Published:Updated:

`மழை ஸ்டேட்டஸ்...!’ - மகள் சொல்லிக் கொடுத்த வாழ்க்கைப் பாடம் #MyVikatan

Rainy Day
Rainy Day ( Erik Mclean on Unsplash )

அழகான மழையும் சூடான மசாலா டீயும், இதை மட்டும் அனுபவித்தால் மனித மனத்திற்கு போதுமா?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஜுன் ஜுலை மாதங்களில் பெய்யும் மழையே ஒரு தனி அழகு. மழை காலங்களை போல நசநச என்று இல்லாமல் வெயில் காலம் போல வெக்கை இல்லாமல் ஒரு இதமான மழையாக இருக்கும். அப்படி தான் அன்று மாலையில் இதமாக பெய்தது அந்த மழை. கோடைக்காலத்தின் சூடு குறைந்த நேரத்தில் எதிர்பாராமல் பெய்த அந்த மழை வீட்டில் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Rainy day
Rainy day
Danielle Dolson on Unsplash

முதலில் மழை பெய்யத் துவங்கும் முன்பே வரும் அறிகுறிகள் போல சந்தோஷம் தருவது எதுவும் இல்லை. இருட்டிக் கொண்டு வரும் வானமும், குளுமையான இளம் காற்றும், 'அம்மா மழை பெய்யப் போகுது' என்று குழந்தைகளின் குதியாட்டமும் மழை பெய்யும் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்.

மழை பெய்தால் அதுவும் மாலை நேரத்தில் மழை பெய்தால் நம்முடைய உடனடித் தேவை சூடாக ஒரு கப் டீ. மழை பெய்யத் துவங்கும் முன்பே டீயை போட்டு விட வேண்டும், அப்போதுதான் மழையோடு சேர்த்து டீயை ரசிக்க முடியும் என்று அவசரமாக பாலை சுட வைத்தேன்.

`இயற்கை தந்த லாக்டெளன் அது!’ - ஜவ்வாது மலைவாசியின் மழை நாள் அனுபவம் #MyVikatan

டீ தூளை போடப் போகும் நேரத்தில் 'இந்த மழைக்கு மசாலா டீ குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?' என்று தோன்றியது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன் அப்போது தான் முதல் சொட்டு மண்ணில் விழுந்தது. சரி மழை வேகம் எடுப்பதற்கு முன் மசாலா டீ போட்டு விடலாம் என்று வேகமாக ஒரு துண்டு இஞ்சியும் இரண்டு ஏலக்காய்களையும் தட்டத் துவங்கினேன். இப்போது மழைச்சாரலின் வேகம் கூடியிருந்தது.

ஒரு வழியாக மழை உச்சம் தொடும்போது என் மசாலா டீயும் தயாராகி விட்டது. வேகமாக அதை ஒரு பீங்கான் குவளையில் ஊற்றி பால்கனிக்கு சென்றேன். அழகான மழையும் சூடான மசாலா டீயும், இதை மட்டும் அனுபவித்தால் மனித மனத்திற்கு போதுமா? மழை பெய்தால் அதை வாட்ஸ்அப் ஸ்டேடஸ்ஸில் வைத்தே தீர வேண்டும். இது அமலில் உள்ள எழுதாத சட்டம். அதுவும் மசாலா டீயோடு மழை, ஸ்டேட்டஸில் வைத்து லைக் வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது.

Tea
Tea
Georgiana Barbu on Unsplash

நானும் மழையையும் டீ கோப்பையையும் ஒரு சேர படம் பிடிக்க பல கோணங்களில் திரும்பினேன். டீ தெரிந்தால் மழை தெரியவில்லை மழை தெரிந்தால் நான் தெரியவில்லை. ஒரு வழியாக போராடி படம் எடுத்து அதை ஸ்டேட்டஸில் வைத்து விட்டு. டீயையும் மழையையும் ஒரு சேர ரசிக்க தலையைத் தூக்கினேன். மழை முற்றிலுமாக நின்று விட்டது. சரி டீயை மட்டுமாவது சுவைக்கலாம் என்று குடித்தால் அது `ஐஸ்' டீயாக மாறி ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டது.

இவ்வளவு பாடுபட்டு வைத்த என் ஸ்டேடஸ்ஸை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று மறுநாள் பார்த்த போது, வெறும் பத்து வ்யூஸ் மட்டுமே. 'அடப்போங்கடா' என்ற ஒரு மனநிலையில் இருக்கும் போது தகப்பன் சாமி போல வந்த என் மகள், ஃபோனில் உள்ள வ்யூஸ்ஸை பார்த்து

"இதுக்கு அந்த டீயை நீங்க சூடாவே குடிச்சுருக்கலாம்." என்றாள்.

"நான் கரை ஏறிட்டேன் நீங்க இன்னும் கரை ஏறலையா?" என்று பாரதிராஜா சாரின் 'வேதம் புதிது' படத்தில் வரும் டயலாக் காதில் ஒலித்தது, அந்த பளார் என்னும் அறையும் சேர்த்து தான்.

-விஜி குமரன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு