Published:Updated:

`தலைமைக்கான குழப்பம் வேண்டாமே..!’ - காங்கிரஸின் குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan

காங்கிரஸ்
காங்கிரஸ்

அண்மையில், டெல்லியில் மூன்று மணி நேரமாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மேலும் ஆறு மாதங்களுக்கு சோனியா காந்தி நீடிப்பார்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில், டெல்லியில் மூன்று மணி நேரமாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரைவில் கூட்டம் கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

`முழுநேரத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற சோனியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவரே தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. `இதுபோல் இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸுக்கு முழுநேரத் தலைமை வேண்டும்’ எனப் பலரும் நினைக்கிறார்கள். பல்வேறு மாநிலத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில் முழுநேரத் தலைமைக்கான தேவை எழுந்துள்ளது.

பாரம்பர்யமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தோற்றத்தையும், தலைமையையும் குறித்த ஃப்ளாஷ்பேக்கைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

#காங்கிரஸுக்கு முன்பு தோன்றிய அரசியல் இயக்கங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் காங்கிரஸுக்கு முன்பே பல அரசியல் இயக்கங்கள் இந்தியாவில் தோன்றின. குறிப்பாக அன்றைய பம்பாய், சென்னை, வங்க ராஜதானிகளில் தோற்றுவிக்கப்பட்டன்.

கல்கத்தாவில் 1808-ல் ஹென்றி விவியன் டெரோஸியோ எனும் விரிவுரையாளரால் வங்காளியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வங்காள தேசிய இயக்கம் உருவாக்கினார். இவர்கள் செய்யத் தவறியதைவைத்து, அடுத்து வந்த ராஜாராம் மோகன்ராய் 1836-ல் பங்கபாஷா பிரகாசிக சபையை உருவாக்கினார்.

தொடர்ந்து 1837-ல் வங்காள நிலச்சுவான்தார்கள் சங்கம், 1843-ல் வங்காள பிரிட்டிஷ் இந்திய சங்கம், 1875-ல் சிசில் குமார் கோஷின் இந்தியா லீக்,1876-ல் சுரேந்திரநாத் பானர்ஜியின் இந்தியக்கழகம், பம்பாய் கழகம், பூனா சர்வஜனிக் சபா, பம்பாய் ராஜதானிக் கழகம், சென்னைவாசிகள் சங்கம், சென்னை மகாஜன சபை ஆகியவை காங்கிரஸுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிறு அமைப்புகள். இந்தச் சிறு நதிகள்தான் `காங்கிரஸ்’ எனும் சமுத்திரம் தோன்றுவதற்கான ஆதாரங்களாக இருந்தன.

காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கொடி

#காங்கிரஸின் தோற்றம்

1870-களிலும் 80-களிலும் இந்தியாவில் புரட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தன. ரஷ்யப் படையெடுப்பு குறித்த அச்சமும் ஆங்கிலேய அரசுக்கு நிலவிவந்தது. மெத்த படித்தவர், வசதி படைத்தவர்கள் ஆதரவுடன், கற்றறிந்த கூட்டத்தை அருகில் வைத்துக்கொள்ள ஆங்கில அரசு எண்ணியது. அதன் மூலம் தனக்கு நாட்டு மக்களிடம் நல்லெண்ணம் ஏற்படும் என்று நினைத்தது.

அப்போது தொடங்கப்பட்டிருந்த பிரம்மஞான சபை கூட்டம் கூடி பொதுப் பிரச்னைகளை விசாரித்தது.1884-ல் சென்னை ரகுநாதராவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம், காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

1877-ல் பஞ்சத்துக்குப் பின் மக்களிடையே கசப்புணர்வு இருந்துவந்தது. 1882-ல் இந்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஓர் அகில இந்திய அமைப்பை உருவாக்க விரும்பினார். அப்போதைய இந்திய வைஸ்ராய் டஃப்ரின் பிரபுவின் ஆலோசனையின் பேரில், அவரின் கருத்துக்குழந்தையாக காங்கிரஸ் கட்சியை ஏற்படுத்தினார்.1885, டிசம்பர் மாதம் முதல் கூட்டம் கூட்டுவதாக மார்ச் மாதம் அறிவித்து ஆங்கிலேயரிடமும் இந்தியர்களிடமும் ஆதரவு கேட்டார்.

படித்த மக்களிடம் வரவேற்பு இருந்தது.

#முதல் கூட்டம்

`இந்திய தேசிய யூனியன்’ என ஆரம்பிக்கப்பட்டு, தாதாபாய் நெளரோஜியின் அறிவுரைப்படி `இந்திய தேசிய காங்கிரஸா’க உருபெற்றது. 1885, டிசம்பர் 28-ம் நாள் பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருத மண்டபத்தில், உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையில் 72 பேர் கலந்துகொண்ட முதல் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் முதல் பொதுச் செயலாளராக இருந்து, பின் 1906 வரை தொடர்ந்தார். ஆங்கிலேயர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மூன்று நாள்கள் கூடி விவாதம் செய்து கலைந்து சென்றனர். முஸ்லிம்கள், பாரசீகர்கள், கிறிஸ்துவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பாலகங்காதர திலகர்
பாலகங்காதர திலகர்

காங்கிரஸின் முயற்சியால் 1892-ல் இந்திய மன்றங்கள் சட்டப்படி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. `கற்றவர்கள் இன்று நினைப்பதை மற்றவர்கள் நாளை நினைப்பர்’ எனும் செய்தியோடு தொடர்ந்து உயிர்ப்புடன் செயல்பட்டது.

1905, வங்கப் பிரிவினை காரணமாய் கோகலே தலைமையில் மிதவாதிகளாகவும், திலகர் தலைமையில் தீவிரவாதிகளாகவும் பிரிந்து 1916-ல் லக்னோவில் மசூம்தார் தலைமையில் காங்கிரஸ் ஒன்றிணைந்தது.

#காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள்

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைவர்களின் தலைமையில் காங்கிரஸ் கூடியுள்ளது. w.c பானர்ஜியைத் தொடர்ந்து பார்சி இனத் தலைவரான தாதாபாய் நெளரோஜி, சையது பக்ருதின் தியாப்ஜி எனப் பல மதத்தினர் தலைவராய் இருந்ததுடன், அடுத்த கூட்டத்துக்கு ஜார்ஜ் யூலே எனும் ஆங்கிலேயர் தலைமையேற்றுள்ளார்.

1917-ல் முதல் பெண் தலைவராக அன்னிபெசன்ட்டும்,1925-ல் இந்தியப் பெண் தலைவராக சரோஜினி நாயுடுவும் இருந்துள்ளார்கள். 1924-ல் பெல்காம் மாநாட்டில் காந்தியின் தலைமையில் ஒரே ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. பூரண சுதந்திர தினமாய் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படும் என தீர்மானித்த லாகூர் மாநாட்டுக்கு நேரு தலைமையேற்றுள்ளார்.

சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு

1938-ல் சுபாஷ் சந்திர போஸ்,1940-ல் இளம் வயது தலைவராக அபுல்கலாம் ஆசாத் இருந்துள்ளார்கள். சுதந்திரத்துக்கு முன் காங்கிரசின் கடைசிக் கூட்டமான 1946 மீரட் கூட்டத்துக்கு ஜே.பி.கிருபளானியும், சுதந்திரத்துக்குப் பிறகான முதல் கூட்டமான 1948-ல் நடந்த கூட்டத்துக்கு பட்டாபி சீதாராமையாவும் தலைவர்களாக இருந்துள்ளனர். சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸைக் கலைத்துவிடுமாறு கூறினார் காந்தி.

மற்றவர்கள் அதை ஏற்கவில்லை. தேர்தல் மூலம் மக்கள் பணியாற்ற விரும்பினர்.

விடுதலையடைந்த மூன்று மாதங்களில் கிருபளானி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜனநாயக கட்சி ஆரம்பித்தார். அதன் பின் தலைவரான புருஷோத்தமதாஸ் தாண்டனுன் நேருவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேரு குடும்பத்தைத் தவிர யூ.என்.தேபர், நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜ், நிஜலிங்கப்பா, சங்கர்தயாள் சர்மா, தேவ்காந்த்பரூவா, நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் இருந்துள்ளனர்.

#உறுதியான தலைமை

இந்தியாவில் ஆட்சியில் இல்லாதபோதுதான் அரசியல் கட்சிகளுக்கு வலுவான தலைமையும் ஓய்வறியா களப்பணியும் தேவைப்படுகின்றன. இதற்கான அகில இந்திய உதாரணங்களே உண்டு. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத பா.ஜ.க, பெரும்பான்மை பலம் இழந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தும் இடதுசாரிகள் எனத் திறம்பட செயல்படுவதற்கு அதன் தலைமைதான் முக்கியக் காரணம்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

`மடக்கும் விரல்களைப்போல பலம் இல்லை நீட்டும் விரல்களுக்கு...’ எனும் வரியே களப்பணியாற்றவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் செய்யும் தாரக மந்திரம். உறுதியான தலைமையே அடிமட்டத் தொண்டனையும் உத்வேகமாகச் செயல்படவைக்கும் வழிமுறை.

கடந்த மக்களவைத் தேர்தலில் 12 கோடிக்கும் அதிகமான மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜோ பைடன்..!  - அமெரிக்க அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்யப் பக்கங்கள் #MyVikatan

காங்கிரஸ், அனைத்து மாநிலங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் எழுப்ப வேண்டிய நிலையில், தலைமைக்கான குழப்பம் இருப்பது வருங்காலத்தில் ஸ்தாபனத்தை இன்னும் பலவீனப்படுத்தும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

''உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரித்தார் பலர்"

தம்முடைய பலம் அறியாமல் ஒரு காரியத்தில் இறங்கி, பாதியில் கைவிட்டவர்கள் பலர் இருப்பதாக வள்ளுவர் கூறுகிறார். காங்கிரசின் பலத்தை நன்குணர்ந்து, நேரு குடும்பத்தைச் சார்ந்தவரோ/ சாராதவரோ அனைவரும் இணைந்து, ஒருமித்த கருத்துடன் ஆற்றலுடைய தலைவரை இடைக்காலத்தில் தேர்ந்தெடுத்து புதிய எழுச்சியை ஊட்ட வேண்டும் என்பது அரசியலாளர்களின் கருத்து.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டிடவும், முன்னேற்றப் பாதையில் செல்லவும்,1883, மார்ச் 1-ல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்க நினைத்த ஹியூம், கல்கத்தா பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எழுதிய கடிதத்தில்,

`கடுகு விதைகளைப் போன்று ஐம்பது தன்னலம் கருதாத, தியாகம் செய்யக்கூடிய இளைஞர்கள் வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார். தற்போது நல்ல, வலுவான தலைமையை வேண்டிப் பல தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். பல தோல்விகள் கண்டிருந்தாலும் எதிர்கால வெற்றிக்குப் பாடுபடும் தலைவன் வர வேண்டும் என்பதுதான் தொண்டனின் விருப்பம்.

``வரலாறு நமக்கு நினைவூட்டலாம்; வழிகாட்டலாம்; கற்பிக்கலாம்; எச்சரிக்கலாம். ஆனால் தடங்கலாகவோ, களைகளாகவோ இருக்கக் கூடாது'' என்று படித்த வரி நினைவுக்கு வருகிறது.

- மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு