Published:Updated:

`நகராட்சி கட்டட விரிசல் வடிவிலேயே கடிதம் எழுதி சரி பண்ண வெச்சேன்!' - சிவகங்கை விவசாயி

சித்திரக் கடிதங்களுடன் சின்னபெருமாள்
சித்திரக் கடிதங்களுடன் சின்னபெருமாள்

புகார், வாழ்த்து, கோரிக்கை என கருப்பொருளை வரைந்து வண்ண எழுத்துகளால் கடிதம் எழுதி அரசுத்துறைகளுக்கு அனுப்பி கவனம் ஈர்க்கிறார். கின்னஸுக்கு அனுப்ப உதவுமாறு ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்தவரை நிறுத்திப் பேசினோம்.

ஆண்ட்ராய்டின் ‘வாய்ஸ் டைப்பிங்’ வசதியைக்கூட பழைய வெர்சனாக்கிப் பறந்துகொண்டிருக்கிறது, நவயுக வளர்ச்சி. கடிதமெழுதும் கலை காணாமலே போய்விட்டது. இதில், ‘என் கடன் கடிதமெழுதிக் கிடப்பதே’ என வாழ்ந்துவரும் தெக்கத்தி விவசாயி ஒருவர், கின்னஸுக்கும் முயற்சிசெய்து வருகிறார்.

சித்திரக்கவிபோல.. சித்திரக்கடிதம் எழுதுகிறார், சின்னபெருமாள். புகார், வாழ்த்து, கோரிக்கை எனக் கருப்பொருளை வரைந்து வண்ண எழுத்துகளால் கடிதம் எழுதி, அரசுத்துறைகளுக்கு அனுப்பி கவனம் ஈர்க்கிறார். கின்னஸுக்கு அனுப்ப உதவுமாறு ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்தவரை நிறுத்திப் பேசினோம்.

சித்திரக் கடிதங்களுடன் சின்னபெருமாள்
சித்திரக் கடிதங்களுடன் சின்னபெருமாள்
'செப்டம்பர் 1 உலகக் கடித தினம் வரை மொத்தம் 2019 கடிதங்கள் எழுதிமுடிச்சிட்டேன். இதை கின்னஸுக்கு அனுப்பும் முயற்சியாகத்தான் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்தேன்'
'சித்திரக்கடிதம்' சின்னபெருமாள்

“பூர்வீகம், ராமநாதபுரம் வாகைகுடி. விவசாயக் குடும்பம். வராத பள்ளிப்படிப்பை நிறுத்திட்டு விவசாயத்துல கவனம் செலுத்தினேன். பொதுக் காரியத்துக்குக் கடிதம் எழுதி அனுப்புறது என் வழக்கம். கல்யாணமானதும் மனைவியோட ஊர்ல குடும்பத்தோட குடியிருக்கோம்” என்றவரிடம், வித்தியாசமாகக் கடிதமெழுதச் சிந்தித்தது எப்படியெனக் கேட்டோம்.

“ஒரு தடவை தோணிச்சு, ‘1500 மொழிகள்ல இல்லாத ஒன்றைச் செய்யணும்’ன்னு. 2018 தைப்பொங்கல் நாள். முதல்முறையா வித்தியாசமான வடிவத்தில வண்ண வண்ண எழுத்துகள்ல சிவகங்கை காவல்துறைக்குக் கடிதம் எழுதினேன். கடிதத்தை திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார் பார்த்து, ‘ஈர்க்கிறமாதிரி எழுதியிருக்கிறீங்க. நல்ல பணி, வாழ்த்துகள். எல்லாத் துறைகளுக்கும் இதுமாதிரிக் கடிதம் எழுதலாமே’ன்னு சொன்னார். அதுதான் முதல் உந்துதல். அன்னிலிருந்து எழுத ஆரம்பிச்சேன். செப்டம்பர் 1 உலகக் கடித தினம் வரை மொத்தம் 2019 கடிதங்கள் எழுதிமுடிச்சிட்டேன். இதை கின்னஸுக்கு அனுப்புற முயற்சியாகத்தான் கலெக்டரிடம் மனுகொடுக்க வந்தேன்” என்றார்.

“இலக்கணம், இலக்கியம் எல்லாம் எழுதத் தெரியாது. ஆனா, என் எழுத்துகள் சாதாரண மக்கள் கண்ணீரைத் துடைக்கணும்” என்றவர், “நான் பிறந்தது, 1968. படிச்சு அரசுப்பணி பார்த்திருந்தா இன்னும் சில வருஷத்துல ரிட்டயர்மென்ட். ஆனா, விவசாயமும் எழுத்தும் கலந்த இந்த வாழ்க்கையிலதான் ரிட்டயர்மென்டே இல்லையே” எனச் சிரிக்கிறார்.

கடிதம் எழுதிப் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லி விளக்குகிறார். “விவசாயம், சுகாதாரம், தூய்மை, கட்டமைப்பு வசதின்னு எல்லாவற்றையும் பற்றி துறை வாரியாகக் கடிதம் எழுதத்தொடங்கினேன். மழைநீர்சேமிப்பு குறித்துக் குடம்வடிவில அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பினேன். அது, அதிகாரிகளைக் கவனிக்க வெச்சது.

கடலோரக் காப்பகங்கள் சரிவர அமைக்கப்படலை. அதுக்காக, காப்பக வடிவிலயே கடிதம் எழுதினேன். வழிபாட்டுத் தலங்கள்ல நடக்கின்ற கொடுமைகளை எதிர்த்துக் கோபுர வடிவக் கடிதம், மீனவர் நலன் வேண்டி மீன் வடிவக் கடிதம்னு எழுதியிருக்கேன்” என்றார்.

லிங்க வடிவில் கடிதம்
லிங்க வடிவில் கடிதம்
'ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுது. ஆனா, அறிவியல்படி அது சரியல்ல. மீன்கள் இனப்பெருக்கக்காலம், அக்டோபர் நவம்பர் தான்'.
'சித்திரக்கடிதம்' சின்னபெருமாள்

அப்படியென்ன எழுதியிருக்கிறார், மீன்வடிவில்.. “மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்ரல் மே மாதங்களில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுது. ஆனா, அறிவியல்படி அது சரியல்ல. மீன்கள் இனப்பெருக்கக்காலம், அக்டோபர் நவம்பர்தான். இதை, கடலாராய்ச்சி நிபுணர் ஒருவர் எழுதின ‘தமிழ் இந்து’ கருத்துரை மூலமாகத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த விபரத்தைக் கடிதமா அனுப்பினேன்.

ஒரு பேட்டியில மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “மீன்பிடித் தடைக்கால விதிகள், கடலோர மாநிலங்கள் எடுக்கவேண்டிய முடிவு”ன்னு சொல்லியிருந்தார். அதனால, நான் இப்போ இந்தியக்கடலோர மாநிலங்களுக்குக் கடிதம் எழுதிட்டிருக்கேன்” என்று அதிர வைக்கிறார். மேலும் காத்திருக்கின்றன, அதிர்ச்சிகள்..

“எட்டுவழிச்சாலைப் பிரச்சனையின்போது ‘8’ என்ற எண் வடிவத்தில தொடர்ச்சியாக் கடிதங்கள் அனுப்பிட்டிருந்தேன். இதுதொடர்பா பதற்றச்சூழல் நிலவியதால கடிதம் எழுதுவதை நிறுத்திட்டேன்.

மானாமதுரை மேம்பாலப்பகுதியில விரிசல் ஏற்பட்டிருப்பதாக எனக்குத்தெரியவர, உடனடியா நகராட்சி அலுவலகத்திற்கு ஒரு கடிதம், விரிசல் விட்டிருக்கிற மாதிரி வடிவத்தில எழுதியனுப்பினேன். விரிசல்களை நகராட்சி ஊழியர்கள் சரிசெஞ்சுட்டாங்க. அதிகாரிகள் என்னை அணுகி, ‘எதுக்கு இப்படிலாம் கடிதம் போடுறீங்க? நார்மல் கடிதம் எழுதி அனுப்பினாலே போதுமே?’ன்னு கேட்டாங்க. ‘நான் சரியாத்தான் எழுதினேன், சின்ன இடைவெளி வந்துடுச்சி’ன்னு சொல்லித் தப்பிச்சேன்” - எனச் சிரிக்கிறார்.

சிரமப்பட்டு இப்படி எழுதுவது கடினமாகத் தெரியவில்லையா என்றோம்.. “எழுதுறது கஷ்டம்தான். ஆனா, நடவடிக்கைகள் எடுக்கப்படுறதைப் பார்த்துக் கிடைக்கிற சந்தோஷம், இன்னும் தொடர்ந்து எழுத ஊக்கம் தருது. காரைக்குடி மாரியம்மன் கோயில் ரோட்டைச் செப்பனிடலை. உடனே கோபுர வடிவில துறைக்குக் கடிதம்போட்டேன். துறைசார்ந்த மூன்று அதிகாரிங்க பதில் அனுப்பினாங்க. அடுத்த மூன்றே நாட்கள்ல ரோட்டைச் சரிபண்ணிட்டாங்க. இது எனக்கான வெற்றியல்ல. அந்தக் கோபுர வடிவம் வாங்கித்தந்த வெற்றி. அதிகாரி ஒருத்தர் என் வீட்டுக்கு வந்து, சிவகங்கை கலெக்டர் அனுப்பி வைச்சதாச் சொல்லி வாழ்த்தி விருது தந்துட்டுப்போனார். அப்பவும்கூட வீட்டில கடிதம் எழுதிட்டிருந்தேன்” என்று சத்தமாகச் சிரித்து மகிழ்கிறார்.

ஆசிரியர்களால் உந்தப்பட்ட சின்னபெருமாள், மாணவர்களை நோக்கி வருகிறார். “வாழ்நாள் முழுக்க ஆசிரியர்களின் ஊக்கம் கிடைச்சதாலதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தமிழ்மொழி வளர்ச்சிபெறணும், கடிதமெழுதுற கலை மீளணும், அரசுக்கும் மக்களுக்கும் நட்பு ஏற்படணும், மக்கள் எண்ணங்களை வண்ணங்களா வெளிப்படுத்தும் வழிவேணும்ங்கிறதுதான், கடிதவாழ்வு மூலமா நான் சொல்ல வர்றது. மாணவர்கள் கடிதங்களை உருவாக்கணும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புதான் கடிதக் கலையை அழிவிலிருந்து மீட்க உதவும். இந்தக்கலைக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்க மாணவர்கள் முழுமூச்சாய் இறங்கணும்” என்கிறார்.

கடித வாழ்வுமூலமா நான் சொல்ல வர்றது என்னன்னா... தமிழ்மொழி வளர்ச்சிபெறணும், கடிதமெழுதுற கலை மீளணும், அரசுக்கும் மக்களுக்கும் நட்புறவு ஏற்படணும்!
அரசு முத்திரை வடிவில் கடிதம்
அரசு முத்திரை வடிவில் கடிதம்

அடுத்த சாதனையும் தொடங்கியிருக்கிறார். “198 நாடுகளின் வரைபடங்கள் வடிவில் காந்திபற்றிய நிகழ்வுகள், பதிவுகள், சரித்திரங்கள் எல்லாம் கடிதமா எழுதி வர்றேன். அக்டோபர் 2-ம் தேதி ஆரம்பிச்சிருக்கேன், நவம்பர் 2 முடிச்சிருவேன். காந்தியின் 150-வது பிறந்தநாளை ஆண்டுமுழுக்கக் கொண்டாடுறதா நரேந்திர மோடி அறிவிச்சிருக்கார். பதற்றமான நாடுகள்ல ஒருமணிநேர அமைதி ஏற்படுத்தினாக்கூட அது காந்திக்கு நாமசெய்யும் அளப்பரிய மரியாதைங்கிறது என் கருத்து” - உணர்ச்சிவசப்படுகிறார்.

தினசரிப் பணிகளைப் பற்றிச் சொல்கிறார். “உழவுவேலைபோக தினமும் கடிதம் எழுதிட்டேதான் இருப்பேன். எனக்கோ, குடும்பத்தில யாருக்கோ முடியாமப் போயிட்டாத்தான், எழுதுறது தடைபடும். சிவகங்கை, முகவை மாவட்டங்களுக்கு மாசம் 80 கடிதங்களாச்சும் எழுதி, துறைகளுக்கு அனுப்பிடுவேன். அதுல மாநிலத்துறைகளின் கடிதங்கள் மட்டும் 20 இருக்கும். தூய்மைப்பணிக்கான விருது விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்குக் கிடைச்சப்போ அவரை வாழ்த்தி பிரபஞ்ச வடிவத்தில் கடிதம் அனுப்பினேன். சமீபத்தில நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது முதல்வருக்கு உலக உருண்டை வடிவில் கடிதம் அனுப்பினேன்” என்றார்.

கடித வாழ்க்கையில் இதுவரை மறக்க முடியாத நினைவு..? “கலைஞர் நினைவா, அவர் குறித்தச் செய்திகளைத்திரட்டி முத்திரை வடிவில் அறிவாலயத்துக்கு அனுப்பினேன். எல்லாத்துறைகளிலும் முத்திரை பதித்தவரல்லவா, கலைஞர்! அதனால்தான் அப்படிக் கடிதம் செஞ்சேன். கடித வாழ்க்கைக்குப் பல நண்பர்கள் வாழ்த்தி ஊக்கம் தந்தாலும் ‘கலைஞரய்யாவும் அப்துல்கலாம் அய்யாவும் இருந்தபோதே இதையெல்லாம் செய்துகாட்டி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கலாமே’ எனவும் சொல்கின்றனர். எனக்கும் அந்த வருத்தம் நெஞ்செல்லாம் இருக்கு” என உடைகிறார்.

கடிதங்களுடன் சின்னபெருமாள்
கடிதங்களுடன் சின்னபெருமாள்

கையெழுத்து, அழகு! எழுத்துப்பயணத் தொடக்கம்..?

“பிறந்து இரண்டுமாசம் வரைக்கும் இயல்பாயிருந்தேன். கொஞ்சநாள்லயே அழுகை வராமப்போயிருக்கு. ஒன்பதுவயசு வரைக்கும் சுத்தமாப் பேச்சு வரலை. வீட்டிலுள்ளவங்க என்னைத் திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயில்ல விட்டுட்டாங்க. மெள்ளமெள்ளப் பேசினேன். பூர்வீக ஊர்வந்து மறுபடி பள்ளிக்கூடம் சேர்ந்தேன். படிச்சிட்டிருந்தப்போ, ஊமை எனக் கேலிபண்ணவங்க, சரியானதுக்கப்புறமும் பலரும் 'ஊமை' எனக் கூப்பிட்டதால நான் அவ்வளவா யார்ட்டயும் பேசலை. ஆசிரியர்ட்டயும் பேசப் பயந்து எழுதி எழுதிக் காட்டினேன். அப்படித்தான் தொடங்கிச்சு என் எழுத்துக்காலம்” என்கிறார்.

கடித வாழ்க்கைக்குக் குடும்பத்தினர் ஒத்துழைப்பு குறித்துக் கேட்டோம். “இரண்டு மகள்களும் தினமும் உதவுவாங்க. மனைவி, ‘நீங்க படிச்சிருந்தா என்ன செய்திருப்பீங்களோ அதுக்கு இணையான பணியைச் சமூகத்துக்குச் செய்யணும்’ன்னு ஒருமுறை சொன்னாங்க. இளம்வயதில தமிழ்க்குடிமகன் அய்யாகூட நல்ல நெருக்கம். நிறைய எழுதியெழுதித் தருவேன். ‘கைப்பட 1,330 குறளையும் எழுதித் தா! தலைவர்கிட்ட உன்னைப்பத்திச் சொல்றேன்’ன்னு சொன்னார். ஊருல உழவுவேலைங்க இருக்குன்னு சொல்லி, அப்போ மறுத்துட்டேன். அந்தக்கட்டளையை ஏத்துக்கிட்டு அப்பவே பணி செஞ்சிருக்கலாமோன்னு இப்போ தோணுது” என்கிறார்.

`அழுகையை அடக்கமுடியவில்லை!'- அப்பாவுக்கு மகனின் கடிதம் #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு