Published:Updated:

`ஒருநாள் பயிற்சி எடுக்காம தனுஷ் என் கையையே பார்த்துட்டு இருந்தார்’- அடிமுறை பயிற்சியாளர் செல்வராஜ்

`நான் இந்தக் கலையை காசுக்காக கத்துக்கல, என்னோட அடையாளத்துக்காக கத்துக்கிட்டேன். கையில் பத்து பைசா இல்லாத நாள்களில் கூட என் கலையை நான் தெய்வமாகத்தான் பார்த்தேன்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தனுஷ் நடிப்பில் வெளியாகிய `பட்டாஸ்' திரைப்படத்தில் அடிமுறைக் கலைஞர்களாக மாஸ் காட்டியிருப்பார்கள் சினேகாவும், தனுஷும். கைகளை வளைத்து எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்யும் அடிமுறைக் கலையை தனுஷுக்கும் சினேகாவுக்கும் பயிற்றுவித்த அடிமுறைக் கலைஞர் செல்வராஜுடன் ஒரு உரையாடல்.

அடிமுறை கலை
அடிமுறை கலை

``திரைப்படத்துல வந்த பிறகுதான் அடிமுறைக் கலை பற்றி நிறைய தமிழர்கள் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அடிமுறைக் கலைங்கிறது கை, கால்களைப் பயன்படுத்தி, எதிரிகள் கண் சிமிட்டும் நிமிடத்தில் தாக்கி, அவர்களை திக்குமுக்காடச் செய்வது. அந்தக்கலைக்குள் ஆயிரம் போர் தந்திரங்கள் ஒளிஞ்சிருக்கு. வெளிநாடுகளில் அடிமுறைக் கலையைக் கொண்டாடுறாங்க. அப்படிப்பட்ட கலை, தமிழ்நாட்டுக்கு உரியதுனு நினைச்சு ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படணும்" என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அடிமுறை ஆசான் செல்வராஜ்.

என்னோட பத்து வயசுல சிலம்பம் சுத்த ஆரம்பிச்சேன். எத்தனையோ அவமானங்களைக் கடந்து வந்தாச்சு. ஆனாலும் இந்தச் சிலம்பத்தைக் கையில் ஏந்தி காத்துல சுத்தும்போது அவ்வளவு பெருமையா இருக்கும். நான் இந்தக் கலையைக் காசுக்காக கத்துக்கல, என்னோட அடையாளத்துக்காக கத்துக்கிட்டேன். கையில் பத்து பைசா இல்லாத நாள்களில் கூட என் கலையை நான் தெய்வமாகத்தான் பார்த்தேன். எத்தனையோ நாள் பட்டினில கூட கழிஞ்சுருக்கு. இது சிலம்பக் கலைஞர்கள் நிலைமட்டுமல்ல, தமிழ்நாட்டின் பாரம்பர்யக் கலைஞர்களுக்கு இந்த நிலைமைதான்.

``வளையல்கள் மட்டுமல்ல... எங்க வாழ்க்கையும் மாறிடுச்சு..." - வளையல் கடை ரவியின் கதை
டைரக்டர் என்னைக் கூப்பிட்டு, ``தனுஷ் சார், நாசர் சார், சினேகா மேடத்துக்கு அடிமுறையும் சிலம்பமும் கத்துக்கொடுக்கணும்னு சொன்னாங்க. சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிட்டேன்.
செல்வராஜ்

ஆனாலும், எந்தக் கலைஞர்களும் அவங்க கத்துக்கிட்ட கலையை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டாங்க. சிலம்பக் கலையை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணுங்கிறது 25 வருஷ போராட்டம். பெரிய அளவு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கிறது இல்லைங்கிறதுக்காகவே சிலம்பத்தை நிறைய பேர் கத்துக்க முன்வர்றது இல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையை மாத்தணும்னா தேசிய அளவிலான போட்டிகளில் சிலம்பமும் அங்கீகரிக்கப்படணும்னு முயற்சிகள் எடுக்க ஆரம்பிச்சேன். பல போராட்டங்களுக்குப் பிறகு அது சாத்தியமானது. இப்போ உலக சிலம்ப ஃபெடரேஷன், ஆசிய சிலம்ப ஃபெடரேஷனின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராக இருக்கேன். என் மனைவியும் சிலம்பக் கலைஞர். நானும் அவங்களும் சேர்ந்து நிறைய சிலம்பக் கலைஞர்களை உருவாக்கிட்டு இருக்கோம்" என்ற செல்வராஜ், பட்டாஸ் திரைப்பட அனுபவம் பற்றி பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

அடிமுறைக் கலை
அடிமுறைக் கலை

`அடிமுறைக் கலை சம்பந்தமாக திரைப்படம் எடுப்பதற்கு ஒரு கைடன்ஸ் தேவைப்படுது’னு துரை செந்தில்குமார் சார் டீமில் இருந்து ஒரு போன் கால் வந்துச்சு. மறுநாள் டிஸ்கஸனுக்கு வரச்சொல்லி இருந்தாங்க. ஆரம்பத்தில் நான் நம்பல. தயக்கத்தோடுதான் அங்க போனேன். போன பிறகுதான் தெரிஞ்சுது படம் முழுக்க அடிமுறைக் கலை பயணம் ஆகப்போகுதுனு.

இந்தச் செய்தி ஒரு கலைஞனுக்கு எவ்வளவு சந்தோஷம்னு வார்த்தையில் சொன்னா புரியாது. ஒட்டுமொத்த அடிமுறைக் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருந்துச்சு.

டைரக்டர் என்னை கூப்பிட்டு, ``தனுஷ் சார், நாசர் சார், சினேகா மேடத்துக்கு அடிமுறையும் சிலம்பமும் கத்துக்கொடுக்கணும்னு சொன்னாங்க. சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிட்டேன். எனக்கு கிக்பாக்ஸிங்கும் தெரியுங்கிறதால் வில்லன் நடிகருக்கும் நான்தான் கிக் பாக்ஸிங் பயிற்சி கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. எதிர்பாராமல் கிடைச்ச வாய்ப்புனு சொல்றதைவிட, வாழ்க்கைனு சொல்லலாம்" என்றவரிடம் திரைப்படத்துக்குப் பயிற்சி கொடுத்த அனுபவங்கள் பற்றிக்கேட்டோம்.

அடிமுறை பயிற்சி எடுத்துக்கிட்டபோது சினேகா மேடம் கர்ப்பமாக இருந்தாங்கங்கிறதே சில மாசங்கள் கழிச்சுதான் எங்க எல்லாருக்கும் தெரிய வந்துச்சு.
செல்வராஜ்

படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் சாரைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றமாகிட்டேன். ஆனால். நடிகர்னு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், குரு வணக்கம் செலுத்தி என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்.

``மாஸ்டர், தப்பா பண்ணா சொல்லுங்க. திருத்திக்கிறேன்"னு சொல்லிட்டே இருப்பார். மொத்தம் ஒன்பது மாசம். ஒருநாள் கூட ஷூட்டிங்க்கு லேட்டா வந்தது இல்ல. எல்லாத்துக்கும் மேல, எந்த விஷயத்தைச் செஞ்சாலும், அதைச் சரியா செய்யணும்னு அவ்வளவு உழைப்பைக் கொட்டுவார். அவரோட கடின உழைப்புதான் அவரை இந்த அளவுக்கு உயர்த்திருக்கு.

ஒருநாள் பயிற்சி கொடுக்கும்போது, தனுஷ் சார் பயிற்சியைச் சரியாக கவனிக்காமல் என் கையையே பார்த்துட்டு இருந்தார். கொஞ்சம் தயக்கதோடு, `என்ன ஆச்சு சார்'னு கேட்டேன். நான் என்னோட இடது கையில் `ரஜினி'னு பச்சை குத்திருந்ததை பார்த்துட்டு, ``மாஸ்டர் நீங்க தலைவர் ரசிகரா?"னு கேட்டார். `ஆமாம் சார்'னு சொன்னேன். அதன்பின் அவங்க குடும்பத்தில் ஒருத்தராகவே பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

அடிமுறைக் கலை
அடிமுறைக் கலை

படத்துக்காக தனுஷ் சார் எவ்வளவு மெனக்கிட்டாரோ அதே அளவு சினேகா மேடமும் சிரமப்பட்டு இருக்காங்க . ஆரம்பத்தில் சினேகா மேடம்கிட்ட சின்ன தயக்கம் இருந்துச்சு. ``பொண்ணுங்க கூட இந்தக் கலையெல்லாம் பண்றாங்களா? மாஸ்டர்"னு கேட்டாங்க. என் மனைவிக்கு அடிமுறை தெரியுங்கிறதால் அவங்களை அடிமுறை செய்யச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னேன். வீடியோவைப் பார்த்து சினேகா மேடம் அசந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் ரொம்ப நம்பிக்கையோட பயிற்சி எடுக்க ஆரம்பிச்சாங்க.

சின்னச் சின்ன நுணுக்கமான விஷயத்தையும் கூர்மையாக சினேகா மேடம் பண்றதைப்பார்த்துட்டு சில நேரம் நானே ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கேன். அடிமுறைப் பயிற்சி எடுத்துக்கிட்டபோது சினேகா மேடம் கர்ப்பமாக இருந்தாங்கங்கிறதே சில மாசங்கள் கழிச்சுதான் எங்க எல்லாருக்கும் தெரியவந்துச்சு. அவ்வளவு மனவலிமை அவங்களுக்கு.

அடிமுறை கலை
அடிமுறை கலை

நான் கற்றுக்கொடுத்த காட்சிகளைத் திரையரங்கில் பார்க்கும்போது எனக்கே சிலிர்த்துப்போச்சு. அவ்வளவு பிரமாண்டமாக வந்திருக்கு. படம் பார்த்த நிறைய பேர் அடிமுறை கத்துக்க ஆர்வம் காட்டுறாங்க. இதை என் இத்தனை நாள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாத்தான் பார்க்கிறேன். ஒரு கலைஞன் தனக்கு அங்கீகாரம் கிடைக்கலைனாலும், தன் கலைக்கு மரியாதை கிடைக்கணும்னு நினைப்பான். இப்போ அந்த அங்கீகாரத்தை நான் உணர்கிறேன். மூச்சிருக்கும் வரை என் கைகள் சிலம்பம் சுற்றிக்கொண்டே இருக்கும்" என விடைபெறுகிறார் செல்வராஜ் மாஸ்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு