்” என்று டம்ளரை வாங்கிக் கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள்.

Representational Image
Representational Image
Pixabay

மனம் கனத்தது அனுவுக்கு. எண்ண அலைகளில் தன் மனவலியை மென்றுகொண்டிருந்தாள். வேறு ஒரு நல்ல காபியை தன் மாமியாருக்குப் போட்டுக் கொடுத்துவிட்டு, சமையலில் இறங்கினாள்.

``டிபன் ரெடியா அனு? டைம் ஆயிடுச்சு...” என்று கேட்டுக்கொண்டே வந்தான் அனுவின் கணவன் தீபக்.

``ம்“ என்று ஒரு எழுத்தை மட்டும் கனமாகக் கொட்டிவிட்டு அமைதியாக டிபனை எடுத்துப் பரிமாறினாள்.

அவளின் அமைதியை உணர்ந்தவனாய், ``என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

``ஒண்ணும் இல்ல... சும்மாதான். நான் போய் ஆர்யாவக் குளிப்பாட்டுறேன். நீங்க லஞ்ச் பாக்ஸ்ஸ மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று கூறிவிட்டு தன் இரண்டு வயது மகனை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

தன் தாயிடம் இருந்து விடைபெற்று வேலைக்குக் கிளம்பினான் தீபக். ஆர்யாவுக்கு உணவு கொடுத்துவிட்டு பார்வதியுடன் சாப்பிட அமர்ந்தாள் அனு.

தன் மருமகளின் முகவாட்டத்தைக் கண்டு,

``என்ன அனு... ஏன் மா டல்லா இருக்கே?” என்று கேட்டார். இதற்கு மேல் மறைக்க முடியாமல் பேசத் தொடங்கினாள்.

``அத்தை, பெரியம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஹார்ட் ஆபரேஷன் அடுத்த வாரம். அதான் மனசு கஷ்டமா இருக்கு” என்றாள்.

``நீ போயிட்டு வா அனு. நான் பார்த்துகிறேன் வீட்டையும் தீபக்கையும்...” என்றார் பார்வதி.

மீண்டும், ``ம்”-ஐ இறக்கி வைத்தாள்.

அனுவுக்கு வேறு ஏதோ மனதில் ஓடுகிறது என்பது புரிந்தது பார்வதிக்கு. இருப்பினும் மிகுந்த கேள்விகளைக் கேட்டுக் காயப்படுத்தாமல் இருப்பது நல்லது என்று அமைதியானார். அனுவுக்குப் பெரியம்மா என்றால் உயிர். தன் தாயிடம் வளர்ந்ததைவிட, தன் பெரியம்மாவிடம் வளர்ந்ததுதான் அதிகம். அதனால் அவரின் உடல்நலக்குறைவு அனுவை பாதிப்பதாக நினைத்தார் பார்வதி.

மாலை நேரம் ஆனது. தீபக் வேலையிலிருந்து திரும்பினான்.

``அனு… டீ தர்றியா?” என்று கேட்டான்.

அமைதியாக டீயைக் கொடுத்துவிட்டு,

``நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்” என்று ஆர்யாவுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டாள்.

தீபக், டீ கப்புடன் தோட்டத்துக்குச் சென்றான் தன் தாயைக் காண.

``இப்பதான் வர்றியாப்பா?”

``ஒரு பத்து நிமிஷம் ஆச்சும்மா?”

``அனு என்ன செய்யறா?”

``ஆர்யாவ தூக்கிக்கிட்டுக் கோயிலுக்குப் போயிருக்காமா.”

``ஹூம்ம்... உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அனுவோட பெரியம்மாவுக்குக் ஹார்ட் ஆபரேஷனாமே, அனுவ ஒரு மாசம் அங்க அனுப்பி வைப்பா. ரொம்ப வருத்தப்படுற மாதிரி தெரியுது.”

``அம்மா... அவ வருத்தம் அது மட்டும் இல்ல. ஆபரேஷன் செலவுக்கு பணம் கொஞ்சம் கொடுக்கணும்னு நினைக்கிறா.”

``நல்ல விஷயம்தானே...”

``அத என்கிட்ட அவ டைரக்டா பணம் வேணும்னு கேட்கலாம் இல்ல... அதுல என்ன ஈகோ அவளுக்கு? அதுவும் அவ அம்மான்னா பரவாயில்லை. அவளோட பெரியம்மாக்கு எல்லாம் ஏன் செய்யணும்னு புரியல.”

Representational Image
Representational Image

தீபக்கின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியானார் பார்வதி.

``அதுக்கு பேரு ஈகோ இல்ல தீபக். தன்மானம். தாலி கட்டி ஒரு பொண்ணு ஒரு வீட்டுக்குப் போகும்போது கணவனையும் கணவன் குடும்பத்தாரையும் சேர்த்து கவனிக்கணும்னு எதிர்பார்க்கிறோம். அதே மாதிரி ஒரு கணவனும் நடந்துக்கணும்ப்பா.“

``அம்மா, நான் கேட்டா செய்ய மாட்டேன்னா சொல்லப் போறேன்?”

``சில விஷயங்கள் அவ கேட்காமலே அவ மனசு தெரிஞ்சு செய்யணும். அதுதான் நல்ல தாம்பத்யம். ஆரோக்கியமான உறவு. உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் அவ செய்யுறத எல்லாம் கேட்டுட்டா செய்யுறா? அவ நின்னு ஆணிவேரா இந்தக் குடும்பத்தப் பார்த்துக்கிறதுனாலதான், நீ நிம்மதியா வெளிய போயி வேலைசெஞ்சு சம்பாதிச்சுக் கொண்டு வர முடியுது. அத மறந்துடாத. அவளுக்கு யாரு முக்கியம், அவ யாருக்கு முக்கியத்துவம் தரணும்னு நீ முடிவு செய்யாத தீபக். அதையே அவ உன் மேல திணுச்சா நீ ஏத்துப்பியா?”

``இல்லம்மா…” என்று இழுத்தான் தீபக்.

``உன் வாழ்க்கையிலயும், உன் சம்பாத்தியத்துலயும் உன் மனைவிக்கும் சம உரிமை உண்டு.”

``அம்மா, அவ சாப்பிடுறதுக்கும், போடுற டிரெஸ்ஸுக்கும் நான்தானே செலவு பண்றேன்?”

``தீபக்... சாப்புடுற சாப்பாட்டுக்கும் உடுத்துற உடைக்கும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுன்னுதான் பெண் பிள்ளைகள படிக்க வைக்கிறாங்க. படிச்சவங்களோ, படிக்காதவங்களோ... தன்மானங்கிறது எல்லாருக்கும் பொதுவானது. இந்த நிமிஷம்கூட பேக்கை எடுத்துட்டு வெளியே அவ போனா ஆயிரம் வேலை செஞ்சு சம்பாதிப்பா. நீ போடுற சாப்பாட்டுக்குக்கூட அவ யாரையும் சார்ந்து இருக்கணும்னு அவசியம் இல்ல. சொல்லப்போனா நீ சாமானத்தான் வாங்கித் தர்ற... சமையல் அனுதான் செய்யுறா. நீயும்தான்ப்பா அனுவ சார்ந்து இருக்குற. உன்னையும் இந்தக் குடும்பத்தையும் பார்த்துக்கிறதுக்காக மட்டும்தான் வேலைக்குப் போகாம வீட்ல இருக்கா. அவ வேலைக்குப் போனா, அவ செய்யுற அத்தனை வேலைக்கும் நீ ஆள் வெச்சா எவ்வளவு சம்பளம் கொடுப்பனு யோசிச்சு பாரு. அவளை நீ வேலைக்காரியா பார்க்காம மனைவியா, உன்னுல பாதியா பார்த்தா நீ சேமிக்கிறதுல பாதிய நான் சொல்லாமலேயே நீ அனுவுக்குக் கொடுத்திருப்ப.”

``சரிம்மா புரியுது... ஆனா, ஒரு மாமியாரா நீங்க இப்படி பேசறது, எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு!”

``ஹாஹாஹாஹா... அது ஒண்ணும் இல்லப்பா, நான் பட்ட கஷ்டம் என் மருமகளுக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்.”

சிரித்துக்கொண்டே சொன்னாலும் பளாரென்று அறைந்ததுபோல் இருந்தது தீபக்குக்கு.

Representational Image
Representational Image

``உன் அப்பா என்னய நடத்தின விதத்தப் பார்த்து நீ உன் மனைவிய அந்த மாதிரி நடத்த மாட்டேன்னு நான் நெனச்சேன். ஆனா, நீ உன் அப்பா என்னை நடத்தின மாதிரியே அனுவ நடத்துவேன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்ல. தீபக் நிச்சயம் நீ மாறணும். நீ எந்த மாதிரி உன் மனைவிய நடத்துறியோ அதையே உன் மகனும் ஃபாலோ பண்ணுவான். அத மறந்துடாத. நல்ல ஒரு அப்பாவா இருந்து ஆர்யாவ வழிநடத்து.”

``யூ ஆர் கிரேட் மா!” என்று அணைத்துக்கொண்டான்.

ஒரு மணி நேரம் கழிந்தது.

கோயிலில் இருந்து வீடு திரும்பிய அனு, இரவு உணவை சமைக்கச் சமையலறைக்குச் சென்றாள். பார்வதி உணவு தயார் செய்து கொண்டிருப்பதைக் கண்டு,

``ஸாரி அத்தை... பசிக்குதா...லேட்டா வந்துட்டேனா?” என்று கேட்டாள்.

``அதெல்லாம் இல்லம்மா. டெய்லியும் நீதான செய்யுற... இன்னைக்கு ஒரு நாள் நான் செய்யலாமுன்னுதான். தீபக் உனக்காக வெயிட் பண்றான்மா. என்னன்னு போயி பாரு...” என்று பார்வதி ஆர்யாவை வாங்கிக்கொண்டு, அனுவை அனுப்பி வைத்தார்.

``சரிங்க அத்த” என்று கூறி தீபக்கைக் காணச் சென்றாள்.

தீபக் தோட்டத்தில் அனுவுக்காகக் காத்திருந்தான்.

``வா அனு” என்று தன் அருகில் அமரச் செய்து ஒரு கவரை நீட்டினான்.

``என்னங்க இது..?” என்று கேட்டாள்.

``இதுல ரூ.20,000 பணம் இருக்கு. நாளைக்கு நீ ஊருக்குப் போக டிரெயின் டிக்கட்டும் இருக்கு. இனிமே மாச மாசம் நான் உன் அக்கவுன்ட்ல பத்தாயிரம் போடுறேன். உனக்கு அத வச்சு என்ன செய்யணுமோ, யாருக்குத் தரணும்னு நினைக்கிறியோ, என்ன வாங்கணும்னு ஆசைப்படுறியோ, யூ கேன் டூ இட். நான் கணக்கெல்லாம் கேக்க மாட்டேன். என்னோட சம்பளத்துல வீட்டு செலவுகள் போக ரூ.20,000 சேமிக்குறேன். அதுல பாதிய நான் இனிமே உனக்குத் தர்றேன். இனிமே சம உரிமையான, சம மரியாதையான வாழ்க்கைய வாழலாம்” என்றான்.

கண்ணீரோடும் ஆச்சர்யத்தோடும், ``தேங்க்யூ சோ மச்!” என்றாள்.

``அம்மாக்குத்தான் நீ நன்றி சொல்லணும்...” என்றான்.

சமையல் அறையை நோக்கி ஓடினாள் அனு.

``அத்த, தேங்க்யூ சோ மச்” என்று அனைத்துக்கொண்டாள்.

``பல குடும்பங்கள்ல ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்தான். ஆனா, நம்ம வீட்டுல அப்படி இல்ல. இந்தக் குடும்பத்துல இருக்குற எல்லாருக்கும் என்னென்ன தேவைன்னு பார்த்து பார்த்துப் செய்யுற. உன் தேவை என்னங்கிறத கொஞ்சம் தீபக்குக்கும் புரியவச்சேன்” என்றார் பார்வதி.

மீண்டும் நன்றி கூறி, மகிழ்ச்சியோடு தன் பெரியம்மாவைக் காணக் கிளம்பினாள் அனு.


- மலர்விழி மணியம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு